Saturday, April 7, 2007

ஆருத்ரா தரிசனம்!



நடராஜா...நடராஜா... நர்த்தன சுந்தர நடராஜா..!

திருவாதிரை நக்ஷத்திரம் அன்று மார்கழியில்வரும் பண்டிகை ஆருத்ரா தரிசனம். ஆஹா! அந்தக் காலை நேரம் சுடச்சுட...
களி கிளறி, ஏழுகறி குழம்பும் செய்து நடராஜரைத் தியானம் செய்து வாழை இலையில் வைத்து நடராஜருக்குப் படைக்கஉண்டாகும் ஆனந்தமே தனி தான். இந்தத் திருநாளில் முன்னொரு சமயம் தேர் விழாவின் போது நடந்த சம்பவம் {நான் படித்தது} என் நினைவுக்கு வருகிறது. தில்லைத் தாண்டவ நடராஜா தேரில் பவனி வந்து கொண்டிருந்தார், நான்கு வீதிகளிலும் பவனி வர வேண்டும், அப்போது ஒரு வீதியில் ஒரு ஓரமாக ஒருவர் நடராஜரைப் பார்க்கஆசையாக நின்றுக் கொண்டிருந்தார். அவர் பிறப்பினால்அவர் தூர விலகி நின்று கொண்டிருந்தார். ஆவலாகஅந்தக் கூத்தனாரைக் கண்கொண்டு களிக்க எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தேர் அவர் அருகில் வரும் போது நின்றுவிட்டது. நகரவில்லை, தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து விட்டது பல பேர்கள் முயற்சித்தும் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது ஒரு குரல் கேட்டது,
"சேந்தா தேர் ஓடப் பல்லாண்டுபாடு"ஆம்அங்கு நின்றவர் சேந்தனார். கடவுள் ஜாதி மதம் என்று பார்ப்பதில்லை.அவர் பார்வையில் எல்லோரும் ஒன்றுதான். ஒரு ஓரமாக நின்ற சேந்தன் பாட ஆரம்பித்தார்.

"மன்னுகத் தில்லை வளர்கநம்
பகதர்கள், வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க..."


தில்லைத் திருப்பல்லாண்டு முதல் திருப்பகத்தை பாடினார் சேந்தனார், தேர் எளிதாக அசைந்துக் கொடுக்க நான்கு வீதிகளிலும் வலம் வர சோழமன்னன் பரவசம் அடைந்து சேந்தனை நோக்கி வேகமாக வந்து அவரை வணங்கினார். இதைப் பற்றிக் கோவிலில் கொடிமரத்தின் கீழ் எழுதியுள்ளது என்கிறார்கள். மிகவும் கூடடம் இருந்ததால் எனக்குப் பார்க்க முடியவில்லை, திரு பாபநாசம் சிவன் அவர்களின் பாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.


சிதமபரம் என மனங்கனிந்திட ஜபம்செய்யக் கொடிய
ஜனன மரணபய மொழிந்திடும் சிவ... {சிதமபரம்}
பதஞ்சலியும் புலிப் பதந்திகழ் முனியும்
நிதம் பரவவரு ணிறைந்த வுருவொடு
கதம்ப மலரணி குழலொடு திகழ்சிவ
காமிமருவும் ஸ்வாமியை எனது கனக
ஸபேசனை நடேசனைத் தொழு சிவ...{சிதம்பரம்]
மோஹாந்தகாரமதில் முழுகியழிந் தென்னாளும்,
மோசம் போகாதே என் மூடநெஞ்சமே
சோகாந்தமுற நர ஜன்மமுமிழந்து கொடுந்
துன்பந்தரும் நரக வாதை மிஞ்சுமே
ஸ்ரீகாந்தனும் ஸரஸ்வதீ காந்தனும் பணிய
தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தை
தாஹாந்த மடையக்கண் டேகாந்தக்களிபெற
தத்தரிகிட தீம் தரிகிட திமிதக
தளாங்குதோம்தகு எனவே நடமிடு..{சிதம்பரம்}

இதில் தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தை என்பது மிகச் சிறந்த நடராஜரின் தத்துவம்… இந்தப் பாட்டில் மிகவும் அழகான வரிகள் நடராஜரைத் துதிப்போம்! சூடாக களியும் குழம்பும் ருசிப்போம்.


அன்புடன் விசாலம்

No comments: