Monday, July 21, 2014

புலிக்கொடியின் மாட்சி

முன்னுரை   --  என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம்   தஞ்சை  பெரிய கோயில்.   அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில்  . கல்லிலே கலை வண்ணம் கண்டேன்  என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ  சோழன்  . அவர்து சரித்திரத்தை
ஒரு கவிதைப்போல் எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன் . எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன் அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது   கவிதை  கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் டெலிட் செய்யாமல் படிப்பீர்கள் இல்லையா?


அது  ஒரு பொற்காலம் ,,,,,,
சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
புகழ்  உச்சி  ஏணியில்  புலிக் கொடி நாட்டி,
"அருள் மொழி வர்மனாம்  " அருளைக் காட்டி,
சிவனுடைய அருள் முழுமை பெற்று,
  ஒவ்வொரு மூச்சிலும்  சிவனே நின்று,
கண்டறியாத அற்புதமாய்  நின்றது தஞ்சைக்  கோவில்
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
 
கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
பிரும்மாண்ட சிவலிங்கம் அருள்  புரியும் கோயில்
அவனைப்பார்க்கும்  நந்தியோ ,மனதை அள்ளும் கோயில்
 
மலர் மணக்கும் கோவில்கள்
மா பெரும்  விழாக்கள்.
 ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும்  கரங்கள்,
 சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.
 
அது ஒரு பொற்காலம்,
மக்கள் மகிழ்காலம்
அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன்
வாழியவே
 
 
 
ராஜகேசரி வர்மன்   நீதானே
மும்முடி சோழன்  நீதானே,
சிவபாத சேகரா நீதானே
ஸ்ரீ ராஜராஜனும்  நீதானே
சிவனருள் பெற்றவன்  நீதானே
தமிழ் நாட்டின்  பெருமையும் நீதானே
அது ஒரு பொற்காலம் மக்கள் மகிழ் காலம்
அருள் மொழி வர்மன்  திரு ராஜராஜன்  வாழ்கவே!
எங்கும்  புலிக்கொடியின்  மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
அருளோங்க, ஒளியோங்க   மகிழ்வோங்க, வாழ்வோங்க
பொருள் வளம் ஓங்க, புலமை எழில்  ஓங்க  சிவ நாமம்  ஓங்க
மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
நாற்றிசையும்  வெற்றிப் பேரிகையும்  ஓங்க சீரும் சிறப்புமோங்க,
சொற்சுவையும் பொருட்சுவையும்  ஒருங்கே ஓங்க
அயல்  நாட்டிலும் செந்தமிழ்   ஓங்க,
வேற்றுமை நீங்கி  ஒற்றுமை  ஓங்க  
கலைகளும் சுடர் விட  காவியமும்  பெருகிட,
தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
அரசில் புதுமைகள்  தின்ந்தோரும் தோன்றிட,
வைணவமும்  மதித்து  திருமால் கோவிலும் எழுப்பிட,
'சூடாமணிவிஹாரா" என்ற புத்தக் கோவிலும்  வந்திட,
கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ
அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம் 
அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !
 
 
தஞ்சை திருச்சி  முதல் ஆட்சி ,
வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
பாஸ்கரவர்மனும்  தோல்வி கண்டான்,
அமரபுஜங்கனும்  மாட்டிக் கொண்டான்,
கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
கப்பற்படைகள்   தோல்வி அடிக்க,
வில்லினம்  துறைமுகம்  சோழன்  கையில் 
எல்லா துறைமுகம்  அவன்  வசத்தில்
கங்குவர்  நொலம்பர்   யாவரும்  பணிய,
வேங்கி, குடகு  எல்லாம்  அவன்  கீழ்,
தக்கினதிலும் "சாலுக்யா
தோல்வி் கண்டான்  "சத்யஸ்ரயா '
சேர பாண்டியன்  உடன்படிக்கை,
இலங்கை  அரசனுக்கு உதவும் கை,
சீறி எழுந்தது புலிக்கொடி
எங்கும்  பறந்தது  வீரக்கொடி ,
அரசன் மஹீந்தரன்  தோல்வி,
சோழனின்   கொடிக்கு வெற்றி
அது ஒரு  பொற்காலம்
மக்கள் மகிழ்ந்திடும் காலம்
அருள்மொழிவர்மன் "ராஜராஜன்"வாழியவே
 
 
 

மகளிர் தினம்

ஒரு சம்பாஷணை 
வயதான தம்பதியர்.

"என்ன கமலா  பெரியவா சீரியல் ஆரம்பிச்சுடுத்தா?'
"ஆமாம் இப்பதான் ஆரம்பிச்சுது. அதான் பாக்கறேன்'


"சரி   ஏந்துபோய் சூடா காப்பி கலந்துண்டு வா,"

" சத்த இருங்கோ இப்பத்தானே விளக்கேத்திட்டு உட்க்காந்தேன்'

" என்ன பதில் பேசறே . போய் எடுத்துண்டு வாங்கறேன்'

"இன்னிக்கு மகளிர் தினம் தினமலர்ல பாத்தேன் . இன்னிக்காவது எங்கிட்ட கத்தாம கோச்சுக்காம இருக்கப்டாதா? எனக்குன்னு என்னிக்குத்தான் சுதந்தரம் கிடைக்குமோ? உம் ராமா ராமா "
"என்ன முணுமுணுக்கறே . மகளிர் தினம்னா ஆத்துகாரர் சொன்னத கேக்கப்டாதுன்னு சொல்லியிருக்கா.அதான் சுதந்திரம் கொடுத்து கொடுத்து நாடு கெட்டுப்போச்சே .நெத்தில பொட்டு இல்ல . தல விரிச்ச கோலம்தான் எப்போதும் .வெளில சொல்லுவானேன் நம்மாத்லேயே தான் எல்லாம் பாக்கறோமே!"

"அட சும்மா இருங்கோ , ஏதோ வருஷத்ல ஒரு தடவ நம்பள பார்க்க புள்ளையும் மாட்டுப்பொண்ணும் வரா. அப்ப போய் இது சரியில்ல அது சரியில்லன்னு சொல்லி சண்டை மூட்டணுமா?ஏதோ அவா சந்தோஷமா இருக்க வரா  நீங்க சும்மா இருந்தாலே போதும் .'

"இந்தக்கண்ராவியெல்லாம்  பாக்காம இருக்கத்தான் நான் நியூயார்க்குக்கு போன வருஷம் வல்லன்னு சொல்லிட்டேன் '

"சும்மா இருங்கோ அந்தப்பொண்ணு ரொம்ப நல்ல பொண்னுதான் ட்ரெஸ்ல என்ன வந்தது?குணம்தானே முக்கியம் "

"எல்லாம் இடம் கொடுத்து கெட்டுபோயிடுத்துகள் . உனக்கு உம் புள்ளைட்ட போய் இருக்கணும்னா நீ போய் இருந்துக்கோ . பெரிய மகளிர்தினமாம் 
அடக்கம் ஒடுக்கமெல்லாம் இல்லாம போயிடுத்து. சரிசரி  எதுத்து பேசாதே  போய் காப்பி கொண்டு வா"

"ஈஸ்வரா இந்த வயசிலும் இப்படி நடுங்கித்தொலைக்கறேனே . இந்த கால பெண்கள் போல எப்பத்தான் தைரியம் வருமோ? என்னதான் இருந்தாலும் அந்தக்கால மனுஷா மாறபோறதில்லை.அதுவும் கும்பகோணம்னா கேட்கவே வேண்டாம் . உம் என் காலம் முடிஞ்சுப்போச்சு.. இனி போற வழிக்கு புண்ணியம் தேடணும் அதான் " 

"என்னடி எதோ முணுமுணுத்துண்டு போறே.நீ முன்னமாரி இப்போ இல்லை.உனக்கும் திமிர் வந்துடுத்து. உன் இஷ்டப்படி நாலு மாமிகளோட வெளில கிளம்பிடறே.  வீட்ல புருஷன் என்ன சாப்பிடுவான் ? அவனுக்கு எதாவது செஞ்சு வைச்சோமா  ஊஹும்  ஒரு நினைப்புமில்லை"

"என்னன்னா என்னிக்கோ திருவேற்காடு கோவிலுக்குப்போனத பத்து தடவ சொல்லிக்காட்டறேளே.இன்னிக்கு எனக்கு சந்த்ராஷடமம் போல இருக்கு. எழுந்த நேரமே சரியில்லை.போதாததுக்கு இன்னிக்கி  "மகளிர் தினமாம் " ரொம்ப அழகுதான் .ஒரு ஆம்பளையும் மாறப்போற்தில்லை."

"சரி சரி வாசல்ல யாரோ வந்திருக்கா கதவ திற"

"ஆஹா நம்ம பொண்னு சுசீ வாம்மா சுசீ  சௌக்கியமா? மாப்பிள்ளை வரலையா?"

இல்லப்பா  நான் மட்டும் தான் வந்தேன் இன்னிக்கி மகளிர்தினத்துக்கு ஒரு ஸ்பீச்  கொடுக்கணும் அதனாலெ சுரேஷ் "நான் சமைக்கறேன்.நீ போய்ட்டு வா"ன்னு சொல்லிட்டார்

"அப்போ சுமிக்குட்டி கூட வரலையா உன்னோட வரேன்னு அது அழலையா?"

"இல்லையம்மா அதுக்கு கொஞ்சம் சுரம் அதனாலே வீட்டில விட்டுட்டு வந்துட்டேன் . மாப்பில்ளை நன்னா  பாத்துப்பார்.கவலப்படாதே."

"ஏண்டி இப்படி பொறுப்பில்லாம !  மாப்பிள்ளை சமையலும் செஞ்சு குழந்தையும் கவனிச்சுண்டு . உன் மனசுல நீ என்ன நினைச்சுண்டிருக்கே பெரிசா மகளிர் தினத்தைப் பத்தி பேச வந்துட்டே'

" அம்மா எங்க  காலமே தனி தான் .ஒருத்தர்க்கொருத்தர் விட்டுக்கொடுத்துப்போம் . உணர்ச்சியை மதிக்க கத்துப்போம் . என்னை ஒரு அடிமைப்போல் அவரும் நடத்த மாட்டார். நானும் சுரேஷுக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுப்பேன்.எங்களுக்கு இதெல்லாம் சகஜம் அம்மா. .ரெண்டு பேரும் வேலைக்குப்போறோமே. இது போல  வோர்க் க ஷேர் செஞ்சாதான் முடியும் .என்ன சொல்றே. சரி விஷ் செய்ய மறந்தே போயிட்டேன் 
அம்மா உலக மகளிர் தின நல் வாழ்த்துகள் . இன்னிக்காவது நிம்மதியா உன்னிஷ்டப்படி இரு . என்னப்பா .நான் சொல்றது சரிதானே "

" பாவம்டி அப்பா அவர் பாட்டுக்கு தேமேன்னு பேப்பர் படிச்சுண்டிருக்கார்.. அவர ஒண்ணும் சொல்லாதே உனக்கும் மகளிர் தின வாழ்த்துகள் .மேடைல நன்னா பேசிட்டு வா'

"  இரு சுசீ ஒரு நிமிஷம்   உங்கம்மா இங்க உட்க்கார்ந்து என்ன செய்யப்போறா அவளையும் உங்கூட அழைச்சுண்டு போ நான் என் வேலைய பாத்துக்கறேன் " 

"ஆ அப்பா  இதைத்தான்   இதத்தான்   நான் எதிர்ப்பார்த்தேன் ரொம்ப தேங்க்ஸ் அப்பா " 

Tuesday, June 24, 2014

முகுந்தா எனக்கு அருள் தாமகா அவதார புருஷர்  பாபாஜியை அறியாதவர் யார்? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களின் குரு என்றால் கேட்கவும் வேண்டுமா? தவிர விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜனி அவர்கள் இமாலய பகுதியில் இருக்கும் குகைக்குள் செல்லும் காட்சியும் அங்கு அவரது அனுபவங்களும்.அவர் தவத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் கண்டு பலர் அந்த பாபாவை  குருவாக நினைத்து கிரியா யோகத்தைக் கற்றுக்கொண்டனர். மகாஞானியும் .மகா அவதார புருஷரும் ,பல நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றைக்கும்  உயிருடன் இருந்தபடி அருள் புரிவதாகவும் கருதப்படும் ஸ்ரீ பாபாஜியின் சீடர் ஸ்ரீ லஹரி மகாசாயா அவர்கள். இவரின் அன்புச்சீடர்   ஸ்ரீ யுக்தேஷ்வர்கிரி ஜி  
ஒரு நாள் . இவர் முன்  பதினெட்டு வயதான முகுந்தன் என்பவன் வந்து நின்றான்.குரு யுக்தேஷ்வர்ஜியும் தன் கண்களால் அவனை உற்று நோக்கினார்.அவருடைய அருள் பார்வை கிடைக்க முகுந்தனின் தேகம் சிலிர்த்தது.  அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றையும்  சமர்ப்பணம் செய்தான், .  "இறைவனைத் தரிசித்தவர்  இந்த மகான்.அவரது நற்பாதங்களைப்பிடித்து
கொண்டால் நமக்கு நல்வழி  காட்டுவார் " என நினைத்தபடி தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு  வணக்கம் செலுத்தினான் 

"வா முகுந்தா. நீ வருவாய் என எனக்குத்தெரியும் .உன்னை நானே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு இது எப்படி   தெரியும் என யோசிக்கிறாயா? எனக்கு அந்த பாபாவே  உன்னை என்னிடம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்,"  எனக்கூறி அவனை அன்புடன் அழைத்து ஆசீர்வதித்தார்..யார் இந்த முகுந்தன்?  உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒரு வங்காள குடும்பத்தில் க்ஷத்ரியனாக பிறந்தான் முகுந்தன். சிறு வயதிலேயே அவனுக்குள் ஒரு தேடல் இருந்தது. இறைபக்தியுடன் வளர்க்கபட்டான்  அவன். தன்க்கென்று ஒரு குருவைதேடி மடமாக, பல  ஆஸ்ரமங்களாகத் தேடி அலைந்து பின் பதினேழாவது வயதில் தான் பாபாஜியின் சீடர் வழி வந்த யுக்தேஷ்வரர் ஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டான்.,சிறு வயதிலிருந்தே அவனுக்கு கடவுள் பக்தி  அதிகம். தினமும் ஒரு கோயில் செல்லுவான் .அத்துடன் இல்லாமல் பல வேத வித்தகர்கள்.,சன்யாசிகளையும் பார்த்து வணங்குவான். 

" அண்ணா உன்னைப்பார்க்க ஆவலாக  இந்த ஆக்ராவுக்கு வந்து விட்டேன் . இங்கிருந்து எனக்கு மதுரா ,பிருந்தாவன் எல்லாம் போக வேண்டும்  "
" என்ன முகுந்தா.உனக்கு இதே வேலையா போச்சு. எப்பொழுது பார்த்தாலும் கோயில், குளம் என சுற்றுகிறாய்..நன்கு படித்து ஆக வேண்டிய காரியத்தைப்பார்"
"இல்லை அண்ணா .என்னை மன்னித்துக்கொள்.எனக்கு அந்தக்கோயில் போக வேண்டும்.கண்ணன்  என்னை அழைக்கிறார்."

" நீ இப்படிக்கோயில்  கோயிலென்று ஊர் சுற்ற அப்பாவின் சொத்தில் ஒரு நயா பைசா கூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும் .தெரியுமா உனக்கு?"

" அண்ணா  , கடவுள் எனக்குத் தேவையானதை  தருவார் . "

" ஹாஹாஹா அப்படியா ? சரி உனக்கும் உன் நண்பனுக்கும் மதுரா  போக மட்டும் டிக்கட் எடுத்து தருகிறேன்,  மற்றபடி ஒரு செல்லிக்காசு கூட

தரப்போவதில்லை . நீங்கள் மதுரா போங்கள் .பிருந்தாவனம் போங்கள். வயிறார சாபிடுங்கள்.அங்கும் இங்கும் சுற்றிப்பாருங்கள். ஆக்ரவுக்கு திரும்பி வாருங்கள். ஆனால் ஒருவரிடமும் பணம் கேட்காமல் என்னிடம் திரும்பி வாருங்கள். திருடவும் கூடாது . இது போல் நடந்து விட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா?"

" அண்ணா  என்ன செய்யப்போகிறீர்கள்? "

" தம்பி  நானே உனக்குச் சீடனாகி விடுவேன் . "

"சரி அண்ணா, என்னை வாழ்த்தி அனுப்பி வை'

முகுந்தன் அந்தச்சவாலை  ஏற்றான்.தனது நண்பன் ஜிதேந்திராவுடன் கிளம்பினான் . ரயில் ஓடிக்கொண்டிருக்க மதுராவின் இரு ஸ்டேஷன்
முன்பாக நின்றது.அங்கு  இரு பெண்மணிகள் ஏறினர் . முகுந்தனுக்கு எதிரில் அமர்ந்தனர் . பின் மதுரா ஸ்டேஷன் வந்தது . இருவரும் இறங்கினர். அந்த இடத்தில் முகுந்தனும் தன் நன்பனுடன் இறங்கினான். அந்தப்பெண்மணிகள் இவர்கள் இருவரையும்   அழைத்து ஒரு குதிரை வண்டியில் அமரச்சொன்னார்கள்.பின் அவர்களை ஒரு ஆஸ்ரமத்திற்கு அழைத்துச்சென்றனர். 

உள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

" என்ன ,கௌரிம்மா ,வந்துட்டயா ? போன காரியம் என்ன ஆச்சு?'

அதற்கு அந்தப்பெண்மணி ," அம்மா அந்த இளவரசியால் வர முடியவில்லை. ஆகையால் நாம் செய்த விருந்து ஏற்பாடுகள் வீணாகி விடக்கூடாதே
என்று இரண்டு இறை பக்தர்களை அழைத்து வந்து விட்டோம் '

"நல்ல காரியம் செய்தாய் கௌரிம்மா. அவர்களுக்கு எல்லா உபசாரங்களும் நடக்கட்டும்."

அவ்வளவு தான் கடவுள் கிருபையினால்   அவர்களுக்கு பல வகை பண்டங்களுடன் விருந்து படைக்கப்பட்டது. பின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி

மேலே நடந்து நடந்து ஒரு மரத்தடியின் கீழ் இளைப்பாறினர்..அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான் . நேராக முகுந்தனைக்கண்டு வணங்கினான் .  

" நான் தான் பிரதாப் . நான் நேற்று இரவில் கண் மூடிய போது கனவில் கண்ணன் தோன்றினார்.உங்கள் இருவரையும் காட்டி உங்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்டும்படி கட்டளையிட்டார்..இது என் கிருஷ்ணன் இட்ட கட்டளை .ஆகையால் தயவு செய்து என்னுடன் வாருங்கள்"
என்றபடி அவர்கள் இருவர் கைகளை தன் கையில் இழுத்துக்கொண்டான் . 
"இது என்னதான் நடக்கிறது "என்று பிரமித்துப்போய்  அவனுடன் நடந்தான் முகுந்தன். பின் என்ன ! பிருந்தாவனத்தில் ஓடும் நதி . கண்ணன் விளையாடிய இடம் ,  என்று பல பார்த்து ரசித்து தன்னையே மறந்தான் . பின் இரவு ஆனதும் அவர்களை அழைத்துப்போன பிரதாப் திரும்பி ஆக்ராவுக்கு ரயில் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து அவர்களை வண்டி ஏற்றிவிட்டான் . ஆக்ராவும் வந்தது தன் வீடு திரும்பிய முகுந்தனையும் அவனது தோழன் ஜிதேந்தராவையும் கண்ட அவனது அண்ணா  கேலியாக " என்ன ! எல்லா தரிசனமும் கிடைத்ததா?' என்று கேட்க  ஜிதேந்திரா 
கடவுளின் கிருபையை நினைத்து அழுதேவிட்டான் .பின் நடந்த எல்லாவற்றையும் அண்ணனுக்கு விளக்க அண்ணன் தம்பி முகுந்தனின் தெய்வ 
கடாக்ஷம் கண்டு அவனது சீடரானார்.

இந்த முகுந்தன் தான்  இன்று எல்லோராலும் போற்றப்படும்  ஸ்ரீ பரமஹம்ஸ  யோகானந்தர் அவர்கள். நம்பிக்கை கடவுளைவிட மேலான சக்தி என்பதை நிரூபித்த மகான். இவரது தாய் இட்ட பெயர் முகுந்தலால் கோஷ் .இவர் தனது இருபத்திரண்டாவது வயதில் சன்யாசியாக ஆனார். அன்றையதினத்திலிருந்து  முகுந்தன் என்ற பெயர் போய் யோகானந்தகிரி என்று ஆனது. அவரது குருவும் அவரது வருங்காலத்தை ஓரளவு அறிந்துக்கொண்டதால் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் அவர் கொல்கத்தா காலேஜில் ஆங்கிலம் எடுத்து படித்து வெற்றி பெற்று பட்டமும் பெற்றார்.. ஒவ்வொரு அவதாரபுருஷரும்   அவரது கடமையை ஆற்ற கடவுளால்  அனுப்பப்படுகிறார். இவருக்கும் அந்தக்காலம் வந்தது. பாஸ்டன் நாட்டில் உலக சம்ய மகா நாடு நடக்க இருந்தது. அதற்கு இந்தியப்பிரதிநிதியாக ஸ்ரீயோகானந்தகிரி 
தேர்ந்தெடுக்கப்பட்டார்  பாஸ்டன் நகரில் அவர் இந்திய கலாச்சாரம் . யோகக்கலை, தியானம்  இந்து சமயம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அந்நாட்டு மக்கள் அப்படியே அசையாமல் அமர்ந்து தங்களை மறந்து யோகியின் மேதாவிலாசத்தைக்கண்டு வியந்துப்போயினர். அந்த  நாட்டிலேயே அவர் 'கிரியா யோகம்  என்கிற அற்புத யோகக்கலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.இது மனித உடலின் இயக்கமும் .உள்ளத்தின் ஓட்டமும் இணைந்து  'மனிதனென்பவன் தெய்வமாகலாம் 'என்ற கவியரசர்   திரு கண்ணதாசன் பாடலுக்கேற்ப உண்மையாகவே தெய்வ நிலைக்கு வரமுடியும் .
 இந்த   சூட்சுமகலையினால் மனிதன் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை அடைய முடியும்.. இந்த யோகப்பயிற்சி  மகாவதார் பாபாவிடமிருந்து சீடருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் . இந்தக்கலையை அவர் பலருக்கு படிப்பிக்க ''தன்னிலை உணருவோர் சங்கம்'என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.வெளி நாட்டவர்கள் வாழும் விதத்தில் டென்சன் நிறைய உண்டு. இயந்திரமே உலகம் என்று அவர்கள் வாழ்க்கை இருக்கும்.அதனால் தான் வாரக்கடைசியில்
வீக் என்டு'என்று வெளியில் சுற்ற போய்விடுவார்கள்.ஆனாலும் அதில் கேளிக்கைகளும் உடல் சுகமும் முக்கிய இடத்தைப்பிடிப்பதால்  அங்கு மன நிறைவு சில மணி நேரம் தான் கிடைக்கிறது. நிரந்திர நிம்மதியோ .மன அமைதியோ.ஆத்ம  திருப்தியோ கிடைப்பதில்லை  ' மெடீரியல் ஹேப்பினஸ் '' .என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் .  வெளிப்பொருட்களால் அடையும் சிற்றின்பம்  நிலைக்காதது.அழியக்கூடியது..பேராசை ஒரு பேய் போல் நம்மையே அழிக்க வல்லது . மானிடப்பிறவியுடன் அஹங்காரமும் கூடவே வந்துவிடுகிறது. மனிதனின்  துன்பங்களுக்குக் காரணம்  அவன் பொறாமை . ஆசை,   வெறுப்பு ,தன்முனை என்று பல  தன்னுள் கொண்டிருப்பதால் தான் .
அவன் ஏற்ற உடல் ஒரு நாள் அழியக்கூடியது என்று  அவன் உணருவதில்லை. பல தவறுகள் செய்கிறான் .நிம்மதியை இழக்கிறான் .இதிலிருந்து விடுபட இறையுணர்வு மிகவும் இன்றியமையாதது ." காயிலே புளிப்பதென்ன கண்ணப்பெருமானே .கனியிலே இனிப்பதென்ன கண்ணப்பெருமானே'
என்று மகாகவி பாரதி இறையுணர்வை வெளிபடுத்துகிறார்.இறையுணர்வால்  பலர்  பலவிதமான  வியப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர்   
இறைவன் அமைத்த நாடக மேடையில் நாமெல்லாம்  நமக்கு கொடுத்த பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறோம். நாடகம் முடிந்து திரை விழுந்ததும் நம் பாத்திரமும் முடிந்துவிடும் . ஆனால் பலரும் அந்தப்பாத்திரம் நிலையானது என்று எண்ணி  அந்தப்பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுகின்றனர். வாழ்க்கை ஒரு நாடக மேடை.இறைவனே அதன் சூத்ரதாரி .அவன் தாள் பணிந்தால் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியும் .அந்த இறைவனை அணுகும் எளிய வழி  மஹாவதார் பாபா ஆசிகளுடன் வந்த  "கிரியா யோகம்." இந்தக்கிரியா யோகத்தை ,தியானம்
தீக்ஷை மூலம் கற்றுக்கொள்ள பல அமேரிக்கர்கள் வந்தனர் .பாஸ்டன் மகா நகர மக்கள் யோகானந்தகிரியின் போதனைகளாலும், கிரியா யோகப்பயிற்சியினாலும் மிகுந்த பலனை அடைந்தனர். 

சுமார் பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவர் தனது குருவைப்பார்க்க  இந்தியாவுக்கு வந்தார். மேலும்  தனது இந்தப்பணியை இந்தியாவிலும் பரப்ப
 ஆசை கொண்டார். தனது குருஜி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியை   சந்தித்தார்..குருஜி அவரைப்பார்த்து மிகவும் பெருமிதத்துடன் அவரை அணைத்துக்கொண்டார்.
" யோகானந்தா . உன் ஆன்மீக வளர்ச்சி என்னைப்பெருமைக்கொள்ளச்செய்தது . இன்றைய தினத்திலிருந்து உனக்கு "பரமஹம்ஸ " என்னும் பட்டத்தையும்   அளிக்கிறேன் .இனி நீ "பரமஹம்ஸ யோகானந்தர்" என்று அழைக்கப்படுவாய்." . 

இதுவே அவர்களது கடைசி சந்திப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்  பின் சில நாளில் ஸ்ரீ முக்தேஷ்வர்ஜி முக்தியடைந்தார்.அதன் பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் திரும்பவும்   அமெரிக்கா  சென்றார். தன்னுடைய ஆன்மீக அனுபவம் பற்றி " ஆட்டோபயாகிரபி ஆப் யோகி " அதாவது 
'ஒரு யோகியின் சுயசரிதம் ' என்ற   புத்தகத்தை எழுதினார். இன்று உலகத்திலேயே   மிக அதிகமாக விற்பனையான  புத்தக வரிசையில் இது இடம் பெற்றுவிட்டது.   தவிர பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிறப்பென்றான்றால் இறப்பும் உண்டே. !  அந்த நாளும் வந்தது , 1952ம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கப்போகும் ஒரு விருந்துக்கு அவரும் அழைக்கப்பட்டார்.அதில் அமேரிக்காவின் இந்திய தூதரும் அவரது மனைவியும் கலந்துக்கொண்டனர்..அந்த விருந்தில் பரமஹம்ஸ் யோகாநந்தருக்கு உடல் நிலை ஒரு மாதிரி ஆனது . அவரது முடிவு அவருக்குத்தெரிந்தது.

"கங்கை நீர் .இமயமலைக்குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக்கொண்ட பாரத புனித மண்ணை ஸ்பரிசித்ததே பெரும் பேறு" என்று சொல்லியபடி  அப்படியே  சரிந்தார். இறைஜோதியுடன் கல்ந்து ஐக்கியமானார்..  இறந்தப்பின்  ஸ்ரீ அரவிந்த மஹரிஷிக்கு ஏற்பட்ட நிலை .  இவருக்கும் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்த மகரிஷியின் உடல் தங்க மயமாக அப்படியே உயிருடன் இருப்பது போலவே இருந்தது. ஒரு விதமான துர்நாற்றம் வீசவில்லை .உடல் நல்ல நிலையில் இருந்ததை பலர் வந்து  தரிசித்தனர் .அதேபோல் பரமஹம்ஸ்  யோகானந்தரின்  திருமேனி   இறந்து இருபது நாட்கள் ஆன பின்பும் கெடவில்லை .  உடல்  கட்டைப்போல் ஆகவில்லை .இந்த மிரகிளைப்பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனராம் இந்த 
அதிசயத்தைக்கண்டு வியந்தனர். பின்னர் அவரது திருமேனியை கலிபோர்னியாவில் அடக்கம் செய்தனர்..இதை நான் எழுதிக்கொண்டிருந்த போது  நான் கேட்ட பாடல் "முகுந்தா முகுந்தா ,வரம் தா வரம் தா"   என்ன பொருத்தமான பாடல் . வியந்துப்போய் அதையே தலைப்பாக வைத்தேன் .
குருவுஜிக்கு என் பணிவான வணக்கங்கள்.       


பாண்டுரங்கனின் சேவை

 
கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக  அமைந்த விட்டலனது கோயிலைப் பார்த்து பரவசமானேன் நான் . எனக்கு மஹாராஷ்ட்ராவில் இருக்கும் பண்டரிபுரம் போக வாய்ப்பே வரவில்லை. ஆனால் கும்பகோணம் போகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு கட்டப்பட்டிருக்கும் கோவிந்தபுரத்தைப் பார்க்க ஒரு நல்ல  சந்தர்ப்பம்   கிடைத்தது .நம்   கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும்  எளிதாக நாமஸ்மரணையினால்   நாம்  அடைந்துவிடலாம் . பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் 'விட்டல  விட்டல' என்ற நாமமே எதிரொலிக்கும் .அதுவும்  ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண்டாம் . நாம் அந்த  நாமத்திலேயே  மூழ்கிவிடுவோம்   கோவிந்தபுரத்தில் இருக்கும் பண்டரிநாதனைப்பார்க்கும் போது பண்டரிபுரம் போனதாகவே இருக்கிறது என்று அங்கு வந்த ஒரு பக்தர் என்னிடம் சொன்னார். 
 
அந்த விட்டலனை  நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது .பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று  ஒருவருமில்லை .பெற்றோர்களுமில்லை.   அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில்  இடம் கொடுதிருந்தார் .அங்கு அவள் வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள் .சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில்  விட்டலனைக்குறித்து பல 'அபங்க்'  பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள்.அவள் உடல் .மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே  வியாபித்திருந்தான் .
 
ஒருநாள்  சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள்.   உடைகள் அதிகமாக இருந்தது .ஜனாபாயி உடலில் அத்தனை  சக்தியுமில்லை . பார்த்தார் பாண்டுரங்கன் . தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க  இயலாமல்  தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து  உதவினான் .
 
சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று . ஜனாபாயி தன்  வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன்  மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள்  .என்ன கருணை !
 
மற்றொரு சம்பவம்....... . பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க  வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும்  கல் இயந்திரம் தான் இருந்தது . அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டுஅதைச்  சுற்ற வேண்டும் .ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு  அரைக்க வேண்டும் . பொறுப்பானா பாண்டுரங்கன் ! ஓடோடி வந்தான் தானும் அந்த மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான் .ஜனாபாயின் இந்த்சேவையினால்  மனம் மகிழ்ந்துப்போனான் அவன் . தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி  மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்
 
 
மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து
"  ஐயோ இது என்ன சோதனை ?பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே!  யார் எடுத்து  சென்றார்?" என்று பதட்டத்துடன் கத்தினார் .
அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர் .
"இதோ இங்கிருக்கிறது .வாருங்கள் .ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது . என்று ஒருவர் செய்தி  சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்
 
ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌச்துபமாலை அலங்கரித்திருந்தது .
 
கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?
 
'ஜனாபாய் தான் திருடிவிட்டாள்' என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள். அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுகுமரத்தில் ஏற்றும்படி  கட்டளைப்பிறந்த்து ,
ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள் . ஆனால் நடந்தது என்ன?
கழுகமரத்தில் ஏற்றும் சமயத்தில்  கழுகுமரம் தீப்பற்றி எரிந்தது.பின் சாம்பலாகியது.
 
ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத்தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின் லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும்  ஜனாபாயை வணங்கினர் 
 
ஜனாபாய் பாடிய 'அப்ங்க்' பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது  பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது .

 சரி. நாம் இப்போது கோவிந்தபுரம் திரும்பவும் வருவோம்  
கோவிந்தபுரத்தில் வசந்த மண்டப விதானத்தில் பல ஓவியங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டு விட்டலின் மகிமைகளையும் விட்டலனின் பக்தர்களைப்பற்றியும் விவரிக்கின்றன. தூண்களே இல்லாமல் வசந்தமண்டபத்தைக் கட்டி இருப்பது மிகவும் ஆச்சரியம் தான் .
இங்கு சுமார் 2000 பேர் அமர முடியுமாம்  
கோயிலின் முகப்பு மிக பிரம்மாண்டமாக  அமைந்து எல்லோரையும் உள்ளே "வா வா " என்று அழைத்து விடுவதை நான் உணர்ந்தேன் . கோயிலின் கோபுரம் சுமார் 132 அடி உயரம் . அதன் மேல் ஒரு பெரிய கலசம் அலங்கரிக்கிறது. அது 18 அடி உயரம் என்று தெரிய வந்தது. உள்ளே அக்கம் பக்கத்தில் பச்சை பசேலென வயல்கள். அதன்  மண் வாசனை , மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் எல்லாம் மனதுக்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது கோயிலினுள் கண்ணனின்  பலவித லீலைகள் மரப்பலகையில் செதுக்கப்பட்டிருக்கின்றன . இந்தக்கோயிலில் போனால் முதலில் தியான மண்டபம் சென்று கொஞ்சம் நேரம் தியானம் செய்தப்பின் மனதை ஒருமுகமாக்கியப்பின்  விட்டலன் அருகில் வந்து அவனைத்தொட்டு பூஜிக்கலாம் பாண்டுரங்கனுடன் ரகுமாயியும் சேர்ந்து இருந்து  அருள் புரிகின்றனர் .இங்கு வந்து தங்கவும் தனி அறைகள் உண்டு.தவிர குளிக்க ஒரு குளமும் இருக்கிறது. கோயில் மராட்டியபாணியில் தான் கட்டப்பட்டிருக்கிறது .இந்தக்கோயில் கட்ட நிதி  மக்களின் காணிக்கையினாலேயே  சேர்ந்தது .அப்படிச்சேர முக்கியகாரணமாக இருந்தவர் ஸ்ரீ விட்டல்தாஸ் தான் . அவரின் உண்மை பெயர் திரு ஜெய கிருஷண தீக்ஷதர்.
சேங்காலிபுரம்  பிரம்ம ஸ்ரீ அனந்தராமதீக்ஷதர் வம்சத்தில் வந்தவர்.அவருடைய பேரன் எனலாம் இவரது தந்தை பிரும்மஸ்ரீ ராமதீக்ஷதர்  . 
2004ல்  ஸ்ரீவிட்டல்தாஸ் தனது குருவான ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களுடன்  இந்த இடத்தில் பூமிபூஜை செய்தார். ஸ்ரீவிட்டல்தாஸ் 
ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானத்தை ஏற்று நடத்தி வருகிறார்.
இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் இங்கிருக்கும் கோசாலாவில் 400 பசுக்கள் உள்ளன. எல்லாம் ஆஸ்ட்ரேலியா பசுக்களைப்போல் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றன.அங்கே போனால் எங்கே நாம் துவாரகைக்கு வந்து விட்டோமோ என்ற பிரமை ஏற்படுகிறது. கண்ணன் புல்லாங்குழலின் இசைதான் பாக்கி. மாட்டுக்கொட்டில் போல் சாணம் வாடை அங்கு வீசவில்லை.  சாதாரணமாக பசு மாடு தன் மேல் அமரும் ஈக்களை தனது வாலால்
விரட்டியபடி இருக்கும் .ஆனால் இந்த மாட்டுக்கொட்டிலில் ஒரு ஈயைக்கூட காணமுடியாது.  அத்தனை சுத்தம் . மாட்டு மூத்தரத்தையும் சாணத்தையும் அப்பப்போது அப்புறப்படுத்தப்பட்டு  அந்த இடத்தை உடனே குழாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி அலம்பி விடுகிறார்கள். மாடுகளுக்கு ஆகாரமும் சரியான நேரத்தில் அட்டவணைபோட்டு அதன் பிரகாரம் கொடுக்கப்படுகிறது  ஒவ்வொரு மாடுக்கும் நல்ல விஸ்தாரமாக இடம் ஒதுக்கி இருக்கின்றனர். பல வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன . அவர்களது ஆகாரமான புல்லும்  இதற்கென்றே வளர்கப்படுகிறது . .தவிர வயதான மாடுகளையும் கடைசிவரை வைத்து ரக்ஷிக்கிறார்கள். அடிக்கடி டாக்டரும் வந்து தேவைப்பட்டால் வைத்தியமும் செய்து தருகின்றனர் . இந்த இடமே ஒரு கோயிலாக எனக்குப்பட்டது.
இதில் வரும் பாலை .அன்னதானத்திற்கும்  மற்றும் வெண்ணெய் ,நெய் போன்று தயாரிக்கவும் உபயோகிப்பார்கள் என நினைக்கிறேன் . .கோமாதா சேவை மிகவும் உயர்ந்த சேவை  ஆயிற்றே . 

இந்த கோவிந்தபுரத்தில் தான்  காஞ்சி காமகோடி 59 வது பீடாதிபதி பகவான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது . 
 
''விட்டல விட்டல ,  பாண்டுரங்க விட்டல "  என்ற பஜனை என் காதில் ஒலிக்க நான் அங்கிருந்து விடைப்பெற்றேன் 

கிளிக்கு ஏகப்பட்ட டிமேண்டு

முன்பு ஒரு தடவை நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன். அன்று பூரம் நட்சத்திரம் ஆனதால் நல்ல கூட்டம் இருந்தது. அங்கு அர்ச்சனை வரிசையைத்தவிர இன்னொரு வரிசையும் இருந்தது. அது என்ன வரிசை என் ஒருவரிடம் கேட்டேன் .அவர் " அம்மா இது கிளி வாங்கும் வரிசை" என்றார்.
"என்ன கிளி ? அதை எப்படி வாங்குவது .அது பறந்து போய்விடாதா?அல்லது கூண்டில் வைத்து கொடுத்தால் பாபமில்லையா?" 
அவர் ஒரு மாதிரி என்னைப்பார்த்தார். ஐயோ ஏதோ அசட்டுத்தனமாக கேள்வி கேட்டுவிட்டேனோ என்று முகம் அசடு வழிய 
"ஐயா இங்கு முதல் தடவை வருவதனால் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்"

"ஒரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்.என் வேலை முடித்தப்பின் சொல்கிறேன் "

பின் அவர் வந்தார். அந்தக்கிளியைப்பற்றி  பல விஷயங்கள் சொன்னார்.ஞாபகம் வந்ததை எழுதுகிறேன் .

இந்தக்கிளி  ஆண்டாளின் இடது கையில் அமர்ந்திருக்கும் .இது மூலிகையினால் செய்யப்பட்டது. நாகவல்லி இலை.நந்தியாவட்டை இலை, செவ்வரளி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.வியாசரின் மகனாகிய சுகப்பிரும்ம ரிஷியே ஆண்டாளின் கையில் கிளியாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த ஆண்டாளின் கிளியை வாங்கி பக்தர்கள் தன் வீட்டில்  பூஜை அறையில் வைத்துக்கொள்ள பல நன்மைகள் நடக்குமாம். பக்தர்கள் ஆண்டாளிடம் தங்கள் கோரிக்கைக்களை வைத்து பிரார்த்திக்க அவள் கையில் இருக்கும் கிளி அடிக்கடி அதை ஆண்டாளுக்கு நினைவு படுத்துமாம்.இதனால் இந்தக்கிளியை வாங்கிக்கொள்ள பக்தர்கள் முன்னதாகவே தங்கள் பெயரைக்கொடுக்கிறார்கள். இது போல் மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையில் இருக்கும் கிளிக்கும் முக்கியத்துவம் 
கொடுக்கப்பட்டிருக்கிறது .

Saturday, November 9, 2013

முளைத்த இரு கைகள்.

சிற்பி அழகாக ஒரு சிலையை வடித்துக்கொண்டிருந்தான்.   ஹொய்சாளர் காலத்தில்  கைதாலா எனும் சிற்றூர் அவர்களது தலைநகராக விளங்கியது. 

அங்கு ஆண்ட அரசன் மச்சராச்சையா  அந்த இடத்தில் ஒரு மஹாவிஷ்ணுவின் கோயிலைக்கட்ட விரும்பினான் . அப்போது கைதாலா என்ற இடத்தின் பெயர் கிரீடனகிரியாக இருந்தது .அதற்கென்று ஒரு சிற்பியைத் தேடியும்  கண்டு பிடித்தான் . ஜனகாசாரி என்ற சிற்பி  மிகப்பொறுமையுடன் தன் வேலையைச்செய்து முடிப்பார் .  அந்தச்சிற்பிதான் மச்சராச்சையாவுக்கும்  அழகிய சென்னகேசவர் சிலையைச்செய்ய ஒப்புத்துக்கொண்டான் .
அழகிய சிலை தயாரானது . அதன் கண்கள் மட்டும் கடைசியில் திறப்பார்கள். கண்கள் திறப்பதற்குமுன் தன் சிலையைக்காட்ட அங்குச்சிற்பியின்  மகன்  வந்தான் , 

"தந்தையே  இந்தச்சிற்பக் கல்லில்  குறை இருக்கிறது . ஆகையால் இந்தச்சிற்பம் கோயிலுக்கு உகந்ததாகாது "  என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டான்.
மகனின் சொல்லைக்கேட்டு தந்தை கோபிக்காமல் அந்தக்கல்லை ஆராய்ந்தார்.  மகன் சொன்னது  போலவே அதில் குறை இருந்தது .ஆகையால் மனம் வருந்தி தன் தவறுக்குப்பிராயச்சித்தமாக  வாளை எடுத்துக்கொண்டு தன் கைகளை வெட்டிக்கொண்டார்
மகனும் மன்னனும் பதறிப்போனார்கள் . 

ஆனால் சிற்பி தன் மகனின் உதவியோடு   மற்றொரு கல்லைத்தயார் செய்தார்.  பின் ஒவ்வொரு அங்கமும் விவரித்து தன் மகனின் மூலம் அதைச் செய்ய வைத்தார் . மகனும் தந்தையின் ஆலோசனியிருந்து ஒரு இம்மியளவு கூட மாறவில்லை. 
சிலை முடிந்து சென்ன கேசவர் தயாரானார் . கண்கள் திறக்க வேண்டிய  வைபவத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது .  சிற்பியின் வெட்டப்பட்டக்கைகளின் இடத்தில் இரு கைகள் முளைத்தன.   ஆஹா   என்ன இது !

சிற்பியின் வெட்டப்பட்டக்கைகள் திரும்பவும் முளைத்துவிட்டனவே  பெருமாளின் கருணையே கருணை !
எல்லோருக்கும் ஒரே குஷிதான் . எல்லோரும் அந்தச்சக்தி வாய்ந்த சென்னகேசவரை ஒருமைப்பட்டு வணங்கினர் . ஶ்ரீதேவியும் பூதேவியும் இரு பக்கங்களில் இருந்து சேவை சாதிக்க நடுவில்

 ஶ்ரீ சென்னக்கேசவப்பெருமாள்  அழகான கருட  பீடத்தின் மீது  மூன்றடி  உயரத்தில்  நின்றபடி ஆசி வழங்குகிறார் அருகில் வேறொரு கோயிலும் உள்ளது .அதுதான்  ஶ்ரீ கங்காதரேஸ்வரர்   கோயில் .  சென்னகேசவர் கோயிலைக் கட்டியவர் இதையும் கட்டியிருப்பாரோ  எனத்தோன்றுகிறது ,

 ஏனென்றால்  ஶ்ரீ சென்ன கேசவகோயிலைப்பற்றிய குறிப்புகள்  அதன்  காலம்  எல்லாம் ஶ்ரீ கங்காதரேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளால்  தெரிய வருகிறது .

எல்லாவருடங்களும் இங்கு விழா நடக்கும்   . அத்துடன்  மார்ச் மாதம்  நடக்கும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடக்கும் . கர்நாடகாவில் இருக்கும் கோயில்களில் இதுவும் மிகச்சிறந்த கோயிலாக விளங்குகிறது 

சன்னல் வழியே பார்

எல்லா காளி கோயில்களிலும் பக்தர்கள் போனால் காளியைக் கர்பக்கிரஹத்தின்  அருகில் சென்று தரிசிக்க முடியும் .ஆனால் ஹிமாசலப் பிரதேசத்தில்  இருக்கும்  காளிக்கோயில் மிக வித்தியாசமாக ஆனது . அந்தக்கோயில் இருக்குமிடம்  ஷர்ஹான் என்ற 

கிராமம் . இயற்கையின் எழில் சூழ ஒரு குன்றின்மேல்   வெகு அழகாக அமர்ந்து  அருள்புரிகிறாள் அந்தக்காளி .  அவளை 'பீம்காளி' என்று அழைக்கிறார்கள். நான் கூட  அந்தக்காளியைப் பீமன் பூஜித்திருப்ப்பார்  அதனால் அந்தப்பெயர் வந்திருக்குமோ என நினைத்தேன் .

 என் நினைப்பும் உண்மையாகவே  இருந்தது . பாண்டவர்கள் இங்கே தங்கியிருந்ததாகவும் அப்போது பீமன் இந்தக்காளியைபிரதிஷ்டைச்செய்து  பூசித்ததாகவும்  சிலர் சொல்லுகிறார்கள்.

     பன்னிரண்டாம் நூற்றாண்டில்  பீம்கிரி என்று ஒருவர்  வழக்கம் போல் காலை மலைப்பகுதியில் நடந்துக்கொண்டிருக்க  அவர் காலடியில் ஒரு காளியின் சிலை தட்டுப்பட்டது . அதை மிக ஆர்வத்துடன் எடுத்து தன் வீட்டிற்குக் கொண்டு

வந்தார் .பின் அதற்கென்று ஒரு கோயில் கட்டி   காளியைப்பிரதிஷ்டைச் செய்தார் .பின் தினசரி பூஜைக்கும்  ஏற்பாடு செய்து தானும் அங்கு முழுநாளும் சேவை செய்ய   ஆரம்பித்தார் . பீமகிரி அந்தக்காளியைப் பிரதிஷ்டடைச்செய்ததால் எல்லோரும் 

அந்தக்கோயிலை  'பீமகிரி காளி  'என்று அழைத்தனர் . 

இங்கு வரும் பூசாரி  சிவப்புத்தொப்பியை அணிந்துக்கொள்கிறார்.அத்துடன்  அவர்   உடையும் சிவப்பு வர்ணமாக இருக்கிறது .அவர்  நேர் வழியாக வராமல்  கோயிலிருந்து வரும் ஒரு சுரங்கப்பாதையில் நுழைந்து   காளியிடம் வருகிறார் . பின்னர் பூஜை முடித்தப்பின்

அதே சுரங்கப்பாதை  வழியாக வெளியே வந்துவிடுகிறார். இப்படிச்செய்வதுதான்   முறை  என்று அங்கிருக்கும் ஒரு பெரியவர் சொன்னார். 

 பீம்காளியைப் பார்க்க பக்தர்கள் கருவறைக்கு சிறிது  தூரத்தில்  அமைத்திருக்கும் ஒரு சன்னல் அருகே வரிசையாக நிற்கிறார்கள் .  பின் சன்னல் வழியாகத்தான்  அந்தக்காளியைத் தரிசிக்கவேண்டும் காளியைப்பார்க்க சிவப்பு  தொப்பி அணிந்துக்கொண்டுதான்

வரவேண்டும் . காளி அப்படியே ரக்தவண்ணமாக அமர்ந்திருக்கிறாள்.கண்கள் முழித்தபடி  உருண்டையாக  இருக்கின்றன   நாக்கும் வெளியே நீட்டிகொண்டிருக்கிறது சன்னல் வழியாகப்பார்ப்பதால்  நேரில் அருகில் நின்று பார்ப்பது போன்று தெளிவாக இல்லை .

ஏன் அருகில் செல்லக்கூடாது என்று பலரைக்கேட்டேன் .ஆனால் விடை சரியாகக்கிடைக்கவில்லை . சிலர்  காளியின் சக்தி மிகவும்  அதிகமானதால்  நேரில் நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது என்கின்றனர் 

இந்தக்காளியின் அருகில்  200 ஆண்டுக்ளுக்கு முன்  பிரதிஷ்டை செய்த காளியும் இருக்கிறாள். அவள் தான் பீமன் பூஜித்த காளியாக இருக்கலாம் . அவள் அருகில் இந்த பீம்காளி  எட்டுக்கரங்களுடன்     அருள் புரிகிறாள் .

இங்கு வரும் பக்தர்கள்  சிவப்பு அங்கியை வாங்கி காளி மேல் சார்த்த கொடுக்கின்றனர் .பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றிவைக்கிறாளாம் இந்த  பீம்காளி