Sunday, April 22, 2007

அன்பே சிறந்த மருந்து



தொன்றுதொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத்தெருவிலும் வியாபித்து பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்… அப்பப்பா...என்ன இன்பம் நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைமாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். கடவுள் என்பது அன்பு என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரஹீம் என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.

"அன்பிலர் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு,”

இது திருவள்ளுவரின் வாசகம். அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே... என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்கு சென்று விடுகிறார்கள். இங்கு பள்ளியிலிருந்து வந்த குழந்தை தாயின் அன்புக்காக ஏங்குகிறது. டி.வி.அந்த அன்பைத்தருமா? அப்பாவை தன் வருடாந்திர விழாவிற்கு வரும்படி மகன் அழைக்கிறான். "எனக்கு அர்ஜெண்ட் மீட்டிங் எனக்குவர இயலாது" என்கிறார் தந்தை. பையனுக்கு ஏமற்றம்தான். சந்தோஷம் என்பது பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை.குழ்ந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு கட்டாயம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தும். அவர்கள் ஆரோக்யமாய், வளர அன்பு கலந்த கண்டிப்பு தேவை. நமது உடலில் மிக சக்தி வாய்ந்த இடம் நமது தோல். அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதில் ஆறுலட்சம் திசுக்கள் உள்ளன. தொடு உணர்வு தோலில் செயல்பட்டு உடலில் பரவுகிறது. குழந்தை தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான். தாயின் அரவணைப்பு பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தை போக்குகிறது. நாம் நெற்றியினிலோ, கழுத்தின் பின்புறத்திலோ அல்லது தோளிலோ அன்பாக தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும். அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும்.

தனக்குத்தனே அன்பை செலுத்திக்கொள்ள்வேண்டும்.. நமது குறைகளையும், நிறைகளையும் கணக்கிட்டு ஒவ்வொரு நாளாக நிறைவுகளை அதிகப்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவர்களின் தவறுகளைக் கண்டுக்கொள்ளாது, அல்லது மன்னித்து இயல்பாக அன்பின் ஊற்றை பெருக்கவெண்டும்.

தன்னைத்தானே நேசித்து கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தைச் சுத்தமாக அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு ஊற்றாக பெருகி மற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி, அன்பு பாய்ச்ச அதைப் பெறுபவர் கோபநிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். குழந்தை தாயின் அன்புக்கு, பெற்றோர்கள்தன் பிள்ளைகளின் அன்புக்கு, காதலன் தன் காதலியின் அன்புக்கு, மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக்குழந்தைகளின் அன்புக்கு, நல்ல நட்புக்கு, கடைசியாக பக்தன் கடவுளின் அன்புக்காக… என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள். இந்த அன்பு கிடைக்கவிட்டால் தவறான பாதையில் மனிதன் இறங்குகிறான். இதன் விளைவாக விவாகரத்து கொலை, தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. மனிதனின் ஆரோக்யத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லை, மகிழ்ச்சியில்லை. மகிழ்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை.
ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்ல்ங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம் பண்பு இருந்தன. இப்போது அவைகள் எங்கே? தேடுவோம் அன்பை இணைப்போம்.

"துன்பம் இலாத நிலையே சக்தி,

தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி "

இந்த பாரதி மொழிந்த "அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம்"

அன்பே சிவம்!

விசாலம்.

No comments: