Wednesday, April 25, 2007

இப்படியும் ஒரு வெறியா?


"மியாவ்...மியாவ்" பூனைக்குட்டிகளின் இனிய குரல் என்னைக் கதவைத் திறந்து பார்க்கச் செய்தது. மெல்லக் கதவைத் திறந்தவுடன் ஒரு அழகான காட்சி, தாய்ப்பூனை தன் குட்டிகளை நக்கிக் கொடுக்க மற்ற குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருந்தன.
"சாமபல் நிறம் ஒரு குட்டி வெள்ளை நிறம் ஒரு குட்டி" என்று அழகோ அழகு! நான் ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் எடுத்து வந்தேன். அம்மா பூனை என்னைப் பார்த்து சீறியது என்ன பாதுக்காப்பு! என்ன பாசம்! அம்மா என்ற சொல்லே பாசம் தானோ?
எல்லாக் குட்டிகளும் பயந்து தன் அம்மாவிடம் அடைக்கலம் புக, ஒன்று வாலின் பக்கம் போய் ஒளிய மற்றொன்று முதுகின் பின் ஒளிந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்த பார்வை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதில் ஒரு குறும்புக்காரக் குட்டி கறுப்பும் வெள்ளையும் கலந்த அழகு என் முன்னால் வந்து என் புடவையின் கீழ் பாகத்தை நகத்தால் இழுத்தது, கீறியது, அது என் குழந்தை ஆகிவிட்டது. பிரிக்க முடியாத ஒரு பந்தம்... நாட்கள் ஓடின இப்போது நானும் அந்தக்குட்டியும் ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். இப்போது அதன் பெயர் "தக்காளி" அது என்ன வேடிக்கையானப் பெயர்? ஆம் அது ஒரு நாள் தக்காளிப் பழத்தை பந்தாடி நசுக்கிவிட்டது அன்றைய தினமே பெயர் சூட்டுவிழாவும் நடந்தது. நான் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அதன் அம்மாவும் இப்போது என்னுடன் பழக ஆரம்பித்தது. எல்லாக்குட்டிகளுக்கும் படுக்கை
அறை மொட்டை மாடிதான். ஒரு நாள் இரவு நான் சற்று கண் அயர்ந்தேன், அபோது ஒரு பயங்கரமானச் சத்தம். ஒரு பெரிய கடுவன் பூனைக் கத்த அதற்கு பதில் அந்தப் பெண்பூனைக் கொடுக்க, எனக்கு மொழி புரியவில்லையே! ஆனால் என்ன என்று ஊகித்துக் கொண்டேன்.
மேலே செடி வைத்த மண் செட்டி உருள ஒரே அமர்க்களம்தான். காலையில் போய் பார்த்தேன். மண் செட்டி உடைந்து கிடந்தது என் அருமை தக்காளியும் இல்லை மற்ற குட்டிகளும் இல்லை. எங்கே போய்விட்டன? ஒன்றும் புரியவில்லை ஒரே ஏக்கத்துடன் கீழே வந்தேன். என் கணவரிடம் சொன்னேன்."சனி விட்டது" என்று அவர் சொல்ல எனக்கு அழுகையே வந்து விட்டது. நேரே கடவுள் படத்திற்கு முன் வந்து மனம் உருகப் பிரர்த்தித்தேன். "என் தக்காளி நல்ல படியாக வந்து சேர அருள வேண்டும் அம்மா..." காலை மணி 6 " மியாவ்" என்ற சததம் தேன் போல் பாய நான் போட்டியில் ஓடும் பெண்போல் ஓடி கதவைத் திறக்க,"வாடா கண்ணா" என்று அதை அள்ள... ஒரு பாச உணர்வு மின்சாரம் போல் பாய்ந்தது. வந்தது அந்த நாள்... அந்த இரவு... பௌர்ணமி நிலா தன் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்தக் கடுவன் திரும்பவும் வந்தது மதில் சுவர் மேல் உட்க்கார்ந்து பெண் பூனையை முறைத்துப் பார்த்தது கூப்பிட்டது. அதன் குரலே தனி தான் பெண்பூனைக்கு இஷ்டமில்லை, இதெல்லாம் நான் ஒரு இடுக்கால் பார்த்தேன் திரும்பவும் எதாவது பிரச்சனை வரக் கூடாதே என்று...
அந்தக் கடுவன் ஒரேப் பாய்ச்சலாக அந்தப் பெண் மேல் பாய்ந்தது. நான் என் சன்னலைத் திறந்து சூ சூ என்று விரட்டினேன். அது என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றது. காலை ஒரு மூன்று மணி இருக்கும். "மியாவ்" என்ற அலறல்... என்னைத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் எழுந்திருக்க மனமில்லாமல் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன். காலை முதல் வேலையாகக் கதவைத் திறந்தேன் "வீல்"என்று அலறி விட்டேன். நான் பார்த்தது... அப்பப்பா…சொல்ல முடியவில்லையே!என் அருமை தக்காளி வயறு கிழிந்து குடல் வெளிவர இரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் அம்மா அதைச் சுற்றிச் சுற்றி வந்து நக்கியது. புரிந்து கொண்டேன் அந்தக் கடுவன் தன் இச்சைப் பூர்த்திக்கு பெண் இசையாததால் ஏமாற்றம் அடைந்து வஞ்சனையுடன் குட்டியின் காரணத்தினால் அம்மா பூனை வர மறுக்கிறாள் என்று கோபம் கொண்டு அதற்குக் காரணமாய் இருந்த குட்டியை கிழித்து சாக அடித்து விட்டது. அழுதபடி நான் அதை ஒரு பழைய துணியில் சுற்றினேன். வெளியில் போட்டால் நாய் கவ்விக் கொண்டுப் போகுமே என்று மண்ணில் புதைத்தேன். இன்று அதன் மேல் ஒரு தக்காளிச் செடி வளர்ந்து விட்டது.


அன்புடன் விசால்ம்

No comments: