மறக்க முடியாத ஒரு மேடைப் பேச்சு...
என் கடந்த கால சம்பவம் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
என் 15 வயதிற்குள் பல பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டியில் நான் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்றேன். அதன் பிறகுதான் தமிழில் மிக ஆர்வம் காட்டத் தொடங்கினேன். பம்பாயிலேயே பிறந்தது முதல் இருந்ததால் அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை ஆகையால் நான் தமிழ்சங்கம், பாரதி கலாமன்றம்,
தமிழ் இசை மன்றம் என்று போக ஆரம்பித்து சற்று தேற ஆரம்பித்தேன். அப்போது எனக்கு திரு.கி.ஆ.பெ.விசுவநாதம்,உயர்திரு கி.வா. ஜகன்நாதன், நாடோடிதிரு.சுபஸ்ரீ,கலகி அவர்கள், ஸ்ரீமதி ஆனந்தி ராமசந்திரன் என்று பல பேர் பரிச்சயமாயினர். இன்று ஏதோ கொஞ்சம் எழதுவது அவர்களும் மற்ற தமிழ் அறிஞர்களும் அளித்த வாழ்த்துக்கள். அவர்களை சிரம் தாழ்த்திவணங்குகிறேன். என்னைத் தமிழ் சங்கத்திலும் மற்ற மன்றத்திலும் பேச அழைத்தார்கள். ஒரு சமயம் பத்மா என்ற வயதான மாது என்னை ஒரு இடத்தில்பேச அழைத்தார்கள். தலைப்பு "பாரதி கண்ட கண்ணன் "அந்த அம்மாவின் குடும்பம் ஒரு கம்யூனிஸ்ட், என்னைக் கண்டால் அவர்களுக்கு கொள்ளைப் பிரியம். அவர்களே என்னை அழைத்துப் போய் திரும்ப பத்திரமாக வீடு சேர்க்க பொறுப்பும் எடுத்துக் கொண்டனர். என் வயது அப்போது இருபது இருக்கும், அவர் வீட்டின் முன் ஹாலில் நுழைந்தேன் பெரிய ஸ்டாலின் படம் மாட்டி மரியாதை செய்யப் பட்டிருந்தது. அவர் கணவர் அரசியலில் பெரிய புள்ளி. அந்த மாமி உள்ளே அழைக்க கிச்சனுக்குச் சென்றேன். உள்ளே வெங்கடாசலபதி பூஜை செய்து கொண்டிருந்தார் அவர். பலவிதமான தாத்தா காலத்திலிருந்தே இருக்கும் சாலிக்கிராம் பூஜையில் இருந்தது "எப்படி இது?சைகையால் கேட்டேன், அவரும் புரிந்துக் கொண்டார். "மாமாதான் கம்யூனிஸ்ட் என்னால் பரம்பரை பரம்பரையாக வந்த பூஜையை விட முடியவில்லை" என்றார். பின் என்னை சங்கத்திற்கு அழைத்துப் போனார். போகும் வழி ஒரே சந்து பொந்து,எங்கும் துர்நாற்றம் சில இடங்களில் சாரயம் காய்ச்சும் வாடை, யார் பேசினாலும் வாயிலிருந்து ஒரு தனி வாடை. ஆமாம் அந்த இடம் தாரவிதான் "நாயகன்" படம் பிடித்த இடம்.. ஆனால் ஒவ்வொரு வீடும் சாணி மொழுகி கோலத்துடன் வரவேற்றது. எனக்கு திரும்பி போய் விடலாமே என்று கூடத் தோன்றியது. எங்கும் என்னை மொய்த்தக் கண்கள் மனத்தில் அச்சத்தை உண்டு பண்ணியது. ஆனால் அந்த தாராவி மெம்பர்கள் என்னிடம் காட்டிய அன்பு,பாசம் என் கண்கள் நிறைந்தன. ஒருவள் மாலை ஒன்று போட்டாள், கையில் ஒரு செண்டு ஒரு பாப்பா கொடுத்தது, நாதஸ்வரம் டேப்பில் முழங்கியது, ஒரு மண்சுவருடன் ஒரு குடிசை வீடு...ஸ்டூல் ஒன்றைத் தூசித் தட்டிப் போட்டார்கள், ஒருவன் ஆசையாக லிம்கா வழங்கினான். அவர்கள் முகத்தில் இருந்த சந்தோஷம் பூரிப்பும் சொல்லி மிகையாகாதுஎன் தலைக்கு கதம்பமும் வந்தது. என் நல்ல நீள முடியை அலங்கரித்தது. ஒரு திறந்த வெளியில் மேடை ஒரு முப்பது நாற்காலிகள் நான் பேச ஆரம்பித்தேன்.
பாரதியாரே என் கண்முன் தோன்றினார். என்னை மறந்தேன் கண்ணன் குழந்தையாக, கண்ணம்மாவாக, காதலியாக நண்பனாக சேவகனாக என்று பலவிதமாக பாட்டுடன் விளக்கினேன். என் சங்கீதம் அறிவு எனக்கு பெரிதும் உதவியது. கடைசியில் "வருவாய் வருவாய்... கண்ணா! "எழுவாய் கடல்மீதினிலே எழுமோர் இர்விக்கிணையா
உளமீதிலே தொழுவேன் சிவனாம் நினையே... என்றும்
காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே... என்றும் கண்ணன் திருவடி எண்ணுக மனமே " என்றும் பாட ஒரு ஸடன் பிரேக் "நிறுத்து உன் பேச்சை" ஒருவன் கத்தினான். எல்லோருக்கும் அதிர்ச்சி,
நான் வெலவெலத்துப் போய்விட்டென் கண்கலங்க ஆரம்பித்தது அந்த வாலிபன் ஒரு 25 வயது இருக்கும் "கடவுள் என்று ஒருவரும் இல்லை. "கண்ணனும் பாமர மனிதன் தான் எப்படி தெய்வம் என்கிறாய்?
நிரூபித்தால் ஒப்புக் கொள்ளுகிறேன் " என்று ஆவேசம் வந்தது போல் கத்தினான். நான் சமாளித்தேன் "எல்லொருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்" என்றேன். அதற்குளெல்லா மெம்பரும் அவனை அடக்கி எனக்குப் பரிந்துப் பேசி புகழ்ந்தார்கள்.
இப்போதுதான் கிளைமேக்ஸ்... பேச்சு முடிந்தவுடன் எனக்கு வெள்ளியில் ஒரு குத்துவிளக்கு பரிசாகக் கொடுத்தார்கள். அப்போது அந்த வாலிபன் வந்தான் பெயர் "முழுமதி" தானே அறிமுகம் செய்து கொண்டான். என் எல்லா மேடைப் பேச்சும் கேட்டிருக்கிறானாம். என்னுடன் பேசுவதற்காக போட்ட ப்ளான் தான் இது, நான் அனாவசியமாக ஒருவரிடமும் பேச்சுக்கள் வைத்துக் கொள்ளுவதில்லை, என் அம்மாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வந்தேன். அவன் என்னிடம் எப்படியாவது பேச வேண்டும் என்ற ஆசையில் இதை செய்திருக்கிறான். மன்னிப்பும் கேட்டுக் கொண்டான் நான் என் பிரசாதம் குங்குமம் கொடுத்தேன் அதை அவன் ஆசையாக நெற்றியில் வைத்துக் கொண்டான். பாவம் அவன் என்ன செய்வான்? அப்படி ஒரு பருவம் ஆயிற்றே மன்னித்துவிட்டேன். இன்று அந்த சகோதரன் எங்கு இருக்கிறான் என்றுத் தெரியவில்லை.
விசாலம்
Wednesday, April 18, 2007
நிறுத்து..! உன் பேச்சை...
Posted by Meerambikai at 1:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment