Thursday, April 19, 2007

பந்தம் அறுக்க

பந்தம் அறுக்க...
வந்தான் ஒரு சீடன்,
சென்றான் சந்தேகத்துடன்,
கேட்டான் குருவிடம்,


"எது பந்தம் அறுக்கும் மடம்?
வழி வேண்டும் பந்தம் அறுக்க,
ஆழ் மனதின் ஒளியைக் களிக்க,"

அழைத்து போனார் ஆசான் ஒரு காடு,
பின் ஓடிப்போனார் சீடனை விட்டு,
சீடன் தேடித் தேடி அலுத்துப்போக,

"என்னைக் காக்க" என்ற அலறல் கேட்க
அந்தத் திசையில் அவன் கால் நடக்க,
கண்டான் ஆசானை!
ஒரு வித்தியாசமான நிலை...
கத்தினார் குரு "விடு என்னை"
அவர் கட்டிப் பிடித்ததோ ஒரு மரம்,
விடச்சொன்னது அதைவிடத் தரம்,
சீடன் கேட்டான்...
"என் மதிப்புகுரிய குருவே!
மரத்தைக் கட்டிப் பிடித்திருப்பதோ நீங்கள்,
விடச்சொல்வதும் நீங்கள்
இது எப்படி சாத்தியம்?
இதற்கு என்ன வைத்தியம்?"

"முட்டாளே சீடா...
நீ பந்தம் அறுக்க கேள்வி கேட்டாய்
பதில் சொன்னால் புரிய மாட்டாய்,
இறுக்கப் பிடித்துள்ளாய் பந்தத்தை
அதை விட வேண்டியதும் நீதானே..!"

No comments: