Sunday, April 15, 2007

ஜுக் ஜுக் ரயில் - ராமு பாடும் ரயில் பாட்டு!


அதோ பாரம்மா ஜுக் ஜுக் ரயில்
வேகம் குறைந்து நிற்பதும் ஒரு ஸ்டைல்
ஸ்டேஷனுக்குள் மெள்ள வந்தது,
பார்க்க என் மனம் பரவசமானது.
பலர் இறங்க மூட்டையுடன் பலர் ஏற
"இட்லி,வடை,காபி என்ற கூவல் சேர
பார்த்து மகிழ்ந்தேன்...
அம்மாவின் கைப் பிடித்தேன்
பெட்டிகளைக் கூலி தூக்க,
பரபரவென்று ஏறினேன்.
என் இடத்தைத் தேடினேன்,
சன்னல் சீட்டில் ஜம்னு அமர
கூவென்று கூவி ரயிலும் கிளம்ப,
எங்கும் பரபரப்பு தூள் கிளப்ப,
கையை ஆட்டி "டாடா" காட்ட
என் அப்பாவும் பதிலுக்கு ஆட்ட,
மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
ஸ்டேஷனும் கண்ணின்று மறைந்தது,
விரைவு வண்டியின் வேகம் அதிகம்
குலுங்கி எடுத்தது எங்கள் தேகம்
சன்னல் வெளியே நோட்டமிடும் கண்கள்
கூடவே வந்தது அப்பாவின் எண்ணங்கள்
அடுக்கடுக்காய் மேலே வளர
இயற்கையில் எண்ணம் சிதற
அதோ ஓடுகிறது கம்பங்கள் எதிர்புறம்
வளைந்து ஓடும் நதிகள் ஒருபுறம்,
முக்கோண வடிவில் தொடர் மலைகள்,
தூர விளையாடும் சிறு பசங்கள்,
அதோ மலைக்குள் சூரியன் மறைகிறான்.
செவ்வானத்தை ஒளிமயமாய் ஆக்குகிறான்,
பசும் வயலில் ஆடும் கதிர்கள்,
உழுது களைத்த காளைகள்,
திடீரென்று ஒரு விசில்...
மனதுக்குள் புகுந்தது ஒரு திகில்
மெதுவாக வந்தது ஒரு மாதிரி புகை
உடனே வந்தது ஒரு குகை
முதல் வகுப்பு என்ற ‘குளுகு’ளுவில்
கிடைக்கும் நமக்கு மூடிய சன்னல்
இயற்கை காட்சி அவர்களுக்கெங்கே?
கிடைக்குமா இந்த வாய்ப்பு அங்கே!
இரவு உணவும் கிடைத்தது,
படுக்க இடமும் இருந்தது,
ஆனந்தமாய் தூளி போல ஆட
தூக்கம் கண்ணைத் தழுவியது,
காலை அம்மா குலுக்கி எழுப்ப
வண்டியும் குலுங்கி நின்றது,
"ஓ நாம் இறங்கும் இடமா அம்மா?
ஓ திரும்ப எப்போ வரலாம் அம்மா?"

அன்புடன் அம்மம்மா...

No comments: