Thursday, September 29, 2011

சுயம்வரம்

பழைய ' பாஞ்சால தேசம்" இன்று குஜரத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா என்ற
பிரிவில் 'டார்னேடார்" என்ற இடமாக உள்ளது இந்த இடம் எதற்கு விசேஷம் என்றால் இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனை திரௌபதி சுயம்வரமாக திருமணம் செய்து கொண்டாள்.

சுயம்வரத்தின் போட்டி மிகவும் கடினமான ஒன்று. சுற்றிக்கொண்டிருக்கும்
சக்கரத்தில் ஒரு மீன் ..அதுவும் தலைக்குமேலே சுழலும் . கீழே ஒரு நீர்த்தொட்டி. அதில் சுழலும் மீனின் பிம்பம் தெரியும் நீரில் தெரியும் மீனின் பிம்பத்தைப்பார்த்து
மேலே கட்டப்பட்டிருக்கும் மீனை அம்பால் குறிவைத்து எய்ய வேண்டும்.
அப்பா! இது என்ன ! சாமானமான காரியமா ? ஒரு இடத்திலேயே நிற்கும் மீனை
அடித்துவிடலாம் ஆனால் சுழலும் மீனை அதுவும் கீழே பிம்பம் பார்த்து
அடிக்க வேண்டுமென்றால் அர்சுனன் இந்தக்கலையில் எத்தனை மேதையாக
இருந்திருப்பான் .மீனை அடித்து வெற்றிக்கண்ட அர்சுனனை திரௌபதி
மிக மகிழ்ச்சியுடன் மணக்கிறாள்,

இந்த சுயம்வரம் நடந்து அர்சுனன வெற்றிப்பெற்ற இடம் தான் 'டார்னேடார்'
இன்றும் இந்த நாளை ஒரு திருவிழாவாக இங்கிருக்கும் மக்கள் கொண்டாடுகின்றனர் .இங்கிருக்கும் 'திருநேத்ரேஸ்வரர் ' என்ற கோயிலில்
முதல் நாள் கொடியேற்ற விழா விமரிசையாக நடக்கும் .
ராஜா கர்ணாசிங்ஜி ஜாலா'என்பவர் இந்தக்கோயிலைப்புதுப்பித்தது மாசிமதம் ,
அவர்தான் இந்தத்திருவிழாவையும் ஆரம்பித்தார் .
இந்தகோயில் மிகப்பழமை வாய்ந்தது எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தது ,
ராஜா சோலாங்கி மாந்தாதா என்ற மன்னர் முதன் முதலில் இந்தக்கோயிலைக்கட்டி 'திரிநேத்ரேஸ்வரர்' என்ற பெயரிட்டு வணங்கி வநதாராம்

இரண்டாம் நாளன்று கங்கை நீர் சேகரிக்கப்பட்டு எல்லோரும் அதில்
ஸ்னானம் செய்து தங்கள் பாபங்களைப்போக்கிக்கொள்வார்கள்

மூன்றாம் நாள் ' திரௌபதி சுயம்வரம்' ஞாபகமாக இங்கும் சுயம்வரம் நடக்கும்
பல மலைச்சாதிப்பெண்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் .எங்கும் பச்சை .சிவப்பு போன்ற ஆழமான வர்ணங்களின் உடைகள் அதில் பதிக்கப்பட்டு பளபளக்கும்
கண்ணாடிகள் .சம்க்கி வேலை செய்யப்பட்ட ரவிக்கைகள். குட்டிப்பாவாடையான
'காக்ராஸ்' அதில் இருக்கும் மடிப்புக்கள் பெரிய வட்டமாகச்சுழட்ட வசதியாக
இருக்கும் நெற்றியில் பெரிய பொட்டும் சரிகையுடன் மின்னும்

இந்தச்சுயம்வரப்பெண்கள் வரிசையாக நிற்க ஆண்களும் வரிசையாக எதிர்வரிசையில் நிற்பார்கள். அவர்களின் உடையும் வித்தியாசமாக இருக்கும்
கீழே பஞ்சகச்ச வேஷ்டி சரிகைப்போட்டது , தலையில் பளபளக்கும் சரிகை முண்டாசு . மேலே முழுக்கைசட்டை . மிகக்குட்டையாக இருக்கும்

இப்போது சுயம்வரம் ஆரம்பிக்கும் வாத்தியங்களில் ஷெனாய் முக்கியமாக இருந்து மங்கல ஒலி கிளப்பும் பின் மேளதாளங்கள் ஒவ்வொன்றாய் ஆரம்பிக்க
விழா களைக்கட்டும்
இப்போது ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் சென்று குஜராத்தியில்
தங்கள் ஆசையைத்தெரிவிப்பார்கள் அப்படி என்னதான் சொல்கிறார்கள்?
"என்னைப்பார் என் அழகைப்பார் . என்னை மணக்க உனக்கு சம்மதமா?
என்று அவர்கள் கேட்ப்பார்களாம் சம்மதம் என்றால் மூன்று
முறை தலையை ஆட்டி பெண்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் ,
பின் என்ன .டும்டும் டும் என்று கலயாணம் ஆகும் பின் இந்த திரிநேத்திரேஸ்வரர்
கோயில் போய் வணங்குவார்கள் .

நடனம் இல்லாமலா ? குஜராத்திற்குப்பெயர் போன ''தாண்டியா'நடனம் நடக்கும்

சிலம்பாட்டம் ,பானைகளைத்தலையில் வைத்தபடி ஆட்டம் . குத்துச்சண்டை
கத்திச்சண்டை போன்ற கலைகளும் அங்கு வெளிப்படும்

மணமக்களுக்கு அடுக்கடுக்காக பூவேலைகளுடன் பல வண்ணங்களுடன் மணிகளுடன் செய்யப்பட்ட மூன்றடுக்கு குடை பரிசாக கொடுப்பார்கள்
இதைப்பார்க்க வெளிநாட்டினரும் வருகின்றனர்

முதல் வருடம் திருமணம் செய்துகொண்டவர்களும் மறுவருடம் இந்தநாளில்
வந்து நன்றிதெரிவித்து விழாவில் பங்கு பெருகிறார்கள் ,

துர்க்கை

நவராத்திரி என்றாலே தேவிபாகவதம் உடனே நினைவுக்கு வரும். தேவிபாகவதம்
என்று நினைக்க அழகான துர்க்கை நம் கண்முன் நின்று அருள் புரிவாள். வேதத்தில் துர்காசூக்தம் என்று ஒன்று உண்டு .அதில் ' தாமக்னி வர்ணாம் தபஸா
ஜ்வலந்தீம் ' என்றும் அக்னே த்வம் பாரயா நவ்யோ"என்றும் கூறப்பட்டிருக்கிறது இதில் துர்க்கையை அக்னியின் வடிவானவள் என்றும் அந்த ஜோதியின் வீர்யத்தையும் புகழ்கிறது இதனால்தானோ அநேக கோயில்களில் துர்க்கை அல்லது சில அம்பாளின் சிரசைச்சுற்றி அக்னிப்பிழம்புகள் வட்டமாக சூழப்பட்டிருக்கும் சில அம்மன் கோரப்பற்களுடனும் காணப்படுவாள். அநேகமாக
வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பாள் ,சில இடங்களில் 24 கரங்களுடன்
ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு ஆயுதம் தாங்கி நிற்பாள்.ஒரு காலின் கீழ்
மகிஷனுடைய தலை மிதிப்பட்டிருக்கும் .

துர்க்கை என்றாலே நம்மைக்காப்பாற்றும் அன்னை என்ற பொருள் கொள்ளலாம்
கோட்டைக்கு சம்ஸ்கிருதத்தில் துர்க்கம் என்று சொல்வதால் இந்தப்பெயர்
துர்க்கைக்கு மிகப்பொருந்துகிறது . ஒரு அரண் போலிருந்து நம்மைக்காப்பாற்றும்
தேவியாக துர்க்கை விளங்குகிறாள்.
இவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என்றும் ஒரு பெயர் உண்டு . மகிஷன் என்ற அசுரனைக் கொன்றவள் இவள். ஒரு சமயம் தேவர்களின் தலைவனான
இந்திரனுக்கு 'மகிஷாசுரன்' என்ற அசுரனுடன் போர் மூண்டது . மிகவும் சக்தி
பெற்ற மகிஷனுடன் போர் செய்யமுடியாமல் பல தேவர்கள் தோற்றனர்.
மனம் கலங்கி அவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர் .பிரும்மா தேவர்களுடன்
மஹேஸ்வரனையும் மஹாவிஷ்ணுவையும் கண்டு வணங்கி தங்கள் பிரச்சனையைக்கூறினர் .இதனால் கோபம் கொண்டனர் .அந்தக்கோபத்தின் தாக்கத்தினால் ,சக்தியால் நெற்றியிலிருந்து ஒரு அக்னிப்பிழம்பாய் ஒரு பேரொளி தோன்றியது.பின் அந்த ஒளி ஒரு பெண்ணின் உருவம் கொண்டது .அங்கிருந்த
தேவர்களும் ,பின் இந்திரன் வருணன் .வாயு சூரியன் ,குபேரன் .பூமி பிரும்மா
சந்தியா எல்லோரும் அந்த உருவத்தைப் படைத்தனர் .உருவம் வந்தப்பின்
அதற்குச் சக்தி வேண்டுமே !
சிவபெருமான் தன் திருசூலத்திலிருந்து வேறொரு சூலம் உண்டாக்கிக்கொடுத்தார்
அக்னி ஈட்டியைக்கொடுத்தார். விஷ்ணுவோ தன் சக்கரத்திலிருந்து மற்றொரு
சக்கரம் கொடுத்தார் வாயு வில் அம்பு . இந்திரன் வஜ்ஜிராயுதம் , வருணன் பாசக்கயிறு, காலதேவன் வாள் கேடயம் , . யமன் காலதண்டம், ஆதிசேஷன்
நாகபரணம் , ஹிமவான் சிம்மவாஹனம் , . என்று பல பொருடகள் அந்த்த்தேவிக்கு வந்து சேர அளக்கமுடியாத சக்தி சேர அகிலாண்டகோடிபிரம்மாண்ட நாயகியாய் மகிஷனை வதம் செய்ய புறப்பட்டாள்,
அண்டம் நடுநடுங்க மகிஷன் தேவியைக்கண்டான் .இருவரின் போர் தேவிபாகவதத்தில் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது முடிவில் அவன் துணைகளையெல்லாம் பறிக்கொடுத்து
தனியாக நின்றான் .தேவி உக்கரமாக அவனைத்தூக்கி வீசி அவனைக்கீழே
வீழ்த்தி தன் பாதத்தை அவன் மேல் இருத்தி நின்றாள் .
பின் மகிஷாசுரமர்த்தினி ஆனாள்.
இந்த மகிஷன் தான் தவம் இருந்த போது பெண்களின் பலவீனத்தை எடைப்போட்டு
பெண்ணைத்தவிர பிறரால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைக்கேட்டான்
இதனால் பெண்வடிவமாக வநதாள் அன்னை . மகிஷனும் தன் உருவங்களை
பல உருவங்களாக மாற்றிக்கொண்டான் யானையானான் ,.சிங்கமானான், பாம்பானான் ஆனால் தேவியோ எல்லாவற்றையும் அழித்து வெற்றிவாடைச்சூட்டிக்கொண்டாள்.
இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், .அடுத்து மூன்றுநாட்கள் திருமகளுக்கும் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும்
பூஜை நடக்கும்
மூன்றுசக்திகளின் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
நவராத்திரி வாழ்த்துகள்