சிற்பி அழகாக ஒரு சிலையை வடித்துக்கொண்டிருந்தான். ஹொய்சாளர் காலத்தில் கைதாலா எனும் சிற்றூர் அவர்களது தலைநகராக விளங்கியது.
அங்கு ஆண்ட அரசன் மச்சராச்சையா அந்த இடத்தில் ஒரு மஹாவிஷ்ணுவின் கோயிலைக்கட்ட விரும்பினான் . அப்போது கைதாலா என்ற இடத்தின் பெயர் கிரீடனகிரியாக இருந்தது .அதற்கென்று ஒரு சிற்பியைத் தேடியும் கண்டு பிடித்தான் . ஜனகாசாரி என்ற சிற்பி மிகப்பொறுமையுடன் தன் வேலையைச்செய்து முடிப்பார் . அந்தச்சிற்பிதான் மச்சராச்சையாவுக்கும் அழகிய சென்னகேசவர் சிலையைச்செய்ய ஒப்புத்துக்கொண்டான் .
அழகிய சிலை தயாரானது . அதன் கண்கள் மட்டும் கடைசியில் திறப்பார்கள். கண்கள் திறப்பதற்குமுன் தன் சிலையைக்காட்ட அங்குச்சிற்பியின் மகன் வந்தான் ,
"தந்தையே இந்தச்சிற்பக் கல்லில் குறை இருக்கிறது . ஆகையால் இந்தச்சிற்பம் கோயிலுக்கு உகந்ததாகாது " என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டான்.
மகனின் சொல்லைக்கேட்டு தந்தை கோபிக்காமல் அந்தக்கல்லை ஆராய்ந்தார். மகன் சொன்னது போலவே அதில் குறை இருந்தது .ஆகையால் மனம் வருந்தி தன் தவறுக்குப்பிராயச்சித்தமாக வாளை எடுத்துக்கொண்டு தன் கைகளை வெட்டிக்கொண்டார்
மகனும் மன்னனும் பதறிப்போனார்கள் .
ஆனால் சிற்பி தன் மகனின் உதவியோடு மற்றொரு கல்லைத்தயார் செய்தார். பின் ஒவ்வொரு அங்கமும் விவரித்து தன் மகனின் மூலம் அதைச் செய்ய வைத்தார் . மகனும் தந்தையின் ஆலோசனியிருந்து ஒரு இம்மியளவு கூட மாறவில்லை.
சிலை முடிந்து சென்ன கேசவர் தயாரானார் . கண்கள் திறக்க வேண்டிய வைபவத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது . சிற்பியின் வெட்டப்பட்டக்கைகளின் இடத்தில் இரு கைகள் முளைத்தன. ஆஹா என்ன இது !
சிற்பியின் வெட்டப்பட்டக்கைகள் திரும்பவும் முளைத்துவிட்டனவே பெருமாளின் கருணையே கருணை !
எல்லோருக்கும் ஒரே குஷிதான் . எல்லோரும் அந்தச்சக்தி வாய்ந்த சென்னகேசவரை ஒருமைப்பட்டு வணங்கினர் . ஶ்ரீதேவியும் பூதேவியும் இரு பக்கங்களில் இருந்து சேவை சாதிக்க நடுவில்
ஶ்ரீ சென்னக்கேசவப்பெருமாள் அழகான கருட பீடத்தின் மீது மூன்றடி உயரத்தில் நின்றபடி ஆசி வழங்குகிறார் அருகில் வேறொரு கோயிலும் உள்ளது .அதுதான் ஶ்ரீ கங்காதரேஸ்வரர் கோயில் . சென்னகேசவர் கோயிலைக் கட்டியவர் இதையும் கட்டியிருப்பாரோ எனத்தோன்றுகிறது ,
ஏனென்றால் ஶ்ரீ சென்ன கேசவகோயிலைப்பற்றிய குறிப்புகள் அதன் காலம் எல்லாம் ஶ்ரீ கங்காதரேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளால் தெரிய வருகிறது .
எல்லாவருடங்களும் இங்கு விழா நடக்கும் . அத்துடன் மார்ச் மாதம் நடக்கும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடக்கும் . கர்நாடகாவில் இருக்கும் கோயில்களில் இதுவும் மிகச்சிறந்த கோயிலாக விளங்குகிறது