Sunday, April 15, 2007

ஹோலியின் கதைகள்

ஹோலி!
பெயரைக் கேட்டாலே வண்ணங்களும், பிச்காரி என்ற தண்ணீர் பீச்சும் குழாயக்ளும், அன்புடன் தழுவலும் தான் ஞாபகம் வருகிறது. மஹராஷ்ட்ராவில் இது மிகப் பிரமாதமாகக் கொண்டாடுவார்கள். அதை ரங்க பஞ்சமி என்பார்கள். வசந்த காலத்தின் நுழைவு நாள் இது. சிவராத்திரியுடன் "சிவசிவா" என்று குளிர் போய் பின் வசந்த காலம் அழகுடன் பூக்களுடன் அழகாக கோலமிடும். இங்கு செம்படவர்கள் அதிகம் பங்கேற்று தங்களை மறந்து களிப்பார்கள். எல்லோரும் ஒவ்வொரு நடு சந்தியிலும் மேலே சுமார் 6அல்லது ஏழுமாடி உயரத்தில் ஒரு பெரிய பானையில் சில ஆயிரம் ரூபாய்கள் வசூல் செய்து மேலே தனியாகக் கட்டி விடுவார்கள். பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும். இதை உடைக்க ஒரு "டோலி" என்ற குமபல் வரும். அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும். பாட்டு பாடிக் கொண்டு "கோவிந்தா! ஆலா ரே என்று கொட்டு கொட்டிக்கொண்டும் வருவதைப் பார்த்தால் நம் உடலும் சிலிர்க்கும். பின் ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டு, முக்கோணம் போல் மேலே ஏறி அதை எட்டிப் பிடித்து உடைப்பார்கள். அவர்களை ஏறவிடாமல் தண்ணீர் அவர்கள் மேல் கொட்டுவதும் உண்டு. இது போல் ஜன்மாஷ்டமி அன்றும் இருக்கும். அவர்கள் சாமர்த்தியமாக எடுத்தால் அந்த ரூபாய்கள் அவர்களுக்கே!
ஜீஜா பாய் லக்கூஜிஜாதவ் மஹராஜின் பெண், அவள் தன் ஐந்து வயதில் விளையாட்டாக எல்லோர் மேலேயும் வண்ணக் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்க சிறு பையன் "சாஹூஜி" மேல் பட்டு விட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே தன் மகனுக்கும் ஜீஜாபாயிற்கும் திருமணம் நிச்சயம் செய்து விட்டார். பின் சில காலம் கழித்து திருமணம் நடை பெற வீர சிவாஜி பிறந்தார். மஹராஷ்டாராவும் பிறந்தது, இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரணமாகிறது.
மதுரா பிருந்தாவன்...இங்கு ஹோலி ராதா கிருஷ்ண பாவத்துடன் கொண்டாடப் படுகிறது. ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்து கண்ணன் தன் அம்மா யசோதையிடம் சென்று "அம்மா நான் மட்டும் ஏன் கருப்பு? ராதா மட்டும் ஏன் இவ்வளவு சிவப்பு என்கிறார். யசோதைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அப்போது கிருஷ்ணர் ஒரு கருப்பு வர்ணம் குழைத்து ராதாவின் அழகியமுகத்தில் பூசி அவளையும் கருப்பாக்கினாராம், இது ராதாவின் எண்ணம் ஆக இருந்ததாம். அதை அவர் அறிந்து இந்த மாதிரி விளையாடினார் என்கிறார்கள். அதனால் அங்கு ஹோலி கலர் ஒருவருக்கொருவர் முகத்தில் பூச ராஸலீலா என்ற நடனமும் ஆடுகிறார்கள். பிஹாரி என்ற கவிஞர் ஹிந்தியில் இது பற்றி கவிதை எழுதி
இருக்கிறார். மிகவும் மட்டமாக ஹோலி களிப்பது பிஹாரில் தான். தண்ணீருக்கு பதில் சாணம் கரைத்து ஊற்றுவார்கள், பஸ்ஸின் சன்னலினுள் சாணி உருண்டையும் வீசி எறிவார்கள். நான் ஒரு தடவை "கயா" போன போது தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது.
எல்லோருக்கும் என் ஹோலி வாழ்த்துக்கள்!

அன்பைக் கொடுப்போம்! அனபை வளர்ப்போம்!

அன்புடன் விசாலம்

No comments: