Saturday, May 12, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-5

அந்தச் சுந்தரராமன் வீட்டு எதிர் வீடு {neighbour}..அங்கு ஒரு தாயும் இரண்டு பையன்களும் குடி இருந்தார்கள், பெரியவன் சிவராமன் சின்னவன் சேதுமாதவன், அந்தத் தாய் நடு நடுவில் மதுரை போய் விடுவாள். அப்போது அந்த வீட்டைப் பார்க்க வேண்டுமே ஒரே சீட்டுக்கச்சேரி தான், ஒரே கும்மாளம் ஒரே சிரிப்பு.. அதற்கு நடு நடுவே
என் வீட்டிலிருந்து நொறுக்குத் தீனியும் டீயும் ஸப்ளை... அப்போது என் கணவர் கீழே வந்து என்னை டீ போடச்சொல்லி எடுத்துப் போவார், அவரும் தான் அந்தச் சீட்டுக்கச்சேரியில் பங்கு ஏற்பார்.எனக்கு அதில் ஏபிசிடி கூடத் தெரியாது, மேலும் மேலே அந்த அறைக்குப் போனால் ஒரே புகை மூட்டம் தான்... சிவ சிவ என்று ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பேன். அல்லது வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். அதைக் கேட்க நாலு சுவர் தான் இருக்கும் ஆத்ம திருப்திக்கு அது போதும் என்று மனது சொன்னாலும் பெரிய கச்சேரிகளுக்கு வாசித்த நான் இப்போது நாலு சுவருக்குள் என் கலைகளை அடக்க வேண்டும் என்றால் மிக சிரமாக இருந்தது... இது காரணமாக சனி ஞாயிறு வந்தால்... ஏன் வருகிறது என்று தோன்றும் அல்லது அந்த மதுரை மாமி எப்போது திரும்பி வருவார் என்று இருக்கும்... நாளைடவில் இதுவும் பழகிப் போயிற்று பாபிஜி என்று என் மேல் அவர்களுக்கு ரொம்ப ஆசை தமிழன் ஆனாலும் எல்லோருக்கும் நான் baabhiji தான்...
அந்தச் சிவராமனுக்கு இரவில் நடக்கும் வியாதி இருந்தது {insominia } ரொம்ப வேடிக்கை...
ஒரு நாள் இரவு... கீழே நான் குடி இருந்த இடத்தில் வந்து கதவைத் தட்ட நான் திறக்க அவன் நின்றான்... நான் "என்னவாயிற்று உன் அம்மாவுக்கு எதாவது..."என்று இழுத்தேன்.
அவன் ஒன்றும் சொல்லாமல் வந்த வழியே மாடி ஏறி திரும்பிப் போய்விட்டான் எனக்கு ஒரே ஆச்சரியம்! கீழே வருவானேன் பின் மௌனமாகப் போவானேன் என் தூக்கத்தைக் கலைத்து விட்டு... பின் என் கணவரிடம் மறு நாள் இதைப் பற்றிச் சொல்ல, அவர் இந்தத் தகவல் அதாவது தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று கூறினார்.
அவன் என்றாவது கீழே விழுந்து விட்டால் என் மனத்தில் ஒரு கீறல்... ஓ...சொல்ல மறந்து விட்டேனே... எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சக்தி intuition என்று சொல்வார்கள் அது உண்டு... என்ன இப்படி நினைக்கிறோமே... என்று எண்ணி அதை மறந்தும் விட்டேன்.
மதுரை மாமி வந்து ஒரு மாதம் ஆனது, எனக்கு அதில் மிக சந்தோஷம், என்னிடம் அவர் ஹிந்தி படித்தார். ஒரு நாள் இரவு... வேனில் காலம் ஒரே சூடு ஆகையால்...
முற்றத்தில் பல பக்கெட் தண்ணீர் விட்டு நாங்கள் எல்லோரும் அங்கு படுத்துக் கொண்டோம் ஒரு பக்கம் சர்தார்ஜி குடும்பம் மறு பக்கம் நாங்கள் மூன்று பேர்கள் நான்,என் மாமியார் அவர்கள், என் கணவர்...இரவு ஒரு இரண்டு மணி இருக்கும்,நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது, திடீரென்று டபார் என்று சத்தம் நான் வீல் என்று அலறி விட்டேன், எல்லோரும் எழுந்து பார்க்க சர்தார்ஜியின் மனைவி "கீ ஹுவா..." என்று பஞ்சாபியில் கேட்க, லைட் போட அப்பப்பா என்ன பயங்கரம் நான் நினைத்த காட்சிதான்... நடந்து விட்டது. அந்த சிவராமன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். மண்டையில் நல்ல அடி... நினைவு துளி் கூட இல்லை... அந்த இரத்தம் பார்த்து எனக்கு மயக்கமே வந்து விட்டது. உள்ளே ஓடி விபூதியை இட்டுக் கொண்டேன்.
என் கணவர் மிக தைரியசாலி பயம் என்பது அவரது அகராதியிலேயே கிடையாது.மேலே மாடிக்குப் போய் அந்த மதுரை மாமி {அவனது அம்மா}வை மணி அடித்து எழுப்பினார், இந்தச் சிவராமன் தூக்கத்தில் நடக்கும் வியாதியில் கதவு திறந்து வந்து பால்கனி வழியாக குதித்து விட்டான். அந்த மாமிக்கு நடந்த ஒன்றுமே தெரியாததால்...
"யாரு இந்த அர்த்த ராத்ரியிலே " என்று முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறக்க என் கணவரைப் பார்த்து திகைத்தாள். என் கணவர் அவரிடம் விஷயம் தெரிவிக்க அவள் கீழே ஓடி வந்து பார்த்தாள், பின் இரு கண்களையும் பொத்திக் கொண்டு மேலே தன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டாள். அதற்குப் பின் தன் மகன் என்ன ஆனான் என்று அவள் பார்க்க வராதது எப்படியோ இருந்தது, இரத்தம் பார்த்ததால் பயமா அல்லது மனதைரியம் குறைவா என்று நிர்ணயிக்க முடியவில்லை.
இந்தச் சர்தார்ஜியும் என் கணவரும் அவனை அலக்காகத் தூக்கி ஒரு காரில் வைத்து பல ஹாஸ்பிடலில் ஏறி இறங்க எல்லோரும் இந்தக் கேஸை எடுக்கத் தயங்கினார்கள்.பின் ஒரு ஹாஸ்படலில் இடம் கிடைத்து.
ஒரு 5 நாட்கள் ஆபீஸ் லீவு போட்டு அவனைப் பார்த்துக் கொண்டார்கள். பின் அவன் ஒரு மாதம் கழித்து வீடு வந்ததும் அவன் நண்பர்கள் அவனை turn by turn பார்த்துக்கொண்டனர். இன்று அவன் உயிருடன் இருப்பது அந்தச் சர்தார்ஜியியாலும் என் கணவராலும் தான்.

... அன்புடன் விசாலம்.

No comments: