Thursday, April 5, 2007

ஸ்ரீ ஆண்டாள் யார்?



அன்பு குழந்தைகளே! நீங்கள் ஆண்டாளின் படம் பார்த்திருப்பீர்கள், முக்கியமாகத் தலையில் பெரிய கொண்டை அதைச் சுற்றி முத்துமாலை, அந்த முத்து மாலையின் ஒரு பகுதி கொண்டையின் உச்சியிலிருந்து தொங்கி ஊஞ்சல் ஆட அழகோ அழகு மாறு வேஷப் போட்டியிலும் உங்களில் சிலர் ஆண்டாள் வேஷம் போட்டிருக்கலாம், அந்த ஆண்டாளின் கதையைப் பார்ப்போமா!

பன்னிரெண்டு ஆழ்வார்களின் நடுவில் ஒரு பெண்ணாக பூஜைக்குரியவராக ஒரு பெரிய இடம் பெற்று ஸ்ரீரங்கநாதனுக்கு அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெறற பூதேவியின் அவதாரம் அவர். திரு விஷ்ணுசித்தர் என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு பூக்கள்
பறித்து தொடுத்துக் கோவிலில் கொண்டு கொடுப்பார். ஒரு சமயம் அவர் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றார். அப்போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. சற்று நின்று சத்தம் வந்த இடத்திற்கு போக அங்கு ஒரு துள்சி செடியின் கீழ் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டார், தனக்கு குழந்தை இல்லாத குறையைத்
தீர்க்க அந்த எம்பெருமானே இந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார். பூமியிலிருந்து கண்டெடுத்ததால் கோதை என்று பெயரிட்டு வளர்த்தார் அந்தப் பெண்ணிற்கு எல்லாக் கலைகளும், கண்ணனைப் பற்றியும்
மற்ற நல்லொழுக்கம் தமிழ், வேதாந்தம் போன்றவைகளும் கற்றுக் கொடுத்தார்.
கண்ணனைப் பற்றிக் கேட்கக் கேட்க அவரையே மணக்க ஆசைக் கொண்டாள்.
கண்ணன் மேல் அளவில்லாதக் காதலினால் அவனுடன் ஒடி விளையாடி, கண்களை பொத்தி ஒளிந்து கொண்டு கற்பனை உலகத்தில் மிதந்தாள், அவள் அழகாக கண்ணனுக்காக மாலை கட்டி அதைத் தானே அணிந்து கொண்டு, நிலைக்கண்ணாடியில் பார்த்து ரசித்து பின் அந்த மாலையை கண்ணனுக்கும் அணிவிப்பாள். இதே போல் நடக்க
ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போக கையில் எடுத்தவுடன் அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்தார் மிகவும் மனம் வருந்தி, அன்று மாலையைக் கோவிலில் கண்ணனுக்கு அணிவிக்காமல் இருந்து விட்டார். அன்றிரவு கடவுள் அவர் கனவில் வந்து "கோதையின் நறுமணம் அவள் அணிந்து
கொடுக்கும் மாலையை நான் அணியாததால் இன்று வரவில்லை. அவளை நான் ஆட்கொள்ள விரும்புகிறேன். அவளை நன்கு மணப் பெண் போல் அலங்கரித்து ஸ்ரீரங்கத்திற்கு, ஸ்ரீஅரங்கநாதனிடம் அழைத்து வா" என்றார். பெரியாழ்வார் இதைக் கேட்டு மலைத்து நின்றார். பின் அந்தக் கண்ணன் புரோகிதர்களிடமும் கனவில் வந்து ஆண்டாளை
முத்துப் பல்லக்கில் அழைத்து வரவும் மற்றக் கல்யாண
ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார். இதே போல் அவர் குறிப்பிட்ட நாளில் எல்லோரும் சூழ கோதை என்ற ஆண்டாள் அழகாக அலங்கரித்து வர, மேள தாளங்கள் முழங்க கோவில் அருகில் வந்தவுடன், ஸ்ரீ ஆண்டாள் பல்லக்கிலிருந்து குதித்து மிக மகிழ்ச்சியுடன் போக, ஸ்ரீ ரங்கநாதரும் சிலையிலிருந்து வெளியே வர ஸ்ரீ ஆண்டாளை அணைத்துக் கொண்டு மறைந்தார்.

ஸ்ரீஆண்டாள் துளசியின் அவதாரம் பூதேவியின் மறு அவதாரம் இவர் எழுதிய திருப்பாவை, திருவெம்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை மார்கழி மாதம் ஒவ்வொன்றாகப் பாட மனம் தூய்மை பெறும். வாருங்கள் திருப்பாவை கற்றுக் கொண்டு பாடலாம்.

அன்புடன் அம்மம்மா விசாலம் ,

No comments: