Tuesday, May 8, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்" -1

நான் இந்த "எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும் " என்பதைப் பற்றி எனக்கு தில்லியில் பலவருடங்கள்(45)இருந்த அனுபவம் எழுத உந்தியது, இது பெரியதாக வளரும் என்பதால் சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதுகிறேன். படிப்பதற்கும் வசதியாக இருக்கும். தயவு செய்து படித்து ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இது என் வாழ்க்கையில் நடந்தாலும் இதிலிருந்து நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம். என்பதால் பகிர்ந்து
கொள்கிறேன். எனக்கு திருமணம் நடந்தபின் புதிதாக புதுக் குடித்தனம் செய்ய தில்லி நகரில் காலடி வைத்தேன். ஹிந்தி நன்றாகத் தெரியுமாதலால் மொழி பயம் இருக்கவில்லை. நாங்கள் தம்பதி சமேதராக வீட்டு வாசலில் வந்து இறங்கியதும், நான் உள்ளே நுழைய முற்பட்டேன். என் பெற்றோர்கள் ஞாபகம் வர கண்களில் நீர் முட்டியது. அப்போது ஒரு சிங் பெரியவர் வந்தார்,

"டஹரியே டஹரியே "என்று அன்பாகக் கூறி எங்களை நிறுத்தி பின் தன் மனைவியை கடுகு எண்ணெய் கொண்டு வரச் சொல்லி வாசலில் ஒரு ஓரமாக விடச் சொன்னார். திருஷ்டி கழிக்கிறாராம்,பின் அவர் மகனை அழைத்து எங்களுக்கு ஒரு பூச்செண்டு கொடுக்கும்படி சொன்னார், பின் ஒரு ஆரத்தியும் எடுத்து "பிடியா{bitiyaa} அபி அந்தர் ஜாயியே" என்றார். முன் பின் தெரியாத என்னை அவர் மகளே என்று அழைத்து நல்ல மரியாதையும் செய்து உள்ளே அனுப்ப நான் என்னையே மறந்தேன்.
என் கண்வர் காலை 8 மணி போனால் இரவு 7க்கு வந்த பின், திரும்ப எம்பிஏ வகுப்புக்குப் போய்விடுவார். அங்கிருந்து வரும் நேரம் 11 மணிக்கு மேலாகிவிடும், அப்போதெல்லாம் என் தனிமையைப் போக்கி தாய் தந்தை போல் பார்த்துக் கொண்டது அந்தக் குடும்பம்.
எனக்காக அந்தச் சர்தார்ஜி விட்டது இரண்டு... ஒன்று அசைவம் இரண்டு ஒரு சிறந்த நட்பு.
ஒருநாள் நான் முற்றத்தில் உட்க்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தேன் இரு குடும்பதினருக்கும் பொதுவான முற்றம், அப்போது அந்தச் சர்தார் கிஷன்சிங் வந்தார், கையில் ஒரு கோழி அதைத் தலை கீழே பிடித்துக் கொண்டிருந்தார் அது சிரசாசனம் போல் தொங்கியது, கால்கள் கட்டப்பட்டிருந்தன, நான் அதைப் பார்த்தேன்,
அவரும் விளையாட்டுக்கு அதை என்னிடம் கொண்டுவந்தார், அது என்னைப் பார்த்தது, என்னக்கண்கள்? பரிதாபமாக என்னை நோக்கியது. நடுநடுவே இறக்கைகளையும் அடித்துக் கொண்டது, அப்பப்பா அந்தக் காட்சி என் மனதை உலுக்கியது. நான் உள்ளே போய் என் கதவைச் சார்த்தி கொண்டேன். பின் கொஞ்சம் நேரம் கழித்து ஒரு மாதிரி அலறல் பின் மௌனம் குடிகொண்டது பின் "டக் டக் "என்றச் சத்தம். மெள்ள சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். இறக்கைகள் பிய்க்கப் பட்டு அங்கும் இங்கும் கிடக்க, கோழியின் தலையும் தனியே கிடக்க, இங்கே என் இதயம் படபட என்று அடித்துக் கொண்டன, டாய்லெட் முற்றத்தில் தான் இருக்கிறது ஆனாலும் மனம் அங்கு போக மறுத்தது இங்கு சைவம் அசைவம் பற்றி விவாததிற்கு இடமே இல்லை, அவரருக்கு எது பிடிக்குமோ அது செய்யலாம். ஆனால் அந்தக் கோழியை அழகாக அணைத்து வந்து பின் ஒரே போடாக வெட்டினால் அவ்வளவு வேதனை அது அனுபவிதிருக்காது, ஒரு உயிரின் வேதனை என் மனக்கண்னின் முன் நின்றது. இரவு தலைவலி பின் வாந்தி
என்று உடல் நிலை கெட்டது, மனதிற்கும் உடலுக்கும் எத்தனைச் சமபந்தம் உள்ளது? மறு நாள் சுரமும் வந்தது என் இதயமும் கோழி போல தானோ என்னவோ? இப்போது அப்படியில்லை... அனுபவம் எதையும் தாங்கும் இதயமாக ஆக்கி உள்ளது. மறு நாள் நான் எழுந்து வராததைக் கண்டு அந்தச் சர்தார் குடும்பம் என்னைப் பார்க்க ஆப்பிள் பழங்களுடன் வந்தது. "ஏன் மகளே! இப்படிப் படுத்து விட்டாய் ?"என்று பாசமுடன் என் தலை கோதிய படியே விசாரிக்க நான் அந்தக் கோழி சமாசாரம் சொன்னேன் அவ்வளவுதான்... அவர் " என் ஆசை மகளுக்காக இன்றைய தினத்திலிருந்து இந்த வீட்டிற்கு இனி கோழி வராது! என் மகளுக்காக நான் இதை விட்டு விடுகிறேன்" என்றார் என் கண் கலங்கி அந்த அன்பின் ஊற்றில் மிதந்தேன்...


வளரும்...
அன்புடன் விசாலம்.

அன்புடன் விசாலம்

No comments: