Thursday, March 29, 2007

ஒரு ஆடு மனம் திறக்கிறது


ஆடி மாதம் வந்து விட்டால்,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்,
எங்கள் இனத்திற்கு திண்டாட்டம்,
என் வயிற்றில் புளியைக் கரைக்க,
என் மகனை நான் தேடுகிறேன்,
இன்னும் எங்கே போனான் அவன் .
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தேன்
ஓடி வந்தான் என் மகன்,
க்ழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள்,
கொம்பின் நடுவில் குங்குமம்
அழகாக மின்னினான் .

"அம்மா! எனக்கு பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்?"


மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து


"மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்"
ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான்
நான் மே,,,மே,,, என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன். கேட்டேன்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை,
கீழே இறங்க முடியாமல் மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர், மகாவீரர், அன்னை தெரசா
என்று பலபேர் வந்து வந்து போனார்கள்.
என் கண் முன்னே.,
அவர்கள் பரப்பிய அஹிம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா?
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?

விசாலம்

No comments: