Friday, May 18, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-7

என் வீட்டின் முன் புறம் இரண்டு கார் ஷெட்டுகள் இருந்தன, அதைச் சர்தார்ஜி சரி செய்து இரண்டு கடைகளுக்குக் கொடுத்திருந்தார். ஒன்று சாய் கடை... அத்துடன் பிஸ்கெட்ஸ், பன், பிரட், பட்டர் என்று காலை நாஸ்தாவுக்கு வேண்டியது கிடைக்கும், அத்துடன் ஆம்லெட்டும் செய்து கொடுப்பான். அவன் ஜய்பூரியன் பெயர்... முன்னா அவன் டீ போட்டால் நல்ல ஏலக்காய் மசாலாவுடன் வாசனைத் தூக்கும். குளிர் வந்தால் நல்ல அதரக் {இஞ்சி } சாய் மிகப் பிரமாதமாக இருக்கும். நானே பள்ளியிலிருந்து வந்தால் அங்கு இருந்து சாப்பிட்டு வருவேன். மற்றொரு கடை முடித் திருத்தும் நிலயம் அவன் பெயர் போலா..., கடையின் பெயர் "ராயல் முடி திருத்தும் நிலையம்". அவன் லாஹூரிலிருந்து வந்தவன். அவன் அங்கு இருப்பது என் கணவருக்கு மிக ஜாலிதான். ஒரு கூட்டம் இல்லாமல் ஒரு ஸ்பெஷல் கவனிப்பு... இவர்கள் இருவரும் மிக நல்லவர்களாக அன்பு உள்ளம் கொண்டவர்களாக இருந்தனர், என் வீட்டிற்கு ஒரு சரியான பாதுகாப்பு, நான் சில சமயம் தமிழ் பத்திரிக்கை வாங்க கதவைப் பூட்டாமல் இவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வேன் கவலையில்லாமல். தவிர நான் பள்ளியிலிருந்து பல கட்டு திருத்தும் தாள்கள் கொண்டுவர பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்குவேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களில் ஒருவன் ஓடி வந்து என் மூட்டைகளை வாங்கி வீடு வரை கொடுத்துதவுவான். ஒரு நாள் பள்ளியில் வேலை நிறைய இருந்ததால் நான் பஸ்ஸில் ஏறவில்லை. பின் ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு வந்தேன். என் வீடு வரும் முன் ஒரு நாற்சந்தியைக் கிடக்க வேண்டும், அங்கு போலீஸ் இருப்பதில்லை... தவிர டிராபிக் சிக்னலும் கிடையாது. இஷ்டத்திற்கு அவரவர்கள் ஓட்டுவார்கள் என் ஆட்டோ வீடு அருகில் வந்ததும் இறங்க ஏற்பாடு செய்துக் கொண்டு ஓரமாக வந்தேன். அப்போது ஒரு குண்டு வெடிப்பது போல் ஒரு பெரிய சத்தம் என் காதில் விழுந்தது. அதற்குப் பின் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை...நினவு வந்து கண் விழித்துப் பார்த்த போது சாய் கடையின் பெஞ்சில் படுத்திருந்தேன், எனக்கு நல்ல டீ போட்டு அந்தக் கப்புடன் அந்த தர்மா அருகில் இருந்தான். அவசரமாக எழுந்திருக்க முனைந்தேன், முடியவில்லை இடுப்பிலும் இடது கையிலும் நல்ல அடி.என் மனதெல்லாம் என் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் எங்கே போயிற்று? என்ற கவலையில் தான் இருந்தது... பின் என் குழப்பத்தைப் பார்த்து அந்த தர்மா, நடந்தைச் சொன்னான். ஒரு கார் என் ஆட்டோவை மோதி வேகமாக நிற்காமல் சென்று விட்டது. நான் நடை பாதையில் வீசி எறியப்பட்டேன், என் துப்பட்டா எங்கேயோ விழ, என் ஹேண்ட் பேக்கும் பறக்க என் பேபர்கள் அலங்கோலமாய் கீழே பரப்ப இந்தக் கடைக்காரர்கள் ஓடி வந்து, "ஆ மேம் சாஹப் " என்று அலறி அடித்துக் கொண்டு ' என்னைத் தூக்கி என் துப்பட்டாவை எடுத்துப் போர்த்தி இந்தக்கடையின் பெஞ்சின் மீது படுக்க வைதிருக்கிறார்கள் ,பின் எல்லா ஓடும் வாகனங்களை நிறுத்தி என் மற்ற பொருட்களையும் சேகரித்து வைத்தார்கள்...

வளரும்...
அன்புடன் விசாலம்.

No comments: