Tuesday, June 26, 2007

ஒரு சிலைப் பேசுகிறது

நான் ஒரு கற்சிலை .,
ஆனாலும் பேசுகிறேன் ,
என் வயிறு பற்றி எரிகிறது,
பேச உயிரும் வந்தது ,
பத்து வருடங்களுக்கு முன் ,
என்ன அழகு நான் ,
செதுக்கியது யாரோ?
அவர் அன்பில் வடித்தாரோ?
தலையில் அழகியத் தலைப்பாகை,
முகத்தில் முறுக்கிய மீசை ,
கண்ணிலே ஒரு கருணை ,
கதர் ஜிப்பாவுடன் ஒரு வேஷ்டி ,
என் கண்களில் உயிர் ,
பொங்கி எழுந்தது என் வீரம் ,
நின்ற இடமோ அருமை ,
என்னைச் சுற்றி பசுமை ,
பத்து வருடங்களுக்கு முன் ,
என் ஞாபகப் பின்னோக்கம் ,
முதல் வருட நினவு நாள்,
கூட்டம் கூடியது ,
விழா எடுத்தது ,
பேச்சு முழங்கியது ,
ஐந்தடிசிலை புதிதாக முளைத்தது ,
மாலகளில் மறைந்தது ,
ஒலிப்பெருக்கியில் ,
தேசப் பாடல் முழக்கம் ,
வரட்டுப் பேச்சுக்கள் ,
“இவர் போல் உண்டா ?
உயிரைக் கொடுத்த
வீரத்தியாகி
அவர் கொள்கைகள்
கடைப்பிடிப்போம்
கடமை உணர்வோம் “
இன்று ,,,,
உருக்குலைந்து நிற்கிறேன் ,
அழகுத் தலைப்பாகையில்
பறவைகளின் எச்சம் ,
உடல் முழுதும் அழுக்கு .
வெய்யிலில் காய்கிறேன் ,
மழையில் நனைகிறேன் ,
என்னைச் சுற்றி பசுமை
இன்று எங்கே போனது?
சிறு நீர் வாடை
துரத்துகிறதே,,,
சோம்பேறிக்கூட்டம் ,
காசுக்கு சீட்டில்
தன்னை மறக்குதே
பொறுக்கவில்லை
பேசுகிறேன் இன்று ,
புயலே, இடியே, வந்து விடு
மின்னல் கொண்டு வந்து விடு ,
இடியில் என் சிலை அழியட்டும்
எனக்கு முக்தி கிடைக்கட்டும்

அன்புடன் விசாலம் ,

வதந்தி……

வதந்தி ,,,,,
என் பெயர் வத்ந்தி ,
என்னுள்ளே ஒரு தீ.
ஒரு சிறு பொறி போதும் ,
உடனே ப்ற்றிக் கொள்வேன் ,
பல இடங்களில் பரவி விடுவேன் ,
எல்லைத்தாண்டியும் போய் விடுவேன் ,
காது மூக்கு வைத்துத் திரிப்பதில்,
எனக்கு நிகர் நானேதான் ,
நல்லெண்ணத்துடன் ஒரு பெண் ,
கூட ஒரு ஆண் ,
பார்த்தால் போதும் என்க்கு,
பெண்ணைக் காதலி ஆக்கிவிடுவேன் ,
வரம்பு மீறிப் பேசி விடுவேன் ,
எதையும் தலைக்கீழாய் மாற்ற முடியும் .
என்னால் எதையும் திரிக்க முடியும்
ஆஸ்பத்திரியில் தலைவர்
இறந்தும் விடுவார் ,
பின் பிழைத்தும் விடுவார் ,
ஒரு சவரன் கொள்ளைப் போனால்
ஐம்பது சவரன் ஆக்கி விடுவேன் ,
பிள்ளையார் பால் குடித்தது
உலகம் முழுவதும் பரவியது,
என்னை நம்பாதே ஒரு போதும்
உங்கள் கண்ணை ந்ம்புங்கள் எப்போதும் ,
தெரிந்ததா இப்போது என் சக்தி,
கொடுங்கள் எனக்கு ஒரு முக்தி

அன்புடன் விசாலம்

நிலவில் ஒரு நிலம்

நிலவையே எப்போதும் கனவுக்கண்ட யெஸ்ஸர் ரஹ்மான் அதிலேயே பவனி வர ஆரம்பித்தான் எல்லோரிடமிருந்து தனிப்பட்ட விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற
ஆர்வம் மிகுந்தது அவனிடம்,,,,, அதன்படி நிலவில் ஒரு நிலம் வாங்கிவிட்டான்
இந்தச் சென்னைவாசி,,,,கணினியிலேயே லூனார் லாண்ட் ரெஜிஸ்ட்ரி ,,,,என்பதைக் கண்டு
பிடித்து $42 க்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறான் ஒருவர் அவனிடம் இதில் போல் பணம் சிலவழிக்கிறாயே நீ போய் அங்கு வீடு கட்டப்போகிறாயா என்று கேட்டாராம்
அதற்கு அவன் புகையிலையில் சிகரெட்டில் மற்றத்தேவையில்லாப் பொருளில் சிலவழிக்கிறோமே ,,அதற்கு இதில் சிலவழிப்பதில் மனம் நிறைகிறது ” என்கிறான்
எப்போதும் நெட்டிலேயெ உட்க்கார்ந்திருக்கும் இவன் இரண்டு வருடங்கள் முன்பு
லூனார் ரெஜிஸ்ட்ரியில் ” நிலவில் நிலம் ஸேல் “ என்று பார்த்தானாம் அதுவும் தவிர sinatras Fly me to the Moon ” என்பதையும் கேட்டு உடனே நிலம் வாங்க முடிவு செய்தான்
அதன் documents papers வந்ததும் வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம் .அவன் மனதள்வில்
இப்போது நிலவிலேயே வலம் வருகிறான் “நான் எப்போதும் கனவிலேயெ மிதப்பேன்
தற்போது நான் நிலவில் வீடுக்கட்டி அங்கு வலம் வருவதைப் பார்க்கிறேன் எனக்குத்
தெரியும் நான் என் வாழ்க்கையில் அங்குப் போக இயலாது என்று ஆனாலும் என் பேரன்
பேத்தி போகக்கூடும் ,,என்கிறார் ,,,,,,,,,,வாருங்கள் நாமும் ,நிலவில் நிலம்
வாங்க்ப்போகலாம்,,,,,,,,,,,,{சென்னை சிடி எக்ஸ்ப்ரெஸில் படித்தது}
அன்புடன் விசாலம்

தந்தையின் தினம

தந்தையின் தினமாக ஜூன் 17 கொண்டாடப்படுகிறது சில விஷயங்களில் தாய் ஒப்புத்துக்
கொள்ள யோசிப்பாள் ஆனால் தந்தையின் ஒப்புதல் கிடைத்துவிடும் ,அதுவும்
மகளுக்கு தந்தை மேல் அதிகப்பாசம் அன்பும் இருக்கும் இதேப்போல் மகனுக்கு
தாயின் மேல் இருக்கும் இது மனோவிக்ஞானத்தில் இருக்கும் உணமை ,,நான் ஒருதடவை
வஜ்ரேச்வரி என்ற சூடு ஊற்று {hotsprings} லோனாவாலா அருகில் என்று நினைக்கிறேன்
போக என் பள்ளியில் அழைத்துப் போனார்கள்,நானும் போக அம்மாவிடம் கேட்டேன் ,
ஊஹும் ,,,,,இரவு தங்க அனுமதி இல்லை ,சொப்பனம் கூட காணாதே என்று
சொல்லிவிட்டாள்,எனக்கு இதைப்பற்றி யோசித்து துக்கம் கூட வரவில்லை ,,மெள்ள என் அப்பாவிடம் போனேன் ,நிறைய ஐஸ் வைத்தேன்,,என் தந்தைப்
புரிந்துக்கொண்டு ஐஸ் எல்லாம் வேண்டாம் ,,உனக்கு என்ன வேண்டும் ,,என்றார் ,நான் விஷயத்தைச் சொன்னேன் ,,அவ்வளவுதான் மாலை நேரத்திற்குள்
எனக்கு அங்கு போக அனுமதி அம்மாவிடமிருந்து கிடைத்து
விட்டது ,அப்பா என்றால் அப்பாதான்,,இந்த நாளில் இது என்க்கு ஞாபகம் வருகிறது ,,,
அப்பா,,உனக்குத்தான்
என் மேல் எத்தனைப் பாசம்!
ஒருநாள்,
என் ஆசையைத்
தாயிடம் சொன்னேன் ,,
தடையிட்டாள்,,
ஆனால் நீயோ
தடையை உடைத்தாய்
என் மகிழ்ச்சிதான்
உன் மகிழ்ச்சி
கன்னிகாதானம் நாள்
என்னை நீ தாரை வார்க்க,
என் கண்களில் நீர் முட்ட
உன்னைப் பார்த்தேன்
உன் கலங்கினக் கண்கள்
இன்னும் என் நினைவில்
உன் ஊக்கமே
என் ஆக்கம்
பலபரிசுகளில்
அடைந்தப்பெருமை,
உன் அணைப்பில் தெரிந்ததே
என் உணர்வுக்கு மதிப்பு
அன்புத்தந்தையே
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன் ,,,,

அன்புடன் விசாலம்

மாயையும் ஆத்மாவும்

நாம் உலகில் மாயை என்ற வலையில் விழுந்து தான் வாழ்கிறோம் ,எத்தனைச் சொற்பொழிவுகள் கேட்டாலும் திரும்ப திரும்ப நம்மை ஆக்கிரமிக்கும் அந்தச் சக்தியை
என்ன வென்று சொல்வது நாம் எப்போது உடல் ,,ஆத்மாவைப் பிரித்துப் பார்க்க
ஆரம்பிக்கிறோமோ அப்போது இந்த மாயா என்ற பெண்ணும் நம்மை விட்டு விலகுவாள்
நாம் ஒரு சினிமா பார்க்கச் செல்கிறோம் அங்கு ஒருவரின் வீடு இடிந்து விழுகிறது ,,நாம் உடனே பதறி “ஓ காப்பாத்துங்கள் வீடு இடிந்து விழுகிறது “என்று கத்துவோமா?
இல்லையே எதோ சினிமாவில் ஓடுகிறது என்று பார்ப்போம் ,,இதே போல் ஒருவர் இறந்து
கதாநாயகி அழுதாலும் நாம் உடனே எழுந்து உதவிக்கு போகிறோமா ,,,,அது போல் நாம் நம் வாழ்க்கையில் நம்மைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் உடலுக்குப் பற்று ,பின் சொந்தப் பந்தத்தில் பற்று என்று இருக்கும் வரை மாயையும் நம்மை விடாது அந்த நிகழ்ச்சி தன் வாழ்வில் நிகழ அவர் நிகழ்ச்சி வேறு தான் வேறு என்று பிரித்துப் பார்ப்பத்தில்லை,எப்போது இந்த உடல் வேறு ஆதமா வேறு என்ற உணர்வு வருகிறதோ
அப்போது அவர் ஞானியாகி விடுகிறார் ,உடல் அழியக்கூடியது ஆனால் ஆத்மாவுக்கு அழிவு இல்லை அந்த ஞானியின் நிலைமைப் பெற ஆத்மாவை அறிய முயல வேண்டும்
அதற்கு முதலாக மனதை அடக்க வேண்டும் அது நம் கட்டுபாட்டுக்குள் வர வேண்டும்
மனம் வசமானால் எல்லாம் மாயை என்பது விளங்கும் பின் எல்லாம் ஆத்மா அந்த ஆத்மாவிற்குள் இறைவன் என்பதும் விளங்கும் இறைச்சக்தியே மெய் மற்றவை எல்லாம் பொய் எனபதும் விளங்கும், பின் எல்லோரும் சமம் என்ற நிலை உண்டாகும் ,,,

அன்புடன் விசாலம்

பிரும்மசரியம்

பிரும்மசரியம் ,, இதற்கு பொருள் மிக ஆழமாக இருக்கிறது என நினைக்கிறேன் இதில்
சத்தியம் தர்மம் வேதம் முக்கிய பங்கு வகிக்கின்றன வேதத்தில் வருகிறது
“சத்யம் வத ,,,தர்மம் சர ,,ச்வாத்யாயான்மா ப்ரமத:
எப்போதும் உண்மையே பேச வேண்டும் தருமத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும்
வேதத்தைப் பரமாத்மா என்றும் சொல்லலாம் இந்த வேதம்
ஓதுபவன் பிரும்மசாரி அவனது தனமை பிரும்மசரியம்
அது என்னதனமை ?அட்க்கம் மரியாதை பணிவு,
சத்தியம் பின் ஒழுக்கம் மனதிலும் உடலிலும் ,,,,,,,,,இதில் முக்கியமாக நுழையும் வாசல் உபநயனம் அந்தக் க்ர்மா தன்னையே சுத்தப்ப்டுத்தி கொள்ள உதவுகிறது ,,எப்படி ?
ஆம்,, காயத்திரி மந்திரத்தின் சிறப்பே இதுதான் ,மனதை ஒருமைப் படுத்தவும் பல கஷ்டங்களிலிருந்து நம்மைக்
காத்துக் கொள்ள சக்தியும் அளிக்கிறது ,உபந்யனக்
காலத்தில் உப்தேசிக்கும் இந்த மஹா மந்திரம் ஜபிக்க
ஆரம்பித்தவுடனேயே அவன் பிரமசரியத்திற்குள்
நுழைந்து விடுகிறான் இந்த மஹா மந்திரம் எல்லோருக்கும் பொது ,,,,காயத்திரியில் மும்மூர்த்திகளுக்கும் பொதுவான பிரணவம் ஒட்டுமொத்த
வடிவான் ஓம் என்ற பிரணவம் முதலில் வருகிறது அதுதான் பிரும்மாவின் முகங்களிலிருந்து வேதங்கள்
வெளிப்படுவதற்கு முன் வந்தது ,,கீதையும் வேதசாரம் தான் ,இந்த ஜபம் மூன்று வேளையும் ஜபிக்க சுத்த சித்தி
ஏற்படும் சுத்தசித்தி ஏற்பட்டால் பிரம்மசரியத்திற்கு
இடைஞ்சல் வராது பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்
நான் வேதங்களில் பிரண்வமாக இருக்கிறேன் என்றும்
நான் சந்தஸகளில் காயத்திரியாக இருக்கிறேன் என்றும்
கூறுகிறார் வேதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்
ஆனால் அக்ஷ்ரங்கள் பிழையின்றி சரியான் உச்சரிப்புடன்
சொல்ல வேண்டும் helpever hurt never “என்ற கொள்கையைப்
பிரும்மசாரி கடைப்பிடிக்க வேண்டும் நிதய் கர்மங்களைப்
பிழையின்றி சிரத்தையுடன் கடவுளுக்கு அர்ப்பணித்து பின் செய்யவேண்டும் பிருமசாரிக்கு குருவே பிதா ,,காயத்திரியே
மாதா,,,ஸ்ரீ விவேகானந்தாஜி சொல்வது போல் எந்த இடர் வந்தாலும் அதை வீரத்துடன் போராடி ஜெயிக்க வேண்டும்
வேதம் சொல்லுகிற்து ருதம் ச் ச்வாத்யாயப்ப்ரவசனே ச
சத்யம் ச்வாத்யாயப்பிரவசனேச
தபஸ்ச ஸ்வாத்யாயப்ரவசனே ச
தமஸ்ச ஸ்வாத்யாயப்பிர்வசனே ச்
சமஸ்ச :” “” “ ” “ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அக்னியஸ்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அக்னிஹோத்ரம்ச் “ ‘” ,,,,,,,,,,,,,,,,,,
அதித்யஸ்ச ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மானுஷம்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரஜா ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ப்ரஜனஸ்ச …..,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரஜாதிஸ்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
the practice of what is right and wrong as fixwed by the scrptural rules and own reflection ,,learning and parting vedas self denial elf resistant tranquillity tending the concecrated fires hospitality acomplishing what is favourable to human welfare bringing up a family ,,,,,,,,,etc ,,,,,,
பிரும்மசாரியத்தின் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க பிராணயாமம் மூச்சுப் பயிற்சி தியானம் போன்றவை மிக இன்றியமையாதவைகள்,,சத்ச்ங்க மிகவும் தேவை திசைத்
திரும்பும் வயதானதால் ந்ல்ல நண்பர்களின் சேர்க்கை மிக மிக முக்கியம் ,,,,,,,,,
என்க்கு தெரிந்த அளவு சொன்னென் அன்புடன் விசாலம்
–~–~———~–~—-~————~——-~

இரட்டைப்புலவர்

இளஞ்சூரியர் முதுசூரியர் என்று இரு புலவர்கள் 17ம் நூற்றாண்டில் இருந்தனர் ,,ஒருவருக்கு கண் தெரியாது ,,பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் ,மற்ரொருவர் நடக்க இயலாது
கால்களை இழந்தவர் ,ஆகையால் கண்தெரியாதவர் கால் ஊனமுற்றவரைத் தன் தோளில்
தூக்கிச்செல்வார் ., ப்ல தீர்த்த யாத்திரைகள் செய்து பல கோவில்களுக்கும் போகும் போது
ஒருவர் இருவரிகள் கவிதைப் பாட மற்றவர் பின் இருவரிகள் பாடி முடிப்பாராம்,
இவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த ஆமிலந்துறை என்ற ஊரில் பிறந்து வாழ்ந்தவர்கள்.
இவர்களை எல்லோரும் “இரட்டைப் புலவர் என்று அழைத்தனர் ,இவர்கள்
எழுதிய ஒரு கவிதை “தில்லைக் க்லம்பகம் “
“தென் புலியூர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலியொன் றென்நாளும் மேவுங்காண் அம்மானை
வெம்புலியொன் றென்நாளும் மேவுமே யாமாகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை !
ஆட்டைவிட்டு வேன்கை அகலுமோ அம்மானை ‘
இதில் வேம்புலி என்பர் ஸ்ரீ வியாக்கிர பாதர் என்ற சித்தர் ,,அவர் சிவபெருமானிடம் தன்னையே
அர்ப்பணித்திருந்தார் சிவ பூஜைக்கு நல்ல அழுக்கு இல்லாத மலராகப் பறிக்க வேண்டும் என்று எண்ணி இவர் கடும் தவம் இருந்து சிவனிடமிருந்து வரனும் பெற்றார்,அதில் த்ன் நகங்களில் கண்களையும் பின் மரம்
வழுக்காமல் ஏற புலிப் பாதங்கள் போன்ற கால்களையும்
கேட்டு கிடைத்தவுடன் அகமகிழ்ந்தார் ,த்ன் சிவனுக்கு தினமும் மரம் ஏறி நல்ல மலர்களைப் பரித்து அர்ச்சிப்பார்
இவரை எல்லோரும் “புலிக்கால் முனிவர் “என்பார்கள்,
சிதமபரத்தில் அந்தக் காலைத் தூக்கி நின்றாடும் நடராஜரை விட்டுப் போக மனமில்லாமல் தினமும்
அங்கேயே தங்குவாராம் ,பின் ஒரு நாள் நடராஜர் .பதஞ்சலியுடன் நடனம் ஆடுவதையும்
கண்டு களித்தாராம் வியாக்கிரபாதர் ,,,
இவரைப் பற்றித்தான் இந்த இரட்டைப் புலவர்கள்
பாடி இருக்கின்றனர் ,,,,,,

அன்புடன் விசாலம்

பட்டம் பறக்குது பார்

கொக்கு பறபற கோழி பறபற மைனா பறபற மயிலே பற “ இநத்ப்பாட்டைக் கேட்டாலே
நமக்கு ஞாபகம் வருவது ஆகாயத்தில் பறக்கும் பட்டங்களும் அதை ஒருவருக்கொருவர் கீழே வெட்டி வீழ்த்தும் செயல்களும் தான் வண்ணப் பட்டங்கள் ஆகாயத்தில் அழகாக
பவனி வருவது கண்கொள்ளாக் காட்சிதான் ,அதுவும் ஒருவர் பட்டம் மேலே பறக்க
மற்றவர் “மாஞ்சா என்று சொல்லப்படும் கண்ணாடித்துகள்கள் தடவிய கயிற்றால்
அதை அறுக்க “;போ காட்டே ” என்று வட இந்தியாவில் எல்லோரும் கூச்சல் போட
பசி தாகம் ஒன்றும் இல்லாதது போல் மணிக்கண்க்காய் இந்த விளையாட்டில் ஈடுபட்டு
களிப்பார்கள் .சிலர் இதில் பணம் கட்டுவது உண்டு ,,,
ஆனால் இதே விளையாட்டு வினையாகவும் ஆகிறது பல சேதங்களும் ஏற்பட்டிருகின்றன
மொட்டைமாடியில் தண்ணீர் டேங்கின் மேல் நின்று ஒருவன் பட்டம் விட கால் வழுக்கி
கீழே விழுந்து விட்டான் ,பட்டம் அறுந்தது உயிரும் பிரிந்தது ,,,,சில குழந்தைகள் பட்டம்
அறுந்து விழும் போது கண்மண் தெரியாமல் ஓடி அதைப் பிடிக்க முயல்வார்கள்,
அப்போது அவர்கள் கவனம் முழுவதும் ஆகாயத்திலிருந்து விழும் பட்டதிலேயே இருக்க ,,,,,நடப்பது என்ன?
விபத்து தான் ,,கார் இவர்கள் மேல் மோதி ,,,,,நேரே ஆஸ்பத்திரி தான்
சிலசம்யம் அந்தக் கண்ணாடிதூள்கள் தடவிய கயிறு சதையை அறுத்தும் விடுகிறது
சமீபத்த்தில் சென்னையில் வண்ணாரப்பேட்டையில் நடந்த சம்பவம் ,,அந்த இடத்தில் நிறைய மார்வாடிகள் வசிக்கின்றனர் ,பாபு என்ற துணி வியாபாரி அயன்புரத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்க கிளம்பினான் ,அவன் அன்பு செல்லம் இரண்டுவயது
சசாங் “,,,,,,,,,,,,,,,,தான் தனியாகப் போகாமல் அவனையும் அணைத்து எடுத்துக்கொண்டு
இருசக்கிர வாகனத்தில் கிளம்ப ,,”அதோ பட்டம் பார் என் செல்லக் கண்ணா”
என்று ஓட்டிக்கொண்டே காட்ட அந்தப் பாப்பாவும் கழுத்தத நீட்டிப் பார்க்க வந்ததே ஒரு
“மாஞ்சா ” கயிறு ,,,அறுத்தது அதன் பிஞ்சு கழுத்தை ,,,,,இரத்தம் பீரித்து கொட்ட தந்தை
செய்வத அறியாது ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான் ,பின் எக்மோர் சைல்ட்
ஹாஸ்பிடலில் சேர்க்க சசாங்கின் உயிரும் பிரிந்து விட்டது ,,வண்ணாரப்பேட்டை
முழுவதும் அன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது தந்தை அந்த ஷாக்கிலிருந்து
இன்னும் விடுபடவில்லை ,,,, தானே தன் குழந்த்தைக்கு யமனாகி விட்டோமே என்று புலம்புகிறான் இதுதான் விதியோ ?பட்டத்தின் கயிறு யமனின் பாசக்கயிறோ ?

அன்புடன் விசாலம்

பறந்து போனானே

இரண்டு வயது பாலக்ன்
தந்தை அரவணைப்பில்
இரு சக்கிர வண்டியில்
மக்ழ்ச்சியின் உச்சியில்
“அதோ பார் பட்டம் !
வால் வைத்த பட்டம்
வண்ண வன்ணப் பட்டம்
பறப்பது அங்கே வட்டம்”
ஆசையுடன் தந்தை சொல்ல
எங்கிருந்தோ வந்த கயிறு ” மாஞ்சா”
குழந்தைக் கழுத்தை அறுக்க
குறுதி பெருகி மனதைக் கீற
யமன் பட்டரூபத்தில்
குழந்தையும் பட்டம் போல்
பறந்து போனானே,,,
குற்றவாளி ஆனான் தந்தை
தத்தளித்தது அவன் சிந்தை ,,,

அன்புடன் விசாலம்

மனம் இருந்தால் வழி உண்டு

மனம் இருந்தால் வழி பிறக்கும் ,,மனதில் உறுதி இருந்து சாதிக்க நினைத்தால் எதையும்
செய்ய முடியும் ஒருவர் ,,ஸெல் போனில் பேசுகிறார் கணினியில் அனாயாசமாக
மடல் அனுப்புகிறார் ,கீ போர்டு உபயோகிக்கிறார் ,,வர்ண்ங்கள் பூசி அழகாகச் சித்திரம்
படைக்கிறார்,,,,,,,இன்னும் அவர் செய்வது பல ,,,,இது என்ன இந்தக் காலத்தில் சின்னப்
பாப்பா கூட எல்லாம் செய்கிறது,,என்கிறீர்களா? இங்கு இதைச் செய்பவர் பிறப்பிலேயே
மூளைக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு {cerebral palsy} கைகள் விளங்காமல் உடலும் வளராமல் இருக்கின்றன ,எல்லாம் தன் கால்களினால் செய்கிறார் காலின் கட்டைவிரலால்
கலரின் தூரிகை எடுத்து வர்ணம் பூசுகிறார் அவர் சொல்கிறார் “நான் வாழ்க்கையில் ஒளியைப் பார்க்கிறேன்
எப்போதும் பிரகாசமான ஒளிமயமான எதிர்காலத்தைப்
பார்க்கிறேன் “
நாம் இரண்டு கைகள் கால்கள் இருந்தும் சில சமயம்
நம்பிக்கை இழந்து விடுகிறோம்
இந்தத் தன்நம்பிக்கை உள்ள சிறந்த மனிதர்,,, நரசிம்மலு,,,,
அவர் ஆங்கிலத்தில் கூறியது என்னை மிக கவர்ந்தது
” sucess is not permanent and failure is not the end so keep trying till your victory makes history.
சித்தூரில் பிறந்த இவரை இவர் பெற்றோர் வளர்க்க கஷ்டப்பட்டு ஒரு அநாதாஸ்ரமத்தில் விட்டு விட்டனர்
அப்போது அவ்ருக்கு ஏழு வயது ஆந்தர மகிலா சபை
முதலவர் திருமதி அக்கம்மா கிருஷ்ணமூர்த்தி இவரைப்
பராமரிக்கும் நல்ல வேலையில் ஈடுபட்டு அவருக்கு தினமும் தன்நம்பிக்கை என்ற உண்வை ஊட்டி
பிசியோதரபியில் சேர்த்து ,கால்களுக்கு வலுவு கொடுத்து
எல்லாம் கால்களால் செய்யும் பழக்கத்தை உண்டுபடுத்தி
பின் எழுதுவதும் கால்களால் சொல்லிக் கொடுத்து
தற்போது தன் துணிகளையும் தைத்துக் கொள்கிறார்
அவரை அந்த அன்பு வளர்ப்புத்தாய் ஸ்பாஸ்டிக் சொசைட்டி
அனுப்பிவைத்து நல்ல மன உறுதி இருந்த்தாதால் இவர்
பத்தாவது வகுப்பும் 60% எடுத்து தேறி இருக்கிறார்
கணினியின் கோர்ஸும் முடித்து விட்டார் இவர் கால்களால் வரைந்த சித்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன திருமணிரதனம் நடிகர் சூர்யா நடிகர் அஜித் போன்றவர்கள் வந்து பார்த்தனர் எல்லோரும் அவரைப் புகழ்ந்து சென்றனர் ,எல்லாம் கால்களாலேயே
செய்து வாழ்க்கையில எதிர்நீச்சல்போட்டு பெரிய டத்தைப் பிடித்த சாதனையாளருக்கு நான் தலைக்குனிந்து வணங்குகிறேன் 32 வயதான இவர் தன் கால்களில் ஊன்றி
விட்டார் ,,, இந்தச்செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸில்
வந்திருந்தது ,,,,,,,

அன்புடன் விசாலம்

ஆதி சங்கரர்

நாடு முழுவதும் சங்கர ஜயந்தி கொண்டாடுகிறார்கள்,அவரது சரித்திரமும் எல்லோருக்கும் தெரியும் அவர் இயற்றிய விவேக சூடாமணி ஒரு இரத்னம் தான், ஆதி சங்கரர் ஸ்ம்ஸ்கிருதத்தில் “பிரச்னோத்திர ரதன மாலா என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார் ,தமிழில் அது ரதன மணி மாலை என்று சொல்லலாம். அதிலிருந்து சில நாம் இன்று ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்
எது தீமையில் முடிவது? அகந்தை
எது மகிழ்ச்சியைக் கொடுப்பது? ..நல்லவர்களின் நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது எது? வஞ்சகம்
முயற்சி செய்து பெறுவது எது? கலவி
விலை மதிப்பிட முடியாதது,,எது?,,,,,சமயத்தில் செய்யும் உதவி
துயரங்களை அழிக்க வல்லவர் யார்? அனைத்தையும் துறக்க வல்லவர்
எவைகளை அலட்சியம் செய்யவேண்டும்? தீயோர் பிறர் உடமை மற்றான் மனைவி
உலகை வெல்பவன் யார் ? சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ,,,
பார்வை அற்றவன் யார் ?கற்றபின்னும் தீமைகளிலேயே உழல்பவன் ,,,
செவிடன் யார் ? நல்லவற்றை கேளாதவன் செவிடன்
யார் நண்பன்? தீயச் செயலகளிலிருந்து நம்மைத் தடுப்பவன்
பேச்சுக்கு அழகு தருவது எது ? சத்தியம்
நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியது எவை ?நற்சிந்தனை நலொழுக்கம்
மகிழ்ச்சியுடன் ஆற்றும் பணிகள் எவை?நலிந்தோர்பால் இரக்கம் கொள்ளல் ஈதல்
சத்சங்கத்துடன் சேருதல் ,
யார் முன்னால் தெய்வம் பணிந்து நிற்கும் ? ஜீவ காருண்யம் மிக்கவனிடம் தெய்வம் பனிந்து நிற்கும் ,,,,,,,,,

அன்னை ஆர்யாம்பிகை[ பெற்ற ஒளியே
பால சங்கரனாக வந்த மூலசிவமே
துள்ளித் திரியும் பருவத்தில்
கட்டுக்களை அறித்திட்டாய்
வேதாந்த மலைச்சிகரம் ஏறி
நாத பிரும்மத்தைத் தொட்டாய் ,
ஆசை முதலை கவ்வ
“நான் “என்ற முதலை அது
அஹங்காரம் விடச் சொல்ல
நீயும் சத்தியம் செய்ய,,,
முத்லைப் பிடியும் விட
சன்யாசி ஆகி விட்டாயே ,,,
காலடியில் பிறந்தாய்
ஆசார்யர் ஆனாய்
இப்பாரதம் தவம் செய்தது
புண்னிய பூமி ஆனது

அன்புடன் விசாலம்

138வது பிறந்த நாள்

இந்தியாவில் இருக்கும் மூத்த தலைவர் ஹாபிப் மியாம் என்பவர் இன்று தன் 138வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இவர் ஜய்பூரில் இருக்கிறார் இந்தப் பிற்ந்த நாளுக்கு மத்ய ப்ரதேஷ் உத்தர் பிரதேஷ் மஹாராஷ்ட்ராவிலிருந்து பல பேர்கள் வந்திருந்து பிறந்த நாள் விழவை நடத்திக் கொடுத்தனர். லிம்கா புஸ்தகத்தில் அவர் பெயர் சேர்கப்பட்டுள்ளது,, விழாவிற்கு சர்தார் ஜஸ்பிர் சிங் தலைமைத் தாங்கினார் 139 பலூன்கள்
பறக்க விட்டனர் பட்டாசுகள் வெடிக்க வாண்வேடிக்கையுடன் நன்றாக கண்தெரிந்து அகமகிழ்வாய் கிழவர் கேக் வெட்டினார் எல்லோரும் அவர் வாயிலும் போட்டு ஹாபி birth day song பாடினர்,, எங்கும் குதூகலம்தான் அவர் இன்னும் வாழ விரும்புவதாகவும் எப்போது மேலுகத்திலிருந்து அழைப்பு வருமோ அப்போது பார்க்கலாம் என்று சிரித்தாராம் அவ்ருக்கு 6 மாதம் முன் கீழே விழுந்து கால் முறிந்து பின் பிளாஸ்டர் போட்டதில் நன்கு சேர்ந்து நட்க்க ஆரம்பித்து விட்டார் என்கிறார் அவர்து டாக்டர் ஆர் கே வர்மா ,,,,,,,நாம் 60 வயதிலேயே அலுத்துக் கொள்கிறோமே அவர் பஜ்ஜி ரொட்டி பக்கோடா
என்று எல்லாம் தின்கிறார் இது எப்படி இருக்கு ,,,,?

அன்புடன் விசாலம்

Sunday, June 24, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"--14

இந்திரா மரணம் இந்தியா மரணம்

ஒரு சாரரின் சதியினால் இரு சீக்கியர்கள் திருமதி இந்திராஜியைக் கொல்ல ஒப்புத்துக்கொண்டனர், அவர்கள் சர்தார் சத்வன் சிங், சர்தார் பெந்த் சிங் {beant sngh }அதற்காகஅவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். நம்பர் 1 சர்தர்ஜங் ரோடு நயி தில்லி
திருமதி இந்திராஜியின் வீடு, அவர் வழக்கம் போல் காலை 4 மணி எழுந்து அவரின் நித்ய வேலைகளைக் கவனித்தார். அன்று ஐரிஷ் டி வி,யிலிருந்து ஒரு படம் எடுக்க பிரிட்டிஷ் நடிகர் திரு பீடர் உஸ்தினோவ் என்பருடன் காலையில் பேட்டி ஏற்பாடாகி இருந்தது,
அவர் அதற்காக வெளியில் தோட்டத்தைப் பார்வை இட்டுக்கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாய் அந்த இரண்டு சர்தார்ஜிகள் அவர் முன்னால் வந்து அவர்
சுதாரித்துக் கொள்வதற்கு முன்பே டுமீல் டுமீல் என்று பல தடவைச் சுட்டு வீழத்தினர். ஒரு கோலியா இரண்டா... 31 கோலிகள் அவர் உடம்பில் பாய்ந்து சல்லடையாக்கியது.அப்படியே கீழே சாய்ந்தார் பலர் ஓடி வந்து இந்த இரண்டு சர்தார்களைப் பிடிககு முன்
அவர்கள் தன்னையே சுட்டுக் கொண்டனர் . ஒருவன் அங்கேயே விழுந்து இறந்தான். ஒருவன் பிழைத்துக் கொண்டான். திருமதி இந்திராஜியின் கடைசி சொற்பொழிவில் பேசியப் பேச்சு மக்கள் காதில் ஒலித்தது. " நான் என் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நம் நாட்டிற்கு உழைத்தபடி இருப்பேன் என் கடைசித்துளி இரத்தமும் பாரதத்திற்கு அர்ப்பணிப்பேன் " அவரை ஆல் இந்தியா மெடிகல் இன்சிடிட்யூட் அழைத்துச் செல்ல... போகும் வழியிலேயே உயிர் இழந்தார். மங்கீ பிரிகேட் monkey brigade என்ற குழந்தைகளின் சுதந்திர இயக்கத்தின்
தலைவியாக இருந்த சிறுபெண் இந்திரா... அப்போதிலிருந்தே நல்ல மனதைரியமும், மனோதிடமும் கொண்டு செய்கை புரிந்திருக்கிறார். ஒரு தடவை அவளது பள்ளியின் பையில் சில முக்கியமான ஒத்துழையாமை இயக்கத்தின் தாள்கள் இவர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டது, சிறு பெண்ணாய் இருந்தாலும் நடுவில் வெள்ளையர்களால்
நிறுத்தப்பட்டவுடன் மனம் கலங்காமல் "எனக்கு பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது உடனே போக வேண்டும் என்று ஒரு சலனமும் இல்லாமல் பேசியதும் அவர்கள் இவரை விட்டு விட்டனர், அந்த வீரப் பெண்மணி 31 புல்லட்டுகளால் தாக்கப் பட்டுக் கிடந்தாள் என்றால் என்ன சோகமானக் காட்சி...ஒருவராலும் நம்பமுடியாமல் ஒரேடியாகச் சூறாவளி கிளம்பியது ஊழிக்காலம் போல் தென்பட்டது. எங்கும் நெருப்பு பிண நாற்றம்,வீடுஎரிதல், என்று தொடர்ந்து கொண்டே போக கடைசியில் ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் தவறு செய்தால் அந்த ஒருவனுக்கும் அவனைத்தூண்டிவிட்டவனுக்கும் தண்டனை கிடைக்லாம் ஆனால் ஒட்டு மொத்தமாக அந்த வம்சத்தையே அழிக்க வேண்டும் என்ற வெறி ஏன் வந்தது? இது அராஜகச் செயல் அன்றோ? எத்தனைத் தாய்மார்கள் குழந்தைகள் வெந்து மடிந்தனர் எத்தனைக் குழந்தைகள் அநாதையானது? பயத்தில் சிலர் தங்கள் கொள்கையும் மீறி தங்கள் தாடி மீசையை எடுத்துவிட்டனர் தலைப்பாகையும் எடுத்துவிட்டனர் உயிர் பயம் வந்தால் கொள்கையும் காற்றில் போய் விடுகின்றன. எனக்குத் தெரிந்த டாகடர் பான் bhan
ஒரு சர்தார்ஜி, ஒரு மாதம் கழித்து அவரிடம் போனேன் அவர் தான் கதவைத் திறந்தார் நான் அவரிடமே "டாக்டர் பானைப் பார்க்க வேண்டும்"என்றேன். அவர் "நான் தான் பான் விசாலம் பஹ்சான் கரனா முஸ்கில் ஹை க்யா?"{அடையாளம் தெரிவது கஷ்டமாக
உள்ளதா?" } என்றார் ஆம் தாடி இல்லை மீசை இல்லை பகடி இல்லை ?ஒரு ஹிந்து போல் காட்சி அளித்தார்.
கொஞ்சம், கொஞ்சமாக வெறியர்களின் ஆட்டம் அட்ங்கியது பிரதமரின் சவ அடக்கத்தின் நாள் குறிப்பிட்டார்கள். ஊரடக்கம் சட்டமும் வந்தது. அப்பப்பா என்ன ஜன சமுத்திரம்? இந்தியாவே திரண்டு வந்திருந்தது, மக்கள் கதறினார்கள் அந்தக் காட்சி இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது நவம்பர் மூன்றாம் தேதி ராஜ்காட்டில் அவர் நிரந்திரமாக நித்திரை கொண்டார். பெயர் சக்திஸ்தல் என்று வைக்கப்பட்டது .
அவர் செய்த நல்ல காரியங்கள் கரீபி ஹடாவோ என்ற ஏழ்மையை அகற்று" வெளிநாடுகளுடன் நட்புக்கரம், அணுசக்தியின் பரிசோதனை, ராஜஸ்தானில் போக்ரான் என்ற இடத்தில் சிரிக்கும் புத்தர் laughing budha என்ற பெயரில் நடத்தியது.
நாட்டின் பொருளாதாரம், கௌரவம் உயர்த்தினது, ஐந்தாண்டு திட்டங்கள் செயலானது ஆகியவைகள்.
செய்த தவறு என்று மக்கள் கூறியவை.. எமெர்ஜென்சி கொண்டு வந்தது, பல முக்கியத்தலைவர்களை சிறையில் வைத்தது, ஆபிரேஷன் பிளூ ஸ்டார் என்று சீக்கியரின் புனிதத் தங்கக்கோயிலைத் தாக்கியது, கட்டாய கருத்தடுப்புச் சட்டம் கொணர்ந்தது.

இந்திராவின் மரணம் இந்தியாவின் மரணமாக ஆனது. அவருக்குப்பின் இதுவரை ஒரு சரியான ஆட்சி இதுவரையில் அமையாதது நமது துரதிர்ஷ்டம்தான்.

திரும்ப நாட்டின் நிலைமை ஒரு விதமாகச் சரயானது எங்கள் வீட்டு சர்தார்ஜியின் பேத்தி என் மகனுக்கு இன்றும் ராக்கி கட்டுகிறள், அந்த மடி ஆசார மாமியும் மாறி எங்கள் கட்சியுடன் சேர்ந்து விட்டாள். ஒரே குடும்பம் ஒரே இந்தியன் நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் பாரத சமுதாயம் வாழ்கவே! எல்லா மொழிகளும் இனியவையே!
எம்மதமும் சம்மதமே!
அன்புடன் விசாலம்
**********முற்றும் *********

என் அன்பர் திரு ஜயபரதன் அவர்கள் என் தில்லியின் இந்த அனுபவங்களை எழுத ஊக்கம் கொடுத்து எழுத சொன்னார் அவரால் ஒரு 14 பாகங்கள் எழுதிவிட்டேன் இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன் விசாலம்
******************************

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-13

இப்போது இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தைப் பார்ப்போம், இதில் சம்பந்தப்பட்டது நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராஜி இநதக் காரியம் செய்தது தப்பா? அல்லது சரியா?இப்படித்தான் செயய வேண்டும் ,,என்று ஒரு சாரார்,,,இதை எப்படி செய்ய முடியும்?
என்று இன்னொரு சாரார், சிலர் இந்தச் சம்பவத்தினால் மனம் கொதித்தனர், அவர் செய்தது தவறு என்று அடித்துச் சொன்னார்கள். இதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள நாம் சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஒரு நாள்... ஒரு திடுக்கிடும் சம்பவம்... நடந்த இடம் பஞ்சாப். ஒரு திருமணப்பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட
அதில் ஆயிரமாயிரம் கனவுகளுடன் மணமகன் மணமகள் அமர்ந்திருக்க திடீரென்று தபதப என்ற ஒரு கூட்டம் துப்பாக்கியுடன் நுழைந்தது, என்னவென்று யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் டப்டப என்று எல்லோரையும் சுட்டு வீழ்த்தியது பின் ஓடிப் போனது, மணப்பந்தல் சோகப்பந்தல் ஆனது, பூக்கள் சிதறிக்கிடந்தன, இரத்தம் ஆறுபோல் ஓடின மணமகன் மேல் மணமகள் உயிரில்லாமல்.. கையைப்பிடித்தபடி இறந்து கிடந்தாள். இந்தச் சோகக்காட்சி நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டது. எல்லோருக்கும் ஒரேஅதிர்ச்சி! அவர்களப்பற்றி விஜாரித்ததில் சில சர்தார்ஜியின் கூட்டம் தங்களுக்கு காலிஸ்தான் என்றத் தனி பிரிவு வேண்டும் என்றும் அவர்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள் என்றும் தெரிய வந்தது இதில் ஆயுதங்கள் கொடுத்து உதவுவது பாகிஸ்தான் என்றும் தெரியவந்தது ஆனாலும் அரசியல்வாதிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நின்றது வியப்புத்தான். அன்று ஆரம்பித்த இந்த அரஜகம் தொடர்ந்து நடந்த்து கொண்டே வந்தது. இதில் பங்கேற்றிருந்தச் சிலர்... அரசியல்வாதிகளுக்கும் சிம்ம ஸ்வப்பனமாக இருந்த்தார்கள். 1983ல் திரும்பவும் பஞ்சாபில் நிறையக் கொலைகள்
நிகழ ஆரம்பித்தன. 1984ல் கணிசமாகக் கொலையின் எண்ணிக்கை ஏறியது. ஒரு பஸ்ஸில் பிரயாணித்த யாவரும் கொலை செய்யப்பட்டனர். அதில் குழந்தைகளும் பெண்மணிகளும் இருந்தனர். நிலைமை மிகவும் முற்றிப்போயிற்று, பல பஸ்கள் எரிக்கப்பட்டன. அந்த நேரம்தான் பசுமைப்புரட்சி green revolution செயற்பட ஆரம்பித்தநேரம்
இங்குப் பசுமைக்குபதிலாக இரத்தப்புரட்சி தான் எங்கும் தெரிந்தது. இதெற்கெல்லாம் காரணம் ஒரு சீக்கிய மதகுருதான் பெயர் ஜமால்சிங்

பிந்த்ரேவாலா, அவர் மதகுருவாக இருந்ததால் ஒருவருக்கும் அவர்
மேல் சந்தேகம் வரவில்லை, புனிதசீக்கியக் கோவில் அமிருத்சரசில், இருந்தது அதைத் தங்கக்கோவில் என்றும் சொல்வார்கள், இந்தப் பிந்த்ரேவாலாஜி நிறைய ஆயுதங்களை வெடிகள், பாம்கள் எல்லாம் அங்கு மறைத்து வைத்திருந்தார்.தொண்டர்கள் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டனர். யாராவது பிடிபட்டால் சயனைட் உதவியினால் உயிரை மாய்த்துக் கொண்டனர். அத்தனை விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாகப் பல விஷயங்கள் அம்பலமாயின. இது திருமதி. இந்திராஜியின் காதிலும் விழ சீறிக் கிளம்பினாள் அன்னை, நாடு இதுபோல் அவதியாவது பொறுக்க முடியாமல் இதற்குத் தீர்வு காண அல்லும் பகலும் யோசித்து பஞ்சாப் தங்கக் கோவிலை முற்றுகை இட கட்டளை இட்டாள். " ஆபிரேஷன் பிளூ ஸ்டார் "என்ற பெயரில் மேஜர் ஜனரல் குல்தீப் சிங் பிரார் என்றவரின் தலைமையில் 1984ல்
சீக்கியரின் தங்கக் கோயில் முற்றுகைஇடப்பட்டது பல கமெண்டோஸ்கள் அனுப்பப்பட்டனர் பல நாடகள் சணடை தொடர்ந்தன அமிருத்தசரஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டன மற்ற நாடுகளிலிருந்து முழுவதுமாக

தனித்து விடப்பட்டது. செய்தித்தாளோ டிவியோ ஒன்றும் இல்லை, என்ன நடக்கிறது என்றே தெரியாமல்இருள் சூழ்ந்து கொண்டிருந்தது . ஐந்து மாதங்கள் முடிய யுத்தம் முடிந்து பிந்த்ரேவாலாஜி பிடிபட்டார். கோவிலுக்குள் ஒரு பாதக்மோ ஒரு வித சேதமோ வரவில்லை, ஆனாலும் சீக்கியர்கள் மனம் கொதித்தனர் அகால் தக்த் என்ற இடம் சிறிது சேதமானது கோவிலுக்குள்ளிருந்து பல வித ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முடிவு என்ன வென்றால் ஒரு கட்சியின் மனக்கசப்பை திருமதி இந்திராஜி பெற்றுக் கொண்டார். சர்தார் குஷன் சிங் "{ illistrated weekly editor} தமக்குக் கிடைத்த பத்மபூஷண் பட்டத்தை நிராகரித்தார். சர்தார் அமிருதசிங் வேலைவிட்டு நீங்கினார் எரோப்ளேன் ஹைஜேக் ஆனது திருமதி இந்திராஜீயைக் கொல்ல சதித்திட்டம் தொடங்கியது...

..........வளரும்
அன்புடன் விசாலம்

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-12

என்னைக் கவர்ந்த இந்திரா அம்மையார்:

இத்தனை வெறிக்கும் காரணம் யார்? ஏன் அந்த அம்மையாரைச் சுட வேண்டும், அதுவும் ஒரு வாசற்காப்போன், இது தெரிய நாம் திருமதி இந்திரா அம்மையாரின் ஆட்சிக்காலத்திற்கு போகவேண்டும். "இந்திரா" பெயரிலேயே இந்தியா இருப்பது போன்ற பிரமை வீரமும் மனதிடமும் தீரமும் கொண்ட பெண்மணி.. ராஜ வம்சக் களை முகத்தில்...
மேடைப் பேச்சு கடல் மடைத் திறந்த வெள்ளம் போல் அப்படியே கொட்டும் கடைசியில் "ஜய்ஹிந்த்"என்ற முழக்கம் இன்றும் என் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. மும்முறை அவர் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்று நாட்டை உயர்வடையச் செய்தார்.
அவருக்குத்தான் எத்தனை மனவலிமை! ஒன்று நடத்திக்காட்டுவேன்" என்று சொல்லி விட்டால் எப்படியேனும் அந்தக் காரியத்தை நடத்தி முடிப்பார். 1965ல் முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் {தாஷ்கெந்த் மீடிங்} நாட்டையே குலுக்கியது அவர் பின் வந்த ஸ்ரீமதி இந்திரா காந்தி மிகுந்த
அனுபவசாலியாக திறமையுடன் செயல் பட ஆரம்பித்தார். அவருக்கு உதவியது அவர் தந்தையாக ஸ்ரீ ஜவஹர்லால்ஜி அமைந்தது, அவருடைய கொள்கைகளைக் கொண்டு தேசபக்தி மிக சிறந்த அறிவாளியாக,
பெரிய இலட்சியவாதியாக, நாட்டை மேலும் வளரச் செய்து உலக நாடுகளில் நம் நாடும் ஒரு முக்கிய பங்கு எடுக்க மிகவும் உதவினார். ஸ்ரீ ஜவஹரின் அறிவுத்திறன் இவரிடமும் பொதிந்து கிடந்தது. சாமர்த்தியமும் மனதைரியமும் எதையும் தாங்கும் சக்தி கிடைத்தது. சைனா போர், பாகிஸ்தான போர் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டி உலக நாடுகளிலேயே போற்றக்கூடிய ஒரு பெண்மணியாகத் திகழ்ந்தார். இதனால் இந்தியாவின் புகழும் கௌரவமும் உயர்ந்தன. இப்படி உயர்த்திவிட்டப் பெருமை அம்மையாரையே சேரும் ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தப்புகளைச் செய்து 1977ல் தோற்கப்பட்டார். அவர் செய்த நல்ல காரியம் சிலருக்கு தவறாகப் பட்டது அதில் குடும்பக் கட்டுப்பாடு முக்கியமான ஒன்று. மக்கள் தொகையைக் குறைக்க
குடும்பக் கட்டுபாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இரு குழந்தைகள் மேல் இருப்பவர்கள் எல்லோருக்கும் "நஸ்பந்தி" என்ற அறுவைச் சிகிச்சை கட்டாயப் படுத்தப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் கருகலைப்பு சர்வ சாதாரணமாக ஆனது இதனாலும் தவறான செயல்கள் பெருகின. அவசரத்தில்
டாகடர் சரியாக இல்லாமல் தவறான சிகிச்சைசெய்யப்பட்டு பலர் உடல் நலம் குன்றி அவதிப்பட்டனர். ஸெக்ஸ் சர்வ சாதாரணமாகியது, இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

இரண்டாவதாக இவரது கோபம், பிடிவாதக் குணம் இவரைக் கவிழ்த்தது. இவரின் அஹங்காரம், தன் உத்தரவை
எல்லோரும் கேட்க வேண்டும் என்ற கொள்கை எல்லாம். இவரது தோல்விக்கு காரணமாயின.அவரிடம் பல நல்ல அம்சங்கள் இருந்தன, வீர மேடைப்பேச்சு , வெளி நாட்டவர்களிடம் நட்புக்கரம், எத்தனை இடர் வந்தாலும் உடனே பதறாமல் செயலெடுக்கும் திறமை ஐந்தாண்டு திட்டங்கள் வகுத்து நாட்டை ஓங்குதல், பாரதகலாசாரத்தை வளர்த்தல், கலைஞர்களைப்
பாராட்டுதல், மலைச்சாதி மக்களுடன் கூடி இழைதல் நடனம் ஆடுதல் அவ்ர்களுக்கு கல்வி ஆஸ்பத்திரி போன்றவை வழி வகுத்து கொடுத்தல்

போன்ற நல்ல அம்சங்கள் இருந்தும் அவரது சில செயல்களால் தேர்த்தலில் தோற்று போகும் படி ஆயிற்று.
அடுத்த செய்தது சரியா தவறா, என்று சிந்திக்கவைத்த செயல் "ஆபிரேஷன் ப்ளூ ஸ்டார் ' இதை அடுத்த பாகத்தில் காண்போம்...

வளரும்...

அன்புடன் விசாலம்

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-11

நான் நினைத்தது நடந்தே விட்டது,ஒரு நிமிடத்திற்க்குள்" தமதம" என்று ஒரு கூட்டம் உள்ளே நுழைந்தது. பலர் அதில் வாசலில் எழுதி இருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்து விட்டு "டேய் கிஷ்ன்சிங்கா.. வாடா வெளியே நாயே! என்று வாய்க்கு வந்தது எல்லாம் பேசி கத்த ஆரம்பித்தனர். கையில்.. கத்தி கோடாரி இருந்தன. அப்பப்பா இந்த இந்துக்கள் எப்படி இத்தனை வெறியர்களாக மாறினார்கள்? நம்பவே முடியவில்லையே..வாசலில் அவரது சைக்கிள் இருந்தது, தவிர ஒரு பழைய மாடல் காரும் இருந்தது, ஒருவன் பீமன் போல் அலக்காக அந்தச் சைக்கிளைத் தூக்கினான் ஒரு சுற்று சுற்றி கீழே போட்டு காலால் மிதித்தான் எல்லோரும் ஹாய் ஹாய் என்று முழக்கம் இட, ஒருவனது கண்கள் அந்தக் காரின் பக்கம் சென்றது ,நான் மாடியில் சன்னல் வழியாக மறைந்து நின்று பார்த்தேன். மனது பக் பக் என்று இருந்தது ,"கதவைத் திறடா மடையா" பேவ்கூஃப்...புட்டா buddhha
நீசே ஆஜா தூ " என்று ஹிந்தியில் கத்தினர். என் கணவர் பொறுக்க முடியாமல் கீழே போனார் அவர்களிடம் "ஏன் கத்துகிறாய்? இங்கு இருக்கும் சர்தார்ஜி குடும்பத்துடன் ஊர் போய்விட்டனர்"என்றார் "நாங்கள் மதராசி தான் இங்கு இருக்கிறோம் "
ஹரே ஹட ஜா என்று ஒரு தள்ளுத்தள்ளி உள்ளுக்கு வந்துவிட்டனர்
நான் முன்பு ப்ளான் போட்டபடி அந்த பாத்ரூமுக்குள் சர்தார்ஜி அவர் மனைவியுடன் உள்ளே புகுந்துக்கொண்டேன் குழாயை வேகமாகத் திறந்தும் விட்டேன் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன் மனது படபட் என்று அடித்துக் கொண்டது. பாத்ரூமில் குளிக்கும் போல் பாவனைச்செய்து நல்ல மைசூர் சாண்டல் சோப்பைக் குழைத்தேன் நல்ல மணம் வீசிற்று... உள்ளூர ஒரு பயம் தான். மனம் துர்கே எனக்கு தைரியம் கொடு! என்று வேண்டியது முருகா இந்தக் குடும்பத்தைக் காப்பாற்று! உத்தர ஸ்வாமி மலையில் வந்து அபிஷேகம் செய்கிறேன் என்று முருகனைக் கூப்பிட்டேன். தமிழ் பாட்டு பாட ஆரம்பித்தேன் அவர்களில் இருவர் பாத்ரூமிற்கு வாசலில் வந்து கதவைத் தட்டினார்கள், நான் "மை ஹூன் ,,,மதராசி ,,,, ,,ஆப் கோன் ஹை? மை தோ நஹா ரஹீ ஹூன் "சலியே ச்லியே" "{ நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் யார்? போங்கள், கீழே... என்றேன். "அச்சா அச்சா " என்று சொல்லியபடி கிழே சென்று விட்டனர். அங்கே போய் "அந்தர் கோயி நஹீன் ஹை,,,"உள்ளே ஒருவரும் இல்லை, என்றனர்
அப்பா... முருகா என் வயிற்றில் பாலை வார்த்தாயே...கண்களில் கண்ணீர் பெருக அந்தச் சர்தாரினியை அணைத்துக்கொண்டேன். வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி மனதில் வந்தது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சர்தார்ஜி அப்பாவும் என் தலையைக் கோதிவிட்டு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மிகவும் சின்னக் குரலில் "சத்ஸ்ரீ அகால் " என்று தன் குருவுக்கு நன்றியைத் தெரிவித்தார். நானும் கூடசேர்ந்து கொண்டேன்.
அங்கு மடி பார்க்கும் மாமி வீட்டிலும் அவர்கள் நுழைய அந்த மாமி "போங்கடா கீழே இங்கு நானும் என் மகனும் தான் இருக்கிறோம் "பெரிசா சோதனைப் போட வந்து விட்டாய் என்று தமிழில் சொல்ல அவர்கள் ஒன்றும் விளங்காது சிரித்துக்கொண்டே அந்த ரஜாயின் மேல் அமர்ந்தார்கள். மாமி பிளாஸ்க்கில் இருந்த சாயை அவர்களுக்குக்
கொடுத்து மனதைத் திசைத்திருப்பி பின் கீழே அனுப்பி விட்டாள் என்ன சமயோஜன புத்தி? அவர்கள் போனதும் கதை மூடிவிட்டு ரஜாய்ப் பெட்டியின் கதவைத் திறக்க அதிலிருந்து மகனும் மருமகளும் வெளியே எழுந்து வந்தனர். பாவம் ஒரு மணி நேரம் அந்தப் பெட்டிக்குள்..என்றால் எத்தனைச் சிரம்மாக இருந்திருக்கும் இந்த ஒரு நாள் மட்டும் இல்லை சுமார் பத்து நாட்கள் அவர்களை உள்ளேயே வைத்துக்கொண்டு இட்டிலி காபி சாம்பார் பாத் என்று கொடுத்து உதவினோம் அவர்கள் வீட்டிற்க்குள்ளேயே சிறைப்போல் இருந்தனர்.

வளரும் அன்புடன் விசாலம்

Sunday, June 3, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-10


இந்திரா மரணம்... இந்தியா...மரணம்!

எத்தனை இந்து சீக்கியர்களிடம் சகோதரர்களாக பழகி வருகின்றனர். இதே போல் சீக்கியர்களும் இந்துக்களிடம் அன்புடன் தான் பழகி வந்தனர், இரண்டாம் தேதி, காலை... ட்ரிங்...டிரிங்... என் டெலிபோன் அலறியது, "ஹலோ" நான் பேச ஆரம்பிப்பதற்குள் என் தோழி அவசரமாக செய்தி தெரிவித்தாள் "விசாலம் ஒரு கூட்டம் உன் வீட்டு முதல் ரோட்டில் கிருஷ்ணா மார்கெட் அருகில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்த ரகளை உங்கள் ரோடுக்குத்தான் எனென்றால் உன் தெரு முழுவதும் சர்தார்ஜி குடும்பம் தான், ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்" எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.என் வீட்டு வாசலில் கொட்டையாக "சர்தார் கிஷன் சிங்" என்ற வர்ணப்பலகை அடிக்கப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பார்த்து இன்னும் கவலை அதிகமாயிற்று, கண்டிப்பாக அவர்கள் உள்ளே வந்து கொலைதான் நடக்கும் என்று பயந்தேன். எப்படியேனும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மனதில் ஒரு சக்தி பிறந்தது. நேரே ஷீரடி பாபாவின்படத்தருகில் போய் பிரார்த்தனை செய்தேன்,

"பாபா என் சர்தார்ஜி அப்பாவின் குடும்பத்தைக் காப்பாற்று" ஒரு ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைச் செலுத்தினேன். எனக்கு இதில் மிக நம்பிக்கை உண்டு. பின் சர்தார்ஜியிடம் போய் நானும் என் கணவரும் அவரிடம் இது பற்றி சொன்னோம், பின் அவர்களை ஒளித்து வைக்க பல யோசனைகள், எங்கே ஒளித்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று தலையைப் பிய்த்துக் கொண்டோம். பின் நான் அவர்களை என் குளிக்கும் அறைக்குள் அனுப்பி அந்தக்குண்டர்கள் வந்தால் நானும் குளிப்பது போல் குளியலறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ள தீர்மானித்தேன், நான் குழாயைத் திறநது குளிப்பது போல் ஏமாற்ற திட்டம் இட்டோம். மாடியில் இருந்த திரு சுந்தரராமனின் தாய் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த மடி ஆசாரம் பார்க்கும் மாமியின் மனமும் பரிதவித்தது அவசரமாகப் படி இறங்கி கீழே ஓடி வந்தாள் "விசாலம் இப்போது கூட நான் உதவலேன்னா நான் மனுஷியே இல்லை" என்று சொல்லி அவர்கள் வீட்டுக்குள் போய் அவர்கள் வீட்டு பெண் மாப்பிள்ளை இருவர் கைகளையும் பிடித்து தமிழில் "வாங்கோ என் வீட்டிற்கு நான் காப்பாற்றமாட்டேனா நன்னாயிருக்கே... என்று கூறி அவர்களை அணைத்தாள். மடி ஆசாரம் அங்கு மறைந்தது அன்பு அங்கு பிறந்தது நானும் அவர்களுடன் மாடி ஏறி ஓடினேன், ஜல்தி... ஜல்தி... என்று சொல்லியபடியே அவர்களை மறைக்க இடம் தேடினேன் கிடைத்தது. பெரிய ரஜாய் பெட்டி அந்த ரஜாய் பெட்டிக்குள் அமர யோசனைக் கூறிவிட்டு கீழே வந்தேன். அந்த மாமி அவர்களை அந்தப் பெரிய ரஜாய் பெட்டிக்குள் இறங்க உதவி செய்து பின் மூடிவிட்டு மேலே பழைய புடவைகளைப் பரப்பினாள்...

....வளரும்

அன்புடன் விசாலம்

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-9


இந்திரா மரணம்... இந்தியா மரணம்..!

30 தேதி மாலை...

ஸ்ரீமதி இந்திராகாந்தி பாரதப் பிரதமர் அவர்களின் மரணம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டது, எல்லா ஹிந்துக்களும் பித்துப் பிடித்தாற் போல் செயல்கள் செய்ய ஆரம்பித்தனர், அன்பு பாசம் ஒருவர் மேல் அதிகமாக அது பிnனால் வெறியாகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அந்த வெறியில் எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்ற விவரமே புரியாமல் பல இராட்சஷ வேலைகள் செய்ய
ஆரம்பித்தார்கள். மூளையில் யோஜனை செய்யும் தனமையே இழந்து விட்டார்களோ?
ஒன்றாம் தேதி காலை பூகம்பமாக இருந்தது இப்போது எரிமலைக் குழம்பு போல் கக்கியது கூட்டம் கூட்டமாக ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு பல கடைகளைச் சூரையாடத்தொடங்கினர், "தைமூர் என்பவன் பலதடவைகள் படை எடுத்து சூரை ஆடியது இப்படித்தான் இருக்குமோ? பஸ்கள் எரிந்தன, சர்தார்ஜி கடைகள் எரிக்கப்பட்டன என்வீட்டு அருகில் இருக்கும் ஒரு கடை இரத்தினகம்பளங்கள் விற்கும் வியாபாரி அவன்கடையில் ஒரு கூட்டம் போய் அவன் தலைப்பாகையை இழுத்து அவனை அடித்து பின் அவனது விலை உயர்ந்த கார்பெட் எல்லாம் நடு ரோடில் விரித்து அதில் நடந்தனர். சிலர் அதைத் தங்கள் வீட்டிற்கும் எடுத்து போயினர் சில விஷயமே புரியாத நடைபாதை திருடர்கள் இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அந்த அரசியல் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு புரியாமலே கோஷம் போட்டு நிறைய கொள்ளை அடித்துச் சென்றனர். பல சர்தார்ஜிகளின் குடும்பத்திற்குள் நுழைந்து குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் வீட்டிற்க்கு நெருப்பு வைத்தனர். எங்கும் அழுகை சத்தம், எங்கும் அவலம், அப்பப்பா... அழிவுக்காலம் என்பது இப்படித்தான் இருக்குமோ..? வயிற்றில் ஒரு சங்கடம்...
நான் பால்கனி பக்கம் வரவே தயங்கினேன். என் சர்தார்ஜி அப்பாவுக்கு என்ன நடக்குமோ என்று நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தது, திடீரென்று "சர்தார்ஜி ஹாய் ஹாய்,, என்ற சத்தம் வந்தது, மெள்ள பால்கனி கதவைத் திறந்துப் பார்த்தேன், கீழே ஒரு கூட்டம் என்னைப் பார்த்து கையை ஆட்டியது அவர்கள் கையில் ஒரு சாக்கு நிறைய விடியோ கேசட்டுக்கள் இருந்தன. அப்போது தான் இந்த வீடியோ கேசட்டுக்கள் வர ஆரம்பித்தன. ஒன்று 400 ரூபாய் இருக்கலாம், நான் திரும்பி உள்ளே வரப் போனேன் "யே லே லோ பஹன் என்று என் பால்கனியில் மூன்று கேசட்டுக்கள் விட்டு எறிந்தார்கள். என் கணவர் "அங்கே என்ன வேடிக்கை உள்ளே வா" என்ன சத்தம் கல் விழுகிறதா?" என்று அவரும் வந்து பார்த்தார் நல்ல கேசட்டுக்கள் அதில் குருதத்தின் "பியாசா தேவானந்தின் கைட் guideபடமும் இருந்தன. என்னைப் பார்த்து இன்னும் வேண்டுமா
என்று வேறு கேட்டனர் பாவம்.. யாருடைய கேச்ட்டுக்களோ, பகல் கொள்ளை, அதில் தானம் வேறு அந்தக் கேசட்டுக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பல தங்கக் கடைகள் சூரையாடப்பட்டன, ஒரு மெய்க்காப்பாளன் தன் சுய நலத்திற்கு செய்த தவறுக்காக முழு சீக்கிய குடும்பத்தையும் அழிக்கும் மனம் ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? பிரதமர் மேல் வைத்த பாசமா? உணர்ச்சிகளின் அளவுக்கு மீறி பெருக்கா? ஒரு வீட்டில் ஒரு பையன் செய்த குற்றத்திற்காக அவன் குடும்பதையே அழிப்பது என்ன நியாயம்? அத்துடன் சில ரோடு ஸைட் ரோமியோக்கள் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பல பெண்களின் கற்பையும் அழித்தனர், பின் கொன்று விட்டனர். போலீஸின் கட்டுப்பாடு இருந்தும் அடக்க முடியாத நிலை வந்தது குடிசைகளில் இருக்கும்
சில சோம்பேறி கணவர்கள் தங்கள் மனைவியின் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சீட்டு, குடி என்று காலத்தைக் கழிப்பவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் ஒரு லட்டு மாதிரி, அவர்களும் சர்தார்ர்ஜி" ஹாய் ஹாய் "என்று கத்திக் கொண்டு கிடைத்ததைச் சுருட்டி கொண்டனர். சர்தார்ஜி பள்ளிகள் கூட விடவில்லை, எல்லாம் தீயிற்கு இரையாயின,
இவர்கள் மனதில் இவ்வளவு வெறுப்பா இங்கு தான் அடங்காத வெறியைக் கண்டேன்.
நான் அவ்ர்கள்: மனதில் இவ்வளவு நெருப்பா? இவ்வளவு விஷமா கக்க?சின்ன சீக்கிய பாலர்கள் பாவம்,அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த பாலகர்களின் தாய் என்ன செய்தாள்? எத்தனைக் குழந்தைகள் அநாதை ஆனார்கள்? எத்தனைப் பேர் கணவனை இழந்தார்கள்? ஐயோ என் மனது வெடித்துப் போனது எத்தனை இந்து சீக்கியர்கள் சகோதரப் பாசத்துடன் பழகி வந்தனர், நட்புக்கே இலக்கணமாகவும் திகழ்ந்தனரே...
என்வீட்டு சர்தார்ஜி அப்பா குடும்பதை எப்ப்டி காப்பாற்றினோம் என்பதையும் சொல்கிறேன்

.....வளரும்

அன்புடன்...விசாலம்