Wednesday, November 6, 2013

மூன்று கேள்விகள்

அருள்மொழித்தேவர் தன் தந்தை இங்கும் அங்கும் நடந்தபடி  மிகவும் வருத்த
நிலையில் இருப்பதைப் பார்த்தார் தன் தந்தையிடம்சென்று  "தந்தையே ஏன் இன்று மிகக்கலக்கமாக  இருக்கிறீர்கள் .என்னிடம் சொல்லுங்கள் . நான் என்னால் முடிந்ததை செய்கிறேன் 'என்றார்.

"அருள்மொழியே இன்று நம் மன்னர்  அனபாய சோழன்  புலவர்களின்
அறிவுக்கூர்மையைச் சோதிக்க மூன்று கேள்விகளை என்னிடம் கேட்டார் . அந்த மூன்று கேள்விகளுக்கும் என்ன விடை சொல்வது
என்று குழம்பி வீடு வந்துவிட்டேன் '

"தந்தையே  அந்த மூன்று கேள்விகள் என்ன ? '

சிறிது நேரம் மௌனம் சாதித்துவிட்டு  தன் மகனைப்பார்த்தார் .
"கேள் மகனே ,
அந்தக்கேள்விகளைச் சொல்கின்றேன்   "உலகைவிட பெரியது  எது ?

மலையினும் பெரியது எது?

கடலினும் பெரியது எது ?"

"தந்தையே  இதற்கு பதில் திருக்குறளில்  கிடைக்கும்.கவலையை விடுங்கள்.


காலத்தினாற் செய்த  நன்றி  சிறிதெனினும்
ஞாலத்தில்  மாணப்பெரிது"

தக்க தருணத்தில் ,மிகவும் தேவைப்படும் நேரத்தில் செய்யும் உதவி
சிறிதானாலும் அது   உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும் ,.


"பயன் தூக்கார் செய்த   உதவி நயன் தூக்கின்
நன்மை  கடலிற் பெரிது '

பிறருடைய பதில் உதவியை எதிர்ப்பாராமல்  மனமார  உதவி செய்வதே கடலைவிட
உயர்ந்த  செயலாகும்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்பெரிது'

தன்  நிலையிலிருந்து எந்தக்காலத்திலும் மாறாமல் அடங்கி ஒழுகுவோருடைய
உயர்வு மலையின் உயர்வைவிட மிகப்பெரிது "

இதைக்கேட்ட பெருங்கவி  உடனே ஓடிவந்து மகனை அணைத்து  வியந்தார் .மறுநாள்
மன்னரிடம் சென்று  விடைகளையும் சொன்னார்  .மன்னர் அவரைப்புகழ்ந்தவுடனே அவர் " மன்னரே  இந்தப்புகழுக்கு நான் பாத்திரமானவன் அல்ல .இந்த விடைகளை என் மகன்  அருள்மொழித்தேவன்  அளித்தான்  அவனுக்கே இந்தப்புகழ்  சேரும் "

"அப்படியா  நான் அவனைப்பார்க்க வேண்டுமே ."

"சரி மன்னா அவனை அவைக்கு அழைத்து வருகிறேன் '

அருள்மொழித்தேவனும் அரச சபைக்கு வந்தான் .மன்னன் அவன் அறிவைப்பாராட்டியபடி அவனை  அணைத்துக்கொண்டான் .

"அருள்மொழித்தேவா  இன்றைய தினத்திலிருந்து  நீயே முதலமைச்சர் .உனக்கு
"உத்தமசோழபல்லவராயன் "என பட்டம் சூட்டுகிறேன் ''

இத்தனைப்பெரிய பதவி வந்தும்  அருள்மொழித்தேவன்  மிகவும் வினயத்துடன்
பணிவாக இன்பம் துன்பம் எல்லாமே சம நோக்குடன் பார்த்தது தந்தைக்கு மிகப்பெருமை .ஏதோ ஒரு ஆன்மீக சக்த்தியால் பிறந்த  குழந்தை தான் இவன் ,...என்று மனமகிழ்ந்தார் .

அவையில்  அருள்மொழித்தேவர் பல சிவனடியார்களின் கதைகளை எடுத்துரைத்தார்.

மன்னனும் மகழ்ந்து  பல சிவனடியார்களைப்பற்றி  கவிதை உருவில்  காவியமாகப்படைத்து

அருள வேண்டும் "  என்றார்

அவரது வேண்டுகோளை அப்படியே ஏற்று  மன்னரிடமிருந்து விடைப்பெற்றார்,பின்
தன் தந்தையிடம் தான் சிதம்பரம் செல்ல அனுமதி  பெற்று   ஆடும் சபேசன்  அம்பலவாணன்
சந்நிதிக்குச்சென்றார்.கைக்கூப்பி வணங்கினார்

"பரமேஸ்வரா  திருமுறைக்கண்ட அடியார் வரலாற்றை அழகான தமிழில் எழுத நீதான்
அருள வேண்டும் அதன் முதல் அடியையும் நீதான் எடுத்துக்கொடுக்க வேண்டும்  என்று மனமுருக வேண்டினார் .அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது .

வானத்திலிருந்து  ஒரு அசரீர் வாக்கு கிளம்பியது

"இந்த உலகினர்  பாராட்டும் வெற்றிநூலாய் அமையப்போகிறது உன் நாவிலிருந்து
புறப்படும் இக்கவிதை பெட்டகம் .அதற்கு "உலகெலாம் "என்று முதலடி தொடங்குவாய் .இந்த உலகெல்லாம் புகழ்ந்து பாடும் புலவனாக நீ மிளிர்வாய்"


முதல் பாடல் இவரிடமிருந்து உதித்தது ..அருள்மொழித்தேவர்  சேக்கிழார் ஆனார் .

அவர் பாடிய முதல் பாடல்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு  அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் ,
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் "

அநபாயச்சோழன் வேண்டுகோளின் படி திருத்தொண்டர் புராணம் என்ற
பெரியபுராணத்தை 4283  செய்யுள்களால் பாடி முடித்தார்.
சோழமன்னன் இதைக்கேட்டு மிகவும் மனமகிழ்ந்து   அவரை அழைத்துக்கொண்டு
ஊர்வலம் வந்தான் .யானையின் மேல் ஊர்வலம் ....
மன்னன் அவர் பின்னால் அமர்ந்து அவருக்கு கவரி வீசி மகிழ்ந்தான் .அவரைத்
தெய்வபுலவராக வழிபட்டான் .
இந்தச்சேக்கிழாருக்கு   குன்றத்தூரில்  ஒரு ஆலயம் இருக்கிறது சென்னைக்கு
அருகே இருக்கும்  குன்றத்தூரில் தான் சேக்கிழார்
அவதரித்தார் .கல்வி அறிவு பெற  இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர்
இங்கு வந்து திருத்தொண்டர் புராணமும் படிக்கின்றனர். இதைப்படிக்க  ஆன்மா
சுத்தமாகி ஆணவம்  மறைகிறது .

பெரியபுராணத்தை அருள்நூல் என்றார் திரு கிருபானந்தவாரியார் சுவாமிகள்.இவரது ஆலயத்தில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் விசேஷ பூஜையும்
ஊர்வலமும் பல சிவனடியார்களின்

சொற்பொழிவுகளும் நிகழ்கின்றன.திருமுறையும் ஓதப்படுகின்றன ..

No comments: