Wednesday, April 25, 2007

என் நினைவில் திருமதி முக்தாம்மா


பதம் ஜாவளி என்ற பெயர் சொன்னாலே திருமதி பிருந்தா, திருமதி முக்தா அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. வீணை தனம்மாள் பெற்றெடுத்த மாணிக்கங்கள்... ஸ்ரீமதி பிருந்தா, ஸ்ரீமதி முக்தா, ஸ்ரீமதி பாலஸரஸ்வதி, திருமதி பால ஸரஸ்வதி பரத நாட்டியத்தில் பெரிய இடத்தைப் பிடித்தவர். இவர்களில் எஞ்சி நின்ற முக்தா அம்மாவும் போன வாரம் காலமானார். பதம் ஜாவளி பாடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். இவர்களை மும்பையில் திருமதி ராஜலட்சுமி {திருமதி அருணா சாயிராமின் தாய்} வீட்டில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்தாம்மா பதம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார், நானும் அதை ஆனந்தமாகக் கேட்டேன். இவர் பதம் பாடினால் மிகவும் கணீர் என்று இருக்கும்.
ஆனால் இந்த அவசர யுகத்திற்கு அவரது பாட்டு ஒத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் அவரது பாட்டு நெஞ்சின் உள்ளிலிருந்து ஆழமாக கிளம்பி மிகவும் மெதுவாக அனுபவித்து அந்த பாட்டின் கடவுளை எதிரே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். அவர் பாடிய சில பாடல்கள் "ஜானகி ரமண...மாமவ பட்டாபி ராமா..." இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரது ஜாவளி "மருபாரி" மறக்க முடியவில்லை. கர்நாடக சங்கீதப் பிரியரகளுக்கு அவர் என்றும் நீங்காத நினைவாக இருப்பார்கள் என்பது திண்ணம். முக்தா அம்மவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் விசாலம்

லோகாபிரம்மம் ஸ்ரீராமன்


ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவன் பார்வதியிடம் சொலுகிறார்...
"ராம ராம் ரமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம த்த்துல்யம் ராமநாம வரானனே
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு சமமானது ராம் நாமம் நான் எப்போதும் ராம் ராம் ராம் என்ற மனோரமான ராம நாமத்தைச் சொல்கிறேன்."
இதிலிருந்தே தெரிகிறது ஸ்ரீ ராம நாமம் சொல்லக் கோடி
நனமை என்று... ஸ்ரீராமரிடம் நாம் பல நல்ல விஷ்யங்களைக் கற்றுக் கொள்ளலாம். தாய்- தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், மனைவி,
குடிமக்கள் எல்லோரிடமும் அசாதாரணமான ஆதர்ச புருஷராக இருந்தார். இதைக் கைகேயி முதன் முதலில் மந்தாரையின் சூழ்ச்சியில் விழாத போது சொல்லுகிறாள்.
1."தர்மக்ஞோ குணவான் ததந்த கிருதஜ்ஞ ஸதயவாஞ்சு சி
ராமோ ராஜஸுதோ ஜ்யேஷ்டோ யௌவராஜமதோர்ஹதி"

"மந்தாரையே ஸ்ரீராமன் தர்மம் தெரிந்தவன், நற்குணம் பொருந்தியவன், சத்தியம் பேசுபவன், புலன்களை வென்றவன், மூத்த மகன், செய்நன்றி மிக்கவன், பரிசுத்தமானவன் ஆகவே அவனே இளவரசன் ஆக
முழு தகுதி உள்ளவன்"

2.தாய் பக்தி, தன் தாய் கைகேயி தன்னைக் காட்டிற்கு அனுப்ப தயை இல்லாமல் செய்கை செய்த போதிலும் அவர் மேல் மிக பக்தியுடன், பணிவுடன் நடந்து கொண்டார். அவர் இலக்குவனிடம் கூறுகிறார்

"யஸ்யா மத பிஷேகார்த்தே மாநஸம் பரிதவ்யதே
மாதா ந: ஸா யத ந ஸ்யாத் ஸவிஸங்கா ததா குரு,"
ல்க்ஷ்மணா என்னுடைய் முடி சூடு விழா காரணமாக யாருடைய

"மனம் வருத்ததில் கொதிக்கிறதோ அந்தத் தாய்க்கு என்மேல் ஒரு ஸந்தேகமும் வராமல் பார்த்துக் கொள். அவர் துக்கத்தை என்னால் பார்க்க இயலாது, தாள முடியாது."

3. தந்தை பகதி
தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில்ஸ்ரீ ராமனிடம் மிகவும் பக்தியும் துணிவும் சிரத்தையும் இருந்தது.


"அஹம் ஹி வசனாத் ராஜ்ஞ: பதேயமபி பாவகே
பக்ஷ்யேயம் விஷம் தீக்ஷணம் பதேயமபி சார்ணவே "


என் தந்தை மன்னர் சொன்னால் நான் நெருப்பில் கூட குதிப்பேன்,
கடும் விஷம் உண்பேன், கடலிலும் விழுவேன் ஏனென்றால் தந்தைக்கு பணிவிடை செய்வதை விட வேறு தர்மம் உலகில் இல்லை தவிர அவர் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை, தர்மம்"

4.ஏக பத்னி விரதம்... சீதா தேவியை வனத்திற்கு அனுப்பியவுடன் ஒரு யாகத்திற்கு மனைவி இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்தவுடன் அவளைப் போல் தங்கப் பதுமைச் செய்து வேள்வியைச் செய்து
முடித்தார் அதற்கென்று வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

5.சகோதர பாசம்
ராமனுக்கு எல்லா சகோதரருடன் சமமாக அன்பு இருந்தது. திருமணமும் எல்லா சகோதர்களுக்கும் ஒன்றாகவே நிகழ்ந்தது. ஸ்ரீ ராம பாட்டாபிஷேகம் நாள் பொருத்தியவுடன் அவர் தம்பி இலக்குவனிடம் சொல்கிறார்


"லக்ஷ்மணேமாம் மயா ஸார்த்தம் ப்ர்ஸாதி த்வம் வஸுந்தராம்
திவிதீயம் மோந்தராத்மானம் த்வாமியம் ஸ்ரீருபஸ்திதா"


"அன்பு இலக்ஷ்மணா நீ என்னுடன் இருந்து இந்தப்பூமியை ஆண்டு உதவுவாயாக நீ என்னுடைய மற்றொரு அந்தராத்மா. பின் பரத சத்ருக்னரைப் பற்றிஅன்னைக் கோசலையிடம் தான் விடை பெற்றுச் செல்லும் நேரம் கூறுகிறார்...


"பிராத்ரு புத்ரஸமௌட்ரஷ்டவ்யௌச விஷேத:
த்வ்யா பரத் சத்ருக்னௌ பிராணை: பிரயத்ரௌ மம "

"பரதனும் சத்ருக்னனும் என் உயிரை விட எனக்கு மிகப் பிரியமானவர்கள் அவர்களை ஹே சீதே உன் புதல்வர்களைப்போல் சகோதர்களைப் போலன்பு செலுத்த வேண்டும்"


6.நட்பு... ஸ்ரீ ராமன் தன் நண்பர்களிடம் கொண்ட நட்பிற்கு அளவே இல்லை குஹன், கானகவாசி, வானரங்கள், ஜடாயூ போன்றவ்ர்களிடம் அவர் செலுத்திய அன்பு மிகவும் உயர்ந்தது.


"ஸுஹ்ருதோ மே பவந்தஸ்ச சரிரம் ப்ராதரஸ்ததா
யுஷ்மாபிர்ய்த்ருதஸ்சாஹம் வ்யஸ்நாத்காநநௌகஸ:
தந்யோ ராஜா ச் ஸுக்ரீவொ பவத் பி:ஸுஹ்ருதம்வரை

"கானக வாசிகளே வானரவீரர்களே நீங்கள் என் உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என் உடல் நீங்கள், என்னைக் கஷ்டத்திலிருந்து விடுத்தீர்கள். ராஜா சுக்கிரீவன் நல்ல நண்பர்களைப் பெற்ற பாக்கியசாலி" என்று
புகழுகிறார்.


7. தஞ்சம் அடைந்தவரைக் காப்பாற்றுதல்
விபீஷணர் இராவணனனைவிட்டு ஒடி வந்து ஸ்ரீரமனைத் தஞ்சம் அடைந்த போது பலர் அவரைசேர்த்துக் கொள்ளத் தடுக்கின்றனர்.
ராமர் சொல்கிறார்..


"மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தே ரக்ஷோ யத் யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம்"


"நட்பு உணர்ச்சியால் என்னிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் விபீஷணனை என்னால் தள்ளமுடியாது. அவனிடம் எக்குற்றம் இருப்பினும் அவனுக்கு ஆதரவு தருவது தான் நல்லது" என்கிறார்.
இதே போல் செய்நன்றி அறிதல், குடிமக்களைத் தன் மக்கள்போல் பாவித்து நன்மை செய்தல், மன்னிக்கும் குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


"ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதய சீதாய பதயே நம:"


ஸ்ரீ ராமருக்கே இதை அர்ப்பணிக்கிறேன்

அன்புடன் விசாலம்

அம்மா..! என்று நீ என்னை அணைப்பாய்?


அம்மா என்று என்னை அணைப்பாய் நீ!
என் மழலை மொழிகளைக் கேட்பாய் நீ!
அம்புலி மாமா காட்டி
பப்பூ மம்மூ ஊட்டுவாய்!
ஒரு எட்டு மணி அடிக்க
கொண்டு போடுகிறாய் காப்பகத்தில்...
அங்கு அன்பில்லாமல் ஒரு தூக்கம்,
ஒரு தாலாட்டு பாட்டிற்கு ஏக்கம்,
உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம்,
மனதில் நுழையும் ஒரு தாக்கம்,
திரும்பி வருகிறாய் அலுப்புடன்
வீசுகிறாய் கைப்பயை சலிப்புடன்,
அப்பாவுடன் சண்டை வலுவுடன்,
பார்க்கிறேன் மனக் கசப்புடன்,
கூச்சல் ஏற கையும் ஓங்க...
பயந்து நிற்கிறேன் ஒரு கோடியில்,
வாயடைத்துப் போகிறேன் மாடியில்,
பாட்டி தாத்தா வேணுமம்மா...
அவர்கள் அன்பில் பிணைவேன் அம்மா


அன்புடன் விசாலம்

இப்படியும் ஒரு வெறியா?


"மியாவ்...மியாவ்" பூனைக்குட்டிகளின் இனிய குரல் என்னைக் கதவைத் திறந்து பார்க்கச் செய்தது. மெல்லக் கதவைத் திறந்தவுடன் ஒரு அழகான காட்சி, தாய்ப்பூனை தன் குட்டிகளை நக்கிக் கொடுக்க மற்ற குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருந்தன.
"சாமபல் நிறம் ஒரு குட்டி வெள்ளை நிறம் ஒரு குட்டி" என்று அழகோ அழகு! நான் ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் எடுத்து வந்தேன். அம்மா பூனை என்னைப் பார்த்து சீறியது என்ன பாதுக்காப்பு! என்ன பாசம்! அம்மா என்ற சொல்லே பாசம் தானோ?
எல்லாக் குட்டிகளும் பயந்து தன் அம்மாவிடம் அடைக்கலம் புக, ஒன்று வாலின் பக்கம் போய் ஒளிய மற்றொன்று முதுகின் பின் ஒளிந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்த பார்வை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதில் ஒரு குறும்புக்காரக் குட்டி கறுப்பும் வெள்ளையும் கலந்த அழகு என் முன்னால் வந்து என் புடவையின் கீழ் பாகத்தை நகத்தால் இழுத்தது, கீறியது, அது என் குழந்தை ஆகிவிட்டது. பிரிக்க முடியாத ஒரு பந்தம்... நாட்கள் ஓடின இப்போது நானும் அந்தக்குட்டியும் ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். இப்போது அதன் பெயர் "தக்காளி" அது என்ன வேடிக்கையானப் பெயர்? ஆம் அது ஒரு நாள் தக்காளிப் பழத்தை பந்தாடி நசுக்கிவிட்டது அன்றைய தினமே பெயர் சூட்டுவிழாவும் நடந்தது. நான் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அதன் அம்மாவும் இப்போது என்னுடன் பழக ஆரம்பித்தது. எல்லாக்குட்டிகளுக்கும் படுக்கை
அறை மொட்டை மாடிதான். ஒரு நாள் இரவு நான் சற்று கண் அயர்ந்தேன், அபோது ஒரு பயங்கரமானச் சத்தம். ஒரு பெரிய கடுவன் பூனைக் கத்த அதற்கு பதில் அந்தப் பெண்பூனைக் கொடுக்க, எனக்கு மொழி புரியவில்லையே! ஆனால் என்ன என்று ஊகித்துக் கொண்டேன்.
மேலே செடி வைத்த மண் செட்டி உருள ஒரே அமர்க்களம்தான். காலையில் போய் பார்த்தேன். மண் செட்டி உடைந்து கிடந்தது என் அருமை தக்காளியும் இல்லை மற்ற குட்டிகளும் இல்லை. எங்கே போய்விட்டன? ஒன்றும் புரியவில்லை ஒரே ஏக்கத்துடன் கீழே வந்தேன். என் கணவரிடம் சொன்னேன்."சனி விட்டது" என்று அவர் சொல்ல எனக்கு அழுகையே வந்து விட்டது. நேரே கடவுள் படத்திற்கு முன் வந்து மனம் உருகப் பிரர்த்தித்தேன். "என் தக்காளி நல்ல படியாக வந்து சேர அருள வேண்டும் அம்மா..." காலை மணி 6 " மியாவ்" என்ற சததம் தேன் போல் பாய நான் போட்டியில் ஓடும் பெண்போல் ஓடி கதவைத் திறக்க,"வாடா கண்ணா" என்று அதை அள்ள... ஒரு பாச உணர்வு மின்சாரம் போல் பாய்ந்தது. வந்தது அந்த நாள்... அந்த இரவு... பௌர்ணமி நிலா தன் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்தக் கடுவன் திரும்பவும் வந்தது மதில் சுவர் மேல் உட்க்கார்ந்து பெண் பூனையை முறைத்துப் பார்த்தது கூப்பிட்டது. அதன் குரலே தனி தான் பெண்பூனைக்கு இஷ்டமில்லை, இதெல்லாம் நான் ஒரு இடுக்கால் பார்த்தேன் திரும்பவும் எதாவது பிரச்சனை வரக் கூடாதே என்று...
அந்தக் கடுவன் ஒரேப் பாய்ச்சலாக அந்தப் பெண் மேல் பாய்ந்தது. நான் என் சன்னலைத் திறந்து சூ சூ என்று விரட்டினேன். அது என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றது. காலை ஒரு மூன்று மணி இருக்கும். "மியாவ்" என்ற அலறல்... என்னைத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் எழுந்திருக்க மனமில்லாமல் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன். காலை முதல் வேலையாகக் கதவைத் திறந்தேன் "வீல்"என்று அலறி விட்டேன். நான் பார்த்தது... அப்பப்பா…சொல்ல முடியவில்லையே!என் அருமை தக்காளி வயறு கிழிந்து குடல் வெளிவர இரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் அம்மா அதைச் சுற்றிச் சுற்றி வந்து நக்கியது. புரிந்து கொண்டேன் அந்தக் கடுவன் தன் இச்சைப் பூர்த்திக்கு பெண் இசையாததால் ஏமாற்றம் அடைந்து வஞ்சனையுடன் குட்டியின் காரணத்தினால் அம்மா பூனை வர மறுக்கிறாள் என்று கோபம் கொண்டு அதற்குக் காரணமாய் இருந்த குட்டியை கிழித்து சாக அடித்து விட்டது. அழுதபடி நான் அதை ஒரு பழைய துணியில் சுற்றினேன். வெளியில் போட்டால் நாய் கவ்விக் கொண்டுப் போகுமே என்று மண்ணில் புதைத்தேன். இன்று அதன் மேல் ஒரு தக்காளிச் செடி வளர்ந்து விட்டது.


அன்புடன் விசால்ம்

Sunday, April 22, 2007

தாயானாலும் நான் தாயல்ல...


நான் ஒரு தாய்
ஆனால் நான் தாய் அல்ல ,
இர்ண்டு குழந்தைகள் பெற்றேன்
அழகு பெண் ஒன்று,
ராஜா போல் ஆண் ஒன்று,
ஆனாலும் கொஞ்ச
மகவுகள் இல்லை,
குழந்தைகள் தான் பெற்றேன்
ஆனால் கணவன் இல்லை
தாய்மை அடைந்தேன்
உடலில் இன்பம் இல்லை,
ஒரு உணர்ச்சியும் இல்லை ,
தலைவனின் த்ழுவல் இல்லை,
கொஞ்சலும் இல்லை
ஒரு ஊடலும் இல்லை
ஒரு சாடலும் இல்லை,
ஆனால் ராஜமரியாதை
கொடிக்கட்டி பறக்கும் எனக்காக
இரண்டு நாட்கள் பாலூட்டினேன்
உச்சி முகர்ந்தேன்.
குழந்தைப் பார்க்க,
வந்தனர் உறவினர்,
தம்பதி வந்தனர்,
க்ட்டி அணைத்தனர்.
இனிப்பு வழங்கினர்
நான் கட்டிலில்.
அநாதையாய்...
கண்களில் நீர் வழிந்தது
மனமும் கூட கனத்தது,
ஒரு மனிதன் வந்தான்,
கை கூப்பினான்
"நன்றி" என்றான்,
கையில் வைத்தான்
ஒரு ஐந்து லட்சம்.
முடிந்தது என் பங்கு,
பெத்துக் கொடுத்ததின்
பரிசு இது...
குழந்தையைப் பார்த்தேன்
முடிந்தது என் பங்கு
பின் நீ யாரோ?
நான் யாரோ?
என் தம்பியின் கல்லூரி
என் தங்கையின் திருமணம்,
காத்து நிற்கும் இந்தப் பணம்
ஊசியால் விந்து செலுத்த
வந்துதித்தாள் ஒரு தேவதை
அந்த தேவதைக்கு நான் தாய்,
ஒரு வாடகைத் தாய்
பிறக்கும் வரை எனக்கு சொந்தம்
முடிந்தபின் இல்லை பந்தம்...


அன்புடன் விசாலம்

சிவ மடம் - சிறுகதை!

ஆதவன் இளம் சிவப்பை அள்ளித்தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன். 'வவ்… வவ்..' என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி கீழே வந்து அந்த திசையில் பார்த்தேன். ஆம்...அது நான் கட்டியிருக்கும் சிவமடத்திலிருந்து வந்தது. ஒரு பெரிய வேப்பமரம் நிழலை அள்ளிக்கொடுத்தது. அதற்கு கீழ் ஒரு மேடை,அந்த மேடைக்குக் கீழ் நான்கு அருமையான நாய்க்குட்டிகள் தங்கள் தாயிடம் பாலைக் குடித்துக்கொண்டிருந்தன. தாய் நாய் மிகவும் ஆசையாக் தன்னுடைய நாக்கால் நக்கிக்கொடுத்து தன் பாசத்தைக் காட்டியது. இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தேன்! தாய் பாசம் என்றாலே தனிதான்.அதில் ஒரு நாய் என்னை மிக கவர்ந்தது. கருப்பும், வெள்ளையும் கலந்தது அதன் உடல். நெற்றியில் நாமம் போல் கருப்புவண்ணம். அதை அள்ளி எடுக்கத்துடித்தது மனது. மெள்ள ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்தேன். எனக்கு பிடித்த ஹீரோவிற்கு பாலைக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா நாய் குழந்தைகளைக் கொஞ்சியபின் சற்று வெளியே போயிற்று. நான் என்
மனம் கவர்ந்த ஹீரோவைத் தூக்கி அணைத்து பாலைக் கொடுத்தேன். அது தன் பிஞ்சு நாக்கால் நக்கி, நக்கி ஒரு இன்பமான சத்தத்தை எழுப்பி நடுநடுவே என்னையும் தன் ஒரக்கண்ணால் பார்த்தது. தன் சிறு வாலை ஆட்டி கறுப்புப்ட்டன் போன்ற கண்களை சுழற்றி… ஆஹா! என்ன கவர்ச்சி, என்ன அழகு! அப்படியேஅதன் வசமானேன்.

என் சிவமடத்திற்குள்தான் என் அருமை சிவா இருந்தது. நடந்து முடிந்த கதை. நான் இட்ட பெயர்தான். நான் வளர்த்த என் அருமை ஜெர்மன் ஷெப்பெர்டு, அது தான் சிவா. அதை நாய் என்று யாரவது சொன்னால் எனக்கு ஆகாது. அது என் குழ்ந்தை, அதன் மேல் அத்தனை பாசம். பத்து நாள் குட்டியாக் வந்தது... வளர்ந்தது.. அதை ஆன்மீகமாக வளர்த்தேன். அது முன்பிறவியில் சன்யாசியோ என்னமோ, வெளியே போனால் தன் இனத்துடன் சேர்ந்து ஓடாது. என் கூடவே இருக்கும். நான் கீதை படிக்கும் நேரம் மணி 9. அதுவும் என் அருகில் அமரும். முழு பூசையை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கும். கற்பூரம் ஏற்றிய பின்னர் நான் அதன் கண்ணில் ஒற்றி விடுவேன் அது வரை அந்த இடத்தை விட்டு நகராது. பாட்டு ரசித்து கேட்கும். வெளியிலிருந்து வந்தால்நேரே பாத்ரூமுக்கு போய் நிற்கும். கால் அலம்பிய பிறகுதான் உள்ளே வரும் எல்லாம் பழக்கிவிட்டேன். ஒருதடவை ஒரு திருடன் உள்ளே நுழைந்தான்.அது கத்தி,குரைத்தது ஊரைக் கூட்டிவிட்டது. அவனிடைருந்து அடிகள் பெற்றும் அவனை எதிர்த்தது. அவன் ஒடிவிட்டான் நான் பள்ளியிலிருந்து திரும்பிவந்தவுடன் ஒரே ஷாக்!


அந்த சிவா என்னிடம் ஒடி வந்தது. நக்கியது தன் முதுகைக்காட்டி பல விஷயங்கள் சொல்லாமல் சொல்லியது. அந்த பாஷை எனக்கு புரிந்தது. டில்லியில் கொளுத்தும் வெய்யில். பத்து நாட்கள் சிம்லா போனபோது அந்தசிவாவை நாய் காக்கும் நிலயத்தில்விட,அது நாய் காக்கும் நிலையம் அல்ல பணம் பிடுங்கும் நிலையம் என்றுபிறகுதான் புரிந்தது. உஷ்ணம் தங்காமல்,தண்ணீருமில்லாமல் மஞசகாமலை வந்து என் சிவா என் மடிமேல் உயிரை விட்டது. முடிவு காலம் தெரிந்த உடனேயே ராமநாமம் பாட்டு போட காதில் ராம்,ராம் என்றுசொல்ல வாயில் கங்கை நீர் ஊற்ற என்னை நன்றியுடன் பார்க்க மறக்க முடியவில்லையே அந்த தினம். அந்த சமாதி தான் இந்தமடம் அதில் ஒரு வேப்பமரம் நட்டு மரமும் பெரிதாகிஅதன் நிழ்லில் இன்று பல பூனைக்குட்டிகள், நாய் குட்டிகள்... என் ஹீரோ புடவையைப் பிடித்து இழுக்க பழைய நினைவிலிருந்து விடுபட்டு என் ஜுனியர் சிவாவை வெளியிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தேன். அந்த நாளும் வந்தது. நான் கறிகாய் வாங்கச் சென்றேன் என் அருமை ஜுனியர் சிவா என்னைத்தொடர்ந்துவந்தது. "போ சிவா உன் அம்மாவிடம் போ! பால் குடி பாவம் அவள் உன்னைத் தேடுவாள். நான் திரும்பி வந்ததும் வா" என்றேன். ரொம்ப புரிந்தது போல் தன் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து சம்மதம் தெரிவித்தது. வேக்மாக நான் என் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவந்தேன். பாவம் அது நடைப் பாதையில் எதிர்பக்கம் பொறுமையாக உட்கார்ந்திருந்தது. என் கையில் பிஸ்கட் இருந்தது.
மோப்ப சக்தியால் அது தெரிந்துகொண்டு ஆவலாக என்னிடம் வர வேகமாக குறுக்கே பாய்ந்தது. பீம்….பீம்…. அவ்வ்ளவுதான். நான் வீல் என்று கத்தினேன். கண்மண் தெரியாமல் வந்த காரின் அடியில் என் அருமை ஹீரோ! யமன் ரூபத்தில் வந்துவிட்டான். மனதை உருக்கும், உலுக்கும் கூக்குரல் என் ஹீரோ எழுப்ப ஒரே கூட்டம், கார் ஒட்டியவன் நிற்காமலே ஒடிவிட்டான். கார் ந்ம்பரைப் பார்த்தேன். அவன் தெரிந்தவந்தான். முன் வாரம் அஹிம்சையைப் பற்றி மேடையில் பேசினவன். பசுவதை சங்கத்தின் மெம்பர்… என் எதிரே ரத்தவெள்ளத்தில் என் ஹீரோ கிடக்க ஒரு சிலர் பாவம் என்று சொல்ல மற்றவர்கள்
ஏதோ நாயாம் அறைந்துவிட்டதாம் என்று சொல்லி அலட்சியமாக இடத்தைக் காலி செய்தார்கள். அதன் தாய் ஒடி வந்து, சுற்றி சுற்றி அதை முகர்ந்து அழுதது. பின்னர் அதை இழுத்து... இழுத்து சற்று ஒரமாகப் போட்டது. என் கண்களில் நீர் பொங்க தாய் நாயை தடவிவிட்டேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும்? மெல்லப்போய் என் ஹீரோவை ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்தேன். உயிர் போயிருந்தது. அதை மேலும் அறைய வைத்தோ அல்லது கழுகு கொத்திச்செல்லும் காட்சியைக் காணவோ எனக்கு மனதில் தெம்பு இல்லை. சீனியர் சிவாவின் அருகில் குழி தோண்டி உப்பும் பாலும் விட்டு அடக்கம் செய்தேன். மனம் கார் ஒட்டினவனை அசைபோட்டது லஞ்சம் ஒழிக்க மேடையில் பேசி அவனே லஞ்சம் வாங்குகிறான், மிருகவதை பற்றி பேசி அவனே மிருகத்தை அழிக்கிறான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இது எங்கே போய் நிற்கும்? கடவுளே! உள்ளேவந்தேன். சுவரில் மாட்டிய கீதசாரம் என்னைப் பார்த்து சிரித்தது. "நீ என்னகொண்டு வந்தாய்? அதை இழப்பதற்கு" மனதைத் தேற்றிக்கொண்டேன்.போதும் அப்பா. இனி நாய் வளர்க்கவே மாட்டேன்.என் மனம் சொல்லியது.
பிரசவ வைராக்கியம் போலும். ஒரு வாரத்திற்க்குப் பின்னர் 'வவ்..வவ்..' இனிமையான குரல் ஒடினேன் பாலை எடுத்துகொண்டு. மாயை என் கண்ணை மறைத்தது. மூன்றாவது சிவா வந்து விட்டான். வளரப்போகிறான். வாழ்க சிவமடம்!

விசாலம்.

அன்பே சிறந்த மருந்து



தொன்றுதொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத்தெருவிலும் வியாபித்து பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்… அப்பப்பா...என்ன இன்பம் நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைமாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். கடவுள் என்பது அன்பு என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரஹீம் என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.

"அன்பிலர் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு,”

இது திருவள்ளுவரின் வாசகம். அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே... என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்கு சென்று விடுகிறார்கள். இங்கு பள்ளியிலிருந்து வந்த குழந்தை தாயின் அன்புக்காக ஏங்குகிறது. டி.வி.அந்த அன்பைத்தருமா? அப்பாவை தன் வருடாந்திர விழாவிற்கு வரும்படி மகன் அழைக்கிறான். "எனக்கு அர்ஜெண்ட் மீட்டிங் எனக்குவர இயலாது" என்கிறார் தந்தை. பையனுக்கு ஏமற்றம்தான். சந்தோஷம் என்பது பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை.குழ்ந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு கட்டாயம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தும். அவர்கள் ஆரோக்யமாய், வளர அன்பு கலந்த கண்டிப்பு தேவை. நமது உடலில் மிக சக்தி வாய்ந்த இடம் நமது தோல். அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதில் ஆறுலட்சம் திசுக்கள் உள்ளன. தொடு உணர்வு தோலில் செயல்பட்டு உடலில் பரவுகிறது. குழந்தை தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான். தாயின் அரவணைப்பு பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தை போக்குகிறது. நாம் நெற்றியினிலோ, கழுத்தின் பின்புறத்திலோ அல்லது தோளிலோ அன்பாக தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும். அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும்.

தனக்குத்தனே அன்பை செலுத்திக்கொள்ள்வேண்டும்.. நமது குறைகளையும், நிறைகளையும் கணக்கிட்டு ஒவ்வொரு நாளாக நிறைவுகளை அதிகப்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவர்களின் தவறுகளைக் கண்டுக்கொள்ளாது, அல்லது மன்னித்து இயல்பாக அன்பின் ஊற்றை பெருக்கவெண்டும்.

தன்னைத்தானே நேசித்து கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தைச் சுத்தமாக அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு ஊற்றாக பெருகி மற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி, அன்பு பாய்ச்ச அதைப் பெறுபவர் கோபநிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். குழந்தை தாயின் அன்புக்கு, பெற்றோர்கள்தன் பிள்ளைகளின் அன்புக்கு, காதலன் தன் காதலியின் அன்புக்கு, மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக்குழந்தைகளின் அன்புக்கு, நல்ல நட்புக்கு, கடைசியாக பக்தன் கடவுளின் அன்புக்காக… என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள். இந்த அன்பு கிடைக்கவிட்டால் தவறான பாதையில் மனிதன் இறங்குகிறான். இதன் விளைவாக விவாகரத்து கொலை, தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. மனிதனின் ஆரோக்யத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லை, மகிழ்ச்சியில்லை. மகிழ்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை.
ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்ல்ங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம் பண்பு இருந்தன. இப்போது அவைகள் எங்கே? தேடுவோம் அன்பை இணைப்போம்.

"துன்பம் இலாத நிலையே சக்தி,

தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி "

இந்த பாரதி மொழிந்த "அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம்"

அன்பே சிவம்!

விசாலம்.