Saturday, March 31, 2007

ஓணம் பண்டிகை!


கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை ஓணம் திருவோண நட்சத்திரத்தில் வருகிறது தீபாவளிப்
போல் மிகச் சிறப்பாக இதைக் கொண்டாடுவார்கள். விடிகாலையில் வாசலில் சாணம் இட்டு மெழுகி
பின் கோலமிட்டு பூவினாலேயே அலங்கரிப்பார்கள். நடுவில் பெரிய குத்துவிளக்கு வைத்து சுற்றி நின்று
கைக்கொட்டுக் களி என்ற நடனத்தை ஆடுவது கண்கொள்ளா காட்சியாகும் அவர்கள் எல்லோரும்
வெள்ளைக் கலர் முண்டும் மேலே அதே போல் ஒரு முண்டும் உடுத்திக் கொண்டு கையைத் தட்டி
தாளத்திற்கேற்ப அசைந்து ஆடுவது நம்மை வசீகரிக்கும், எல்லா பண்டிகைப் போல் புதிய உடைகள்
அணிந்து, நல்ல விருந்தும் வைப்பார்கள், அவியல் பால் பாயசம் முக்கியமாக இருக்கும் நேந்திரம் பழம்
நிச்சியமாக உண்டு தவிர பலவிதப் போட்டிகளும் நடக்கும். அதில் ஓடம் ஓட்டும் போட்டி மிகப் பிரமாதமாக இருக்கும், ஓடப்பாட்டு மிக இனிமையாகக் காதில் பாயும். "செம்மீன்" ஓடப்பாட்டு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
இந்த ஓணப் பண்டிகையைக் கொண்டாடும் காரணமென்ன? புராணக் கதையைப் பார்க்கலாம் ஒரு எலி சிவன் கோவிலில் விளக்கு அணையும் தருணத்தில் அதன் திரியைத்தூண்டி விளக்கை எரியச் செய்தது.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல நாட்கள் செய்ததால் சிவனின் உள்ளம் குளிர்ந்து அந்த புண்ணிய
செயலின் காரணத்தால் அடுத்த ஜன்மத்தில் மூன்று உலகமும் ஆளும் வரம் தந்து விட்டார்.
அடுத்த பிறவியில் ப்ரஹ்லாதனின் மகன் வீரோசேனனுக்கும் அவன் மனைவி தேவிக்கும் ஆண்குழந்தை
{எலியின் மறு பிறப்பு }பிறந்தது அதற்கு பலி என்று பெயரிட்டனர். பலியின் குரு சுக்கிராச்சாரியார்,
பலி தன் குருவிடம் அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். அவரிடம் தான் மூவுலகத்திற்கும் தலைவன் ஆக
வேண்டும் என்று கூறினான் அந்த குரு மூலம் ஒரு யாகமும் செய்து. மூன்று உலகையும் ஜெயித்து
சக்கிரவர்த்தியும் ஆனான், அதனால் மஹாபலி என்ற பெயரும் பெற்றான்
தேவர்கள் அவனைக் கண்டு நடுங்கி தேவலோகத்தை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் குரு பகவானிடம்
ஓடிப்போய் முறையிட்டனர். குருபகவான் "உங்களைக் காக்கும் திருமால் காசிப முனிவருக்கும் அதிதிக்கும்
பிறந்து குள்ளவடிவில் வாமனனாக அவதரிப்பார் என்றார்
எம்பெருமான் அதே போல் அவதரித்து வளர்ந்தார் வாமனருக்கு பூணல் போடும் தருணம் வந்தது
சூரியன் காயத்திரி சொல்லிகொடுக்க வானம் அழகிய குடைக் கொடுக்க

குபேரன் தங்க பிட்ஷைப் பாத்திரம்
கொடுக்க பூமாதேவி மான் தோல் கொடுக்க, மஹாபலி பிட்சைக் கேட்க நேரே மஹாபலியிடம்
சென்றார் மஹாபலி யாகம் செய்து கொண்டிருந்த்தார் குள்ள உருவத்துடன் மிக ஒளி பொருந்திய
பிரும்மசாரி குடைப் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பரவசமாகி கேட்பதெல்லாம் கொடுக்கிறேன்
கேளுங்கள் என்று கூறினார். "நீதான் பிரஹ்லாதனின் பேரனாயிற்றே எனக்கு ஒன்றும் பெரிதாக வேண்டாம்
மூன்று அடி மண் கிடைத்தால் போதும் " என்றார். "மூன்றடி மண்ணா! அதற்கா வந்தீர்கள்!அது போதுமா?"
"போதுமப்பா அதுவும் என் காலால் மூன்றடி மண் போதும்.

ஆசைப் படக் கூடாது" என்றார்.
அப்போது சுக்ராசார்யார் "வந்திருப்பது மஹாவிஷ்ணு அவரால் உன் உயிர் போகப் போகிறது.
விச்வரூபம் எடுத்து ஒரு காலை உன் தலயில் வைத்து அழுத்தப் போகிறார்" என்றார்.
அதற்கு மஹாபலி "அந்த மஹா விஷ்ணுவிற்கு தானம் கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது சாதாரண
விஷயமில்லை நான் பெரும் பேறு பெற்றிருக்கிறேன்"என்றார்.
அப்போது தானம் கொடுக்க வைத்திருக்கும் கமண்டலத்தின் துவாரத்தை தன்னை வண்டாக மாற்றிக்கொண்டு
உள்ளே சென்று அடைத்துவிட்டார். வாமனர் அந்த துவாரத்தை ஒரு குச்சியால் குத்த சுக்கிராசார்யாருக்கு
ஒரு கண்குத்தப்பட்டு வீணானது , வாமனர் இப்போது விச்வரூபம் எடுத்தார். ஒர் அடி மண்ணுலகிலும்
ஓர் அடி விண்ணுலகிலும், வைத்துவிட்டார் , மூன்றாவது அடி எங்கே வைப்பது? விச்வரூப பாதத்திற்கு
நிலம் போதாதே ! அப்போது மஹாபலி " திரும்பவும் சின்ன வாமனராக மாறி உங்கள் திருப் பாதத்தால்
என் சிரசை அளந்து கொள்ளுங்கள்" என்று மண்டி போட்டு தலை குனிந்தான்
வாமனர் தலையில் பாதத்தை வைத்தவுடனே

பாதாள லோகத்தில் தள்ளப் பட்டான். விஷ்ணு தரிசனம் கொடுத்து
பின்னர் இந்திரப் பதவிக் கொடுப்பதாக கூறினார். அங்கு இருந்த குடிமக்கள் தங்களை விட்டு மஹாபலி போவதைப் பார்த்து வருந்தினர் அப்போது "வருடத்தில் ஒரு நாள் திருவோண நட்சத்திரத்தில் பாதாள

லோகத்திலிருந்து மேலேவந்து உங்களுக்கு தரிசனம்
கொடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்தான். இந்த ஓனம் அன்று மஹாபலி வந்து ஆசி கொடுப்பதாக
ஐதீகம் இந்தக் கதையை குழந்தைகளுக்கும் சொல்லலாம்.

ஒணம் அன்று இதைப் படித்தல் மிகமிக
நலம் கொடுக்கும்
எந்தக் கதை எப்படி இருந்தாலும் ஓணக்களி, கதக்களி, ஒடப்போட்டி, கேரளத்து அழகு பெண்கள்,
பூக்களின் கோலம் என்பதை ரசிப்பதற்காவது கேரளா செல்லலாம். இயற்கையின் அழகே அழகு!
மஹாபலியின் ஆசிகளை நாமும் பெறுவோமாகுக ஹேப்பி ஓணம்..!


விசாலம்

No comments: