Sunday, June 3, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-10


இந்திரா மரணம்... இந்தியா...மரணம்!

எத்தனை இந்து சீக்கியர்களிடம் சகோதரர்களாக பழகி வருகின்றனர். இதே போல் சீக்கியர்களும் இந்துக்களிடம் அன்புடன் தான் பழகி வந்தனர், இரண்டாம் தேதி, காலை... ட்ரிங்...டிரிங்... என் டெலிபோன் அலறியது, "ஹலோ" நான் பேச ஆரம்பிப்பதற்குள் என் தோழி அவசரமாக செய்தி தெரிவித்தாள் "விசாலம் ஒரு கூட்டம் உன் வீட்டு முதல் ரோட்டில் கிருஷ்ணா மார்கெட் அருகில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்த ரகளை உங்கள் ரோடுக்குத்தான் எனென்றால் உன் தெரு முழுவதும் சர்தார்ஜி குடும்பம் தான், ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்" எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.என் வீட்டு வாசலில் கொட்டையாக "சர்தார் கிஷன் சிங்" என்ற வர்ணப்பலகை அடிக்கப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பார்த்து இன்னும் கவலை அதிகமாயிற்று, கண்டிப்பாக அவர்கள் உள்ளே வந்து கொலைதான் நடக்கும் என்று பயந்தேன். எப்படியேனும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மனதில் ஒரு சக்தி பிறந்தது. நேரே ஷீரடி பாபாவின்படத்தருகில் போய் பிரார்த்தனை செய்தேன்,

"பாபா என் சர்தார்ஜி அப்பாவின் குடும்பத்தைக் காப்பாற்று" ஒரு ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைச் செலுத்தினேன். எனக்கு இதில் மிக நம்பிக்கை உண்டு. பின் சர்தார்ஜியிடம் போய் நானும் என் கணவரும் அவரிடம் இது பற்றி சொன்னோம், பின் அவர்களை ஒளித்து வைக்க பல யோசனைகள், எங்கே ஒளித்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று தலையைப் பிய்த்துக் கொண்டோம். பின் நான் அவர்களை என் குளிக்கும் அறைக்குள் அனுப்பி அந்தக்குண்டர்கள் வந்தால் நானும் குளிப்பது போல் குளியலறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ள தீர்மானித்தேன், நான் குழாயைத் திறநது குளிப்பது போல் ஏமாற்ற திட்டம் இட்டோம். மாடியில் இருந்த திரு சுந்தரராமனின் தாய் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த மடி ஆசாரம் பார்க்கும் மாமியின் மனமும் பரிதவித்தது அவசரமாகப் படி இறங்கி கீழே ஓடி வந்தாள் "விசாலம் இப்போது கூட நான் உதவலேன்னா நான் மனுஷியே இல்லை" என்று சொல்லி அவர்கள் வீட்டுக்குள் போய் அவர்கள் வீட்டு பெண் மாப்பிள்ளை இருவர் கைகளையும் பிடித்து தமிழில் "வாங்கோ என் வீட்டிற்கு நான் காப்பாற்றமாட்டேனா நன்னாயிருக்கே... என்று கூறி அவர்களை அணைத்தாள். மடி ஆசாரம் அங்கு மறைந்தது அன்பு அங்கு பிறந்தது நானும் அவர்களுடன் மாடி ஏறி ஓடினேன், ஜல்தி... ஜல்தி... என்று சொல்லியபடியே அவர்களை மறைக்க இடம் தேடினேன் கிடைத்தது. பெரிய ரஜாய் பெட்டி அந்த ரஜாய் பெட்டிக்குள் அமர யோசனைக் கூறிவிட்டு கீழே வந்தேன். அந்த மாமி அவர்களை அந்தப் பெரிய ரஜாய் பெட்டிக்குள் இறங்க உதவி செய்து பின் மூடிவிட்டு மேலே பழைய புடவைகளைப் பரப்பினாள்...

....வளரும்

அன்புடன் விசாலம்

No comments: