இந்திரா மரணம் இந்தியா மரணம்
ஒரு சாரரின் சதியினால் இரு சீக்கியர்கள் திருமதி இந்திராஜியைக் கொல்ல ஒப்புத்துக்கொண்டனர், அவர்கள் சர்தார் சத்வன் சிங், சர்தார் பெந்த் சிங் {beant sngh }அதற்காகஅவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். நம்பர் 1 சர்தர்ஜங் ரோடு நயி தில்லி
திருமதி இந்திராஜியின் வீடு, அவர் வழக்கம் போல் காலை 4 மணி எழுந்து அவரின் நித்ய வேலைகளைக் கவனித்தார். அன்று ஐரிஷ் டி வி,யிலிருந்து ஒரு படம் எடுக்க பிரிட்டிஷ் நடிகர் திரு பீடர் உஸ்தினோவ் என்பருடன் காலையில் பேட்டி ஏற்பாடாகி இருந்தது,
அவர் அதற்காக வெளியில் தோட்டத்தைப் பார்வை இட்டுக்கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாய் அந்த இரண்டு சர்தார்ஜிகள் அவர் முன்னால் வந்து அவர்
சுதாரித்துக் கொள்வதற்கு முன்பே டுமீல் டுமீல் என்று பல தடவைச் சுட்டு வீழத்தினர். ஒரு கோலியா இரண்டா... 31 கோலிகள் அவர் உடம்பில் பாய்ந்து சல்லடையாக்கியது.அப்படியே கீழே சாய்ந்தார் பலர் ஓடி வந்து இந்த இரண்டு சர்தார்களைப் பிடிககு முன்
அவர்கள் தன்னையே சுட்டுக் கொண்டனர் . ஒருவன் அங்கேயே விழுந்து இறந்தான். ஒருவன் பிழைத்துக் கொண்டான். திருமதி இந்திராஜியின் கடைசி சொற்பொழிவில் பேசியப் பேச்சு மக்கள் காதில் ஒலித்தது. " நான் என் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நம் நாட்டிற்கு உழைத்தபடி இருப்பேன் என் கடைசித்துளி இரத்தமும் பாரதத்திற்கு அர்ப்பணிப்பேன் " அவரை ஆல் இந்தியா மெடிகல் இன்சிடிட்யூட் அழைத்துச் செல்ல... போகும் வழியிலேயே உயிர் இழந்தார். மங்கீ பிரிகேட் monkey brigade என்ற குழந்தைகளின் சுதந்திர இயக்கத்தின்
தலைவியாக இருந்த சிறுபெண் இந்திரா... அப்போதிலிருந்தே நல்ல மனதைரியமும், மனோதிடமும் கொண்டு செய்கை புரிந்திருக்கிறார். ஒரு தடவை அவளது பள்ளியின் பையில் சில முக்கியமான ஒத்துழையாமை இயக்கத்தின் தாள்கள் இவர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டது, சிறு பெண்ணாய் இருந்தாலும் நடுவில் வெள்ளையர்களால்
நிறுத்தப்பட்டவுடன் மனம் கலங்காமல் "எனக்கு பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது உடனே போக வேண்டும் என்று ஒரு சலனமும் இல்லாமல் பேசியதும் அவர்கள் இவரை விட்டு விட்டனர், அந்த வீரப் பெண்மணி 31 புல்லட்டுகளால் தாக்கப் பட்டுக் கிடந்தாள் என்றால் என்ன சோகமானக் காட்சி...ஒருவராலும் நம்பமுடியாமல் ஒரேடியாகச் சூறாவளி கிளம்பியது ஊழிக்காலம் போல் தென்பட்டது. எங்கும் நெருப்பு பிண நாற்றம்,வீடுஎரிதல், என்று தொடர்ந்து கொண்டே போக கடைசியில் ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஒரு குடும்பத்தில் ஒருவன் தவறு செய்தால் அந்த ஒருவனுக்கும் அவனைத்தூண்டிவிட்டவனுக்கும் தண்டனை கிடைக்லாம் ஆனால் ஒட்டு மொத்தமாக அந்த வம்சத்தையே அழிக்க வேண்டும் என்ற வெறி ஏன் வந்தது? இது அராஜகச் செயல் அன்றோ? எத்தனைத் தாய்மார்கள் குழந்தைகள் வெந்து மடிந்தனர் எத்தனைக் குழந்தைகள் அநாதையானது? பயத்தில் சிலர் தங்கள் கொள்கையும் மீறி தங்கள் தாடி மீசையை எடுத்துவிட்டனர் தலைப்பாகையும் எடுத்துவிட்டனர் உயிர் பயம் வந்தால் கொள்கையும் காற்றில் போய் விடுகின்றன. எனக்குத் தெரிந்த டாகடர் பான் bhan
ஒரு சர்தார்ஜி, ஒரு மாதம் கழித்து அவரிடம் போனேன் அவர் தான் கதவைத் திறந்தார் நான் அவரிடமே "டாக்டர் பானைப் பார்க்க வேண்டும்"என்றேன். அவர் "நான் தான் பான் விசாலம் பஹ்சான் கரனா முஸ்கில் ஹை க்யா?"{அடையாளம் தெரிவது கஷ்டமாக
உள்ளதா?" } என்றார் ஆம் தாடி இல்லை மீசை இல்லை பகடி இல்லை ?ஒரு ஹிந்து போல் காட்சி அளித்தார்.
கொஞ்சம், கொஞ்சமாக வெறியர்களின் ஆட்டம் அட்ங்கியது பிரதமரின் சவ அடக்கத்தின் நாள் குறிப்பிட்டார்கள். ஊரடக்கம் சட்டமும் வந்தது. அப்பப்பா என்ன ஜன சமுத்திரம்? இந்தியாவே திரண்டு வந்திருந்தது, மக்கள் கதறினார்கள் அந்தக் காட்சி இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது நவம்பர் மூன்றாம் தேதி ராஜ்காட்டில் அவர் நிரந்திரமாக நித்திரை கொண்டார். பெயர் சக்திஸ்தல் என்று வைக்கப்பட்டது .
அவர் செய்த நல்ல காரியங்கள் கரீபி ஹடாவோ என்ற ஏழ்மையை அகற்று" வெளிநாடுகளுடன் நட்புக்கரம், அணுசக்தியின் பரிசோதனை, ராஜஸ்தானில் போக்ரான் என்ற இடத்தில் சிரிக்கும் புத்தர் laughing budha என்ற பெயரில் நடத்தியது.
நாட்டின் பொருளாதாரம், கௌரவம் உயர்த்தினது, ஐந்தாண்டு திட்டங்கள் செயலானது ஆகியவைகள்.
செய்த தவறு என்று மக்கள் கூறியவை.. எமெர்ஜென்சி கொண்டு வந்தது, பல முக்கியத்தலைவர்களை சிறையில் வைத்தது, ஆபிரேஷன் பிளூ ஸ்டார் என்று சீக்கியரின் புனிதத் தங்கக்கோயிலைத் தாக்கியது, கட்டாய கருத்தடுப்புச் சட்டம் கொணர்ந்தது.
இந்திராவின் மரணம் இந்தியாவின் மரணமாக ஆனது. அவருக்குப்பின் இதுவரை ஒரு சரியான ஆட்சி இதுவரையில் அமையாதது நமது துரதிர்ஷ்டம்தான்.
திரும்ப நாட்டின் நிலைமை ஒரு விதமாகச் சரயானது எங்கள் வீட்டு சர்தார்ஜியின் பேத்தி என் மகனுக்கு இன்றும் ராக்கி கட்டுகிறள், அந்த மடி ஆசார மாமியும் மாறி எங்கள் கட்சியுடன் சேர்ந்து விட்டாள். ஒரே குடும்பம் ஒரே இந்தியன் நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் பாரத சமுதாயம் வாழ்கவே! எல்லா மொழிகளும் இனியவையே!
எம்மதமும் சம்மதமே!
அன்புடன் விசாலம்
**********முற்றும் *********
என் அன்பர் திரு ஜயபரதன் அவர்கள் என் தில்லியின் இந்த அனுபவங்களை எழுத ஊக்கம் கொடுத்து எழுத சொன்னார் அவரால் ஒரு 14 பாகங்கள் எழுதிவிட்டேன் இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன் விசாலம்
******************************
Sunday, June 24, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"--14
Posted by
Meerambikai
at
2:25 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-13
இப்போது இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தைப் பார்ப்போம், இதில் சம்பந்தப்பட்டது நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராஜி இநதக் காரியம் செய்தது தப்பா? அல்லது சரியா?இப்படித்தான் செயய வேண்டும் ,,என்று ஒரு சாரார்,,,இதை எப்படி செய்ய முடியும்?
என்று இன்னொரு சாரார், சிலர் இந்தச் சம்பவத்தினால் மனம் கொதித்தனர், அவர் செய்தது தவறு என்று அடித்துச் சொன்னார்கள். இதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள நாம் சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஒரு நாள்... ஒரு திடுக்கிடும் சம்பவம்... நடந்த இடம் பஞ்சாப். ஒரு திருமணப்பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட
அதில் ஆயிரமாயிரம் கனவுகளுடன் மணமகன் மணமகள் அமர்ந்திருக்க திடீரென்று தபதப என்ற ஒரு கூட்டம் துப்பாக்கியுடன் நுழைந்தது, என்னவென்று யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் டப்டப என்று எல்லோரையும் சுட்டு வீழ்த்தியது பின் ஓடிப் போனது, மணப்பந்தல் சோகப்பந்தல் ஆனது, பூக்கள் சிதறிக்கிடந்தன, இரத்தம் ஆறுபோல் ஓடின மணமகன் மேல் மணமகள் உயிரில்லாமல்.. கையைப்பிடித்தபடி இறந்து கிடந்தாள். இந்தச் சோகக்காட்சி நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டது. எல்லோருக்கும் ஒரேஅதிர்ச்சி! அவர்களப்பற்றி விஜாரித்ததில் சில சர்தார்ஜியின் கூட்டம் தங்களுக்கு காலிஸ்தான் என்றத் தனி பிரிவு வேண்டும் என்றும் அவர்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள் என்றும் தெரிய வந்தது இதில் ஆயுதங்கள் கொடுத்து உதவுவது பாகிஸ்தான் என்றும் தெரியவந்தது ஆனாலும் அரசியல்வாதிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நின்றது வியப்புத்தான். அன்று ஆரம்பித்த இந்த அரஜகம் தொடர்ந்து நடந்த்து கொண்டே வந்தது. இதில் பங்கேற்றிருந்தச் சிலர்... அரசியல்வாதிகளுக்கும் சிம்ம ஸ்வப்பனமாக இருந்த்தார்கள். 1983ல் திரும்பவும் பஞ்சாபில் நிறையக் கொலைகள்
நிகழ ஆரம்பித்தன. 1984ல் கணிசமாகக் கொலையின் எண்ணிக்கை ஏறியது. ஒரு பஸ்ஸில் பிரயாணித்த யாவரும் கொலை செய்யப்பட்டனர். அதில் குழந்தைகளும் பெண்மணிகளும் இருந்தனர். நிலைமை மிகவும் முற்றிப்போயிற்று, பல பஸ்கள் எரிக்கப்பட்டன. அந்த நேரம்தான் பசுமைப்புரட்சி green revolution செயற்பட ஆரம்பித்தநேரம்
இங்குப் பசுமைக்குபதிலாக இரத்தப்புரட்சி தான் எங்கும் தெரிந்தது. இதெற்கெல்லாம் காரணம் ஒரு சீக்கிய மதகுருதான் பெயர் ஜமால்சிங்
பிந்த்ரேவாலா, அவர் மதகுருவாக இருந்ததால் ஒருவருக்கும் அவர்
மேல் சந்தேகம் வரவில்லை, புனிதசீக்கியக் கோவில் அமிருத்சரசில், இருந்தது அதைத் தங்கக்கோவில் என்றும் சொல்வார்கள், இந்தப் பிந்த்ரேவாலாஜி நிறைய ஆயுதங்களை வெடிகள், பாம்கள் எல்லாம் அங்கு மறைத்து வைத்திருந்தார்.தொண்டர்கள் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டனர். யாராவது பிடிபட்டால் சயனைட் உதவியினால் உயிரை மாய்த்துக் கொண்டனர். அத்தனை விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாகப் பல விஷயங்கள் அம்பலமாயின. இது திருமதி. இந்திராஜியின் காதிலும் விழ சீறிக் கிளம்பினாள் அன்னை, நாடு இதுபோல் அவதியாவது பொறுக்க முடியாமல் இதற்குத் தீர்வு காண அல்லும் பகலும் யோசித்து பஞ்சாப் தங்கக் கோவிலை முற்றுகை இட கட்டளை இட்டாள். " ஆபிரேஷன் பிளூ ஸ்டார் "என்ற பெயரில் மேஜர் ஜனரல் குல்தீப் சிங் பிரார் என்றவரின் தலைமையில் 1984ல்
சீக்கியரின் தங்கக் கோயில் முற்றுகைஇடப்பட்டது பல கமெண்டோஸ்கள் அனுப்பப்பட்டனர் பல நாடகள் சணடை தொடர்ந்தன அமிருத்தசரஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டன மற்ற நாடுகளிலிருந்து முழுவதுமாக
தனித்து விடப்பட்டது. செய்தித்தாளோ டிவியோ ஒன்றும் இல்லை, என்ன நடக்கிறது என்றே தெரியாமல்இருள் சூழ்ந்து கொண்டிருந்தது . ஐந்து மாதங்கள் முடிய யுத்தம் முடிந்து பிந்த்ரேவாலாஜி பிடிபட்டார். கோவிலுக்குள் ஒரு பாதக்மோ ஒரு வித சேதமோ வரவில்லை, ஆனாலும் சீக்கியர்கள் மனம் கொதித்தனர் அகால் தக்த் என்ற இடம் சிறிது சேதமானது கோவிலுக்குள்ளிருந்து பல வித ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முடிவு என்ன வென்றால் ஒரு கட்சியின் மனக்கசப்பை திருமதி இந்திராஜி பெற்றுக் கொண்டார். சர்தார் குஷன் சிங் "{ illistrated weekly editor} தமக்குக் கிடைத்த பத்மபூஷண் பட்டத்தை நிராகரித்தார். சர்தார் அமிருதசிங் வேலைவிட்டு நீங்கினார் எரோப்ளேன் ஹைஜேக் ஆனது திருமதி இந்திராஜீயைக் கொல்ல சதித்திட்டம் தொடங்கியது...
..........வளரும்
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
1:48 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-12
என்னைக் கவர்ந்த இந்திரா அம்மையார்:
இத்தனை வெறிக்கும் காரணம் யார்? ஏன் அந்த அம்மையாரைச் சுட வேண்டும், அதுவும் ஒரு வாசற்காப்போன், இது தெரிய நாம் திருமதி இந்திரா அம்மையாரின் ஆட்சிக்காலத்திற்கு போகவேண்டும். "இந்திரா" பெயரிலேயே இந்தியா இருப்பது போன்ற பிரமை வீரமும் மனதிடமும் தீரமும் கொண்ட பெண்மணி.. ராஜ வம்சக் களை முகத்தில்...
மேடைப் பேச்சு கடல் மடைத் திறந்த வெள்ளம் போல் அப்படியே கொட்டும் கடைசியில் "ஜய்ஹிந்த்"என்ற முழக்கம் இன்றும் என் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. மும்முறை அவர் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்று நாட்டை உயர்வடையச் செய்தார்.
அவருக்குத்தான் எத்தனை மனவலிமை! ஒன்று நடத்திக்காட்டுவேன்" என்று சொல்லி விட்டால் எப்படியேனும் அந்தக் காரியத்தை நடத்தி முடிப்பார். 1965ல் முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் {தாஷ்கெந்த் மீடிங்} நாட்டையே குலுக்கியது அவர் பின் வந்த ஸ்ரீமதி இந்திரா காந்தி மிகுந்த
அனுபவசாலியாக திறமையுடன் செயல் பட ஆரம்பித்தார். அவருக்கு உதவியது அவர் தந்தையாக ஸ்ரீ ஜவஹர்லால்ஜி அமைந்தது, அவருடைய கொள்கைகளைக் கொண்டு தேசபக்தி மிக சிறந்த அறிவாளியாக, பெரிய இலட்சியவாதியாக, நாட்டை மேலும் வளரச் செய்து உலக நாடுகளில் நம் நாடும் ஒரு முக்கிய பங்கு எடுக்க மிகவும் உதவினார். ஸ்ரீ ஜவஹரின் அறிவுத்திறன் இவரிடமும் பொதிந்து கிடந்தது. சாமர்த்தியமும் மனதைரியமும் எதையும் தாங்கும் சக்தி கிடைத்தது. சைனா போர், பாகிஸ்தான போர் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டி உலக நாடுகளிலேயே போற்றக்கூடிய ஒரு பெண்மணியாகத் திகழ்ந்தார். இதனால் இந்தியாவின் புகழும் கௌரவமும் உயர்ந்தன. இப்படி உயர்த்திவிட்டப் பெருமை அம்மையாரையே சேரும் ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தப்புகளைச் செய்து 1977ல் தோற்கப்பட்டார். அவர் செய்த நல்ல காரியம் சிலருக்கு தவறாகப் பட்டது அதில் குடும்பக் கட்டுப்பாடு முக்கியமான ஒன்று. மக்கள் தொகையைக் குறைக்க
குடும்பக் கட்டுபாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இரு குழந்தைகள் மேல் இருப்பவர்கள் எல்லோருக்கும் "நஸ்பந்தி" என்ற அறுவைச் சிகிச்சை கட்டாயப் படுத்தப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் கருகலைப்பு சர்வ சாதாரணமாக ஆனது இதனாலும் தவறான செயல்கள் பெருகின. அவசரத்தில் டாகடர் சரியாக இல்லாமல் தவறான சிகிச்சைசெய்யப்பட்டு பலர் உடல் நலம் குன்றி அவதிப்பட்டனர். ஸெக்ஸ் சர்வ சாதாரணமாகியது, இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.
இரண்டாவதாக இவரது கோபம், பிடிவாதக் குணம் இவரைக் கவிழ்த்தது. இவரின் அஹங்காரம், தன் உத்தரவை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற கொள்கை எல்லாம். இவரது தோல்விக்கு காரணமாயின.அவரிடம் பல நல்ல அம்சங்கள் இருந்தன, வீர மேடைப்பேச்சு , வெளி நாட்டவர்களிடம் நட்புக்கரம், எத்தனை இடர் வந்தாலும் உடனே பதறாமல் செயலெடுக்கும் திறமை ஐந்தாண்டு திட்டங்கள் வகுத்து நாட்டை ஓங்குதல், பாரதகலாசாரத்தை வளர்த்தல், கலைஞர்களைப்
பாராட்டுதல், மலைச்சாதி மக்களுடன் கூடி இழைதல் நடனம் ஆடுதல் அவ்ர்களுக்கு கல்வி ஆஸ்பத்திரி போன்றவை வழி வகுத்து கொடுத்தல்
போன்ற நல்ல அம்சங்கள் இருந்தும் அவரது சில செயல்களால் தேர்த்தலில் தோற்று போகும் படி ஆயிற்று.
அடுத்த செய்தது சரியா தவறா, என்று சிந்திக்கவைத்த செயல் "ஆபிரேஷன் ப்ளூ ஸ்டார் ' இதை அடுத்த பாகத்தில் காண்போம்...
வளரும்...
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
1:31 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-11
நான் நினைத்தது நடந்தே விட்டது,ஒரு நிமிடத்திற்க்குள்" தமதம" என்று ஒரு கூட்டம் உள்ளே நுழைந்தது. பலர் அதில் வாசலில் எழுதி இருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்து விட்டு "டேய் கிஷ்ன்சிங்கா.. வாடா வெளியே நாயே! என்று வாய்க்கு வந்தது எல்லாம் பேசி கத்த ஆரம்பித்தனர். கையில்.. கத்தி கோடாரி இருந்தன. அப்பப்பா இந்த இந்துக்கள் எப்படி இத்தனை வெறியர்களாக மாறினார்கள்? நம்பவே முடியவில்லையே..வாசலில் அவரது சைக்கிள் இருந்தது, தவிர ஒரு பழைய மாடல் காரும் இருந்தது, ஒருவன் பீமன் போல் அலக்காக அந்தச் சைக்கிளைத் தூக்கினான் ஒரு சுற்று சுற்றி கீழே போட்டு காலால் மிதித்தான் எல்லோரும் ஹாய் ஹாய் என்று முழக்கம் இட, ஒருவனது கண்கள் அந்தக் காரின் பக்கம் சென்றது ,நான் மாடியில் சன்னல் வழியாக மறைந்து நின்று பார்த்தேன். மனது பக் பக் என்று இருந்தது ,"கதவைத் திறடா மடையா" பேவ்கூஃப்...புட்டா buddhha
நீசே ஆஜா தூ " என்று ஹிந்தியில் கத்தினர். என் கணவர் பொறுக்க முடியாமல் கீழே போனார் அவர்களிடம் "ஏன் கத்துகிறாய்? இங்கு இருக்கும் சர்தார்ஜி குடும்பத்துடன் ஊர் போய்விட்டனர்"என்றார் "நாங்கள் மதராசி தான் இங்கு இருக்கிறோம் "
ஹரே ஹட ஜா என்று ஒரு தள்ளுத்தள்ளி உள்ளுக்கு வந்துவிட்டனர்
நான் முன்பு ப்ளான் போட்டபடி அந்த பாத்ரூமுக்குள் சர்தார்ஜி அவர் மனைவியுடன் உள்ளே புகுந்துக்கொண்டேன் குழாயை வேகமாகத் திறந்தும் விட்டேன் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன் மனது படபட் என்று அடித்துக் கொண்டது. பாத்ரூமில் குளிக்கும் போல் பாவனைச்செய்து நல்ல மைசூர் சாண்டல் சோப்பைக் குழைத்தேன் நல்ல மணம் வீசிற்று... உள்ளூர ஒரு பயம் தான். மனம் துர்கே எனக்கு தைரியம் கொடு! என்று வேண்டியது முருகா இந்தக் குடும்பத்தைக் காப்பாற்று! உத்தர ஸ்வாமி மலையில் வந்து அபிஷேகம் செய்கிறேன் என்று முருகனைக் கூப்பிட்டேன். தமிழ் பாட்டு பாட ஆரம்பித்தேன் அவர்களில் இருவர் பாத்ரூமிற்கு வாசலில் வந்து கதவைத் தட்டினார்கள், நான் "மை ஹூன் ,,,மதராசி ,,,, ,,ஆப் கோன் ஹை? மை தோ நஹா ரஹீ ஹூன் "சலியே ச்லியே" "{ நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் யார்? போங்கள், கீழே... என்றேன். "அச்சா அச்சா " என்று சொல்லியபடி கிழே சென்று விட்டனர். அங்கே போய் "அந்தர் கோயி நஹீன் ஹை,,,"உள்ளே ஒருவரும் இல்லை, என்றனர்
அப்பா... முருகா என் வயிற்றில் பாலை வார்த்தாயே...கண்களில் கண்ணீர் பெருக அந்தச் சர்தாரினியை அணைத்துக்கொண்டேன். வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி மனதில் வந்தது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சர்தார்ஜி அப்பாவும் என் தலையைக் கோதிவிட்டு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மிகவும் சின்னக் குரலில் "சத்ஸ்ரீ அகால் " என்று தன் குருவுக்கு நன்றியைத் தெரிவித்தார். நானும் கூடசேர்ந்து கொண்டேன்.
அங்கு மடி பார்க்கும் மாமி வீட்டிலும் அவர்கள் நுழைய அந்த மாமி "போங்கடா கீழே இங்கு நானும் என் மகனும் தான் இருக்கிறோம் "பெரிசா சோதனைப் போட வந்து விட்டாய் என்று தமிழில் சொல்ல அவர்கள் ஒன்றும் விளங்காது சிரித்துக்கொண்டே அந்த ரஜாயின் மேல் அமர்ந்தார்கள். மாமி பிளாஸ்க்கில் இருந்த சாயை அவர்களுக்குக்
கொடுத்து மனதைத் திசைத்திருப்பி பின் கீழே அனுப்பி விட்டாள் என்ன சமயோஜன புத்தி? அவர்கள் போனதும் கதை மூடிவிட்டு ரஜாய்ப் பெட்டியின் கதவைத் திறக்க அதிலிருந்து மகனும் மருமகளும் வெளியே எழுந்து வந்தனர். பாவம் ஒரு மணி நேரம் அந்தப் பெட்டிக்குள்..என்றால் எத்தனைச் சிரம்மாக இருந்திருக்கும் இந்த ஒரு நாள் மட்டும் இல்லை சுமார் பத்து நாட்கள் அவர்களை உள்ளேயே வைத்துக்கொண்டு இட்டிலி காபி சாம்பார் பாத் என்று கொடுத்து உதவினோம் அவர்கள் வீட்டிற்க்குள்ளேயே சிறைப்போல் இருந்தனர்.
வளரும் அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
1:20 AM
0
comments
Sunday, June 3, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-10
இந்திரா மரணம்... இந்தியா...மரணம்!
எத்தனை இந்து சீக்கியர்களிடம் சகோதரர்களாக பழகி வருகின்றனர். இதே போல் சீக்கியர்களும் இந்துக்களிடம் அன்புடன் தான் பழகி வந்தனர், இரண்டாம் தேதி, காலை... ட்ரிங்...டிரிங்... என் டெலிபோன் அலறியது, "ஹலோ" நான் பேச ஆரம்பிப்பதற்குள் என் தோழி அவசரமாக செய்தி தெரிவித்தாள் "விசாலம் ஒரு கூட்டம் உன் வீட்டு முதல் ரோட்டில் கிருஷ்ணா மார்கெட் அருகில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்த ரகளை உங்கள் ரோடுக்குத்தான் எனென்றால் உன் தெரு முழுவதும் சர்தார்ஜி குடும்பம் தான், ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்" எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.என் வீட்டு வாசலில் கொட்டையாக "சர்தார் கிஷன் சிங்" என்ற வர்ணப்பலகை அடிக்கப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பார்த்து இன்னும் கவலை அதிகமாயிற்று, கண்டிப்பாக அவர்கள் உள்ளே வந்து கொலைதான் நடக்கும் என்று பயந்தேன். எப்படியேனும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மனதில் ஒரு சக்தி பிறந்தது. நேரே ஷீரடி பாபாவின்படத்தருகில் போய் பிரார்த்தனை செய்தேன்,
"பாபா என் சர்தார்ஜி அப்பாவின் குடும்பத்தைக் காப்பாற்று" ஒரு ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைச் செலுத்தினேன். எனக்கு இதில் மிக நம்பிக்கை உண்டு. பின் சர்தார்ஜியிடம் போய் நானும் என் கணவரும் அவரிடம் இது பற்றி சொன்னோம், பின் அவர்களை ஒளித்து வைக்க பல யோசனைகள், எங்கே ஒளித்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று தலையைப் பிய்த்துக் கொண்டோம். பின் நான் அவர்களை என் குளிக்கும் அறைக்குள் அனுப்பி அந்தக்குண்டர்கள் வந்தால் நானும் குளிப்பது போல் குளியலறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ள தீர்மானித்தேன், நான் குழாயைத் திறநது குளிப்பது போல் ஏமாற்ற திட்டம் இட்டோம். மாடியில் இருந்த திரு சுந்தரராமனின் தாய் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த மடி ஆசாரம் பார்க்கும் மாமியின் மனமும் பரிதவித்தது அவசரமாகப் படி இறங்கி கீழே ஓடி வந்தாள் "விசாலம் இப்போது கூட நான் உதவலேன்னா நான் மனுஷியே இல்லை" என்று சொல்லி அவர்கள் வீட்டுக்குள் போய் அவர்கள் வீட்டு பெண் மாப்பிள்ளை இருவர் கைகளையும் பிடித்து தமிழில் "வாங்கோ என் வீட்டிற்கு நான் காப்பாற்றமாட்டேனா நன்னாயிருக்கே... என்று கூறி அவர்களை அணைத்தாள். மடி ஆசாரம் அங்கு மறைந்தது அன்பு அங்கு பிறந்தது நானும் அவர்களுடன் மாடி ஏறி ஓடினேன், ஜல்தி... ஜல்தி... என்று சொல்லியபடியே அவர்களை மறைக்க இடம் தேடினேன் கிடைத்தது. பெரிய ரஜாய் பெட்டி அந்த ரஜாய் பெட்டிக்குள் அமர யோசனைக் கூறிவிட்டு கீழே வந்தேன். அந்த மாமி அவர்களை அந்தப் பெரிய ரஜாய் பெட்டிக்குள் இறங்க உதவி செய்து பின் மூடிவிட்டு மேலே பழைய புடவைகளைப் பரப்பினாள்...
....வளரும்
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
1:05 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-9
இந்திரா மரணம்... இந்தியா மரணம்..!
30 தேதி மாலை...
ஸ்ரீமதி இந்திராகாந்தி பாரதப் பிரதமர் அவர்களின் மரணம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டது, எல்லா ஹிந்துக்களும் பித்துப் பிடித்தாற் போல் செயல்கள் செய்ய ஆரம்பித்தனர், அன்பு பாசம் ஒருவர் மேல் அதிகமாக அது பிnனால் வெறியாகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அந்த வெறியில் எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்ற விவரமே புரியாமல் பல இராட்சஷ வேலைகள் செய்ய
ஆரம்பித்தார்கள். மூளையில் யோஜனை செய்யும் தனமையே இழந்து விட்டார்களோ?
ஒன்றாம் தேதி காலை பூகம்பமாக இருந்தது இப்போது எரிமலைக் குழம்பு போல் கக்கியது கூட்டம் கூட்டமாக ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு பல கடைகளைச் சூரையாடத்தொடங்கினர், "தைமூர் என்பவன் பலதடவைகள் படை எடுத்து சூரை ஆடியது இப்படித்தான் இருக்குமோ? பஸ்கள் எரிந்தன, சர்தார்ஜி கடைகள் எரிக்கப்பட்டன என்வீட்டு அருகில் இருக்கும் ஒரு கடை இரத்தினகம்பளங்கள் விற்கும் வியாபாரி அவன்கடையில் ஒரு கூட்டம் போய் அவன் தலைப்பாகையை இழுத்து அவனை அடித்து பின் அவனது விலை உயர்ந்த கார்பெட் எல்லாம் நடு ரோடில் விரித்து அதில் நடந்தனர். சிலர் அதைத் தங்கள் வீட்டிற்கும் எடுத்து போயினர் சில விஷயமே புரியாத நடைபாதை திருடர்கள் இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அந்த அரசியல் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு புரியாமலே கோஷம் போட்டு நிறைய கொள்ளை அடித்துச் சென்றனர். பல சர்தார்ஜிகளின் குடும்பத்திற்குள் நுழைந்து குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் வீட்டிற்க்கு நெருப்பு வைத்தனர். எங்கும் அழுகை சத்தம், எங்கும் அவலம், அப்பப்பா... அழிவுக்காலம் என்பது இப்படித்தான் இருக்குமோ..? வயிற்றில் ஒரு சங்கடம்...
நான் பால்கனி பக்கம் வரவே தயங்கினேன். என் சர்தார்ஜி அப்பாவுக்கு என்ன நடக்குமோ என்று நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தது, திடீரென்று "சர்தார்ஜி ஹாய் ஹாய்,, என்ற சத்தம் வந்தது, மெள்ள பால்கனி கதவைத் திறந்துப் பார்த்தேன், கீழே ஒரு கூட்டம் என்னைப் பார்த்து கையை ஆட்டியது அவர்கள் கையில் ஒரு சாக்கு நிறைய விடியோ கேசட்டுக்கள் இருந்தன. அப்போது தான் இந்த வீடியோ கேசட்டுக்கள் வர ஆரம்பித்தன. ஒன்று 400 ரூபாய் இருக்கலாம், நான் திரும்பி உள்ளே வரப் போனேன் "யே லே லோ பஹன் என்று என் பால்கனியில் மூன்று கேசட்டுக்கள் விட்டு எறிந்தார்கள். என் கணவர் "அங்கே என்ன வேடிக்கை உள்ளே வா" என்ன சத்தம் கல் விழுகிறதா?" என்று அவரும் வந்து பார்த்தார் நல்ல கேசட்டுக்கள் அதில் குருதத்தின் "பியாசா தேவானந்தின் கைட் guideபடமும் இருந்தன. என்னைப் பார்த்து இன்னும் வேண்டுமா
என்று வேறு கேட்டனர் பாவம்.. யாருடைய கேச்ட்டுக்களோ, பகல் கொள்ளை, அதில் தானம் வேறு அந்தக் கேசட்டுக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பல தங்கக் கடைகள் சூரையாடப்பட்டன, ஒரு மெய்க்காப்பாளன் தன் சுய நலத்திற்கு செய்த தவறுக்காக முழு சீக்கிய குடும்பத்தையும் அழிக்கும் மனம் ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? பிரதமர் மேல் வைத்த பாசமா? உணர்ச்சிகளின் அளவுக்கு மீறி பெருக்கா? ஒரு வீட்டில் ஒரு பையன் செய்த குற்றத்திற்காக அவன் குடும்பதையே அழிப்பது என்ன நியாயம்? அத்துடன் சில ரோடு ஸைட் ரோமியோக்கள் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பல பெண்களின் கற்பையும் அழித்தனர், பின் கொன்று விட்டனர். போலீஸின் கட்டுப்பாடு இருந்தும் அடக்க முடியாத நிலை வந்தது குடிசைகளில் இருக்கும்
சில சோம்பேறி கணவர்கள் தங்கள் மனைவியின் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சீட்டு, குடி என்று காலத்தைக் கழிப்பவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் ஒரு லட்டு மாதிரி, அவர்களும் சர்தார்ர்ஜி" ஹாய் ஹாய் "என்று கத்திக் கொண்டு கிடைத்ததைச் சுருட்டி கொண்டனர். சர்தார்ஜி பள்ளிகள் கூட விடவில்லை, எல்லாம் தீயிற்கு இரையாயின,
இவர்கள் மனதில் இவ்வளவு வெறுப்பா இங்கு தான் அடங்காத வெறியைக் கண்டேன்.
நான் அவ்ர்கள்: மனதில் இவ்வளவு நெருப்பா? இவ்வளவு விஷமா கக்க?சின்ன சீக்கிய பாலர்கள் பாவம்,அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த பாலகர்களின் தாய் என்ன செய்தாள்? எத்தனைக் குழந்தைகள் அநாதை ஆனார்கள்? எத்தனைப் பேர் கணவனை இழந்தார்கள்? ஐயோ என் மனது வெடித்துப் போனது எத்தனை இந்து சீக்கியர்கள் சகோதரப் பாசத்துடன் பழகி வந்தனர், நட்புக்கே இலக்கணமாகவும் திகழ்ந்தனரே...
என்வீட்டு சர்தார்ஜி அப்பா குடும்பதை எப்ப்டி காப்பாற்றினோம் என்பதையும் சொல்கிறேன்
.....வளரும்
அன்புடன்...விசாலம்
Posted by
Meerambikai
at
12:50 AM
0
comments
Friday, May 18, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-8
அக்டோபர் மாதம் தில்லியில் நல்ல குளிர் முன்பெல்லாம் இருக்கும், இப்போது நவம்பர் கடைசியில் தான் குளிர் வர ஆரம்பிக்கிறது அடுக்கு மாடி கட்டிடங்கள் பெருகப் பெருக இயற்கையிலும் மாற்றம் ஏற்படுகின்றன, அப்போது வெட்ட வெளி அதிகம், இந்த அக்டோபர் மாதம் வந்தாலே என் பழைய ஞாபகங்கள் கிளறப் பட்டு விடுகின்றன,
அக்டோபர் மாதம், முப்பது 1984, காலை சுமார் ஒரு பத்து மணி இருக்கும், கரோல்பாக் என்ற இடம் சின்ன மாதுங்கா{ மும்பாய்,,} எனலாம் அல்லது
மாம்பலம்{சென்னை}எனலாம் அங்கு தான் என் வீடு எல்லா வீட்டுகாரர்களும் அநேகமாக ஸர்தார்ஜீயாக இருந்தனர். அந்தக்
காலத்தில் பாகிஸ்தான் இந்தியா பிரிவினையின் போது பலர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து இங்கேயே தங்க வீட்டையும் கட்டி கொண்டனர். அவர்கள் மதராசி என்றாலே வீடு வாடகைக்குக் கொடுத்து விடுவார்கள். முதல் தேதியே தமிழர்கள் நாணயமாக வாடகை
தந்து விடுவார்கள். சண்டைப் போட மாட்டார்கள் என்ற நல்ல பெயர்
நான் காலையில் கடிதம் போஸ்ட் செய்ய ஒரு தபால் நிலயத்திற்கு சென்றேன். அந்தப் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஒரு பெரிய வீடியோ கடை இருந்தது மூன்று சர்தார்ஜிகள் அதைப் பார்த்து வந்தனர் திடீரென்று ஒரு பெரிய சுனாமி அலைப் போல் மளமளவென்று ஒரு கூட்டம் வந்தது நான் அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டேன் என் வாய்
நாமஸ்மரணைச் செய்ய ஒருவன் எனக்கு வழி விட்டான். பின் அவர்கள் அந்த சர்தார்ஜியின் கடைக்குள் நுழைந்து அவனைப் பிடித்து அடி அடி என்று அடித்து முதுகிலும் தோளிலும் குத்தி ஒரே வில்லன் சண்டை தான் சிலர் உள்ளே நுழைந்து பல கேசட்கள் சூறையாடி பைகளில் போட்டுக் கொண்டனர், குரங்கு கையில் பூமாலைப் போல் கடை ஆனது.
நான் ஒரே ஓட்டம்... மனது படபடவென்று அடித்துக்கொண்டது. நேரே வீடு ஓடி வந்தேன் நல்ல வேளையாக வீடு அருகில் இருந்ததால் பிழைத்தேன். முதல் காரியமாக சர்தார்ஜி அப்பாவைக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அத்ற்குள் ரேடியோ அலறத் தொடங்கிற்று
கூட டிவி யும் தான் அதுதான் ஸ்ரீமதி இந்திரா காந்தி அம்மையார் அவரது காவல் காப்போனால் சுடப்பட்டு விட்டார். பல இடத்தில் கோலிகள் துளைத்துக் கொண்டு சென்றிருக்கின்றன என்றும் செய்திகள் மாறி மாறி வந்துக் கொண்டிருந்தன. ஒரு சீக்கிய மெய்க்காவலனே அவரைச் சுட்டு விட்டான். அகில இந்திய மருத்துவ மனையில்
சேர்க்கப் பட்டிருக்கிறார், என்றும் தகவல், எங்கும் பிரார்த்தனைகள், எங்கும் மனதில் ஒரு பீதி, கலவரம், சோகம் அப்பப்பா சொல்ல முடியாது. ஒரு தீப்பொறிப் போல் பற்றி எல்லா இடமும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது, எல்லா அலுவலகங்களும் செயலிழந்து போயின, ஒருவர் கூட வேலை செய்யவில்லை, ஆஸ்பத்திர்யின் வாசலில் கூட்டம் சொல்லி முடியாது, பலர் டிவி முன் சாப்பாடு கூட இல்லாமல் உட்கார்ந்திருந்தனர். பள்ளி, காலேஜ் மூடப்பட்டன. மாலை வந்தது, ஒரு பிரளயத்தைக் கண்டேன் ஆம் முன்னாள் பாரதப் பிரதமர் பாரதரத்னா ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்கள் மரணம் அடைந்தார் என்ற செய்தி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாற்போல் ஒரு ஆட்டம் ஆட வைத்தது...
வளரும்...
Posted by
Meerambikai
at
8:48 AM
1 comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-7
என் வீட்டின் முன் புறம் இரண்டு கார் ஷெட்டுகள் இருந்தன, அதைச் சர்தார்ஜி சரி செய்து இரண்டு கடைகளுக்குக் கொடுத்திருந்தார். ஒன்று சாய் கடை... அத்துடன் பிஸ்கெட்ஸ், பன், பிரட், பட்டர் என்று காலை நாஸ்தாவுக்கு வேண்டியது கிடைக்கும், அத்துடன் ஆம்லெட்டும் செய்து கொடுப்பான். அவன் ஜய்பூரியன் பெயர்... முன்னா அவன் டீ போட்டால் நல்ல ஏலக்காய் மசாலாவுடன் வாசனைத் தூக்கும். குளிர் வந்தால் நல்ல அதரக் {இஞ்சி } சாய் மிகப் பிரமாதமாக இருக்கும். நானே பள்ளியிலிருந்து வந்தால் அங்கு இருந்து சாப்பிட்டு வருவேன். மற்றொரு கடை முடித் திருத்தும் நிலயம் அவன் பெயர் போலா..., கடையின் பெயர் "ராயல் முடி திருத்தும் நிலையம்". அவன் லாஹூரிலிருந்து வந்தவன். அவன் அங்கு இருப்பது என் கணவருக்கு மிக ஜாலிதான். ஒரு கூட்டம் இல்லாமல் ஒரு ஸ்பெஷல் கவனிப்பு... இவர்கள் இருவரும் மிக நல்லவர்களாக அன்பு உள்ளம் கொண்டவர்களாக இருந்தனர், என் வீட்டிற்கு ஒரு சரியான பாதுகாப்பு, நான் சில சமயம் தமிழ் பத்திரிக்கை வாங்க கதவைப் பூட்டாமல் இவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வேன் கவலையில்லாமல். தவிர நான் பள்ளியிலிருந்து பல கட்டு திருத்தும் தாள்கள் கொண்டுவர பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்குவேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களில் ஒருவன் ஓடி வந்து என் மூட்டைகளை வாங்கி வீடு வரை கொடுத்துதவுவான். ஒரு நாள் பள்ளியில் வேலை நிறைய இருந்ததால் நான் பஸ்ஸில் ஏறவில்லை. பின் ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு வந்தேன். என் வீடு வரும் முன் ஒரு நாற்சந்தியைக் கிடக்க வேண்டும், அங்கு போலீஸ் இருப்பதில்லை... தவிர டிராபிக் சிக்னலும் கிடையாது. இஷ்டத்திற்கு அவரவர்கள் ஓட்டுவார்கள் என் ஆட்டோ வீடு அருகில் வந்ததும் இறங்க ஏற்பாடு செய்துக் கொண்டு ஓரமாக வந்தேன். அப்போது ஒரு குண்டு வெடிப்பது போல் ஒரு பெரிய சத்தம் என் காதில் விழுந்தது. அதற்குப் பின் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை...நினவு வந்து கண் விழித்துப் பார்த்த போது சாய் கடையின் பெஞ்சில் படுத்திருந்தேன், எனக்கு நல்ல டீ போட்டு அந்தக் கப்புடன் அந்த தர்மா அருகில் இருந்தான். அவசரமாக எழுந்திருக்க முனைந்தேன், முடியவில்லை இடுப்பிலும் இடது கையிலும் நல்ல அடி.என் மனதெல்லாம் என் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் எங்கே போயிற்று? என்ற கவலையில் தான் இருந்தது... பின் என் குழப்பத்தைப் பார்த்து அந்த தர்மா, நடந்தைச் சொன்னான். ஒரு கார் என் ஆட்டோவை மோதி வேகமாக நிற்காமல் சென்று விட்டது. நான் நடை பாதையில் வீசி எறியப்பட்டேன், என் துப்பட்டா எங்கேயோ விழ, என் ஹேண்ட் பேக்கும் பறக்க என் பேபர்கள் அலங்கோலமாய் கீழே பரப்ப இந்தக் கடைக்காரர்கள் ஓடி வந்து, "ஆ மேம் சாஹப் " என்று அலறி அடித்துக் கொண்டு ' என்னைத் தூக்கி என் துப்பட்டாவை எடுத்துப் போர்த்தி இந்தக்கடையின் பெஞ்சின் மீது படுக்க வைதிருக்கிறார்கள் ,பின் எல்லா ஓடும் வாகனங்களை நிறுத்தி என் மற்ற பொருட்களையும் சேகரித்து வைத்தார்கள்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
8:44 AM
0
comments
Saturday, May 12, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-6
நாங்கள் இப்போது ஒரே குடும்பத்தினர்.. எல்லாப் பண்டிகைகளும் சேர்ந்து தான் கொண்டாட்டம், அதில் வீடு பெருக்குபவர்கள் கக்கூஸ் பாத்ரூம் அலம்புபவள் எல்லோரும் ஒன்றுதான். எலோரும் வருவார்கள், என் வரலட்சுமி பூஜைக்கு அவர்களுக்கும் தாம்பூலம் உண்டு. முதலில் அவர்களுக்கு அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.
நானே அவள் நெற்றியில் குங்கும் வைப்பேன் அவர்கள் என் அன்பில் நெகிழ்ந்து போவதைப் பார்த்து நான் மனம் பூரித்துப் போவேன். அதே போல் அவர்களும் ஹோலி வர்ணங்களின் பண்டிகையின் போது என் மேல் கலர் பூசுவார்கள் நான் இட்லி செய்தால் ஒரு ஐம்பதாவது செய்ய வேண்டும் அத்துடன் குட்டி வெங்காயச் சாம்பார் வேறு, கப்பு..கப்பாக அந்தச் சர்தார்ஜியின் குடும்பம் குடித்து விடும், அவ்வளவு அதன் மே ஆசை, இதே போல் மசால் தோசா ஊத்தப்பம் என்று பல செய்ய... எனக்கு கிச்சன் விட்டு எப்படா போகலாம் என்று தோன்றினாலும் அவர்கள் திருப்தியுடன் " பஹுத் அச்சா... பிடியா கீ ஹாத் கி க்மால் " என்று அனுபவித்து சாப்பிடும் போது நான் அனுபவிக்கும் இன்பமே தனிதான். எப்போதுமே விரும்பி உள்ளனபுடன் சமைத்தால் அதன் டேஸ்டே தனிதான். சில கோவில்களில் குருத்வாராக்களில் கொடுக்கும் சொஜ்ஜிப் பிரசாதம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும் . இதே போல் அவர்களும் எனக்கு சோலே மட்டர், பன்னீர் ஆலு, கோபி தந்தூர் கி ரோடி என்று கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பஞ்சாபி சமையல் என்றும் எனக்குக் கை கொடுக்கிறது. அதே போல் பஞ்சாபி மொழியும் தான், ஆனால் அவர்களுக்கு வா... போ... இல்ல... வேண்டா... என்ற நாலைந்து சொற்கள் தான் வநதன. பாவம் முயற்சி செய்து விட்டு விட்டனர்.
அந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு முஸ்லிம் நண்பர் மிகவும் வயதானவர் அப்துல் என்று பெயர் ஒரு தடவை என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என் அப்பா சிங்.
இதற்கு நடுவில் எனக்கு டைபாய்டு சுரம் வந்து விட்டது, அந்த நேரம் என் மாமியார் அவர்களும்,சென்னைக்கு வந்திருந்தார், நான் தனித்து விடப்பட்டேன். என் கணவருக்குW HO ல் நிறைய டெலிகேட்ஸ் வந்து இருந்ததால் லீவு எடுக்க முடியவில்லை,அப்போது எனக்கு காலை டீயிலிருந்து கவனித்துக் கொள்ள அவர்கள் வந்து விடுவார்கள், கூடவே அந்த முஸ்லிம் சாஹபும் உதவுவார், எத்தனை வைத்தியம் செய்தும் எனக்கு சரியாகவே இல்லை, வீட்டில் எல்லோர் மூடும் கராப் தான்.
நான் என்ன செய்வது மனதிற்குள் இப்படி படுத்து கொண்டுவிட்டோமே என்று வேதனை.
அப்போது தான் அந்த முஸ்லிம் ஸாஹப் "நஜர் லக் கயா ஹொகா "(கண் திருஷ்டி ஆக இருக்கும்) என்று சொல்லி அதற்கு என்னை ஒரு மஸ்ஜிதிற்கு அழைத்துப் போவதாகக் கூறினார். அப்போது இருந்த நிலையில் எதைத் தின்னால் பித்தம் தெளிடும் என்ற நிலை, ஆகையால் என் கணவரும் ஒகே சொல்லி விட்டார். நான் சிங் பின் அந்த அப்துல் சாஹப் மூன்று பேர்களும் ஒரு ஆட்டோவில் ஏறி சாந்தினி சௌக்கில் சென்றோம். அங்கு ஒரு மரத்தடியின் கீழ் வயதான முஸ்லிம் கிழவர் ஒரு மயில் தோகையுடன் உட்க்கார்ந்திருந்தார். அவர் அருகில் ஒரு மூக்கு வைத்த நீள் ஜாடியில் தண்ணீர் இருந்தது, என்னை அவர் முன்னால் உட்க்கார வைத்தார்கள், நான் எனக்குப் பிடித்த சீரடி சாயி என்ற நாமம் விடாது சொல்ல அவரும் ஒரே புகையாக எதோ போட்டு என்னைச் சுற்றி அபிரதட்சிணம் என்று சுற்றி திருஷ்டிக் கழித்தார். பின் என் கையில் ஒரு தாவீஜ் (தாயத்து) கட்டினார். சர்க்கரை மிட்டாயும் கொடுத்தார். அவ்வளவுதான் நிறைய ஆசிகளுடன் திரும்பி வந்தேன். அந்த முஸ்லிம் அப்துலுக்குத்தான் எவ்வளவு அன்பு, மிகவும் வியந்தேன். அன்புக்கு ஜாதி மாதம் ஒன்றும் இல்லை! அது எல்லாவற்றுக்கும் அப்பால்பட்டது. இத்தனை நடந்தும் அந்த மாடி வீட்டு மாமி மாலை என்னை வந்து பார்ப்பாள் காலையில் அவர் பூஜை மடி ஆசாரம் போன்ற விஷயங்கள் அவரை கீழே வர விடாமல் தடுக்கும், ஆனால் பின்னால் நான் அவருடன் பேசி பேசி அவரை மாற்றி விட்டேன். அது ஒரு தனி கதை...
வளரும்...
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
11:29 PM
1 comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-5
அந்தச் சுந்தரராமன் வீட்டு எதிர் வீடு {neighbour}..அங்கு ஒரு தாயும் இரண்டு பையன்களும் குடி இருந்தார்கள், பெரியவன் சிவராமன் சின்னவன் சேதுமாதவன், அந்தத் தாய் நடு நடுவில் மதுரை போய் விடுவாள். அப்போது அந்த வீட்டைப் பார்க்க வேண்டுமே ஒரே சீட்டுக்கச்சேரி தான், ஒரே கும்மாளம் ஒரே சிரிப்பு.. அதற்கு நடு நடுவே
என் வீட்டிலிருந்து நொறுக்குத் தீனியும் டீயும் ஸப்ளை... அப்போது என் கணவர் கீழே வந்து என்னை டீ போடச்சொல்லி எடுத்துப் போவார், அவரும் தான் அந்தச் சீட்டுக்கச்சேரியில் பங்கு ஏற்பார்.எனக்கு அதில் ஏபிசிடி கூடத் தெரியாது, மேலும் மேலே அந்த அறைக்குப் போனால் ஒரே புகை மூட்டம் தான்... சிவ சிவ என்று ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பேன். அல்லது வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். அதைக் கேட்க நாலு சுவர் தான் இருக்கும் ஆத்ம திருப்திக்கு அது போதும் என்று மனது சொன்னாலும் பெரிய கச்சேரிகளுக்கு வாசித்த நான் இப்போது நாலு சுவருக்குள் என் கலைகளை அடக்க வேண்டும் என்றால் மிக சிரமாக இருந்தது... இது காரணமாக சனி ஞாயிறு வந்தால்... ஏன் வருகிறது என்று தோன்றும் அல்லது அந்த மதுரை மாமி எப்போது திரும்பி வருவார் என்று இருக்கும்... நாளைடவில் இதுவும் பழகிப் போயிற்று பாபிஜி என்று என் மேல் அவர்களுக்கு ரொம்ப ஆசை தமிழன் ஆனாலும் எல்லோருக்கும் நான் baabhiji தான்...
அந்தச் சிவராமனுக்கு இரவில் நடக்கும் வியாதி இருந்தது {insominia } ரொம்ப வேடிக்கை...
ஒரு நாள் இரவு... கீழே நான் குடி இருந்த இடத்தில் வந்து கதவைத் தட்ட நான் திறக்க அவன் நின்றான்... நான் "என்னவாயிற்று உன் அம்மாவுக்கு எதாவது..."என்று இழுத்தேன்.
அவன் ஒன்றும் சொல்லாமல் வந்த வழியே மாடி ஏறி திரும்பிப் போய்விட்டான் எனக்கு ஒரே ஆச்சரியம்! கீழே வருவானேன் பின் மௌனமாகப் போவானேன் என் தூக்கத்தைக் கலைத்து விட்டு... பின் என் கணவரிடம் மறு நாள் இதைப் பற்றிச் சொல்ல, அவர் இந்தத் தகவல் அதாவது தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று கூறினார்.
அவன் என்றாவது கீழே விழுந்து விட்டால் என் மனத்தில் ஒரு கீறல்... ஓ...சொல்ல மறந்து விட்டேனே... எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சக்தி intuition என்று சொல்வார்கள் அது உண்டு... என்ன இப்படி நினைக்கிறோமே... என்று எண்ணி அதை மறந்தும் விட்டேன்.
மதுரை மாமி வந்து ஒரு மாதம் ஆனது, எனக்கு அதில் மிக சந்தோஷம், என்னிடம் அவர் ஹிந்தி படித்தார். ஒரு நாள் இரவு... வேனில் காலம் ஒரே சூடு ஆகையால்...
முற்றத்தில் பல பக்கெட் தண்ணீர் விட்டு நாங்கள் எல்லோரும் அங்கு படுத்துக் கொண்டோம் ஒரு பக்கம் சர்தார்ஜி குடும்பம் மறு பக்கம் நாங்கள் மூன்று பேர்கள் நான்,என் மாமியார் அவர்கள், என் கணவர்...இரவு ஒரு இரண்டு மணி இருக்கும்,நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது, திடீரென்று டபார் என்று சத்தம் நான் வீல் என்று அலறி விட்டேன், எல்லோரும் எழுந்து பார்க்க சர்தார்ஜியின் மனைவி "கீ ஹுவா..." என்று பஞ்சாபியில் கேட்க, லைட் போட அப்பப்பா என்ன பயங்கரம் நான் நினைத்த காட்சிதான்... நடந்து விட்டது. அந்த சிவராமன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். மண்டையில் நல்ல அடி... நினைவு துளி் கூட இல்லை... அந்த இரத்தம் பார்த்து எனக்கு மயக்கமே வந்து விட்டது. உள்ளே ஓடி விபூதியை இட்டுக் கொண்டேன்.
என் கணவர் மிக தைரியசாலி பயம் என்பது அவரது அகராதியிலேயே கிடையாது.மேலே மாடிக்குப் போய் அந்த மதுரை மாமி {அவனது அம்மா}வை மணி அடித்து எழுப்பினார், இந்தச் சிவராமன் தூக்கத்தில் நடக்கும் வியாதியில் கதவு திறந்து வந்து பால்கனி வழியாக குதித்து விட்டான். அந்த மாமிக்கு நடந்த ஒன்றுமே தெரியாததால்...
"யாரு இந்த அர்த்த ராத்ரியிலே " என்று முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறக்க என் கணவரைப் பார்த்து திகைத்தாள். என் கணவர் அவரிடம் விஷயம் தெரிவிக்க அவள் கீழே ஓடி வந்து பார்த்தாள், பின் இரு கண்களையும் பொத்திக் கொண்டு மேலே தன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டாள். அதற்குப் பின் தன் மகன் என்ன ஆனான் என்று அவள் பார்க்க வராதது எப்படியோ இருந்தது, இரத்தம் பார்த்ததால் பயமா அல்லது மனதைரியம் குறைவா என்று நிர்ணயிக்க முடியவில்லை.
இந்தச் சர்தார்ஜியும் என் கணவரும் அவனை அலக்காகத் தூக்கி ஒரு காரில் வைத்து பல ஹாஸ்பிடலில் ஏறி இறங்க எல்லோரும் இந்தக் கேஸை எடுக்கத் தயங்கினார்கள்.பின் ஒரு ஹாஸ்படலில் இடம் கிடைத்து.
ஒரு 5 நாட்கள் ஆபீஸ் லீவு போட்டு அவனைப் பார்த்துக் கொண்டார்கள். பின் அவன் ஒரு மாதம் கழித்து வீடு வந்ததும் அவன் நண்பர்கள் அவனை turn by turn பார்த்துக்கொண்டனர். இன்று அவன் உயிருடன் இருப்பது அந்தச் சர்தார்ஜியியாலும் என் கணவராலும் தான்.
... அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
11:21 PM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-4
என் வீட்டு மாடியில் இரு குடும்பங்கள்...வலது பக்கத்தில்... இரண்டு பக்கங்களிலும் தமிழர்கள் தான்,ஒரு பக்கம் மாயவரம்... இன்னொரு பக்கம் மதுரை...இங்கு இருக்கும் பஞ்சாபிகள், ஸர்தார்ஜிகள் மதராசி என்றால் உடனே வாடகைக்கு வீடு கொடுத்துவிடுவார்கள்.மதராசிகள்
நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்களென்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இப்போது நாம் வருவோம் மாயவர குடும்பத்திற்கு... அங்கு இருந்தத் தமிழன் பெயர் திரு சுந்தர்ராமன், சுந்தரமாக இருப்பான், சுதந்திரமாகவும் இருப்பான்.
அவனுக்கு அப்பா இல்லை... அவன் அம்மா மாயவரத்திலிருந்து தன் பிள்ளைக்குப் பிடித்த வடாம், கருடாம் என்று போட்டு எடுத்து கொண்டு அன்பு மகனைப் பார்க்க வருவார்.
அதுவும் கடுமை வெய்யில் இல்லாமல்... குளிரும் அவ்வளவு இல்லாமல் நவராத்திரி சமயம் வருவார். ஒரு 4 மாதம் இருப்பார் அவர் வரும் நேரம் நம் திருவாளர் சுந்தர்ராமன மிக சமத்துப் பிள்ளையாக மாறிவிடுவார். நோ புகை... நோ விஸ்கி... அந்த அம்மா வந்தால் அவ்வளவுதான், கூடவே மடி ஆசாரம் வந்து விடும்.அப்ப்ப்பா அந்தக் குளிரிலும் காலையில் தலைக்குக் குளித்து ஈரப்புடவையைச் சுற்றிக் கொண்டு வரண்டாவிலிருந்து... உள்ளே அறைக்குள் போவதற்குள் பல்லெல்லாம் கிடுகிடு என்று தந்தி அடிக்கும். ஜபம் என்ன... ஸ்லோகங்கள் என்ன... எல்லாம் முடித்த பின் தான் அவருக்கு தன் வயிறு ஞாபகம் வரும். அவள் தான் தோய்த்து வந்தத் துணிகளை மேலே கொடியில் உலர்த்துவதே ஒரு கலைதான். நான் ஒரு நாள் முயற்சி செய்தேன் ஒரு கொம்பால் அந்த ஒன்பது கெஜப் புடவையை இழுக்க, அது ஒரு பக்கம் சாய்ந்து என்மேலே விழ, திரும்ப முயல கழுத்து வலி எடுத்தது.
அந்த அம்மாவோ இரண்டு நிமிடத்தில் மேலே போட்டு "சர்" என்று கொம்பால் இழுக்க அவ்வளவுதான் அளவு எடுத்தது போல அவ்வளவு அழகாக அமைந்தது. பிரதோஷம் ஏகாதசி என்று விரதமும் இருப்பார்.
இந்த அப்பா ஸர்தார்ஜி வேண்டுமென்றே அவரை சீண்ட அங்கே எப்போதாவது போவார் வாடகை வாங்கும் போது... அந்த மாமி என்னைக் கூப்பிடுவார். "அடியே விசாலம்... இங்கே வந்து பாரேன் கருமம் கருமம் உள்ளே வந்து கிச்சனிலிருந்து தண்ணீர் குடிக்கிறா...
பக்கத்து துணிமேலேல்லாம் பட்டு... சிவசிவா..." நான் சொல்லுவேன்..." என்ன மாமி? நல்ல மனசுதானே முக்கியம். துணி பட்டால் என்ன? அவர் மிகவும் நல்ல ஸர்தார்ஜி" என்று...
அந்த மாமி ஒத்துக்கொண்டால் தானே...மிக பழமையில் ஊறிவிட்டதனாலோ... அல்லது நிறைய இடங்கள் பர்க்காமல் ஒரேஇடத்தில் இருப்பதால்தானோ என்று தோன்றுகிறது.
உடல் சுத்தம், உடைசுத்தம் தேவைதான் அத்துடன் மனசு சுத்தமும்
மிக மிகத் தேவை. அன்புக்கு முன் எல்லா சுத்தமும் வந்து விடுகிறது. அகத்தூய்மைடைய அடைய மனம் பரந்து விரிகிறது... எதாவது பண்டிகை வந்தால் இந்தச் சர்தார்ஜி இந்தக் குடும்பத்தினருக்கும் ஸ்வீட் டப்பா அனுப்புவார். அந்த மாமியோ அதை அப்படியே எனக்கு கொடுத்து விடுவாள். இதற்கெல்லாம் சேர்த்துவைத்து அந்தச் சுந்தர்ராமன் மாமியில்லாமல் இருந்தால் அவர்கள் வீடே பழியாகக் கிடப்பான்.
அவர்களுடன் உணவு கொள்ளுவான் எல்லா பழக்கமும் பழகி கொண்டுவிட்டான்.
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் கடைசி பாகத்தில் இது ரொம்ப முக்கியப் பங்கு வகிக்கும்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
11:13 PM
0
comments
Thursday, May 10, 2007
எல்லை இல்லா அன்பும் அடங்காத வெறியும் 3
என் மார்பு படபட என்று அடிக்கத் தொடங்கியது, என் மனதில் அப்போது ஒருதைரியமான ஒரு வேகம் வர அவர் கையை ஒரு உதறு உதறினேன், எதிர் பார்க்காமல் நடந்ததால் அவர் கை தண்ணிர் கிளாஸில் பட அது கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்து உடைந்தது, சென்னை வாசியாய் இருந்தால் “என்ன நினைதாய் நீ? செறுப்பு பிஞ்சிடும்” என்று சொல்லியிருப்பேன்.ஆனாலும் என் காலில் அப்போது செறுப்பு இல்லை ஸாக்ஸ் தான் போட்டிருந்தேன் அதை அவிழ்த்து அடித்தால் அதற்கு ஒரு முத்தம் தந்து எடுத்துக் கொண்டு போயிருப்பார், அவரைச் சொல்லி குற்றமில்லை... அவருக்குள் போயிருக்கும் சரக்கு அல்லவா பேசுகிறது, அவர் கீழே விழுந்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கக்குனிந்தார், “மாப் கர்னா ஜீ” என்று அவர் வாய் முணுமுணுத்தது. இதற்குள் நான் என்அம்மா{மாமியார்} அவரிடம் போய் நின்றேன்,அவர் முற்றத்தில் குளிர் போக வெயிலில் அனுபவித்து கையில் திரு சாண்டில்யன் அவர்களது "கடல் புறா"வில் மூழ்கி இருந்தார். கீழே "மிதிலாவிலாஸ்"என்ற புத்தகமும் இருந்தது. உள்ளே நடந்தது ஒன்றும் அவருக்குத் தெரியாமல் மனம் ஒன்றி நாவலில் மூழ்கி இருந்தார் “அம்மா உள்ளே வறேளா கொஞ்சம்... தன் கண்ணாடியை எடுத்து பின் என் முகத்தை நோக்கினார் என்ன? என்ற பாவத்துடன், நான் அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன். உள்ளே என் அம்மா நுழைந்ததும் அந்தச் சர்தார்ஜி ஒன்றும் நடக்காதது போல் "நமஸ்தே மாதாஜி" என்று சர் என்று நடையைக் கட்டினார். என்னைப் பார்த்து நாளை வருவேன் என்றும் சொன்னார், என்க்கு சற்று உதறல் கண்டது, மறுநாள், எப்போது விடியும் என்று காத்திருந்தேன். இரவு தூக்கம்வரவில்லை, என் கணவர் ஆபீஸ் விஷயமாக பேங்காக் போயிருந்தார், காலை குருத்துவாரா போக என் ஸர்தார்ஜி அப்பா கிளம்பினார். "நீங்கள் குருத்த்வாரா போய் வாருங்கள். பின் உங்களிடம் நான் பேசவேண்டும்" என்றேன், அவரும் என்னை அவர் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னார், என் மாமியாருக்கு பாவம்…. வயிற்றில் அல்சர் இருந்ததால் எப்ப்போதும் கஞ்சி ஆகாரம் தான். பின் அவர்வந்தார், நான் அவரிடம் "என்ன நீங்கள் இவ்வளவு நல்லவாராக இருக்கிறீர்கள், உங்கள் நண்பர் இப்படி…" என்று இழுத்தேன்.
பின் விவரமாக நடந்ததைச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார் "நான் இருக்கிறேன் கவலைப்படாதே! பார்த்துக் கொள்கிறேன்" என்று அபயம் கொடுத்தார். ஷீரடி பாபாவின் ஞாபகம் வந்தது "நான் இருக்க பயமேன்" என்ற அவர் படம் என்னைப் பார்த்து புன்னகை புரிந்தது. அன்று மாலை அவன் வந்தான், இனிமேல் "அவர்" என்பது போய் அவன் என்று ஆகிவிட்டது{இனி மரியாதைத் தேவை இல்லை என்று மனதிற்கு பட்டது}. என் அப்பா சர்தார்ஜி அவனைப் பார்த்தவுடன் வேகமாக வெளியே போனார் "அந்தர் மத் ஆஜா" "உள்ளே வராதே! திரும்பிப் போய்விடு இனி இந்தவீட்டில் உனக்கு இடமில்லை நாம் பார்த்துக் கொள்ளவேண்டுமானால் இனித்தெருவில் தான் பார்ப்போம்" என்று கத்த அவர் "ஏன்? "என்று கேட்க பதிலுக்கு இவர் "என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இவள் உன் பெண்ணின் வயசல்லவோ..."அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாதக் குறைதான்.. பலவருடங்களாக உயிருக்குயிராக இருந்த நட்பை என்க்காக முறித்துக் கொண்டு விட்டார். அவர் என் கண்முன் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் மிக உயர்ந்து நிற்கிறார். மறுநாள் அந்த்க் கர்தார் சிங்கின் மகன் அர்ஜுன் சிங் என்னிடம் வந்து தன் அப்பாவுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவரும் ஒரு மன்னிப்புக் கடிதததைக் கொடுத்து அனுப்பி இருந்தார், நானும் மன்னித்து விட்டேன், தவறுவது சகஜம் அதை உணர்ந்து விட்டால் அவனும் நல்ல மனிதன் ஆகிறான் இல்லையா?
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
12:19 AM
0
comments
Tuesday, May 8, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-2
இப்போது சர்தார்ஜி கிஷன் சிங் தன் நட்பையும் எனக்காக களைந்த சம்பவத்தைக் காணலாம்...
இந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு மிகப் பழகிய நண்பர் இருந்தார். அவர் பெயர் கர்தார் சிங், வயது சுமார் 55 இருக்கலாம் அவர் ஒரு டேக்ஸி ஓட்டுனர், ஆங்கிலம் நன்கு பேசுவார், அவர் அடிக்கடி இங்கு வருவார், அவர் நம் முன்னாள் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையாருக்கு கார் ஓட்டுனராக இருந்ததாகச் சொல்லி கொண்டார். என்னைஅவருக்கு ஒரு நாள் அறிமுகம் செய்து வைத்தார்கள் சர்தார்ஜி குடும்பத்தினர், அங்கு ஆங்கிலம் பேசுவது நான் மட்டும் தான் என்பதால் இந்தக் கர்தர்சிங் என்னிடம் ஆங்கிலத்தில் அரசியலை ஆரம்பித்து அலசுவார், எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்இருப்பினும் பொறுமையாகச் செவி சாய்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்வீட்டிற்குள் வந்து பேச ஆரம்பித்தார். என் மாமியார் அவர்களுக்கு தமிழ் நாவல் என்றால் உயிர்தான். அதுவும் திருமதி ஆர் சூடாமணி வை மு,கோ திருமதி லட்சுமி தமிழ்வாணன் போன்ற புத்தகங்கள் தமிழ்ச் சங்கத்திலிருந்து எடுத்து வந்து படிக்கஆரம்பித்தால் பூலோகமோ சுவர்கமோ தெரியாது. அவ்வளவு அதில் ஆழ்ந்துவிடுவார், அடிக்கடி தன் நண்பரைப் பார்க்க இந்த ஓட்டுனர் வந்து பின் முற்றத்தில் பேச்சுக்கள் தொடங்கி ஆரம்பித்து விடும் விஸ்கி பார்ட்டி, அதுவும்வாட்69 என்ற பிராண்ட், அத்துடன் பக்கோடா வேறு, ஒரே சிரிப்பும் கொம்மாளமும் தான் முற்றத்தின் ஒரு கோடியில் தான் என் வீட்டு டாய்லட் அமைந்திருந்ததால் எனக்கு இந்தக்கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டால் வீட்டுச் சிறைதான். வெளியே வரமுடியாது. சர்தார் கிஷன்சிங்கின் அன்புக்காக பொறுமையுடன் இருக்க முயற்சித்தேன். இதற்குஒரு முடிவு தா என்று நான் வணங்கும் தேவியிடம் முறை இட்டேன், ஒருநாள், அந்தக் கர்தார் சிங் அவர் நண்பர் இல்லாத நேரம் என் வீட்டில் திடீரென நுழைந்தார், கதவு அநேகமாக திறந்தே இருக்கும், நான் அந்த நேரம் ரேடியோவில் பினாக்காகீத் மாலா கேட்டுக் கொண்டிருந்தேன் அந்தப் பாட்டுக் கூட ஞாபகம்இருக்கிறது, "ஜரா ஸாம்னே தோ ஆவோ சலியே.." என்ற சிவரஞ்சனியில் மிக அருமையான பாடல். இவர் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். " நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்றார்,ஐயோ இது என்ன ட்ராக் மாறுகிறதே என்று பேச்சை மாற்ற சாய் வேண்டுமா என்றேன், "இல்லை நீ இருந்தால் போதும் பாணிபிலாவோ" தண்ணீர் கேட்டார் சரி என்று தண்ணீர் எடுக்க உள்ளே சென்று ஒரு கிளாசில் தண்ணீர் வைத்து அதை ஒரு ட்ரேயில் வைத்து அவரிடம் நீட்டினேன், டம்ளரை கையில் கொடுக்கும்படிக் கேட்டார் கொடுத்த பின் உள்ளே நகர்ந்து விடலாம் என்று எண்ணி கிளாஸ் டம்ளரை அவரிடம் நீட்ட கிளாஸுடன் என் கையையும் பிடித்தார்...
வளரும்...
Posted by
Meerambikai
at
4:41 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்" -1
நான் இந்த "எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும் " என்பதைப் பற்றி எனக்கு தில்லியில் பலவருடங்கள்(45)இருந்த அனுபவம் எழுத உந்தியது, இது பெரியதாக வளரும் என்பதால் சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதுகிறேன். படிப்பதற்கும் வசதியாக இருக்கும். தயவு செய்து படித்து ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இது என் வாழ்க்கையில் நடந்தாலும் இதிலிருந்து நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம். என்பதால் பகிர்ந்து
கொள்கிறேன். எனக்கு திருமணம் நடந்தபின் புதிதாக புதுக் குடித்தனம் செய்ய தில்லி நகரில் காலடி வைத்தேன். ஹிந்தி நன்றாகத் தெரியுமாதலால் மொழி பயம் இருக்கவில்லை. நாங்கள் தம்பதி சமேதராக வீட்டு வாசலில் வந்து இறங்கியதும், நான் உள்ளே நுழைய முற்பட்டேன். என் பெற்றோர்கள் ஞாபகம் வர கண்களில் நீர் முட்டியது. அப்போது ஒரு சிங் பெரியவர் வந்தார்,
"டஹரியே டஹரியே "என்று அன்பாகக் கூறி எங்களை நிறுத்தி பின் தன் மனைவியை கடுகு எண்ணெய் கொண்டு வரச் சொல்லி வாசலில் ஒரு ஓரமாக விடச் சொன்னார். திருஷ்டி கழிக்கிறாராம்,பின் அவர் மகனை அழைத்து எங்களுக்கு ஒரு பூச்செண்டு கொடுக்கும்படி சொன்னார், பின் ஒரு ஆரத்தியும் எடுத்து "பிடியா{bitiyaa} அபி அந்தர் ஜாயியே" என்றார். முன் பின் தெரியாத என்னை அவர் மகளே என்று அழைத்து நல்ல மரியாதையும் செய்து உள்ளே அனுப்ப நான் என்னையே மறந்தேன்.
என் கண்வர் காலை 8 மணி போனால் இரவு 7க்கு வந்த பின், திரும்ப எம்பிஏ வகுப்புக்குப் போய்விடுவார். அங்கிருந்து வரும் நேரம் 11 மணிக்கு மேலாகிவிடும், அப்போதெல்லாம் என் தனிமையைப் போக்கி தாய் தந்தை போல் பார்த்துக் கொண்டது அந்தக் குடும்பம்.
எனக்காக அந்தச் சர்தார்ஜி விட்டது இரண்டு... ஒன்று அசைவம் இரண்டு ஒரு சிறந்த நட்பு.
ஒருநாள் நான் முற்றத்தில் உட்க்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தேன் இரு குடும்பதினருக்கும் பொதுவான முற்றம், அப்போது அந்தச் சர்தார் கிஷன்சிங் வந்தார், கையில் ஒரு கோழி அதைத் தலை கீழே பிடித்துக் கொண்டிருந்தார் அது சிரசாசனம் போல் தொங்கியது, கால்கள் கட்டப்பட்டிருந்தன, நான் அதைப் பார்த்தேன்,
அவரும் விளையாட்டுக்கு அதை என்னிடம் கொண்டுவந்தார், அது என்னைப் பார்த்தது, என்னக்கண்கள்? பரிதாபமாக என்னை நோக்கியது. நடுநடுவே இறக்கைகளையும் அடித்துக் கொண்டது, அப்பப்பா அந்தக் காட்சி என் மனதை உலுக்கியது. நான் உள்ளே போய் என் கதவைச் சார்த்தி கொண்டேன். பின் கொஞ்சம் நேரம் கழித்து ஒரு மாதிரி அலறல் பின் மௌனம் குடிகொண்டது பின் "டக் டக் "என்றச் சத்தம். மெள்ள சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். இறக்கைகள் பிய்க்கப் பட்டு அங்கும் இங்கும் கிடக்க, கோழியின் தலையும் தனியே கிடக்க, இங்கே என் இதயம் படபட என்று அடித்துக் கொண்டன, டாய்லெட் முற்றத்தில் தான் இருக்கிறது ஆனாலும் மனம் அங்கு போக மறுத்தது இங்கு சைவம் அசைவம் பற்றி விவாததிற்கு இடமே இல்லை, அவரருக்கு எது பிடிக்குமோ அது செய்யலாம். ஆனால் அந்தக் கோழியை அழகாக அணைத்து வந்து பின் ஒரே போடாக வெட்டினால் அவ்வளவு வேதனை அது அனுபவிதிருக்காது, ஒரு உயிரின் வேதனை என் மனக்கண்னின் முன் நின்றது. இரவு தலைவலி பின் வாந்தி
என்று உடல் நிலை கெட்டது, மனதிற்கும் உடலுக்கும் எத்தனைச் சமபந்தம் உள்ளது? மறு நாள் சுரமும் வந்தது என் இதயமும் கோழி போல தானோ என்னவோ? இப்போது அப்படியில்லை... அனுபவம் எதையும் தாங்கும் இதயமாக ஆக்கி உள்ளது. மறு நாள் நான் எழுந்து வராததைக் கண்டு அந்தச் சர்தார் குடும்பம் என்னைப் பார்க்க ஆப்பிள் பழங்களுடன் வந்தது. "ஏன் மகளே! இப்படிப் படுத்து விட்டாய் ?"என்று பாசமுடன் என் தலை கோதிய படியே விசாரிக்க நான் அந்தக் கோழி சமாசாரம் சொன்னேன் அவ்வளவுதான்... அவர் " என் ஆசை மகளுக்காக இன்றைய தினத்திலிருந்து இந்த வீட்டிற்கு இனி கோழி வராது! என் மகளுக்காக நான் இதை விட்டு விடுகிறேன்" என்றார் என் கண் கலங்கி அந்த அன்பின் ஊற்றில் மிதந்தேன்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
3:09 AM
0
comments
