Saturday, March 31, 2007

அம்மா, அப்பாவைக் காணோமே…..!

தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி? அதிலும் மிக சிறப்பு சொல்லான அப்பா, அம்மா, எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? மிகப் பழமையான மொழி தமிழ் மொழி அது தமிழ் நாட்டிலே பல ரூபம் எடுத்துள்ளதே; நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பாம்பேயில்{மும்பை} வளர்ந்தது முழுவதும் மராட்டி பாரம்பரியத்தில். இருப்பினும் தமிழ் நம் தாய் மொழி என்று அதை விடாமல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை மராட்டியர்கள் ஒருவர்கொருவர் பார்த்துக்கொள்ளும் போது மராட்டி மொழியில் தான் பேசிக் கொள்வார்கள் ஆங்கிலம் நடுவில் வராது “கஸ ஆஹே? என்று கேட்பார்கள் “சாங்லே ஆஹே என்று பதில் வரும் நாம் பேச "ஐ ஏம் ஃபைன் தேங்க்யூ" என்கிறோம் அவர்களுக்கு தேசப் பற்றும் மொழிப் பற்றும் மிக அதிகம் அழகாக அம்மாவை வாய் நிறைய"ஆயீ" என்று அழைப்பார்கள், அப்பாவை "வடீல்"அல்லது பாப்பூ என்பார்கள். என் திருமணம் ஆன பின் போன இடமோ தில்லி, அங்கும் எங்கு திரும்பினாலும் ஹிந்தி அல்லது பஞ்சாபிதான் அங்கும் அப்பாவை பிதாஜி,பாபூஜி என்றும் தாத்தாவை பாயாஜி என்றும் :அம்மாவை மா அல்லது மாஜி என்று மரியாதையாகக் அழைப்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு "ஜி" சேர்த்துத்தான் பேசுவார்கள் இதனால் குழந்தைகளும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள்கின்றன தற்போது சில வருடங்களாக சென்னையில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒருவரிடமிருந்தும் அம்மா என்றோ, அப்பா என்றோ கேட்கவில்லை எங்கு திரும்பினாலும் "மம்மி, டாடி"தான். பள்ளியிலும் ஆசிரியர்கள் "உன் 'மம்மி'யை அழைத்து வா"என்றோ "டாடி"யிடம் கையெழுத்து வாங்கி வா" என்றும் கூறுகின்றனர். இதை விட்டால் அங்கிள் அல்லது ஆன்டி. தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சிறந்த சொல்லான தாயை அன்பொழுக "அம்மா என்று அழைத்தால் அதன் இன்பமே இன்பம் அதை விட்டு ஏன் ஆங்கிலத்தில் புகல வேண்டும்? ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது ஹாய்., டியர், என்றெல்லாம் வார்த்தைகள் வருகிறதே வடநாட்டில் ஒருவர்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது ராம்ராம் பாயி. என்றோ ஜய் சீதாராம் என்றோ ஜய் மாதா தி என்றோ கூறுவார்கள் சாய் பக்தர்கள் பார்க்கும் போது ‘சாயிராம் என்பார்கள் கிருஷ்ண ப்ரேமியை ஆதரிப்பவர்கள் ஜய் ராதே க்ருஷ்ணா என்றும் இஸ்கான் குழுவும் ஹரே கிருஷ்ணா என்றும் கூப்பிடும் போது நாம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? கடவுள் பெயர் சொல்லும் போது அதன் ஒலி அலைகள் நம்மைச் சுற்ற பதிவாகி நற்றலைகளால் சூழ்நிலை சுத்தமாகிறது அதை விட்டு "ஹாய" என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனியாவது வரும் சந்ததிகளுக்கு அழகான இனிமையான அம்மா, அப்பா, மாமா மாமி போன்ற சொற்களையும் தமிழ் மொழியில் பேசும் ஆர்வத்தையும் ஊட்ட வேண்டும் மம்மி டாடியை ஒளித்து வைத்திடுவோம். பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் மிகவும் வரவேற்கும் விஷயம்தான் ஆனால் தமிழ் மொழிக்குத்தான் முதல் இடம் தர வேண்டும் சில பெற்றோர்கள் "என் குழந்தைக்கு இங்கிலீஷ் தான் தெரியும் தமிழ் பேச வராது என்று பெருமையாக சொல்லுவார்கள் அப்போது என் மனம் வருந்துகிறது. பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும் தமிழ் கற்க உதவுங்கள் நம்மை பெற்ற தாயை உதறுவது நியாயமாகுமா? "தாய்க்குப்பின் ..தாய் மொழிக்குப்பின். பின் தாய் நாடுக்கு முதல் இடம் கொடுங்கள்." "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப் போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாரதி சொல்கிறார் தாய் மொழி வாழட்டும். தாய் மொழி வளரட்டும்.

விசாலம்

No comments: