Monday, April 16, 2007

அர்த்தம் புரியாத பாட்டு...

ஒரு பெண் பார்க்கும் படலம்...
அதில் ஹீரோ நம் ரகுராமன். அந்தப்பையனும் அவன் பெற்றோர்களும் பல வருடங்கள் ஹைதராபாத்தில் வசித்து வரும் ஒரு குடும்பம்.
பெண் சாந்தி சென்னையைச் சேர்ந்தவள்... பையனின் அம்மாவுக்கு சங்கீதம் மிகவும் பிடிக்கும் என்று அறிந்து கொண்டு, சாந்தி சில பாட்டுக்களைக் கற்று கொண்டாள். பையன் அவன் அம்மா,
அக்கா, அவள்புருஷன் என்று ஒரு சிறு கூட்டமே வந்திருநதது. "பெண்ணை வரச் சொல்லலாமே!" என்று ஒரு குரல் வந்தது, பெண்ணும் வந்தாள். அடுத்த கட்டமாக "பெண்னிற்கு பாட்டு தெரியுமோ?" என்று பையனின் அம்மா கேடக "நன்றாக பாடுவாள்! நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறாள்" என்று பெருமிதமாக கூறினாள்.

"சரி பாடும்மா"என்று சொல்ல ஒரு சுருதிப் பெட்டியும் வர பாட்டு ஆரம்பமாகியது, "ஒரஜுபுஜூ செதிநியாயமா... ஓரகோத்தமா நிவண்டி வானிகி..."என்ற பாடல், இது ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீராமரைப் பார்த்து
பாடியது கன்னட கௌளை ராகம், அழகான பாடல், அதன் அர்த்தம்

"ஹே ராமா! ஏன் என்னை இப்படி ஓரக்கண்ணால் பார்க்கிறாய்? இது நியாயமா? ஓ ரகோத்தமா... வேகமாக வந்து அருள்செய்! என்பது போல் பாட்டு மேலே போகிறது. அந்தப் பெண்ணிற்கு சுத்தமாய் அர்த்தம் தெரியாது. தெலுங்கும் தெரியாது அவள் பல சங்கதிகளுடன்
ஓ ரகோத்தமா என்று பாடப்பாட அந்தப் பையன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்தான். அவனுக்கு தெலுங்கு தண்ணீர் பட்ட பாடு, இதைக் கவனித்த அந்த அம்மா,
"என்ன இது எத்தனைக் காலமாக இந்தக் காதல்? இந்தப் பெண் அத்தனைப் பாட்டையும் விட்டு விட்டு இந்தப் பாட்டை உனக்காக பொறுக்கி எடுத்திருக்கிறாள். ஓரக்கண்ணால் பார்ப்பது நியாயமா? என்றும் கேட்கிறாள் நீயும் அவளை ஓரக்கண்ணால் பார்க்கிறாய்"

என்று கத்த அந்தப் பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை.
ஒரு அத்திம்பேர் அதற்குள் உங்களுக்கு தெரியாத காதல் போல் இருக்கிறது. காலம் கெட்டு கிடக்கு. யார் கண்டா...இந்தப்பெண் என்று இழுக்க அந்தப் பெண் அழ ஆரம்பித்துவிட்டாள். பின் மத்யஸ்தம் செய்ய வந்தார் ஒரு நல்லவர். இவர்களுக்கு தெலுங்கு அறவே தெரியாது
அந்தப் பிள்ளையை அவள் பார்த்தது கூட இல்லை என்று நிரூபித்து விளக்கம் கொடுத்தார். அந்தப் பையனும் "அம்மா என்னைப் பலதடவைகள் ஓரக்கண்ணால் பார்க்கிறாயே ரகு என்று பாட என் பெயரும் வந்ததால் எனக்கு சிரிப்பு வந்தது" என்று விளக்கினான்.
அந்த அம்மா தன் அவசர புத்தியினால் வந்த விளைவுக்கு வருந்த

ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்தது. நலங்கின் போது நம் கதாநாயகி பாடிய பாட்டும் இது தான் ஆனால் நம் ரகு இப்போது அவளை ஓரக்கண்ணால் பார்க்காமல் நன்றாகவே ரசித்து பார்த்தான்.

அன்புடன் விசாலம்

No comments: