Friday, April 20, 2007

"காரடை நோம்பு" ஒரு அலசல்

"உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் படைக்கிறேன், ஒருக்காலும் என் கண்வர் என்னை விட்டு பிரியாத வரம் தா", என்று என் பாட்டிக்காலத்திலிருந்தே வழக்கம் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது. அன்று வெல்ல அடை உப்பு அடை வெண்ணெய் இரண்டையும் ஒரு நுனி இலையில் படைத்து சாவித்திரி கதையும் படித்து நோம்பு நூற்று பின் பெண்கள் கழுத்தில் மஞ்சள் சரடு கட்டி கொள்வார்கள். இது எல்லோருக்கும் தெரியும் புதிதல்ல அதைப் போல் சாவித்திரியின் கதையும் தெரிந்திருக்கும். சத்யவானின் மனைவி சாவித்திரி செய்த நோம்பு இது. சத்தியவானைப் பர்த்தவுடன் இவர்தான் என் கணவர் மனம் சொல்ல அந்தக் கணவன் வெகு சீக்கிரமே மரித்து போவான் என்று தெரிய வந்தும் தன் சக்தியினால் யமனுடன் போராடி
சாதுர்யாமாகப் பேசி இறந்த சத்தியவானை மீட்டுவந்த உத்தமி அவள். இது மாசிமாதம் முடிய பங்குனி தொடங்கும் போது வரும் நோன்பு, இதைதவிர அன்னை காமாட்சி இந்தநோம்பு நூற்று சிவனின் பாதி உடலில் ஐக்கியமானாள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இரு மனமும் சேராமல் சண்டைப் பிடித்து விவாக ரத்து வரை வந்து கொண்டிருக்கும் இவர்கள் இந்த நோம்பை சமூகத்திற்காக
செய்வது வேடிக்கையாக இருக்கிறது. மனம் பொருந்தாமல் மஞ்சள் சரடு என்ன செய்யும் இரு மனம் ஒன்று பட அதைவிட பலமான பந்தம் வேறொன்றுமில்லை. முன் காலத்தில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அது கணவன் மூலம் வந்தாலும் அவன் அவளை அடித்தாலும் கணவனே கண் கண்ட தெயவம் என்று இருந்து வாழ்க்கையை துக்கம் சுகம்
என்று இரண்டும் கொண்ட சக்கரமாக நினைத்து கடைசிவரை சேவை மனப்பான்மையில் வாழ்ந்தனர். ஆகையால் இந்த நோம்பும் அவர்களுக்கு மனம் பிடித்து செய்யும் ஒன்றாக இருந்தது. அதே போல் கடைசி வரை மன்ம நிறைவும் கிடைத்தது. இந்தக்காலம் அப்படி இல்லை மகளிர் தங்கள் உரிமையை நிலை நாட்டும் காலம் இது. அது கிடைக்கவில்லை என்றால் போராடுகின்றனர் மகளிர் மன்றம் நீதி வழங்க பாடுபடுகிறது, ஆனால் இந்த நோம்பு இந்தக் கால மகளிர் அழகாக அழகு நிலயம் போய்
அழகுபடுத்தி வண்ணச்சேலை உடுத்தி மெஹந்தி டிசைன் கையில் போட்டு வளைய வர ஒரு வாய்ப்பு! வடக்கில் கர்வா சௌத் என்ற இது போல் கணவன் நலத்திற்காக நோம்பு நூற்கும் பண்டிகையில் எல்லோரும் சினிமா நடிகைப் போல் தான் இருப்பார்கள். அது சரி எப்போதும் பெண்களே தங்கள் சகோதரருக்காக, கணவனுக்காக, என்று ஆண்களுக்காக அவர்கள் நல் வாழ்வுக்காக விரதம் வைத்து கொள்கிறார்கள்.ஆண்களுக்கு தன் மனைவியின் நல் வாழ்விற்காக

ஏதாவது விரதம் உண்டா?
சரி நானே ஒரு கற்பனை செய்து விட்டேன். ஆனால் என்ன பெயர் தருவது இந்தப் பண்டிகைக்கு... நீங்கள் சொல்லலாமே!,
காலையில் ஆண் குளித்து பட்டு வேஷ்டி {பஞ்ச கச்சம் அல்லது அவரவர் முறைப்படி] கட்டிக் கொள்ள வேண்டும். அன்று காலை காபி மனைவிக்கு அவன் தான் கொடுக்க வேண்டும், பின் விளக்கேற்றி தம்பதி ஷேமத்திற்கு துர்கா சப்தசதி அல்லது துர்காஷ்டகம் வாசிக்க வேண்டும். பின் மல்லிகைப்பூ வாங்கி மனைவின் தலையில் சூட்ட வேண்டும். கையில் சிவப்பு கலரில் ஒரு கயிறு {ராக்கி போல்}மனைவியை விட்டு கட்டச் சொல்லவும். மாலையில் மனைவிக்கு ஒரு அன்பளிப்பு! அது எந்தவித்ததில் இருந்தாலும் சரிதான். அப்போ காரடை?
நிச்சியம் செய்ய வேண்டும்.


அன்புடன் விசாலம்
,,

No comments: