Friday, March 30, 2007

வரதட்சிணை என்ற பேய்….

வரதட்சிணை என்ற பேய் ,
என்னைத் துரத்தி துரத்தி வருகிறதே,
பேராசைப் பிடித்த அம்மாக்கள்,
சுயநலமிக்க கணவர்கள்,
அதைத் தட்டிக்கேட்காத அப்பாக்கள்,
ஆ,,,,என் கண் முன்னே சுழல சுழல,
சினிமாப் படம் போல் சுற்றிச் சுற்றி வருகிறதே.
முதல் காட்சி,
பெண் பார்க்கும் படலம் ,,,என்னைத்தான்,
ஒரு ஆணழகன் வந்தான் ,
கூடவே ஒரு கூட்டம் ,
பஜ்ஜி, சொஜ்ஜி தட்டுகளில்
சுடச் சுட காபி என் கையில்
பொம்மைப் போல் என் அலங்காரம்
இயந்திரம் போல் நமஸ்காரம் ,
என் அழகை ரசித்த பல கண்கள்
கேட்டதோ எண்பது பவுன் நகை
என் மனதில் எழுந்ததோ எரியும் புகை
சீர் என்ற பெயரில் பலவரிசை,
காட்டினார்கள் தன் கை வரிசை,
இடிந்து போனார் என் அப்பா,
ஒடிந்துப் போனது என் மனமும் தான்
காட்சி இரண்டு ஆரம்பம்,
வந்தான் அம்மாவுடன் ஒரு செல்லப் பிள்ளை,
சாவி முடுக்கிய பொம்மையானேன்,
ஒரு போலி புன்னகை என் முகத்தில்
இனிப்பு காரம் என் கையில்,
ஸ்ல்வார் கமீஸில் என் அலங்காரம்,
வணங்க மறுத்தது என் மனம்
சிலை போல் நின்றேன் ஒரு ஓரத்தில்,
மனம் அசை போட்டது,
நான் பாஸா, பெயிலா? தீர்வு என்ன?
"ரொம்பத்திமிர் இந்தப் பெண்"
முணுமுணுத்தாள் ஒரு மாது.
மனத்தில் பாரம் அழுத்தியது,
அதேபாட்டு அதே பல்லவி,
"வரதக்ஷிணை ஒன்றும் வேண்டாம்,
ஆனால் பிஸினஸ்க்குப் பணம் வேண்டும் "
முதல்வனைவிட மிஞ்சிவிட்டான் .
கேட்டும் விட்டான் பல லட்சங்கள்.
உடைந்து போனாயே அப்பா நீ,
எப்படி உதவி செய்வேன் நான்
மூன்றாவது காட்சி ஓடுகிறது
சகோதர சகோதரியுடன் வந்தது ஒரு குடும்பம்,
பழக்கூடையுடன் வாசனைக்கதம்பம்
சாந்தம் அன்புடன் ஒருத் தோற்றம்
திருமணச்சிலவுடன் சிறு ஏற்றம்
சாந்தம் அன்புடன் ஒரு தோற்றம்
அப்பாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,
என் தோற்றத்தில் ஒரு கவர்ச்சி.
"உங்கள் வீட்டுப் பெண்,
எங்கள் வீட்டு செல்லம்,
சொன்னாள் என் வருங்கால அத்தை,
பின்னால் தெரிந்தது எனக்கு
நான் விழுந்தது ஒரு பள்ளம்,,
அம்மாவின் படத்திற்கு மாலையிட்டேன்
அவன் எனக்கு மாலையிட்டான்.
நான்காவது காட்சியின் க்ளைமேக்ஸ்,
நாலு மாதங்கள் ஒடிவிட்டன.
ஆபீஸ் தொலைவு ஒரு கார் தேவை,
தொடர்ந்தது நச்சரிப்பின் உச்சம்
முளையிட்டது வெறுப்பின் ஆரம்பம்
என் இன்பக்கதவு மூடியது
வாழ்க்கையில் மேகம் சூழ்ந்தது
"மாப்பிள்ளை கார் கேட்கிறார்"
நெஞ்சம் அழுதது குரல் கொடுத்தேன்
காரும் வந்தது ஒரு மாதத்தில்
ஆனால் ஏறி அமர பிடிக்கவில்லை
உயிர் போக மாடாய் உழைத்த
அந்த அப்பாவின் ரத்தமல்லவா?
என் வாழ்க்கையைக் காப்பாற்ற
ஒரு தியாகச்செம்மல் ஆகிவிட்டார்
முதல் வருட சீர் வரிசை
முதலைப் போல் விழுங்கியது
வாய் ஒடுக்கி வயிறு ஒடுக்கி
கடன் தொல்லையால் மனம் புழுங்கி
நடைபிணம் ஆனார் என் அப்பா.
பசுத்தோல் போர்த்திய புலி போல்
அமைந்துவிட்டது என் புகுந்த இடம்
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்"
என் அப்பா என் கண்முன் ஒரு ஏசு ஆனார்.
என் அப்பாவின் எலும்பை எண்ணுகிறேன் ,
மனத்திற்குள் புழுங்குகிறேன்,
என் நல் வாழ்க்கைக்காக
உன் வாழ்க்கைத் தியாகம் ஏனப்பா?
வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்திப்போல்,
என் வாழ்வு சிறக்க உருகினாயோ?
அப்பா வரதக்ஷினைப் பேய் என்னைத்
துரத்தித் துரத்தி வருகிறதே,,,,,,,,,,,


விசாலம்

No comments: