Saturday, May 12, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-6

நாங்கள் இப்போது ஒரே குடும்பத்தினர்.. எல்லாப் பண்டிகைகளும் சேர்ந்து தான் கொண்டாட்டம், அதில் வீடு பெருக்குபவர்கள் கக்கூஸ் பாத்ரூம் அலம்புபவள் எல்லோரும் ஒன்றுதான். எலோரும் வருவார்கள், என் வரலட்சுமி பூஜைக்கு அவர்களுக்கும் தாம்பூலம் உண்டு. முதலில் அவர்களுக்கு அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.
நானே அவள் நெற்றியில் குங்கும் வைப்பேன் அவர்கள் என் அன்பில் நெகிழ்ந்து போவதைப் பார்த்து நான் மனம் பூரித்துப் போவேன். அதே போல் அவர்களும் ஹோலி வர்ணங்களின் பண்டிகையின் போது என் மேல் கலர் பூசுவார்கள் நான் இட்லி செய்தால் ஒரு ஐம்பதாவது செய்ய வேண்டும் அத்துடன் குட்டி வெங்காயச் சாம்பார் வேறு, கப்பு..கப்பாக அந்தச் சர்தார்ஜியின் குடும்பம் குடித்து விடும், அவ்வளவு அதன் மே ஆசை, இதே போல் மசால் தோசா ஊத்தப்பம் என்று பல செய்ய... எனக்கு கிச்சன் விட்டு எப்படா போகலாம் என்று தோன்றினாலும் அவர்கள் திருப்தியுடன் " பஹுத் அச்சா... பிடியா கீ ஹாத் கி க்மால் " என்று அனுபவித்து சாப்பிடும் போது நான் அனுபவிக்கும் இன்பமே தனிதான். எப்போதுமே விரும்பி உள்ளனபுடன் சமைத்தால் அதன் டேஸ்டே தனிதான். சில கோவில்களில் குருத்வாராக்களில் கொடுக்கும் சொஜ்ஜிப் பிரசாதம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும் . இதே போல் அவர்களும் எனக்கு சோலே மட்டர், பன்னீர் ஆலு, கோபி தந்தூர் கி ரோடி என்று கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பஞ்சாபி சமையல் என்றும் எனக்குக் கை கொடுக்கிறது. அதே போல் பஞ்சாபி மொழியும் தான், ஆனால் அவர்களுக்கு வா... போ... இல்ல... வேண்டா... என்ற நாலைந்து சொற்கள் தான் வநதன. பாவம் முயற்சி செய்து விட்டு விட்டனர்.
அந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு முஸ்லிம் நண்பர் மிகவும் வயதானவர் அப்துல் என்று பெயர் ஒரு தடவை என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என் அப்பா சிங்.
இதற்கு நடுவில் எனக்கு டைபாய்டு சுரம் வந்து விட்டது, அந்த நேரம் என் மாமியார் அவர்களும்,சென்னைக்கு வந்திருந்தார், நான் தனித்து விடப்பட்டேன். என் கணவருக்குW HO ல் நிறைய டெலிகேட்ஸ் வந்து இருந்ததால் லீவு எடுக்க முடியவில்லை,அப்போது எனக்கு காலை டீயிலிருந்து கவனித்துக் கொள்ள அவர்கள் வந்து விடுவார்கள், கூடவே அந்த முஸ்லிம் சாஹபும் உதவுவார், எத்தனை வைத்தியம் செய்தும் எனக்கு சரியாகவே இல்லை, வீட்டில் எல்லோர் மூடும் கராப் தான்.
நான் என்ன செய்வது மனதிற்குள் இப்படி படுத்து கொண்டுவிட்டோமே என்று வேதனை.
அப்போது தான் அந்த முஸ்லிம் ஸாஹப் "நஜர் லக் கயா ஹொகா "(கண் திருஷ்டி ஆக இருக்கும்) என்று சொல்லி அதற்கு என்னை ஒரு மஸ்ஜிதிற்கு அழைத்துப் போவதாகக் கூறினார். அப்போது இருந்த நிலையில் எதைத் தின்னால் பித்தம் தெளிடும் என்ற நிலை, ஆகையால் என் கணவரும் ஒகே சொல்லி விட்டார். நான் சிங் பின் அந்த அப்துல் சாஹப் மூன்று பேர்களும் ஒரு ஆட்டோவில் ஏறி சாந்தினி சௌக்கில் சென்றோம். அங்கு ஒரு மரத்தடியின் கீழ் வயதான முஸ்லிம் கிழவர் ஒரு மயில் தோகையுடன் உட்க்கார்ந்திருந்தார். அவர் அருகில் ஒரு மூக்கு வைத்த நீள் ஜாடியில் தண்ணீர் இருந்தது, என்னை அவர் முன்னால் உட்க்கார வைத்தார்கள், நான் எனக்குப் பிடித்த சீரடி சாயி என்ற நாமம் விடாது சொல்ல அவரும் ஒரே புகையாக எதோ போட்டு என்னைச் சுற்றி அபிரதட்சிணம் என்று சுற்றி திருஷ்டிக் கழித்தார். பின் என் கையில் ஒரு தாவீஜ் (தாயத்து) கட்டினார். சர்க்கரை மிட்டாயும் கொடுத்தார். அவ்வளவுதான் நிறைய ஆசிகளுடன் திரும்பி வந்தேன். அந்த முஸ்லிம் அப்துலுக்குத்தான் எவ்வளவு அன்பு, மிகவும் வியந்தேன். அன்புக்கு ஜாதி மாதம் ஒன்றும் இல்லை! அது எல்லாவற்றுக்கும் அப்பால்பட்டது. இத்தனை நடந்தும் அந்த மாடி வீட்டு மாமி மாலை என்னை வந்து பார்ப்பாள் காலையில் அவர் பூஜை மடி ஆசாரம் போன்ற விஷயங்கள் அவரை கீழே வர விடாமல் தடுக்கும், ஆனால் பின்னால் நான் அவருடன் பேசி பேசி அவரை மாற்றி விட்டேன். அது ஒரு தனி கதை...


வளரும்...
அன்புடன் விசாலம்

1 comment:

Geetha Sambasivam said...

உங்க ப்ளாகைப் பார்க்கலாம்னு வந்தேன். ஆனால் பார்க்க முடியலை. ப்ளாகின் விலாசம் இல்லை. கமென்ட் மட்டும் போட்டுட்டு போறேன்.