Sunday, April 29, 2007

ஒரு மரத்தின் நிழலில் யோகம்


இது என் கதை! இந்தப்புகைப் படத்தில் இருப்பதும் நான் தான், ரகு அமர்ந்திருக்கும் இடம் லோதி பூங்கா. தில்லியில் மிகப் பிரசித்தமான பூங்காவனம்.சிறுவர்கள்.காதலர்கள் கிழவர்கள்,தம்பதிகள்,என்று எல்லோரும் மன மகிழும் இடம்.இந்தக் கதையின் கதாநாயகன் இப்போது எண்பது வயதுக்கிழவன். அது நான் தான். வெள்ளைத் தாடியுடன் சமூக சேவை செய்து வருகிறேன். இப்போதும் என் மாணவர்களுக்காக காத்து இருக்கிறேன். தனிமையிலும் இனிமை காணுகிறேன். சமயவெறியை ஒழிக்க முயலுகிறேன். என்னை மசூதியிலும். குருத்வாராவிலும், கோவில்களிலும் காணலாம். எம்மதமும் சம்மதமே.. எனக்கும் குடும்பம் இருந்தது, நானும் காதலித்தேன். அந்தப்பழைய மறக்கமுடியாத சம்பவங்கள் தினமும் என் கண்முன்னே வருகிறது. சொல்கிறேன்.. கேளுங்கள்.
என் தந்தையை இழந்து நான் தில்லிக்கு ஒடி வந்தேன். மொழி தெரியாத ஊர் துணிச்சலுடன் வந்து இறங்கி ஒரு அறையில் இருக்கும் போது ஒரு சீக்கியக் குடும்பம் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்போதுதான் என் அவளைச் சந்தித்தேன். அவள்பெயர் பஜன்கௌர், அவள் வீட்டில் வாடகைக்கு இடமும் அளித்து, சாப்பாடும் தந்து, வேலையும் வாங்கிக் கொடுத்தாள். நாட்கள் ஓடின. அவள் எனக்கு இந்தி கற்றுக்கொடுத்தாள். நான் அவளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க. எங்கள் காதல் வளர்ந்தது. இந்த மரம் எங்கள் காதலை வாழ்த்தியது. எங்கள் பெயர்களை இந்த மரத்தில் செதுக்கியும் வைத்தோம். எங்கள் கல்யாணமும் நிச்சயமானது. நானும் அவளும் சுவர்க்கத்தில் மிதந்தோம். என் அவள் கராச்சியிலிருக்கும்
தன் தாத்தாவிடம் ஆசீர்வாதங்கள் வாங்கி வர தன் ஆசையை

என்னிடம் தெரிவித்தாள் நானும் அவள் தங்கையுடன் அவளை
அனுப்பி வைத்தேன். என் கண்முன்னே அந்த பயங்கர நாள் ஞாபகம் வருகிறது… கராச்சியில் ஒரு சிறு வீடு, ஒரே இருள். ஊரே அடங்கிப் போயிருந்தது. இந்து- முஸ்லிம் இடையே மனக்கசப்பு, ஒரு சலசலப்பு இருந்த நேரம். அழுது வடிந்து இருக்கும் அந்த வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. "ஸர்தார்ஜி ஜல்தீ கோலோ கோன் ஹெய்" என்று ஒரு வயதான் முதியவர் கதவைத்திறந்தார். பழைய கால கதவு… "கிரீச்" என்னும் சப்தம் ஒரு பீதியை உண்டு பண்ணியது."அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல் எந்த ஒரு சப்தமும் முகம்மதியர் கூட்டம் வந்து விட்டதோ என்ற பயத்தை உண்டு பண்ணியது. "நான் தான் அப்துல்"என்றபதில் கிழவருக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. என் அன்பு பஜனின் தாத்தாதான் அவர். அப்துல் தான் எவ்வளவு உதவுகிறான் "இந்து முஸ்லிம் பாயி பாய்" என்பது அவனுக்குத்தான் மிகப் பொருந்தும் சிறு வயதில் அனாதையாகத் தெருவில் மயங்கிக் கிடந்த அப்துலை ஸர்தார் கிஸன்சிங் வளர்த்தார். தன் இரு பேத்திகளும் அவனைத் தங்கள் தம்பியாக நினைத்து கையில் ராக்கி கட்டினர். அன்றைய தினத்திலிருந்து ஸ்ர்தார்ஜிக்கு அவன் தான் வலது கை. இந்து முஸ்லிம் மதவெறியில் நிம்மதி குலைந்தது. நிம்மதியாக வாழ்ந்த குடும்பத்தில் இடி விழுந்தது. அடுத்த மாதம் திருமணம் எப்படி என் பேத்திகள் தில்லி போகப் போகிறார்கள் என்று கலங்கினார். தாத்தா.. "பாயாஜி... அவசரமான, கவலைக்கிடமான தகவல்... எப்படிச் சொல்வேன்? நேற்று அடுத்தத் தெருவில் ஒரு கூட்டம் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை நாசம் செய்து பெண்களின் கற்பையும் அழித்துவிட்டனராம் எந்த நேரமும் நம் வீட்டிற்குள் வரலாம்" கேட்டுக்கொண்ட பெரியவரின் கண் கலங்கியது. "கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் அப்துல், நாளை இரவுக்குள்ளொரு டெம்போ ஏற்பாடு செய்து அவர்களூக்கு பர்தா அணிவித்து அழைத்துப் போகிறேன். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்" பாசத்துடன் அவன் சொன்னது அவருக்கு தெம்பைத்தந்தது. பஜன்கௌர் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். "சிவப்பு புடவையில் நான் உங்கள் கைப்பிடிக்க
நீங்கள் கனிவாக என்னைப் பார்க்க,அந்த நாளுக்கு ஆசையுடன்…
காலடிச் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள். பாசமுள்ள தாத்தா நின்றார். "காதல் கடிதமா? எழுது... எழுது நாளை அப்துல் உங்களை அழைத்துப் போவான். பர்தா அணிந்து தயாராக இருங்கள். யாருக்கும் சந்தேகம்
வராமல் நடந்து கொள்ளுங்கள்…" ஆகட்டும் தாத்தா. மனதிற்குள் மகிழ்சி பொங்க உறங்கப் போனாள் மறு நாள். இரவு பத்து மணியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.
டிக் டிக் என்ற கடிகாரம் ஒசையைத்தவிர வேறு ஒன்று கேட்கவில்லை. அந்த நிமிடமும் வந்தது,
கதவு திறக்கப்பட்டது, அப்துல் ரகசியமாக இரண்டு பர்தாக்களைக் கொடுத்தான். வாசலில் வண்டியும் இருந்தது. அப்துல் முகத்தில் ஒரு பெருமிதம் தன் இந்து சகோதரிகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமை. ஆனால் அந்தப் பெருமை ஒரு நாலு நிமிடங்கள்தான் நீடித்தது. தப...தப... என்று ஒரு கூட்டம் ஓடி வரும் சத்தம் கேட்டது. அப்துல் உள்ளே வ்ந்து கதவை மூடிக்கொள்வதற்குள் ஒரு நான்கு முகமதியர்கள் ஓடி வந்தனர். கதவை வேகத்துடன் உதைத்தனர். அப்துலை ஒரு தள்ளு தள்ளினர், அவன் கீழே விழுந்தான். கிழவர் வேகமாக உள்ளறைக்குப் போனார், பேத்திகளைப் பார்த்தார். கற்பு.. கற்பை தன் எதிரிலேயே பேத்திகள் இழ்ப்பதா? கற்பழிக்கும் காட்சி தன் முன்னே ஒடியது தன் கத்தியை எடுத்தார் "சதக்" ஒரே குத்து…. ரகு தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பஜன் கௌர் கீழே சாய்ந்தாள். ரத்தம் மணப் பெண்ணின் புடவைப்போல அவளை அலங்கரித்தது. தங்கைப் பார்த்தாள். தன் கற்பு பறிக்கப் படுமோ என்று பயந்தாள். "சதக்"கீழே இருந்த கத்தியால் தன்னையே குத்திக் கொண்டாள். தாத்தா இந்தக் காட்சியை காணமுடியாமல் பேத்திகள் மேல் சாய்ந்தார். ஒரு திருப்தியுடன். கற்பைக் காப்பாற்றிய நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.
"என்ன அப்துல்என் ஆசை பஜன் எங்கே?அழைத்து வரவில்லையா?”" மௌனமாக் கண்ணீருடன் பஜனிடமிருந்த அந்த கீதையின் சாரத்தைக் காட்டினான். "எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு?"
என் கதை முடிந்தது. சமூக சேவை அவள் நினைப்பில் செய்கிறேன் மனம் நிறைகிறது. இப்போது இந்த மரம் தான் என் சமூகச் சேவையின் கூடம் மரத்தின் நிழலில் தான் யோகம். அவளும் என்னுடன் இருக்கிறாள்.


வாழ்க வளமுடன்...
விசாலம்

No comments: