Friday, August 31, 2007

எல்லா குருவிற்கும் என் சிரம் கவிழ்த்து வணங்குகிறேன். குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ
மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம்
மதியுறத் தெரிந்துள வயங்கு சத்குருவே
சிவரக சிவமெலாந் தெரிவித் தெனக்கே,
தவ நிலைக் காட்டிய ஞான சத் குருவே ,
எல்லா நிலைகளுமேற்றிச் சித்தெலாம் .
வல்லா னென வெனை வைத்த சற்குருவே .

அருட்பெருஞ்சோதி அகவலில் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் குருவைப் பற்றி நன்கு விளக்கி
இருக்கிறார் ,சத்குரு உண்மையான குரு என்றும் குரு என்பவர் அக்ஞான இருளைப் போக்குபவர் என்றும்
ஞானத்தை வழங்குபவர் என்றும் கூறுகிறார்

ஸ்ரீ சத்ய சாயி நம் முன்னால் எட்டு குருவை வைக்கிறார்
போத குரு சாஸ்திரங்களைப் போத்ப்பவர்
வேத குரு ----வாழ்க்கையின் உண்மையான உள் அர்த்தத்தை நமக்கு உணர்த்துபவர்
நிஷித்த குரு ---உரிமைகளையும் கடமைகளையும் நமக்கு போதிப்பவர்
காம்ய குரு -- மிகவும் உயர்ந்த செயலால் பூலோகம் சுவர்க்க லோகம் இரண்டிலும் ஆனந்தத்தை அடைய
வழி காட்டுபவர்
வாசக குரு --யோகக்கிரியைகளைத் தந்து ஆன்மீக வாழ்க்கைக்கு நம்மைத் தயார் செய்பவர்
சூசக குரு -- ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக்கொடுத்து ஆன்மாவை உணர வைப்பவர்
காரணகுரு ஜீவா ஆத்மா இரண்டின் சேர்க்கைக்கு வழி காட்டுபவர்
விஹித குரு சந்தேகங்களைப் போக்கி மனதைத் தூய்மைச் செய்பவர்

இந்த எட்டு குருவிலும் மிக முக்கியமாகக் கருதப்படுபவர் காரண குரு .இவர்தான் நம் ஆழ்மனத்தில் புகுந்து இறைச்சக்தியை வெளிப்படுத்த உதவுபவர் ,

குரு எப்படி இருப்பார்?

தாடியுடன் கமண்டலத்துடன் புலித்தோல் ஜடாமுடி யுடன் இருப்பாரா ?இதெல்லாம் தேவையா ?
இல்லை அவர் சிறு பையனாகவும் வரலாம் , கடவுளாகவும் இருக்கலாம் மகனாகவும் இருக்கலாம் இயற்கையாகவும் இருக்கலாம் எந்த வயதும் இருக்கலாம் எப்போது வேண்டுமனாலும் வரலாம் .
ஊத்துக்காடு வெங்கட கிருஷ்ணர் அவர்களுக்கு கிருஷ்ணர் மேல் பாட்டு பல பாட ஆசை ..ஆனால் அவருக்கு கற்றுக் கொடுக்க ஒருவரும் வராததால் கிருஷ்ண்ரிடமே முறையிட மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபல ஸ்வாமியின் மேல் பாட கண்ணனே குருவானார் ,தத்தாத்ரேயருக்கு இயற்கையே குருவாக இருந்தது
குரு சத் குருவைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை.நாம் அறிவை விட்டு ஆன்மாவை அடைய
முற்பட்டால் குரு நம்மைத் தகுந்த நேரத்தில் தேடி வருவார் ,
திருவருள் பெற குருவருள் வேண்டும் ,,நாம் ஒரு பெரிய பெயர் பெற்றஸ்தலத்திற்கு போகிறோம் .ஊர் புதியது
அந்த பிரம்மாண்டமான கோவிலில் எது முதலில் பார்க்க வேண்டும் எப்படி எல்லாம் போகவேண்டும்
என்பதற்கு ஒரு கைட் என்ற வழிக்காட்டி இருப்பான் ,அந்த வழிக்காட்டியின் துணையினால் நாம் ஒருவித்மான
பிரச்சனையும் இல்லாமல் முடிக்கிறோம் .இந்த வேலைதான் குருவினுடையது.நம் வாழ்க்கை என்ற
பயணத்தில் எந்தெந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எப்படி கடைசியில் கர்ப்பக்கிரஹமான
ஆன்மாவைக் கண் டு அதன் இறைச்சக்தியை அனுப்விக்க முடியும் என்று விவரித்து பாதைக் காட்டுபவர்
குரு.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

அன்புடன் விசாலம்

No comments: