Saturday, April 14, 2007

"தியாக ப்ரம்மம்"-கதா காலட்சேபம்!

இந்தக் கதா காலக்ஷேபத்தில் என் கண் முன் ஸ்ரீ எம்பார் விஜயராகவாசாரியார்..பிரும்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷதர் அவர்கள் வந்து அவர்கள் குரல் காதில் ஓதுவது போல் இருக்கிறது.
ஆகையால் அவர்கள் சொல்வது போல் முயற்சி செய்திருக்கிறேன் இதில் தியாக பிரும்மத்தின் ஸ்ரீராமபக்தியைக் காணலாம்!
இது ஆன்மீக அன்பர்கள் படிக்க வேண்டும் என்று என் ஆசை..!


"ஜானகீ காந்தஸ்மரணம்...ஜெய ஜெய ராமா ராமா...
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாய பதயே நம:

சங்கீத மும்மூர்த்திகள் தெரிமோனோ..! ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷதர், தியாகராஜ ஸ்வாமிகள் திருஸ்வாதித் திருநாள்... அதுலே தியாக பிரும்மம் பத்தி கேழ்விப்படிருப்பேளே... அவர் பெரிய சங்கீத மேதைனாள்... இசை சக்ரவர்த்தி. எபோதும் அவர் வாயிலே ஸ்ரீ ராம நாமம் தான்...தன் நினைப்பே இல்லாமல் ராம நாம ஸ்மரணையிலே மூழ்கிப் போயிடுவார். சாப்பாடு வேண்டாம், தூக்கம் கிடையாது..."ஹே ராமா! எப்போதும் நீ என் கூடயே இருக்கணும்... நான் உன்னைவிட்டுப் பிரிவேனா? பிரியத்தான் முடியுமா?...

"ராம பக்தி சாம்ராஜ்ய...ராமா உன் மேல் பக்தி ஒரு பெரிய சாம்ராஜ்யமே என்க்கு கொடுக்கிறது" ன்னு சுருதி லயத்தோட பாடறார். அவர் பாடப் பாட ஒவ்வொரு பாட்டும் முத்துப்போல் கொட்ட அவர் புகழ் நிறைய பரவ ஆரம்பிச்சுடுத்து... அவா அண்ணாக்கு ரொம்ப கோவம், "குடுத்தனதுக்கு சம்பாதிக்க வழியில்லை இப்படி "ராமா ராமா ன்னு பாடறானே இவன் எங்கே உருப்படப் போறான்? இதே சொல்லி சொல்லி கோவப்படறார்.
இவரோட புகழ் பரவி அந்த ஊர் ராஜா காதிலே வுழுந்துடுத்து... ராஜா தன்னோட நாலு சேவகாளை அனுப்பி "தியாகராஜரை அழைத்து வாருங்கள் என் சபையில் பாடவேண்டும்,என் புகழைப் பாடவேண்டும் நிறையப் பொன்னும் பரிசும் தருகிறேன்"என்றார்,

அந்த நாள் நம்ம தியாகபிரும்மம் தன்னை மறந்து பாடிண்ட்ருக்காள்...
"ராமாபி ராமா ரமணீய நாமா" தர்பாரில் பாடறார்... கண்ணிலே நீர் வழியறது! ராஜாவின் பணியாட்கள் வந்தனர். சத்தம் செய்யாமல் மெய் மறந்து நின்னுட்டா. மெள்ள... தட்டு நிறைய பழங்கள் சம்மானங்கள் பொன் தங்கக் காசுகள் எல்லாம் வைச்சு அவர் முன்னாடி அந்தத் தட்டை நாத்தினாராம் சத்தம் கேட்டு கண்ணைத் திறந்து பாத்தார் தியாகராஜர். ஒண்ணும் பேசலைஎன்ன இதெல்லாம்னு ஜாடைக் காட்டினார்.
"எங்க சக்கிரவர்த்தி ராஜா எங்களை அனுப்பி வைத்தார் எங்கள் ராஜா உத்திரவின்படி தாங்கள் அரண்மனைக்கு வந்து எங்கள் அரசரைப் பாராட்டிப் புகழ்ந்து பாட வேண்டும் என்றனர். சுவாமிகள் என்ன செஞ்சார் தெரிமோ... அந்தப் பக்கமே திரும்பலே...அரசக் கட்டளைப்படி நடக்கவுமில்லை, கண்களில் நீர் வழிய பாட்டுலேயே பதில் சொல்றார் பாருங்கோ....
அழகான கலயாணி ராகத்லே மிஸ்ர நடைலே அந்தப் பாட்டு
"நிதி சால சுக்கமா ராமுனி சந்நிதி சேவா சால சுகமா ?"
கேட்டுங்கோ நன்னா....என்ன சொல்றார் தெரியுமா? என் ராமன் சந்நிதிலே அவனைப் புகழ்ந்து பாடுவது தான் பெரிய செலவம், அத விட்டுட்டு ராஜா முன்னாடி பாடி அடைவதா செல்வம்?
இன்னும் பாடறார் கேளுங்கோ...
"ததி நவனீத க்ஷீர முலு ருசோ தாசரதி தியான பஜன் சுதத ரஸமு ருசோ"
அப்பா சேவகா தயிர், வெண்ணெய், பால் ருசியுள்ளதா அல்லது அந்தத் தசரத்ரின் குமாரர் ராமனின் தியானம், பஜனை, ருசியா..? அவனைத் த்யானம் பண்ணினா அமிருத ரசம் கொட்டறதே அது சுகமா?

"தம சம மனு கங்கா ஸ்நானாதி சுகமா?
கர்தம துர்விஷய கூப ஸ்னானமு ஸுகமா?"

அவர் சொல்றார் உத்தமமான கங்கா நதியில் குளிப்பது சுகமா? இல்லை கலங்கலான கெடுதலான சாக்கடை நீர் போல் உள்ள கிணத்து ஜலத்லே குளிப்பது சுகமா?

"மமத பந்தன யுத நரஸ்துதி ஸுகமா?
சுமதி தியாகராஜ கீர்த்தன ஸுகமா?"

இன்னும் கேளுங்கோ... இந்த இடத்தை நன்னா கேட்கணும்...
சொல்றா ! அஹங்காரத்தினாலே கட்டுப்பட்ட சாதாரண மனுசன் அவன் ராஜாவோ சக்ரவர்த்தியோஅவனைப் பத்தி சோத்திரம் சுகமா? இல்லை நல்ல புத்தி உள்ள தியாகராஜ கீர்த்தனை சுகமா? என்ன அழகான பாட்டு பாத்தேளா? எவ்வளவு அர்த்தம் இருக்கு? அதுதான் முழுக்க பாடிக் காட்டினேன் அர்த்தம் புரிஞ்சு பாடணும்....அதன் ருசியே தனிதான்!

இப்போ அந்தச் சேவகா என்ன பண்ணினா தெரிமோ... மூஞ்சியைத் தூக்கிண்டு பரிசு எல்லாம் எடுத்துண்டு திரும்பி போயிட்டா... ராஜாக்கு இத கேட்டதும் கோபம் வந்துடுத்து ஸ்வாமியோட அண்ணா இதக் கேட்டு கோபமா வேக
வேகமா வரார் தம்பியிடம் வந்தார் " என்னடா? உனக்கு மூளைக் கழண்டு போயிடுத்தா? இப்படி பைத்தியக் காரனாய் இருக்காயே! செல்வம் லட்சுமி
தானே வீடுத் தேடி வந்தும் உதைது அனுப்பிட்டாயே தங்கக் காசு வேண்டாம் சொல்லிட்டாயே! நாளை சாப்பாட்டுக்கு வழியில்லை உனக்கு?என்ன செய்யப்போறே இனிமே நான் உன் அண்ணா இல்லை" இப்படி எதோ
ஏதோ கத்தினார். தியாகபிரும்மம் பேசவே இல்லை. அவர் முன்னால் ஸ்ரீ ராமனைத் தவிர வேறு ஒண்ணும் தெரியலை.
அண்ணா கவனம் ராமர் சிலை மேல போச்சு,
"எல்லம் இந்த ராமனாலே வந்தது என்ன செய்யறேன் பார்"னு சொன்னா, அப்படியே அவர் பூஜை செய்த ராம சீதா லட்சுமண சிலையை எடுத்தார் தூக்கிண்டு ஓடறார் காவேரிகரையைப் பாத்துண்டு... நேரே 'தொம்'னு சத்தம்... மூணு சிலையும் வீசிட்டார்.

இப்படியாக ஸ்ரீ தியாகராஜர் ராஜா பகை அண்ணா பகை எல்லாம் சம்பாதிச்சுனுட்டார். ஆனாலும் சத்திய சோதனையிலே பக்தி இன்னும் பெருகி மனம் உருகி புடம் போட்ட பொன்னாக மாறிவிட்டார் தன் பதினெட்டு வயசிலேயே... ஸ்ரீ ஹரிதாஸ் ஸ்வாமிகள் அவரைப் பாத்து "குழந்தே உன் வாழ்க்கையிலே ஸ்ரீ ராம நாமம் உச்சரி" என்றார். அதன் படி இவரும் 96 கோடி ராம நாமம் உச்சரித்தார். அப்போ நேராவே ராமர் நேரிலே சீதை லட்சுமணருடன் வந்து காட்சி தந்தார். இன்னும் நிறைய சொல்லிண்டே போகலாம் ராம நாம மகிமை பத்தி! எல்லோரும் ராம ஸ்மரணை பண்ணணும் அந்த நாமாவுக்கு எவ்வளவு சக்தி?

" ஜானகி காந்தஸ்மரணம் ஜெய் ஜெய ராம ராமா

ஸ்ரீ ராம ஜய மங்களம்..!

அன்புடன் விசாலம்

No comments: