Saturday, May 12, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-4

என் வீட்டு மாடியில் இரு குடும்பங்கள்...வலது பக்கத்தில்... இரண்டு பக்கங்களிலும் தமிழர்கள் தான்,ஒரு பக்கம் மாயவரம்... இன்னொரு பக்கம் மதுரை...இங்கு இருக்கும் பஞ்சாபிகள், ஸர்தார்ஜிகள் மதராசி என்றால் உடனே வாடகைக்கு வீடு கொடுத்துவிடுவார்கள்.மதராசிகள்
நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்களென்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இப்போது நாம் வருவோம் மாயவர குடும்பத்திற்கு... அங்கு இருந்தத் தமிழன் பெயர் திரு சுந்தர்ராமன், சுந்தரமாக இருப்பான், சுதந்திரமாகவும் இருப்பான்.
அவனுக்கு அப்பா இல்லை... அவன் அம்மா மாயவரத்திலிருந்து தன் பிள்ளைக்குப் பிடித்த வடாம், கருடாம் என்று போட்டு எடுத்து கொண்டு அன்பு மகனைப் பார்க்க வருவார்.
அதுவும் கடுமை வெய்யில் இல்லாமல்... குளிரும் அவ்வளவு இல்லாமல் நவராத்திரி சமயம் வருவார். ஒரு 4 மாதம் இருப்பார் அவர் வரும் நேரம் நம் திருவாளர் சுந்தர்ராமன மிக சமத்துப் பிள்ளையாக மாறிவிடுவார். நோ புகை... நோ விஸ்கி... அந்த அம்மா வந்தால் அவ்வளவுதான், கூடவே மடி ஆசாரம் வந்து விடும்.அப்ப்ப்பா அந்தக் குளிரிலும் காலையில் தலைக்குக் குளித்து ஈரப்புடவையைச் சுற்றிக் கொண்டு வரண்டாவிலிருந்து... உள்ளே அறைக்குள் போவதற்குள் பல்லெல்லாம் கிடுகிடு என்று தந்தி அடிக்கும். ஜபம் என்ன... ஸ்லோகங்கள் என்ன... எல்லாம் முடித்த பின் தான் அவருக்கு தன் வயிறு ஞாபகம் வரும். அவள் தான் தோய்த்து வந்தத் துணிகளை மேலே கொடியில் உலர்த்துவதே ஒரு கலைதான். நான் ஒரு நாள் முயற்சி செய்தேன் ஒரு கொம்பால் அந்த ஒன்பது கெஜப் புடவையை இழுக்க, அது ஒரு பக்கம் சாய்ந்து என்மேலே விழ, திரும்ப முயல கழுத்து வலி எடுத்தது.

அந்த அம்மாவோ இரண்டு நிமிடத்தில் மேலே போட்டு "சர்" என்று கொம்பால் இழுக்க அவ்வளவுதான் அளவு எடுத்தது போல அவ்வளவு அழகாக அமைந்தது. பிரதோஷம் ஏகாதசி என்று விரதமும் இருப்பார்.
இந்த அப்பா ஸர்தார்ஜி வேண்டுமென்றே அவரை சீண்ட அங்கே எப்போதாவது போவார் வாடகை வாங்கும் போது... அந்த மாமி என்னைக் கூப்பிடுவார். "அடியே விசாலம்... இங்கே வந்து பாரேன் கருமம் கருமம் உள்ளே வந்து கிச்சனிலிருந்து தண்ணீர் குடிக்கிறா...
பக்கத்து துணிமேலேல்லாம் பட்டு... சிவசிவா..." நான் சொல்லுவேன்..." என்ன மாமி? நல்ல மனசுதானே முக்கியம். துணி பட்டால் என்ன? அவர் மிகவும் நல்ல ஸர்தார்ஜி" என்று...
அந்த மாமி ஒத்துக்கொண்டால் தானே...மிக பழமையில் ஊறிவிட்டதனாலோ... அல்லது நிறைய இடங்கள் பர்க்காமல் ஒரேஇடத்தில் இருப்பதால்தானோ என்று தோன்றுகிறது.

உடல் சுத்தம், உடைசுத்தம் தேவைதான் அத்துடன் மனசு சுத்தமும்
மிக மிகத் தேவை. அன்புக்கு முன் எல்லா சுத்தமும் வந்து விடுகிறது. அகத்தூய்மைடைய அடைய மனம் பரந்து விரிகிறது... எதாவது பண்டிகை வந்தால் இந்தச் சர்தார்ஜி இந்தக் குடும்பத்தினருக்கும் ஸ்வீட் டப்பா அனுப்புவார். அந்த மாமியோ அதை அப்படியே எனக்கு கொடுத்து விடுவாள். இதற்கெல்லாம் சேர்த்துவைத்து அந்தச் சுந்தர்ராமன் மாமியில்லாமல் இருந்தால் அவர்கள் வீடே பழியாகக் கிடப்பான்.
அவர்களுடன் உணவு கொள்ளுவான் எல்லா பழக்கமும் பழகி கொண்டுவிட்டான்.
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் கடைசி பாகத்தில் இது ரொம்ப முக்கியப் பங்கு வகிக்கும்...

வளரும்...

அன்புடன் விசாலம்.

No comments: