Friday, April 20, 2007

அவரவர்...கண்ணோட்டம்!

பணத்தில் புரளும் சீமான்,
ஐந்து நக்ஷத்திர விடுதியில்,
ஆனந்தம் பூரிப்பு முகத்தில்,
பலவித பானங்கள் முன்னில்,
ஹா ஹா ஹா என்ற சிரிப்பு,
சொன்னான் அவன் "நண்பா"
வாழ்க்கை என்றாலே பணம் தான்"
படிப்பை விட்ட சிறு பையன்,
பிளாஸ்டிக் குப்பைப் பொறுக்குகிறான்,
சூட்டில் வியர்வை ஒழுக,
பசி வயிற்றைக் கிள்ள,
ஆதவன் தலையில் காய
தப்பாமல் காலும் சுட,
"ஹூம்" என்ற பெரு மூச்சு,
சொன்னான் அவன்
"வாழ்க்கையே போராட்டம்"
மேடைப்பேச்சில் கரகோஷம்,
காவி உடையில் சன்யாசி
விஷயங்களின் சரமாரி,
வேதாந்தம் கலந்த சொற்பொழிவு
கைகூப்பிச் சொன்னான்,
"சிவோஹம் சிவோஹம்"
உனக்குள் நுழைந்து கடவுளைப் பார்"
மிகுந்த மிடுக்குடன் அழகு போர் வீரன்,
எல்லையைக் காத்துத் தனித்தவன்,
மனைவி மக்களைப் பிரிந்தவன்,
கையில் துப்பாக்கி தன்னை அலங்கரிக்க
"லெப்ட் ,ரைட்" என்ற சத்தம்
பெரிய பூட்ஸின் உரசல் நித்தம்,
சொல்கிறான் அவன்
"வாழ்க்கை ஒரு யுத்த பூமி"
நீல வானத்தில் சிறகடித்து
பறந்து வந்தது சிட்டுக்கள் கூட்டம்,
நினைத்த இடங்களில் பறந்தன,
விண்வெளியைத் தொட்டன
உற்சாகம் கரை புரள,
சொன்னது அந்தக் கூட்டம்,
"வாழ்க்கை என்பது சுதந்திரம்"
பிடித்தடைத்தான் ஒரு கிளியை,
பச்சைக் கிளி அழகும் சிவப்பலகும்,
வெளியே ரசிக்காமல் கூண்டின் உள்ளே,
ஏக்கப் பார்வை வானத்தில்,
"மியாவ்" சத்தத்தில் ஒரு மிரண்டல்
சொல்லிற்று "கீ கீ" என்று
"வாழ்க்கை ஒரு சிறைச் சாலை,
காதலன் காத்து நின்றான்,
காதலிக்காக ஏங்கி நின்றான்,
மூன்று மனி நேரம்... இது ஒரு தபஸா?
அவள் வருவாளா? மாட்டாளா?
வந்துவிடுவாள் என்று உள்ளம் சொல்ல,
காலியாகும் நந்தவனத்தைப் பார்க்க சொன்னான்,
"வாழ்க்கை ஒரு நம்பிக்கை,"
அறிஞர்களின் கூட்டம்,
ஒரு சத்சங்கத்தின் நடப்பு,
முடிவு எடுத்தது,
"அன்பே தெய்வம், உழைப்பே தெய்வம்
தன்னம்பிக்கையே வாழ்க்கை, அறிவே கோவில்
சத்தியத்தின் வெற்றி தருமத்தின் ஜயம்,
வாழ்க்கையிலே போராடி வெற்றிக்கொள்,
வாழ்க்கையே ஒரு சவாலாக ஏற்றுக் கொள்"


அன்புடன் விசாலம்

No comments: