Saturday, November 9, 2013

முளைத்த இரு கைகள்.

சிற்பி அழகாக ஒரு சிலையை வடித்துக்கொண்டிருந்தான்.   ஹொய்சாளர் காலத்தில்  கைதாலா எனும் சிற்றூர் அவர்களது தலைநகராக விளங்கியது. 

அங்கு ஆண்ட அரசன் மச்சராச்சையா  அந்த இடத்தில் ஒரு மஹாவிஷ்ணுவின் கோயிலைக்கட்ட விரும்பினான் . அப்போது கைதாலா என்ற இடத்தின் பெயர் கிரீடனகிரியாக இருந்தது .அதற்கென்று ஒரு சிற்பியைத் தேடியும்  கண்டு பிடித்தான் . ஜனகாசாரி என்ற சிற்பி  மிகப்பொறுமையுடன் தன் வேலையைச்செய்து முடிப்பார் .  அந்தச்சிற்பிதான் மச்சராச்சையாவுக்கும்  அழகிய சென்னகேசவர் சிலையைச்செய்ய ஒப்புத்துக்கொண்டான் .
அழகிய சிலை தயாரானது . அதன் கண்கள் மட்டும் கடைசியில் திறப்பார்கள். கண்கள் திறப்பதற்குமுன் தன் சிலையைக்காட்ட அங்குச்சிற்பியின்  மகன்  வந்தான் , 

"தந்தையே  இந்தச்சிற்பக் கல்லில்  குறை இருக்கிறது . ஆகையால் இந்தச்சிற்பம் கோயிலுக்கு உகந்ததாகாது "  என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டான்.
மகனின் சொல்லைக்கேட்டு தந்தை கோபிக்காமல் அந்தக்கல்லை ஆராய்ந்தார்.  மகன் சொன்னது  போலவே அதில் குறை இருந்தது .ஆகையால் மனம் வருந்தி தன் தவறுக்குப்பிராயச்சித்தமாக  வாளை எடுத்துக்கொண்டு தன் கைகளை வெட்டிக்கொண்டார்
மகனும் மன்னனும் பதறிப்போனார்கள் . 

ஆனால் சிற்பி தன் மகனின் உதவியோடு   மற்றொரு கல்லைத்தயார் செய்தார்.  பின் ஒவ்வொரு அங்கமும் விவரித்து தன் மகனின் மூலம் அதைச் செய்ய வைத்தார் . மகனும் தந்தையின் ஆலோசனியிருந்து ஒரு இம்மியளவு கூட மாறவில்லை. 
சிலை முடிந்து சென்ன கேசவர் தயாரானார் . கண்கள் திறக்க வேண்டிய  வைபவத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது .  சிற்பியின் வெட்டப்பட்டக்கைகளின் இடத்தில் இரு கைகள் முளைத்தன.   ஆஹா   என்ன இது !

சிற்பியின் வெட்டப்பட்டக்கைகள் திரும்பவும் முளைத்துவிட்டனவே  பெருமாளின் கருணையே கருணை !
எல்லோருக்கும் ஒரே குஷிதான் . எல்லோரும் அந்தச்சக்தி வாய்ந்த சென்னகேசவரை ஒருமைப்பட்டு வணங்கினர் . ஶ்ரீதேவியும் பூதேவியும் இரு பக்கங்களில் இருந்து சேவை சாதிக்க நடுவில்

 ஶ்ரீ சென்னக்கேசவப்பெருமாள்  அழகான கருட  பீடத்தின் மீது  மூன்றடி  உயரத்தில்  நின்றபடி ஆசி வழங்குகிறார் அருகில் வேறொரு கோயிலும் உள்ளது .அதுதான்  ஶ்ரீ கங்காதரேஸ்வரர்   கோயில் .  சென்னகேசவர் கோயிலைக் கட்டியவர் இதையும் கட்டியிருப்பாரோ  எனத்தோன்றுகிறது ,

 ஏனென்றால்  ஶ்ரீ சென்ன கேசவகோயிலைப்பற்றிய குறிப்புகள்  அதன்  காலம்  எல்லாம் ஶ்ரீ கங்காதரேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளால்  தெரிய வருகிறது .

எல்லாவருடங்களும் இங்கு விழா நடக்கும்   . அத்துடன்  மார்ச் மாதம்  நடக்கும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடக்கும் . கர்நாடகாவில் இருக்கும் கோயில்களில் இதுவும் மிகச்சிறந்த கோயிலாக விளங்குகிறது 

சன்னல் வழியே பார்

எல்லா காளி கோயில்களிலும் பக்தர்கள் போனால் காளியைக் கர்பக்கிரஹத்தின்  அருகில் சென்று தரிசிக்க முடியும் .ஆனால் ஹிமாசலப் பிரதேசத்தில்  இருக்கும்  காளிக்கோயில் மிக வித்தியாசமாக ஆனது . அந்தக்கோயில் இருக்குமிடம்  ஷர்ஹான் என்ற 

கிராமம் . இயற்கையின் எழில் சூழ ஒரு குன்றின்மேல்   வெகு அழகாக அமர்ந்து  அருள்புரிகிறாள் அந்தக்காளி .  அவளை 'பீம்காளி' என்று அழைக்கிறார்கள். நான் கூட  அந்தக்காளியைப் பீமன் பூஜித்திருப்ப்பார்  அதனால் அந்தப்பெயர் வந்திருக்குமோ என நினைத்தேன் .

 என் நினைப்பும் உண்மையாகவே  இருந்தது . பாண்டவர்கள் இங்கே தங்கியிருந்ததாகவும் அப்போது பீமன் இந்தக்காளியைபிரதிஷ்டைச்செய்து  பூசித்ததாகவும்  சிலர் சொல்லுகிறார்கள்.

     பன்னிரண்டாம் நூற்றாண்டில்  பீம்கிரி என்று ஒருவர்  வழக்கம் போல் காலை மலைப்பகுதியில் நடந்துக்கொண்டிருக்க  அவர் காலடியில் ஒரு காளியின் சிலை தட்டுப்பட்டது . அதை மிக ஆர்வத்துடன் எடுத்து தன் வீட்டிற்குக் கொண்டு

வந்தார் .பின் அதற்கென்று ஒரு கோயில் கட்டி   காளியைப்பிரதிஷ்டைச் செய்தார் .பின் தினசரி பூஜைக்கும்  ஏற்பாடு செய்து தானும் அங்கு முழுநாளும் சேவை செய்ய   ஆரம்பித்தார் . பீமகிரி அந்தக்காளியைப் பிரதிஷ்டடைச்செய்ததால் எல்லோரும் 

அந்தக்கோயிலை  'பீமகிரி காளி  'என்று அழைத்தனர் . 

இங்கு வரும் பூசாரி  சிவப்புத்தொப்பியை அணிந்துக்கொள்கிறார்.அத்துடன்  அவர்   உடையும் சிவப்பு வர்ணமாக இருக்கிறது .அவர்  நேர் வழியாக வராமல்  கோயிலிருந்து வரும் ஒரு சுரங்கப்பாதையில் நுழைந்து   காளியிடம் வருகிறார் . பின்னர் பூஜை முடித்தப்பின்

அதே சுரங்கப்பாதை  வழியாக வெளியே வந்துவிடுகிறார். இப்படிச்செய்வதுதான்   முறை  என்று அங்கிருக்கும் ஒரு பெரியவர் சொன்னார். 

 பீம்காளியைப் பார்க்க பக்தர்கள் கருவறைக்கு சிறிது  தூரத்தில்  அமைத்திருக்கும் ஒரு சன்னல் அருகே வரிசையாக நிற்கிறார்கள் .  பின் சன்னல் வழியாகத்தான்  அந்தக்காளியைத் தரிசிக்கவேண்டும் காளியைப்பார்க்க சிவப்பு  தொப்பி அணிந்துக்கொண்டுதான்

வரவேண்டும் . காளி அப்படியே ரக்தவண்ணமாக அமர்ந்திருக்கிறாள்.கண்கள் முழித்தபடி  உருண்டையாக  இருக்கின்றன   நாக்கும் வெளியே நீட்டிகொண்டிருக்கிறது சன்னல் வழியாகப்பார்ப்பதால்  நேரில் அருகில் நின்று பார்ப்பது போன்று தெளிவாக இல்லை .

ஏன் அருகில் செல்லக்கூடாது என்று பலரைக்கேட்டேன் .ஆனால் விடை சரியாகக்கிடைக்கவில்லை . சிலர்  காளியின் சக்தி மிகவும்  அதிகமானதால்  நேரில் நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது என்கின்றனர் 

இந்தக்காளியின் அருகில்  200 ஆண்டுக்ளுக்கு முன்  பிரதிஷ்டை செய்த காளியும் இருக்கிறாள். அவள் தான் பீமன் பூஜித்த காளியாக இருக்கலாம் . அவள் அருகில் இந்த பீம்காளி  எட்டுக்கரங்களுடன்     அருள் புரிகிறாள் .

இங்கு வரும் பக்தர்கள்  சிவப்பு அங்கியை வாங்கி காளி மேல் சார்த்த கொடுக்கின்றனர் .பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றிவைக்கிறாளாம் இந்த  பீம்காளி  

அப்பர் சுவாமிகள்

அப்பர் சுவாமிகள் முதன் முதலில் சமணத்தில் இருந்தார் ,  ஆனால் அவருக்கு
வந்த தீராத வயிற்றுவலியைத் தீர்த்தருளியது  அந்தச்சிவபெருமானே.   அவர்
பாடிய முதல் பதிகம் இதைத்தெரிவிக்கிறது .

"நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் " என்றும்

"உன் நாமம்  என் நாவில்  மறந்தறியேன் " என்றும்  சிவபெருமானை அழைத்து
உறுதியாகக்கூறுகிறார்

அவருடைய பக்தியைப்பார்த்து  திருபைஞ்ஞீலியில்  பசியுடன் இருந்த
அப்பருக்கு சிவபெருமானே பொதி சோறு கொண்டு வந்து  அவரது
பசியைத்தீர்த்தார்.   பல பாடல்களால் சிவபெருமானைப்புகழ்ந்த  அப்பருக்கு
ஒரு சமயம்  கயிலைமலைத்தரிசனம் செய்ய ஆசை வந்தது . தள்ளாத வயதுதான் ஆனாலும்   மனதில் ஒரு உறுதி  இருந்தது தீர்த்தயாத்திரைப்போல்  கிளம்பிவிட்டார் .பல
ஆன்மீகப்புகழ் வாய்ந்த ஸ்தலங்கள் சென்றப்பின் காசி வந்துச்சேர்ந்தார் .
அங்கு அருள் புரியும் விசுவநாதரைக்கண்டு  மனம் பரவசமுற்று " அப்பா
கயிலைக்கும் வந்து நான் உன்னைக் காண வேண்டும் எனக்கு அருள் புரி" என்று
மனதார வேண்டிக்கொண்டார்   நடக்க நடக்க உடல் ஒத்துழைக்காமல் தளர்ந்தது .
தன் உயிர் போனாலும் பரவாயில்லை கயிலைக்குப்போகத்தான் வேண்டும் என்ற மன
உறுதி மேலோங்கியது.
நடக்க முடியவில்லை .குழந்தைப்போல்  தவிழ்ந்தபடி செல்ல ஆரம்பித்தார். அவர்
எலும்பு தேய ஆரம்பித்தது . அவர் பக்தியைக்கண்டு வியந்தார் பரமேஸ்வரன் .
அவர் படும் பாட்டைக்காண இயலாமல்  தானே நேரில் வந்துவிட்டார்.

"அப்பர் பெருமானே ! நீ நேரே திருவையாருக்குச்செல்லவும் .அங்கு நான்
கயிலை க் காட்சியை உனக்குத்தெரியவைத்து  தரிசனம் தருகிறேன் " என்றார்.

அதேபோல் அவருக்கு தரிசனமும் கிட்டியது . பல வருடங்கள் இந்தப்பூவுலகில்
இருந்து பல பதிகங்கள் இயற்றிபாடவேண்டும்  என்பதே அந்தச்சிவனுடைய
விருப்பமாக இருந்திருக்க வேண்டும் ஆகையால் தானோ என்னவோ
அவருக்குக்கயிலைக்காட்சியைத் திருவாருரிலேயே  முடித்துக்கொடுத்துவிட்டார் அந்த ஈசன் .

அப்பருடைய  இறுதி நாட்களில்  அவர் திருப்புகலூரையே  தன் இடமாகக்கொண்டு
வாழ்ந்தார் .தன் இறுதி மூச்சு முடிவது தெரிந்து  " புண்ணியா உன்னடிகே
போதுகின்றேன் " என்று பதிகம் பாடியபடியே சிவனுடன்  இரண்டறக்
கலந்துவிட்டார் .

அப்பர் தொண்டுக்கென்றே பிறந்தார் . அடக்கமாக தொண்டைச்செய்தார்
.புகழுக்காக அவர் ஒருபோதும்  செய்ததில்லை அவர் வாழ்க்கையில் பரமேஸ்வரன்
பல அற்புதங்களை  நிகழ்தியிருக்கிறார் .   திருஞான சம்பந்தர்  ஒருசமயம்
திருபூந்துருத்திக்கு முத்துப்பல்லக்கில்  விஜயம் செய்த போது அப்பர் அந்தச்சிவிகையைத்தன்
தோளில் சுமந்து  வீதி வலம் வந்தார் .அதைத்தன் பாக்கியமாகவே கருதினார்
அவர் .

அப்பர் என்ற பெயர் ஆளுடையபிள்ளையாரால் அளிக்கப்பட்டது . அப்பருக்கு ஏன்
அந்தப்பெயரை அவர் கொடுத்தார் ? திருஞ்சானசமபந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய
உமையம்மை  சம்பந்தருக்கு அம்மையாகிறாள் .அதனால் சிவபெருமான்
சம்பந்தருக்கு அப்பனாகிறார்.  அந்த அப்பன் என்ற பெயரைக்கொடுத்து  திருநாவுக்கரசரை
மேலும்  உயர்வாக்க ஆளுடையபிள்ளையார் அந்தப்பெயரைக்கொடுத்து விளித்தாராம்

அப்பரும் , திருஞானசம்பந்தரும்  சேர்ந்து    பல புண்ணியஸ்தலங்கள்  சென்று
பல பாடல்கள் . பதிகங்கள் இயற்றியதில் தமிழகம்  எங்கும் சிவநாமம்
ஒளிர்ந்தது

Wednesday, November 6, 2013

ஆரிய வைசியர்களின் குலதெய்வம்

பார்வதி தேவியின் அவதாரமான ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியே  ஆரிய வைசியர்களின் குலதெய்வமாகப் போற்றப்படுகிறாள். இவளை  ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள். வாணிபத்துடன்  தர்மசிந்தனை மேலோங்க  பண்பும்  கலாச்சாரமும் வழுவாமல் நன்னெறியுடன்  வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு எல்லாமே இந்த வாசவி என்ற கன்னிகாபரமேச்வரி தெய்வம் தான்
நான்  அருள்மிகு  திரு மாசாணியம்மன் கோயில் போக  பொள்ளாச்சி போயிருந்தேன்  .அப்போது கன்னிகா பரமேஸ்வரி ஆலயமும் அங்கு இருக்கிறது என்று மக்கள் சொன்னார்கள் ,கரூரிலும் இந்தத்தேவியின் கோயில் உள்ளது
அம்மன் இங்கு    மிக  பெரிய உருவத்துடன் தெற்குப்பார்த்து நிற்கிறாள்.
வாயிலில் இரு துவாரபாலகிகள் உள்ளனர் .இந்தக்கோயிலின்  நவகிரஹங்கள்  தாமரைவடிவபீடத்தின் மேல் அமர்ந்திருக்கின்றனர் .சுற்றி இருக்கும் சுவரில்
பல சிற்பங்கள் கதை வடிவில்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.  அதில் வள்ளி கல்யாணம்  ,சீதா கல்யாணம் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.
 
சென்னையிலும் கொத்தவால் சாவடியில் கன்னிகா பரமேச்வரியம்மனைக்காணமுடிகிறது 
ஆடி மாதமும்  பின் நவராத்திரியும் இங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது ,
கன்னிகாபரமேச்வரிஅம்மனுக்கு வாசவி என்ற பெயர்  எப்படி வந்தது?
ஒரு சமயம்  பரமேஸ்வரி  நந்தி  பகவானுக்குச்சாபம்    தரும்  சூழ்நிலை ஏற்பட
நந்திபகவானும் பார்வதிதேவிக்கு  சாபமிட்டார்
 
தான் கங்கையில் நீராடிவிட்டு   பின் திரும்பிய நந்திபகவான்  ஈசன் முன் நின்று
நடனமாடினார் .அருகில் அம்ர்ந்திருந்த பார்வதிதேவியைக்கவனிக்கவில்லை .
தன்னை அலட்சியம் செய்ததாகக்கருதிய தேவி நந்திக்கு பூலோகத்தில்
மானிடராகப்  பிறக்க  சாபமிட்டாள் . நந்திபகவானும் தான் செய்யாத தவருக்குச்சாபமா என்று வருந்தி சிவனிடம் தானும் சாபம் கொடுக்கும் வரனைப்பெற்று  பார்வதிக்கும்  பூலோகத்தில் பெண்ணாகப்பிறக்க  சாபமிட்டார் /
 
இதனால் இருவருமே  மன்னர்   குஸுமரேஷ்டிக்கு இரட்டை  குழந்தைகளாகப்பிறந்தனர்  . அந்தப்பெண்ணிற்கு வாஸவாம்பாள் எனப்பெயர்
வைத்து பின் வாஸவி என்றும் அழைத்தனர் .ஆண்குழந்தை விரூபாஷன் என்ற 
பெயருடன் வளர்ந்தான் பெண்னிற்கு மணப்பருவம் வந்தது  அண்டை நாட்டு விஷ்ணுவர்த்தனன் {முற்பிறவியில்  ஒரு கந்தர்வன் } வாஸவி மேல் காதல் கொண்டு  அவளை மணக்க சம்மதம் கேட்டான்
குஸுமரேஷ்டி தான் கடைப்பிடிக்கும் வைச்யதர்மப்படி  ஒரு  மன்னனுக்குப்பெண்
தரக்கூடாது என்பதால் மறுத்தான் இருப்பினும் பலரிடம் ஆலோசனைக்கேட்டான் .
முக்கால்வாசி மக்கள்  பெண் கொடுக்கலாம் என்றனர்,சிலர்  இதை எதிர்த்தனர்,
இதனால் குழப்பம் ஏற்பட்டு பலர் நாட்டைவிட்டுச்செல்லத்திடங்கினர்.
 
எல்லா நிழ்வுகளுக்கும்  தானே காரணம் என்று நினைத்து மிக வருத்தமுற்றாள்
வாஸுகி . .பின் அதற்குப் பரிகாரமாக தீக்குளிக்க முடிவு செய்தாள்.
 
கோயிலினுள் பெரிய அக்னிகுண்டத்தை வளர்த்து  அதில் அக்னிப்பிரவேசம் செய்தாள். இதைப்பொறுக்காமல் அவளுடன் பலரும் அக்னியில் குதித்தனர் 
அவர்கள் எல்லோரும் முக்திநிலை அடைந்தனராம்.  வாசவியைக்காதலித்
விஷ்ணுவர்தனனும் தலை வெடித்து இறந்துப்போனான்,    அவனது  மகன்   ராஜராஜ நரேந்துரன் தன்   தந்தையின் ஆத்மசாந்திக்காக   தன் ராஜ்யம் முழுவதும் அளித்து தகுந்த பரிகாரம் தேடிக்கொண்டானாம் பின்னர் நித்யகன்னியான
வாசவி  ,   .ஸ்ரீ வாசவிகன்னிகா பரமேச்வரியாக  மாறி ஆரிய வைசியர்களின்
குலதெய்வ்மாக ஆசி புரிந்து வருகிறாள்
 
இன்றும் கொத்துவால் சாவடியில் வாசவி அம்மன்  அக்னிபிரவேசம் செய்வதுப்போல் கன்னிகாபரமேச்வரி அம்மன் கோயிலில் நடைப்பெறுகிறது .  மஞ்சளில் அம்மன் செய்து அக்னியில் பிரவேசிக்கச்செய்து அத்துடன் முழுத்தேங்காய் கொப்பரைகளையும்  போடுகிறார்கள் நவாராத்திரியின் பத்தாவது  நாள் கன்னிகா பரமேச்வரி மகிஷாசுரமர்த்தனியாக  பல அடிகள் உயரமான விமானத்தில் எழுந்தருளி
வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். கேட்டது கொடுக்கும்
மிகச்சக்தி வாய்ந்த தேவி இவள்

மாவு அரைத்த பாண்டுரங்கன்

கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக  அமைந்த விட்டலனது கோயிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை  காலை மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும் எளிதாக நாமஸ்மரணையினால்   நாம்  அடைந்துவிடலாம் . பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் 'விட்டல  விட்டல' என்ற நாமமே எதிரொலிக்கும் .அதுவும் ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண்டாம் . நாம் அந்த  நாமத்திலேயே
மூழ்கிவிடுவோம்  
 
அந்த விட்டலனை  நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது .பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று ஒருவருமில்லை .பெற்றோர்களுமில்லை.   அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில் இடம் கொடுதிருந்தார் .அங்கு அவள் வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள் .சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் விட்டலனைக்குறித்து பல 'அபங்க்'  பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள்.அவள் உடல் .மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே
வியாபித்திருந்தான் .
 
ஒருநாள்  சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள்.   உடைகள் அதிகமாக இருந்தது .ஜனாபாயி உடலில் அத்தனை சக்தியுமில்லை . பார்த்தார் பாண்டுரங்கன் . தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல்  தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து  உதவினான் .
 
சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று . ஜனாபாயி தன்
வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன்
மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள்  .என்ன கருணை !
 
மற்றொரு சம்பவம்....... . பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க
வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும்
கல் இயந்திரம் தான் இருந்தது . அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டுஅதைச்
சுற்ற வேண்டும் .ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு  அரைக்க
வேண்டும் . பொறுப்பானா பாண்டுரங்கன் ! ஓடோடி வந்தான் தானும் அந்த
மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான் .ஜனாபாயின் இந்த்சேவையினால்
மனம் மகிழ்ந்துப்போனான் அவன் . தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி
மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்
 
 மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து
"  ஐயோ இது என்ன சோதனை ?பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே!  யார் எடுத்து  சென்றார்?" என்று பதட்டத்துடன் கத்தினார் அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர் .
"இதோ இங்கிருக்கிறது .வாருங்கள் .ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது .
என்று ஒருவர் செய்தி  சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்
 
ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌஸ்துபமாலை அலங்கரித்திருந்தது .
 
கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?
 
'ஜனாபாய் தான் திருடிவிட்டாள்' என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள்.
அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுகுமரத்தில் ஏற்றும்படி கட்டளைப்பிறந்த்து ,
ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் நடந்தது என்ன?
கழுகமரத்தில் ஏற்றும் சமயத்தில்  கழுகுமரம் தீப்பற்றி எரிந்தது.பின் சாம்பலாகியது.
 
ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத்தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின் 
லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும்  ஜனாபாயை வணங்கினர் 
 
ஜனாபாய் பாடிய 'அப்ங்க்' பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது 
பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது 
 
''விட்டல விட்டல ,  பாண்டுரங்க விட்டல " 

கோகுலத்தில் கண்ணன்

கண்ணன் என்றவுடனேயே நமக்கு கோகுலமும்  பிருந்தாவனமும் ஞாபகத்திற்கு வந்துவிடும் .எனக்கு இங்கு பலதடவைகள் போகும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் தான் ,கண்ணன் பிறந்த இடம் ஒன்று ,வளர்ந்த இடம் ஒன்று ,பிருந்தாவனத்தில் கண்ணனை ராதையுடன் காணலாம்  .
வடநாட்டில் ருக்மிணியைவிட ராதைக்குத்தான் அதிக செல்வாக்கு . தெருவில்
ரிக்க்ஷாகாரனும் வழிவிட மணி அடிப்பதில்லை  வாய் நிறைய ' ராதே கிருஷணா'
என்று தான்  சத்தமாக சொல்கிறான் . கோகுலத்தில் பலராமர் கோயில்
உள்ளது அங்குக்குழந்தைக்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு . பல குழந்தைகளை
அங்கு அமர வைத்து பிரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள்.
பலராமர் போல் பலத்துடன் வீர்யத்துடன் குழந்தைகள் வளருவார்கள் என்ற நம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர் .
கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் திருடித்தின்ற இடங்களையும்  நாம்
பார்க்க முடிகிறது இங்கே பசுக்களுக்குப் ப்ஞ்சமில்லை  நாம் நிற்கும்போதே நம்மேல் உரசிய வண்ணம் போகிறது .ஆனால் முட்டுவதில்லை ,
நல்ல ருசியான பாலும்  லஸ்ஸியும் {மோரும்} எப்போதும் கிடைக்கிறது .
 
பிருந்தாவனத்தில் கூட்டம் அலை மோதுகிறது  பொறுமையாக கியூவில் நகர கண்ணன் அருகில் வந்தாலும் திருப்பதி  போல்  உடனேயே நகர்த்திவிடுகிறார்கள்.
ஒரு நிமிடம் தான் கண்ணனைப்பார்க்க அனுமதி . ஏன் என்றால் கண்ணன்
அழகில் பிரமித்து நிற்க திருஷ்டி விழுந்துவிடுமாம் .
 
இந்தக்கண்ணன் சாக்ஷாத் நாராயணனே ! இந்த நாராயணன்  கண்ணனாகப்பிறநத
அழகைப்பார்க்க சிவன் ஆசைப்பட்டார் .கண்ணனைப்பார்க்க ஆசையுடன் வருகிறார்.பரமேஸ்வரனின் உடை தான் தெரியுமே !
புலித்தோலுடன் நீண்ட தாடியுடன் ஒரு முனிவர் போல் வந்து நின்ற சிவனைப்
பார்த்த யசோதை ஒன்றும் புரியாமல் குழம்பிப்பிபோய் நிற்கிறாள்
"கண்ணா கண்ணா' என்று முனிவர் அழைக்கிறார் .யசோதைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை  இவரைப்பார்த்து குழந்தை பயப்படுமோ என்று அஞ்சுகிறாள் அதே சமயம் முனிவருக்கும்  மரியாதை செலுத்த வேண்டும் .அதனால்  யசோதை அந்த முனிவரிடம்
"என் செல்லம் தூங்குகிறான்  அவனை அணைத்தபடி கொண்டு வருகிறேன் இரண்டு நிமிடங்கள்  தான் பார்க்க வேண்டும் .தூக்கம் கெடாமல் இருக்க வேண்டும் "
 ''அப்படியே செய்கிறேன் "என்று பரமேஸ்வரன் இரண்டுநிமிடங்கள் பார்த்து
மனம் பூரித்து மறைந்துவிடுகிறார்
யசோதைக்கும் வந்தது அந்தப்பரமேஸ்வரனே  என்று புரிந்தது அந்தச்சிவனுக்கே கண்ணனைப்பார்க்க இரண்டு நிமிடங்கள் தான் கிடைத்தது ஆகையால் தான்
பக்தர்களுக்கும் ஒருநிமிடம் தான் பார்க்க அனுமதி .
 
கண்ணனை இங்கே 'பாங்கே பிஹாரி 'என்று மக்கள் அழைக்கின்றனர்
கண்ணன் கை புல்லாங்குழலை ராதையாகவே கருதுகிறார்கள்.
 
தில்லியிலிருந்து சுமார் 147 கிமீ தூரத்தில் இந்த விரஜபூமி இருக்கிறது
எங்கும் ஜே ஜே என்ற கூட்டம்  கண்ணன் ராதை அழகில் நாமும் நம்மை மறந்துவிடுகிறோம் 

சிவன் வில் பெற்ற இடம்

மஹாபாரதத்தில் கர்ணனுக்கு துரியோதனன் நண்பனாகி  அவனுக்கு பரிசாக அங்க
தேசத்தை அளித்தான் .இந்த அங்க  தேசத்திற்கு சம்பா என்ற இடத்தைத்தலைநகராக
அமைத்தான் கர்ணன் ...வட இந்தியாவில் சுல்தான்கஞ்ச் என்ற இடம்  ஒன்று உண்டு.அதன்  அருகே  இந்தத் தலைநகரைக் காணலாம்

இந்தச்சம்பா  என்ற இடத்தில் தான் கர்ணன் கட்டிய கோட்டையை."கர்ணாகர்"
என்ற பெயரில் இன்றும் நாம் காணலாம்.     தற்போது   .இந்தக்கோட்டை மிகவும்
சிதிலமடைந்துள்ளது .
பாகல்பூர் என்ற ஜில்லாவில் தான்  சுல்தான்கஞ்ச் என்ற டவுன் உள்ளது.
.இங்குதான் மிகவும் புகழ்ப்பெற்ற  "அஜ்கெய்பிநாத் மஹாதேவ் ஆலயம் " உள்ளது
.இந்த  மகாதேவருக்கு  கங்கை  நீராலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது .
இங்கு ஓடும் கங்கைக்கு  ஜாஹ்னவி என்ற பெயரும் உண்டு .இவள்
தெற்கிலிருந்து வடக்கு பக்கம் ஓடுவதால்  இவள் உத்தரவாஹினி ஆகிறாள்.
இங்கு ஓடும் கங்கைக்கு  ஜாஹ்னவிஎன்ற பெயரும் உண்டு .

 ஜாஹ்னு என்ற முனிவர்  ஒரு குன்றின் அருகில் தன் ஆஸ்ரமம்  அமைத்து தன்
சிஷ்யர்களுக்கு வேதம் ஓத பயிற்சி  அளித்து வந்தார் .கங்கையின் பிரவாகத்தினால் அந்தப்பெரிய குன்று பலமுறை   அடிக்கப்பட்டு  அளவில் சிறிதாகியது
இந்தக்குன்றின் மேல்தான்  மகாதேவர் ஆலயம் கட்டப்பட்டது .

சரி....கங்கை எப்படி ஜாஹ்னவி என்ற பெயர் பெற்றாள்?.

ஒரு சமயம் ஜாஹ்னு முனிவர்  தன் தபஸில் தீவரமாக இறங்கி இருந்தார் .அப்போது
பகீரத முனிவர்  தன் முன்னோர்கள் பரமபதவி பெற  கங்கை நதியைச் சிவனது ஜடையிலிருந்து தருவிக்க சிவனை நோக்கி  கடும் தவமிருந்தார் .
சிவனும் மனமகிழ்ந்து கங்கையை ஜடாமுடிலியிலிருந்து பூமிக்கு இறக்கினார்
.அவ்வளவுதான்  ! கங்கை   கட்டுக்கடங்காமல் பூமியில் பாய்ந்தது
தவத்தில்  மூழ்கியிருந்த முனிவர் மேல் கங்கை பாய்ந்தது .எதிர்ப்பாராத
இந்த நிகழ்வால் சீற்றமுற்று கங்கையைத்தன்   சக்தியால்  அப்படியே விழுங்கிவிட்டார் .
பகீரத முனிவர் அங்கு வந்து   கங்கையை வரவழைத்த காரணத்தைக்கூறி
மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.பின்னர் கங்கையைத்திருப்பி தரும்படி
வேண்டுகோள் விடுத்தார் .   ஜாஹ்னு முனிவரும்தன் தொடையைக்கீறி  கங்கையை வெளியே விடுத்தார் .ஜாஹ்னு முனிவரிடமிருந்து வந்ததால்  கங்கையும்  ஜாஹ்னவி என்ற பெயர்  பெற்றாள்.

இந்த இடத்தில் இருக்கும் குன்றின்  மேல் இருக்கும்  சிவன்  சுயம்புவாக வந்ததாம் ஆற்றின் நடுவில் இருக்கும் குன்றுக்குப்போக  முன்பு   படகை உபயோகித்து வந்தனர் .ஆனால்
 இப்போது  கரையிலிருந்து   குன்றுக்குச்செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது .
குன்றின் மேல்  கோயிலைத்தவிர ஒரு மசூதியும் இருக்கிறது இந்த மசூதி இக்தியார் முகமது கில்ஜியில் கட்டப்பட்டது .

சிவனின் ஆலயம் வட  இந்திய பாணியில்  கட்டப்பட்டிருக்கிறது .அவர் "கெய்பிநாத் 'என்ற பெயரில் ஜடாமுடியுடன் காட்சி தந்து அருள் புரிகிறார்.   குன்றின் இருக்கும் குகையில் பல சித்திரங்களைக்காணநமக்கு அஜந்தா .எல்லோரா நினைவு வருகிறது .சுவர்களில் புத்த  சமய சித்திரங்கள்  ராமாயண காட்சிகள்    மகாவிஷ்ணு நரசிம்மர் போன்றவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன .

சில இடங்களில் வெறும் கற்தூண்கள் மட்டும் நிற்கின்றன. அங்கு கோயில்
இருந்து பின்னால் அழிந்துபோயிருக்கலாம் .ராமாயணத்தில்  ஜனகரிடம் ஒரு வில் இருந்ததும்   .ஜனகரின் மகள் சீதையின்சுயம்வரம் போது அந்தவில்லை   அனாயாசமாக தூக்கி நிறுத்தி
 உடைத்ததும்  நம் எல்லோருக்கும் தெரியும் அந்த வில்லை வட இந்தியாவில்
"அஜ்கெய்ப் தனுஷ் 'என்கிறார்கள். இந்த வில்லை  இந்தக்குன்றின் மேல்தான் சிவன் இருந்து பெற்றார்.இந்தக்குன்றில் ஜாஹ்னு  முனிவர் இருந்ததாலோ என்னவோ இதற்கு  ஜாஹ்னு கிரி என்று   பெயர் .விசுவகர்மா பிரத்யேகமாக  சிவனுக்கென்று தயாரித்த வில் தான் இது

 இந்த வில் வந்த  காரணம் என்ன?

 நாரதர் தன் கலகத்தினால் இந்திரனைத்தூண்டி விட்டார் .. அதுதான் சிவன்
பராக்கிரமசாலியா அல்லது விஷ்ணுவா?இருவரிலும் யார் பெரியவர் .....
ஹரியா  அல்லது ஹரனா?இதற்கென்று ஒரு போட்டியும் நடத்த விரும்பிய நாரதரின்
எண்ணத்தைப்புரிந்து கொண்டார் ஈசன் .இதற்கென்று ஒரு வில் தயாராயிற்று .வில்லைச்செய்தவர்  தேவசிற்பி விஸ்வகர்மா .அதன் பளு சொல்லமுடியாது.   பல சக்கரங்கள் கொண்ட வண்டியில் தான் அதை ஏற்றி அழைத்துவரமுடியும் .
அந்த வண்டியைத்தள்ள  நூற்றுக்கணக்கானவர் வேண்டும்.   அத்தனை கனம்
..இந்தக்கனத்தைத் தள்ள ஒன்றேகால நாழிகை ஆகுமாம் .நடு நடுவே ஓய்வு எடுத்துக்கொண்டால் தான் இது முடியும் .ஆனால் பரமேஸ்வரனோ தானே அதை எளிதாகக் தூக்கி நிறுத்திக்கொண்டார்.

போட்டி ஆரம்பமாயிற்று  . ஆனால் விஷ்ணுவிடம் அது போல் வில் இல்லாததால்
அதேபோல் ஒரு வில்லை விசுவகர்மா மகாவிஷ்னுவிற்கும் செய்து கொடுத்தார்  போர் தொடங்கியது .ஆனால்  இருவரும் சளைக்காமல்

 போர்   தொடர  தேவர்கள் போரை நிறுத்துமாறு வேண்டினர் ,மகாவிஷ்ணு பின்னர் அந்த வில்லை ரிசிகா முனிவரிடம் கொடுத்தார் .அவர் பிற்காலத்தில் அதை ஜமதக்னி
முனிவரிடம் கொடுக்க கடைசியில் அது பரசுராமரிடம் வந்தது .
சிவனோ தன் வில்லை  மிதிலை தேச மன்னரிடம் கொடுத்தார் , அது ஏழு தலைமுறையாக
வந்து பின் ஜனகரிடம் வந்ததாம்   ஜனகரின் மகள் ஜானகி அந்த வில்லை சிவபெருமான் போல்  வெகு எளிதாக  கையில் ஏந்திவிட்டாளாம்
பின் அந்த வில்லை ஏந்தி  உடைத்து சீதையை மணம் புரிந்தார் அந்த ஸ்ரீ ராமன் /

இந்தச்சம்பவத்தை  மனதில் கொண்டு  இங்கு  தாமிர   கலவையைக்கொண்டு  151
அடி உயரத்துடன் அஜ்கெய்ப் என்ற சிவன்  தனுர்தாரியாக  கம்பீமாக வானளாவி நிற்கிறார்
இந்தச் சிவன் காரணமாக சுல்தான்கஞ்சில்  எப்போதும் மக்கள் கூட்டம் திரளாக வருகிறது .பிரதோஷம் ,கார்த்திக் சோம்வார் போன்ற விஷேச நாட்களில் இந்தக்கோயிலைப்பார்க்க   மனம் பரவசமாகிறது.

மூன்று கேள்விகள்

அருள்மொழித்தேவர் தன் தந்தை இங்கும் அங்கும் நடந்தபடி  மிகவும் வருத்த
நிலையில் இருப்பதைப் பார்த்தார் தன் தந்தையிடம்சென்று  "தந்தையே ஏன் இன்று மிகக்கலக்கமாக  இருக்கிறீர்கள் .என்னிடம் சொல்லுங்கள் . நான் என்னால் முடிந்ததை செய்கிறேன் 'என்றார்.

"அருள்மொழியே இன்று நம் மன்னர்  அனபாய சோழன்  புலவர்களின்
அறிவுக்கூர்மையைச் சோதிக்க மூன்று கேள்விகளை என்னிடம் கேட்டார் . அந்த மூன்று கேள்விகளுக்கும் என்ன விடை சொல்வது
என்று குழம்பி வீடு வந்துவிட்டேன் '

"தந்தையே  அந்த மூன்று கேள்விகள் என்ன ? '

சிறிது நேரம் மௌனம் சாதித்துவிட்டு  தன் மகனைப்பார்த்தார் .
"கேள் மகனே ,
அந்தக்கேள்விகளைச் சொல்கின்றேன்   "உலகைவிட பெரியது  எது ?

மலையினும் பெரியது எது?

கடலினும் பெரியது எது ?"

"தந்தையே  இதற்கு பதில் திருக்குறளில்  கிடைக்கும்.கவலையை விடுங்கள்.


காலத்தினாற் செய்த  நன்றி  சிறிதெனினும்
ஞாலத்தில்  மாணப்பெரிது"

தக்க தருணத்தில் ,மிகவும் தேவைப்படும் நேரத்தில் செய்யும் உதவி
சிறிதானாலும் அது   உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும் ,.


"பயன் தூக்கார் செய்த   உதவி நயன் தூக்கின்
நன்மை  கடலிற் பெரிது '

பிறருடைய பதில் உதவியை எதிர்ப்பாராமல்  மனமார  உதவி செய்வதே கடலைவிட
உயர்ந்த  செயலாகும்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்பெரிது'

தன்  நிலையிலிருந்து எந்தக்காலத்திலும் மாறாமல் அடங்கி ஒழுகுவோருடைய
உயர்வு மலையின் உயர்வைவிட மிகப்பெரிது "

இதைக்கேட்ட பெருங்கவி  உடனே ஓடிவந்து மகனை அணைத்து  வியந்தார் .மறுநாள்
மன்னரிடம் சென்று  விடைகளையும் சொன்னார்  .மன்னர் அவரைப்புகழ்ந்தவுடனே அவர் " மன்னரே  இந்தப்புகழுக்கு நான் பாத்திரமானவன் அல்ல .இந்த விடைகளை என் மகன்  அருள்மொழித்தேவன்  அளித்தான்  அவனுக்கே இந்தப்புகழ்  சேரும் "

"அப்படியா  நான் அவனைப்பார்க்க வேண்டுமே ."

"சரி மன்னா அவனை அவைக்கு அழைத்து வருகிறேன் '

அருள்மொழித்தேவனும் அரச சபைக்கு வந்தான் .மன்னன் அவன் அறிவைப்பாராட்டியபடி அவனை  அணைத்துக்கொண்டான் .

"அருள்மொழித்தேவா  இன்றைய தினத்திலிருந்து  நீயே முதலமைச்சர் .உனக்கு
"உத்தமசோழபல்லவராயன் "என பட்டம் சூட்டுகிறேன் ''

இத்தனைப்பெரிய பதவி வந்தும்  அருள்மொழித்தேவன்  மிகவும் வினயத்துடன்
பணிவாக இன்பம் துன்பம் எல்லாமே சம நோக்குடன் பார்த்தது தந்தைக்கு மிகப்பெருமை .ஏதோ ஒரு ஆன்மீக சக்த்தியால் பிறந்த  குழந்தை தான் இவன் ,...என்று மனமகிழ்ந்தார் .

அவையில்  அருள்மொழித்தேவர் பல சிவனடியார்களின் கதைகளை எடுத்துரைத்தார்.

மன்னனும் மகழ்ந்து  பல சிவனடியார்களைப்பற்றி  கவிதை உருவில்  காவியமாகப்படைத்து

அருள வேண்டும் "  என்றார்

அவரது வேண்டுகோளை அப்படியே ஏற்று  மன்னரிடமிருந்து விடைப்பெற்றார்,பின்
தன் தந்தையிடம் தான் சிதம்பரம் செல்ல அனுமதி  பெற்று   ஆடும் சபேசன்  அம்பலவாணன்
சந்நிதிக்குச்சென்றார்.கைக்கூப்பி வணங்கினார்

"பரமேஸ்வரா  திருமுறைக்கண்ட அடியார் வரலாற்றை அழகான தமிழில் எழுத நீதான்
அருள வேண்டும் அதன் முதல் அடியையும் நீதான் எடுத்துக்கொடுக்க வேண்டும்  என்று மனமுருக வேண்டினார் .அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது .

வானத்திலிருந்து  ஒரு அசரீர் வாக்கு கிளம்பியது

"இந்த உலகினர்  பாராட்டும் வெற்றிநூலாய் அமையப்போகிறது உன் நாவிலிருந்து
புறப்படும் இக்கவிதை பெட்டகம் .அதற்கு "உலகெலாம் "என்று முதலடி தொடங்குவாய் .இந்த உலகெல்லாம் புகழ்ந்து பாடும் புலவனாக நீ மிளிர்வாய்"


முதல் பாடல் இவரிடமிருந்து உதித்தது ..அருள்மொழித்தேவர்  சேக்கிழார் ஆனார் .

அவர் பாடிய முதல் பாடல்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு  அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் ,
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் "

அநபாயச்சோழன் வேண்டுகோளின் படி திருத்தொண்டர் புராணம் என்ற
பெரியபுராணத்தை 4283  செய்யுள்களால் பாடி முடித்தார்.
சோழமன்னன் இதைக்கேட்டு மிகவும் மனமகிழ்ந்து   அவரை அழைத்துக்கொண்டு
ஊர்வலம் வந்தான் .யானையின் மேல் ஊர்வலம் ....
மன்னன் அவர் பின்னால் அமர்ந்து அவருக்கு கவரி வீசி மகிழ்ந்தான் .அவரைத்
தெய்வபுலவராக வழிபட்டான் .
இந்தச்சேக்கிழாருக்கு   குன்றத்தூரில்  ஒரு ஆலயம் இருக்கிறது சென்னைக்கு
அருகே இருக்கும்  குன்றத்தூரில் தான் சேக்கிழார்
அவதரித்தார் .கல்வி அறிவு பெற  இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர்
இங்கு வந்து திருத்தொண்டர் புராணமும் படிக்கின்றனர். இதைப்படிக்க  ஆன்மா
சுத்தமாகி ஆணவம்  மறைகிறது .

பெரியபுராணத்தை அருள்நூல் என்றார் திரு கிருபானந்தவாரியார் சுவாமிகள்.இவரது ஆலயத்தில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் விசேஷ பூஜையும்
ஊர்வலமும் பல சிவனடியார்களின்

சொற்பொழிவுகளும் நிகழ்கின்றன.திருமுறையும் ஓதப்படுகின்றன ..

வீணைக்கு ஒரு பூட்டு

அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா? ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட  கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும்  வீரமா ? தந்தி மேல்  மோஹனம்  காந்தாரம் வரைச்சென்று வீரத்தை அள்ளி வழங்கும் .சோகமா ? வந்துவிடும் சுபபந்துவராளி , வராளி ஹிந்தோளம் போன்ற  ராகங்கள்..    முன்பெல்லாம்  யாராவது தேசத்தலைவர் மறைந்தால்  சட்டென்று கண்டுப்பிடிப்பது இந்த  ராகங்களில் தான் .  டிவி  முதன் முதலாக ஆரம்பித்த நேரம்   முக்கால்வாசி பேர் ரேடியோவையே பொழுது போக்காக கொண்டிருந்தனர் . அழகாக சினிமா பாடல்கள் பாட திடீரென்று அது நின்று போய் ஒரு  சோக ஒலி  வயலின்  மூலமாகவோ  வீணை சிதார் மூலமாகவோ திடீரென்று எழும்  "ஐயோ  ஏதோ ஒரு தலைவர்  காலமாகிவிட்டார் போலிருக்கு  " என்று எல்லோரும் உன்னிப்பாக சோகத்துடன் செய்தி கேட்க தொடங்குவார்கள் .  சரி இந்த வீணைக்கு இப்போது வருவோம்  

நான் சொல்ல வந்த வீணை  "டெலிகிராம்" . 1844 வருடம் திரு சாம்வேல் மார்ஸ் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உலக முழுதும் தன் தந்தியால்  நவரச பாவங்களை வழங்கி  பலரையும் உய்வித்த அந்த வீணை.    தற்போது அதற்கு ஒரு பெரிய பூட்டு போடப்பட்டு  தந்தியும்    அறுந்து நிற்கிறது ,      முதல் தந்தி   மே 24 வாஷிங்டன்னிலிருந்து  பல்டிமோருக்கு அனுப்பப்பட்டது   இந்தக்கண்டுப்பிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்  
.
 இதோ வருகிறார்  எங்கள் தெருவுக்கு வரும்  தந்திக்காரர்   அவரது உடையே தனி அழகுதான், காக்கி கலரில் பேன்ட்டும், ஷர்ட்டும் சட்டைப்பையின் மேல் புறம் ஒரு வில்லையும்,  பார்க்கவே பொது ஜன தோழன் என்பது நிதரிசனமாக தெரியும்   சைக்களை மிதித்தபடி  நேரம் ,காலம்  பார்க்காமல்  வருகிறார் . காலை ,மதியம்  அல்லது முன்னிரவு சுமார் பத்துவரை   அவரைப்பார்க்க   மனம் பக்  பக்கு என்றாலும்   காலை நேரம்    அவர் தரும் தந்தியை வாங்கும் தைரியம் இருக்கும் .  ஆனால் இதுவே தூங்கும் போது நடு நிசியில்  அவர் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் !   எங்கும் அமைதி .  இருள்   முன் வாசல் கேட்டை அவர் தட்ட வேண்டும் அது பாதுக்காப்பிற்காக பூட்டுப்போடப்பட்டிருக்கும். பாவம் அவரும் "சார் சார் என்றோ ஐயா என்றோ  வாசலை வேகமாக தட்டுவார் .     தூரத்திலிருந்து ஒரு கருப்பு   நாய் தன் பட்டன் போன்ற கண்களை உருட்டி இவரைக்குறி வைக்கும் .அந்த நாய் வருவதற்குள்  இங்கு கதவு திறக்கபடவேண்டும்    "சுப்பு என்ன இப்படி தூங்கற  ! வாசல்ல யாரோ கா மணியாய் உடைக்கிறா?தந்தியோ என்னவோ " சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு வயிறெல்லாம பிசையறது "வரேம்மா "என்றபடி சுப்பு  வந்து கதவைத் திறக்கிறார் . தந்திக்காரர் தந்தியை நீட்டுகிறார். மனம் பதைபதைக்க கை நடுக்கத்துடன்  அதை வாங்குகிறார் .தந்திக்காரரும்  அதைப்பிரிக்கும்  வரை அங்கேயே நிற்கிறார் , ராஜி டைட்   டெலிவரி  " என்ற வரிகள்  இருக்க  நாலு பக்கமும்   கரிய வரிகள் வரையப்பட்டுள்ளன   இந்தச்சந்தர்ப்பத்தைப்பார்த்தால்   நாதநாமக்கிரியா  ராகம் விணைத்தந்தியில் மீட்ட அது அப்படியே சோகத்தைக்கவ்விக்கொண்டு  அந்த வீட்டினுள் நுழைந்து அக்கம்பக்கத்திலும் பரவுவதைப்போல்  தோன்றும்  இந்த உணர்வு இந்தக்கால  ஈமெலில் கிடைக்குமா ?    
   அதே தந்திக்காரர் மறு நாள்  காலை அதே  தெருவில் நுழைகிறார் . மனம் மகிழ்ச்சியுடன்   "என்ன முரளி சௌக்கியமா? என்று கேட்டபடி  கதவைத்திறக்கிறார்.  முரளி வருகிறார் , " என்ன தந்தியா " மனதில் கொஞ்சம் கலக்கம் இருக்க கேட்கிறார்  ஆனால் தந்தியில் சிவப்பு கோடு நாலு பக்கம் இருக்க   "அப்பாடி" என்றபடி ஒரு மூச்சு   ".  வெட்டிங் பிக்ஸ்ட் ,  லெட்டர் பாலோஸ்    சன்  ஹரி "   இப்போது தந்தி கொடுத்த ஒலி கல்யாணி ராகம்  அந்தத்தந்தியை வாங்கிக்கொண்ட உடனேயே  மகிழ்ச்சியின் உச்சிக்குப்போய் மேல் காந்தாரத்தைத் தொட்டு உள்ளத்தைச்சிலிர்க்க செய்கிறது     "ஸீவீட் எடுத்துக்கோங்கோ " என்றபடி உள்ளே போகிறார் .  இந்த உணர்ச்சி    கணிணி மூலம் அனுப்பும் மடலுக்கு  ஏன் வருவதில்லை . ஒரு இடத்தில் உனர்ச்சியில்லாத இயந்திரம் வேலை செய்கிறது இன்னொரு இடத்தில் உணர்வுகளுடன் கூடிய மனிதன் நேரில் பங்கு பெறுகிறான்  இதே போல் பயம் .பீபத்ஸம்   வாத்ஸல்யம்  வீரம் ஹாஸ்யம்  என்று பல ரசங்கள்  இந்தத் தந்தி மூலம்   நான்   அனுபவித்திருக்கேன்  ஒரு தீபாவளியன்று காலை என் பாட்டி இறந்ததைத் தாங்கி வந்த தந்தி இன்றும் என் மனதில் மங்காது இடம் பெற்றிருக்கிறது 
இந்தத் தந்தியே பல நேரத்தில் பலருக்கு உதவி  புரியும்  மூன்று நாட்கள் ஜாலியாக ஊட்டி போக ஆசை ஆனால் பாழாய்ப்போன ஆபீஸில் ஒரு லீவு கூட தரமாட்டேங்கறாளே "என்று அங்கலாய்க்கும் அம்பிக்கு  "மதர் சீரியஸ் ' என்ற தந்தி வந்து அவனுக்கு இந்த வாய்ப்பைக்கொடுக்கும் . சில சமயம்  தாத்தா இறந்துபோவார்   ஆனால் சில ஆபீஸர் இதைபுரிந்துக்கொண்டு " ஏன் ரகு போனவருடமும் உன் தாத்தா காலமானாரே" என்று கேட்டபடியே லீவைத்தருவார் .சில பெற்றோர்களே இந்த வழியைச்சொல்லிக்கொடுப்பார்கள் , "டேய் ரகு இந்தத்தடவை பெண்பார்க்க கண்டிப்பாய் வந்துடு .  கல்யாணம் பிக்ஸ்  செய்யணும்   
"அம்மா என் பாஸ் லீவே தரமாட்டாரே "    "   அதற்கென்ன  பாட்டி உடல் நிலை மோசம்  உடனே வா " என்ற தந்தி அனுப்பறேன்  " வடநாட்டில் ஆங்கிலத்தில்  தந்தி அனுப்ப சிலர் மிகவும் திணறுவார்கள்  அந்தத்தந்தியைப்படித்து சில விபரீதங்களும் ஏற்பட்டதுண்டு   ஒரு சர்தார் தன் அப்பா லண்டன் போனதைச்சொல்ல  தன் தாய்க்கு  தந்தி அனுப்பித்தான்     "டேடி  கான்   யெஸ்டெர்டெ  ஹீ ஈஸ் இன் த வெல்  daddy gone yesterday  He is in the well "     தன் அப்பா லண்டன் போய்விட்டாரென்றும் அவர் நலம்    என்றும் அடிக்க நினைத்து இது போல் தகவல் அனுப்ப  அவனது தாய் அலறியடித்துக்கொண்டு உடனே கிளம்பி வர  ..........ஒரே அமர்க்களம் தான் போங்கள் . 
இதே போல் ஒரு மாணவன்  தான்  காலேஜில் சேர்ந்ததை  " அட்மிடெட்  இன் மெடிகல் ஆஸ்பிடல் . மெடிசன்  கிவன்  "  என்று தன் விவசாயி அப்பாவுக்கு  தந்தி அனுப்பிக்க  அவரும் தன் நண்பர்கள் மூலம் விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டு   தன் மகன் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான் என மனம் பதைபதைக்க  தில்லி வந்தார் .  பார்த்தால் அவரது மகன் மெடிகல் சீட் கிடைத்த  குஷியில்  பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்   இது எப்படி இருக்கு ? கோயம்பத்தூரில் திரு ரத்ன சபாபதி கடந்த பல வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த வேலையைச்செய்து வந்தார் .அவர் ஆபீஸில் ஒரே நேரத்தில் அழுகையும் இருக்குமாம் சிரிப்பும் இருக்குமாம்  ஆங்கிலத்தில் பண்டில் ஆப் எமோஷன்ஸ் என்று சொல்வார்கள் . இதை உணர்ச்சிகளின் பிழம்புகள் என்று  சொல்லலாமா ?அவரது ஜோல்னாவில்  கொடுக்கவேண்டிய பல நிரம்பி இருக்கும் அதில் வாழ்த்துகள் . சோக செய்திகள் என்று பல கலந்து இருக்கும்  ஆனால் வருடங்கள் செல்ல கணினி வந்தப்பின் இது  அதிக அளவு குறைந்து ஜோல்னா பைக்கு அவசியமே இல்லாது ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டார்  தவிர  மிகச்சிலவு இல்லாமல்   மிக நம்பிக்கையுடன் அவசர செய்தியை அனுப்பும் சமாசாரமாகத்தான் இது இருந்தது என்பது உண்மை 
தந்தியில் டபிள் எக்ஸ் டெலிகிராம்  மரண செய்தியைக்கொண்டிருக்கும் அதற்கு எப்போதுமே முதன்மை இடம் அதற்கு க்யூ நிற்க வேண்டாம்  கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இந்த லைனில் வேலைச்செய்து வரும் திரு அண்ணாதுரை தினமும் சுமார் 15 கிமீ சைக்கிளை மிதித்து  100 தந்தி வரை கொடுத்துமுடிப்பார் .இவருக்கு சூராவளி . அடைமழை  கடும் வெயில்  எல்லாம் பழக்கப்பட்டு போய்விட்டன .இரவில் நாய் துரத்துவது தான் கொஞ்சம் சங்கடமான விஷயம் என்கிறார் இவர் . வேலை கடுமையாக இருந்தாலும் 'ஜாப் ஸாடிஸ்பேக்‌ஷன் எனக்கு மிகவும் கிடைத்தது மனம் நிறைந்திருந்தது "  என்றார் .

இந்திரங்களுடன் சேர்ந்து மனிதனே இயந்திரமாகி உணர்ச்சிகளில்லாத ரோபோவாகி வருகிறான் அண்ணன் தம்பி  பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய் தந்தையரிடமும் இயந்திரகதியில்  பேசி  தான் பேசாத நிலைக்கு 'நோ டைம்'  என்று காரணமும்  காட்டி ,         அட கடவுளே   நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்     என நினைக்கத்தோன்றுகிறது    முதியோர் இல்லம்பெருகாமல் என்ன செய்யும் ?

உண்மை வெல்லும்

அன்பு குழந்தைகளே சில சமயம்  நாம்  அனாவசியமாக புகழாரம்  சிலருக்குச் சூட்டுகிறோம்,அவர் அதற்கு தகுதியாக இருந்திருக்க  மாட்டார் எனினும்  அவர் செல்வாக்கைப் பார்த்து 
அவரது அன்பினால் நமக்கு எதாவது ஆதாயம் கிடைக்கும் என்று சுயநல எண்ணத்தினால்  அவரை பொய்யாக  உயர்த்தி பேசுகிறோம்.சில சமயம் நமது பெரியவர்கள் தாய்  தந்தை 
தவறு செய்தாலும் அதை மரியாதையுடன்   பக்குவமாக பணிவான குரலில் எடுத்து  சொல்ல வேண்டும் ,உண்மை  எப்போதும் வெல்லும் ,மன திடம் , தைரியம்   இருந்தால் எப்போதுமே நாம் முன்னுக்கு வர  முடியும்  ,
இப்போது ஒரு கதை  பார்க்கலாம் 
 
ஒரு நாட்டை  ஒரு அரசர் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தார் ,அவர் தன் ஆட்சிஎல்லோருக்கும் பிடித்திருக்கிறதா ?தான் மேலும் நாட்டு நலனுக்கு எதாவது செய்ய வேண்டுமா? 
என்று தெரிந்துக்கொள்ள ஒரு சிறந்த அறிவுறை வழங்கும் மந்திரியைத் தேடினார் ,அதற்கு நாடு முழுவதும்  தண்டோரா போடச்சொன்னார் ."இதனால் நம் அரசர் சொல்வது என்னவென்றால்   ,,,டம்டம் டம் ,,,,,,,,நம் அரசருக்கு சிறந்த மந்திரி  தேவை ,,,டம்டம்டம் 
நாளை திங்கட்கிழமை  தேவைப்படுபவர் அரசரை வந்து சந்திக்கலாம்  டம்டம்டம் .....
என்று  பணிவாளர்கள் நாடு முழுவதும்  இதை அறிவித்தனர் ,
பலர் கூடினர்  ,அதில் ஒரு ஐந்து பேர்களைத்தேர்ந்தெடுத்தார்  அரசர்.
முதலில்  ஒருவனை அழைத்தார் ." அறிவாளியே,நான் எப்படி அரசை ஆள்கிறேன் என்று சொல் " 
முதல்  மனிதன்  சொன்னான் " மதிப்புக்குறிய அரசரே ,,நாடு உங்கள் தலைமையில் மிகவும் சுபீட்சமாக இருக்கிறது நாங்கள் எல்லோரும்  மிக மகிழ்ச்சியுடன்  இருக்கிறோம்"
இரண்டாவது  மனிதனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது ,
அவன் பதிலளித்தான் "அன்புக்குரிய அரசரே  தங்கள்  ஆட்சியில் நாங்கள் சுவர்க்கத்தில் இருப்பது போல் தான்  எல்லாமே அனுபவிக்கிறோம் நான் சொல்ல என்ன  இருக்கிறது?"
மூன்றாவது மனிதனோ  அரசரை மிகவும் புகழ்ந்து   தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடினான் . இவர்கள் எல்லோருக்கும் அரசன் வைரக்கற்களை அன்பளிப்பாகக்
கொடுத்து அனுப்பிவைத்தார் 
கடைசியில் ஒருவன் வந்தான்  அரசர் இதே கேள்வியை அவனிடமும் கேட்டார்     
அதற்கு அவன் " நீங்கள் நன்றாக ராஜ்யத்தை  ஆண்டாலும் இன்னும் மக்கள் நலனுக்க்காக பல செய்யவேண்டும் மரங்கள் நிறைய நடவேண்டும் இன்னும் வழிப்போக்கர்களுக்கு  சத்திரங்கள் பல கட்டவேண்டும் சுங்க வரியைக் குறைக்க வேண்டும்  "என்று  அவர் செய்யாத சில  பணிகளை பணிவாக எடுத்துறைத்தான் 
அரசருக்கு அவனது  தீரம் .உண்மைப்பேசுதல்  மிகவும்  பிடித்திருந்தது  அனாவசியமாக  புகழாரம் சூட்டாமல் 
 தவறுகளைச் சுட்டிக்காட்டியது மிகவும்  பிடித்தது ,அவனையே  தன் 
மந்திரியாக்கிக் கொண்டார் .
அனாவசியமாகப் பொய்ச் சொல்லிப்புகழ்ந்த  மற்றவர்கள்   தங்கள் வைரக்கற்களைப் பார்த்து  பெருமை அடைந்தனர் ஆனால் அது போலி என்று பிறகு  தெரியவந்தது ,தங்கள் முட்டாள்தனத்திற்கு  வருந்தினர்.
ஆகவே   உண்மைப்பேச பயப்படாதீர்கள் எப்போதும் உண்மையே பேசுங்கள்