Thursday, May 3, 2007

அமெரிக்காவில் ஒரு கோவில்!


ஒரு கோவில்... அந்தக் கோவிலைத் தொட்டபடி ஒரு உணவு விடுதி, அந்த இடத்தில் பலதரப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைகின்றனர், பின்னர் ஸ்வாமி தரிசனம் பிறகு நேரே சிற்றுண்டிச் சாலைக்குள்ளும் போய் அமர்ந்து வயிற்றுக்கும் பூசை நடக்கிறது, எல்லோரும் ஒரு வெட்டு வெட்டின பின் ஐஸ்க்ரீம்
கையில் வர அதை ஆனந்தமாக உதடுகளில் வைத்துச் சுவைக்கிறார்கள். ஆம் அந்தக் கோவில் ஷிகாகோ என்ற நகரில் எல்மாண்ட் என்ற இடத்தில் உள்ளது. முன்னால் பெரிய ராஜ கோபுரம் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது. அது பூமியின் சமபரப்பின் அளவைவிட சற்று உயரத்தில் கட்டப் பட்டிருப்பதால்... எங்கிருந்தாலும் நன்றாகப் பார்க்க முடிகிறது. ஸ்ரீராம இலட்சுமண சீதா தேவியுடன் நமது அனுமாரும் காட்சித் தருகிறார் இதைத்தவிர நவகிரஹம், ராதா கிருஷ்ணா, ஸத்யநாராயணா, இலட்சுமி வெங்கட்ரமணர் என்று பல பிரதிஷ்டை செய்யப்பட்டிருகின்றன. அங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று என்னவென்றால்... நமது பாரதீய ஸம்ஸ்கிருதியை விடாமல் மாணவிகளுக்கு கோலம் போட, மெடிடேஷன், யோகா வகுப்புகள், இசை நாட்டியம், ஓவியம் என்று பலவிதமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பகவத் கீதை திருப்புகழ் என்றும் வகுப்புக்கள் நடக்கின்றன. அத்துடன் கோவிலில் ஜன்மாஷ்டமி, வரலட்சுமி பூஜை, தசரா, தீபாவளி, கார்த்திகை தீபம் என்று விடாமல் எல்லா விழாக்களும் நடத்துகின்றனர். சிற்றுண்டிச் சாலையிலும் புளியோதிரை, வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், வடை, இட்லி, தோசை சட்னி என்று இருப்பதைப் பார்த்தால் எங்கே தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஸ்வாமிக்கு செய்த பிரசாதங்களை இங்கே வழங்குகிறார்கள் என்று நினக்கிறேன். நிறைய அமெரிக்கர்களையும் இங்கு நான் பார்த்தேன். பொதுநலத்தொண்டும் அன்னதானமும்
நடக்கின்றன பண வசதி இல்லாமல் படிப்பு விட்டவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவுகிறார்கள். சில சமயம் நான் சென்னையில் இருக்கிறேனா என்று கூடத் தோன்றியது. நமது இந்தியர்கள் வெளி நாடுகளில் உள்ளன்போடு மனம் ஒன்றி பல நல்ல காரியங்களைச் செய்து பாரத நாட்டின் கலாசாரத்தைப் பரப்பி வருவது மனதிற்கு மிக ம்கிழ்ச்சியைத் தருகிறது.


அன்புடன் விசாலம்

1 comment:

jeevagv said...

சிகாகோ கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை, ஆனால் பல அமெரிக்காவின் பல ஊர்களிலும் இப்போது இந்துக் கோவில்கள் வந்துவிட்டன. பெரும்பாலும், தென் இந்திய முறைப்படி கோபுரங்களுடன்...
இதோ அட்லாண்டா கோவிலின் வலைத்தளத்தப் பாருங்களேன்:
http://www.hindutempleofatlanta.org