Tuesday, June 24, 2014

கிளிக்கு ஏகப்பட்ட டிமேண்டு

முன்பு ஒரு தடவை நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன். அன்று பூரம் நட்சத்திரம் ஆனதால் நல்ல கூட்டம் இருந்தது. அங்கு அர்ச்சனை வரிசையைத்தவிர இன்னொரு வரிசையும் இருந்தது. அது என்ன வரிசை என் ஒருவரிடம் கேட்டேன் .அவர் " அம்மா இது கிளி வாங்கும் வரிசை" என்றார்.
"என்ன கிளி ? அதை எப்படி வாங்குவது .அது பறந்து போய்விடாதா?அல்லது கூண்டில் வைத்து கொடுத்தால் பாபமில்லையா?" 
அவர் ஒரு மாதிரி என்னைப்பார்த்தார். ஐயோ ஏதோ அசட்டுத்தனமாக கேள்வி கேட்டுவிட்டேனோ என்று முகம் அசடு வழிய 
"ஐயா இங்கு முதல் தடவை வருவதனால் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்"

"ஒரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்.என் வேலை முடித்தப்பின் சொல்கிறேன் "

பின் அவர் வந்தார். அந்தக்கிளியைப்பற்றி  பல விஷயங்கள் சொன்னார்.ஞாபகம் வந்ததை எழுதுகிறேன் .

இந்தக்கிளி  ஆண்டாளின் இடது கையில் அமர்ந்திருக்கும் .இது மூலிகையினால் செய்யப்பட்டது. நாகவல்லி இலை.நந்தியாவட்டை இலை, செவ்வரளி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.வியாசரின் மகனாகிய சுகப்பிரும்ம ரிஷியே ஆண்டாளின் கையில் கிளியாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த ஆண்டாளின் கிளியை வாங்கி பக்தர்கள் தன் வீட்டில்  பூஜை அறையில் வைத்துக்கொள்ள பல நன்மைகள் நடக்குமாம். பக்தர்கள் ஆண்டாளிடம் தங்கள் கோரிக்கைக்களை வைத்து பிரார்த்திக்க அவள் கையில் இருக்கும் கிளி அடிக்கடி அதை ஆண்டாளுக்கு நினைவு படுத்துமாம்.இதனால் இந்தக்கிளியை வாங்கிக்கொள்ள பக்தர்கள் முன்னதாகவே தங்கள் பெயரைக்கொடுக்கிறார்கள். இது போல் மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையில் இருக்கும் கிளிக்கும் முக்கியத்துவம் 
கொடுக்கப்பட்டிருக்கிறது .

No comments: