இந்தக்காலத்தில் எந்தத் திருநாளும் எசிரமமில்லாமல் மிகவும் எளிதாக நடத்த முடிகிறது .எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாமே 'கான்ட்ரக்ட் பேஸிஸ் ' தான் இதை நினைக்கும் போது எனக்கு என் காலம் ஞாபகம் வருகிறது ,வீட்டில் ஒரு வரலட்சுமி விரதமோ, நவராத்திரி கொலுவோ வருவதென்றால் ஒரு வாரம் முன்பிருந்தே அதன் வேலை தொடங்கி விடும் உதாரணமாக கொலு வருவதற்கு முதலாவதாக வீட்டில் அட்டம் என்று ஒரு இடம் இருக்கும் .அதைப்பரண் என்றும் சொல்லுவார்கள்.அதன் மேல் ஒருவர் ஏற வேண்டும் . இது பெண்கள் விஷயம் என்று என் அப்பா அதில் பட்டுக்கொள்ள மாட்டார். கையில் பேபருடன் சும்மாவாவது இருப்பாரே தவிர ஹூம் இந்தப்பக்கம் மூச்சுவிடமாட்டார் .பாவம் என் அம்மா எங்கள் உதவிகளுடன் இதை ஆரம்பிப்பாள்.மேலே இருக்கும் அட்டத்தில் ஏற ஒரு ஸ்டூல் வரும் .அதில் என் அம்மா ஏறிக்கொள்வாள் . ஆனால் அட்டம் உயரத்தில் இருப்பதால் அம்மாவுக்கு மேலே கால் வைக்க முடியாத நிலை ,.நாங்கள் கீழே இருப்போம் "அம்மா இறங்குங்கள் ஸ்டூல் மேல் ஒரு வென்னீர் தவலையைக் கவிழ்த்து போடுகிறேன் .அதன் மேல் ஏறினால் தான் எட்டும் "என்று ஒரு பெரிய பித்தளைத் தவலையைக்கவிழ்த்து போடுவோம் ..அந்த ஸ்டூலை என் அக்கா பிடித்துக்கொள்ள நான் தவலையைப் பிடித்துக்கொள்ள என் அம்மா மேலே ஏறிவிடுவாள் .இதற்கு இந்தக்கால சல்வார் கமீஸ் உடை மிகவும் சௌகரியமாக இருந்திருக்கும் ஆனால் அம்மா மடிசார் மாமியாச்சே ! மேலே ஏறியாகிவிட்டது . எங்கும் ஒரே தூசி .ஒரே இருட்டு வேறு.ஒரு பக்கம் கரப்பான் புழுக்கை நாற்றம் .இன்னொரு பக்கம்பெரிய பல்லிகள் இங்கும் அங்கும் ஓடி ஒளிந்துக்கொள்ளும் இதை எல்லாவற்றையும் விட தூக்கி அடிக்கும் விஷயம் என்னவென்றால் எலிக்கு அந்த இடம் தான் மெடர்னிடி ஹாஸ்பிடல். வருடத்திற்கு மூன்று முறை வந்துவிடும் போலிருக்கிறது.
இப்போது கொலு பொம்மைகள் இருக்கும் பெட்டிக்கு அருகில் வந்தாயிற்று. அந்தப்பெட்டி தில்லியில் பெயர் போன ரஜாய் பெட்டி..ரொம்ப பெரிசு ,அதைத்திறக்க என் அம்மா முயலுவார். ஒரு வருடம் திறக்காமல் இருந்ததால் ரொம்ப ஸ்டரைக் செய்யும்..பின் 'ஙொய்' என்ற சத்தத்துடன் திறந்து வாயைப்பிளக்கும் கீழ் காந்தாரம் போன்ற சுருதி . முதல் வருடம் பேபரில் சுருட்டி வைத்தபடி இருக்கும் பொம்மைகளை என் அம்மா ஒவ்வொன்றாக எடுப்பார்.பொம்மைகளும் "அப்பாடி ஒரு பத்து நாட்களுக்கு நமக்கு விடுதலை, காற்று வாங்கியபடி ஹாய் ஆக அமரலாம் "என்று என் அம்மா கையில் அடைக்கலம் பெறும் . "பொம்மை பத்திரம்டி .என் பாட்டி கொடுத்த பொம்மை இன்னிக்கி கூட சாயம் போலை "என்று பிறந்தாத்து புகழ்பாடியபடியே மிகப்பெருமையுடன் கீழே எங்களிடம் நீட்டுவார்.ரொம்ப ஜாக்கிரதையாக அதைப்பிடித்து இறக்குவோம் .என் கழுத்து மேலே பார்த்து பார்த்து வலி பிடுங்கும் பாவம் அம்மா இதற்குள் பல தும்மல்கள் போட்டுவிடுவார்.எல்லா தூசியும் அவர் மூக்கில் ஏறும் .எல்லா பொம்மைகளும் கீழே வந்த விட்டு அம்மாவும் கீழே இறங்குவார் ." மெள்ள மெள்ள என்றபடி அவரை நாங்கள் இறக்குவோம் .ஒரு சமயம் இந்த வேளையில் நாங்கள் எதாவது கிளாஸ் போகும்படியாக இருந்து என் அப்பா மட்டும் வீட்டில் இருந்தால் நிலைமையே வேறு .
"ஏன்னா இங்க சித்த வாங்கோ.எப்ப பாத்தாலும் பேபர்தானா.இந்த பொம்மைகள எடுக்க ஹெல்ப் செய்யப்டாதா? என்று முகத்தல் கொஞ்சம் கெஞ்சல் ,கொஞ்சம் பயம் ,கொஞ்சம் கோபம் என்று பல ரசங்கள் வெளியே தெரிய பரதநாட்டியம் ஆடுபவள் தோத்தாள்.தன் காரியத்தை சாதித்துக்கொள்ள அன்று காலையிலிருந்தே தன் கணவரை தாஜா செய்ய வேண்டும் அன்னிக்கி காலை அப்பாவுக்குப்பிடித்த காலை டிபன் ரெடியாகும் கூடவே வெங்காய தக்காளி சட்னி. இப்படி செய்தால் தன் காரியத்தைக் கொஞ்சம் சாதித்துக்கொள்ள முடியும் ஆனால் ரவா உப்புமா மட்டும் செய்தால் காரியம் முடிந்தால் போல் தான் .அப்பாவுக்கு மூடு அவுட்டாகிவிடும் . ரொம்ப ஜாக்கிரதையாக பொம்மையை எடுத்துக்கொடுக்கும் காரியத்தை செய்து முடித்து பெரிய சாதனையாளர் போல் அப்பா வெற்றி நடை போடுவார்..கிரிக்கெட் மாட்ச்சில் சதம் போட்டு விட்ட திருப்தி போல் அவர் முகத்தில் பெருமை .
பின் பொம்மைகள் கீழே வர ஒவ்வொன்றாக துடைப்பது ,அலங்கரிப்பது போன்ற வேலை . பின் வரும் படிகள். இந்தக்காலம் போல் ரெடிமேட் படிகள் இல்லை. பல தினுசு டின்கள்.டப்பாக்களால் கட்டப்படும்.அப்பாடி இது ஒரு பெரிய வெலை. நாலு பெரிய அரிசி டின்கள் .எண்ணெய் டின்கள். பின் சில டப்பாக்கள் என்று கிச்சனிலிருந்து பல வெளியே வந்து எல்லாம் ஒரே அளவாக சேர்த்து படிகள் கட்டுவதற்குள் அப்பாடி நெட்டி கழண்டு விடும் .சில சமயம் சமமாக்க பல தடிமனான புத்தகங்கள் கைக்கொடுக்கும் .பின் அதன் மேல் வெள்ளை வேஷ்டி விரிக்கப்படும் . பின் என் அம்மா ஓரிண்டு பொம்மைகள் வைத்து சரியாக இருக்கா என்று பார்ப்பார்,
"ஆடாது அசங்காது வா கண்ணா .உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே 'என்ற பாடல் போல் மூன்று பொம்மைகள் அங்கு அமர்ந்து ஆட்டம் காணும் " அம்மா அம்மா எல்லாம் ஆடி விழப்போகிறது .பிடிச்சுக்கோ என்று அலற அம்மா பொறுமையாக "நாலன்ஜு நியூஸ் பேபரை எடுத்துண்டு வாடி .அண்டைக்கொடுக்க எல்லாம் சரியா நிக்கும் " என்பாள்
பின் ஆண் மரப்பாச்சி வேஷ்டி ஷர்ட்டுடன் அமர அதன் அருகில் பெண் மரப்பாச்சி புடவையுடன் அடக்கமாக நிற்பாள். பின் எல்லா அவதாரங்கள், மீனாட்சி கல்யாணம்,மார்க்கண்டேயர் அஷ்ட லட்சுமி அனந்த சயனம் என்று பல பொம்மைகள்.ஒவ்வொரு பொம்மையும் என் மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது "ஆச்சு சுபமாக கொலு வைச்சு முடிஞ்சாச்சு " என்று முகம் மலர என் அப்பாவைப்பார்ப்பார் என் அம்மா .அவரும்' வெரி குட்' என்று ஒப்புக்காக சொல்லுவார் எனினும் அதுவே அம்மாவுக்கு மிக திருப்தி .
கொலு ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டிற்கும் நாங்கள் படையெடுப்போம்.எங்கள் டிரெஸ் ஐ கேட்கவா வேண்டும் ? தகதகவென சரிகையுடன் கூடிய பட்டுப்பாவாடை .பன்னிரண்டு வயதுக்கே ஒரு மேலாக்கு .காதில் அசைந்தாடும் குடை சிமிக்கி ,கல் வைத்த மாட்டலுடன், கழுத்தில் ஆலிலை கிருஷ்ணன் டாலருடன் கூடிய சன்னமான ஒரு தங்கச்சங்கிலி,. ஐந்துக்கால் பின்னலில் தாழம்பு தைத்தபடி தலை அலங்காரம் அதனடுவே 'கொரினா' ' என்ற பளபளக்கும் சரிகை சிவப்பு, பச்சை ,மஞ்சள் கலரில் "ஷைன் ஆகி தலை ஒரு கிலோ பளு அதிகம் ஆனது.சில சமயம் நெற்றியில் சுட்டி ,இடுப்பில் ஒட்டியாணம் காலில் " ஜல்ஜல்'கொலுசு .ஆகமொத்தம் ஒரு குட்டி ஜில்ஜில் ரமாமணி ......இத்தனையும் விரும்பி நான் அணிவேன் . பின் கையில் ஒரு பெரிய பிளஸ்டிக் ஒயரால் பின்னிய கூடை.அந்தக்காலத்தில் இந்தக்கூடை பின்னுவது வீட்டுக்கு வீடு பரவியது .ஒவ்வொருத்தர் ஒவ்வொரு டிசைன் போட்டு அசத்துவார்கள்.இந்தக்கூடை பல சுண்டல் பொட்டளங்களைத்தாங்கும்.அத்துடன் தேங்காய்களும் தான் . வீட்டிற்கு வந்தால் ஒரு பாத்திரம் முழுவதும் சுண்டல் கலெக்ஷன் ஆகிவிடும் .என்ன ! பல கடலைச்சுண்டல் அங்கு ஒன்று சேர்ந்து மசாலா சுண்டல் ஆகி விடும் .வீட்டு வாசலில் கோலமும் அதைப்போடும் அழகும் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் நவராத்திரி படிகளின் கீழே மலைகளும் ,நதியும் மலை உச்சியில் கோவிந்தா கோயிலோ அல்லது முருகன் கோயிலோ கட்டப்பட்டு கொலுவின் அழகைக் கூட்டும் .கீழே இரண்டு குத்துவிளக்கு முத்துக்கோர்த்தால் போல் மிக அழகாக எரியும் .
காலம் மாற மாற பெரியவர்கள் இந்த உலகத்திலிருந்து விடைப்பெற்றுக்கொண்டார்கள்.சில பொம்மைகள் அன்பளிப்பாக தரப்பட்டன. சில, உறவினர்களால் பங்கு போட்டுக்கொள்ளப்பட்டன.அம்மாவின் ஞாபகமாக ஒரு சில பொம்மைகள் தவிர என்னிடம் தற்போது வேறொன்றுமில்லை.சில பொம்மைகள் அமெரிக்காவில் ஷோகேஸில் அமர்ந்துள்ளன.அந்தக்கால வென்னீர்த்தவலை பூச்செண்டுகளால் நிரப்பப்பெற்று வரவேற்பு அறையில் அலங்காரப்பொருளாக ஆகியிருக்கிறது இப்போது சுவாமி இருக்கும் அலமாரியில் ஒரு சில பொம்மைகள் தான் வைத்திருக்கிறேன் . என் மனதிலேயே பூசலைநாயனார் போல் 13 படிகளை அமைத்து அதில் சிறப்பாக கொலு வைத்து ஆனந்தப்படுகிறேன் .வய்தாக வயதாக உள்ளமே கோயில் உள்ளொளியே சக்தி என்ற பக்குவம் வர ஆரம்பித்து விடுகிறது
No comments:
Post a Comment