Saturday, April 14, 2007

தத்துவ ஞானி ஸ்ரீ வேதாத்ரி மகரிஷி



அருள் பெருஞ்சோதி நகரில் {ஆழியூர் } நமது தத்துவ ஞானியார் மகரிஷி வேதாத்ரி அவர்கள் சித்தி அடைந்து ஒருவருடம் (மார்ச்-28) பூர்த்தியாகிறது. இன்றும் அந்த நாள் நினைவில் வருகிறது, அவர் உடலிருந்து உயிர் போன பின்பும் உடல் வாடாமல் ஒப்பாமல்
அப்படியே கொஞ்சம் கூட சில்லென்று ஆகாமல் வெப்பமாக இருந்தது. {இதே போல் ஸ்ரீ அரவிந்தருக்கும் பொன் நிறமாக மூன்று நாட்கள்இருந்தது} அவர் மூக்கிலும் காதுகளிலும் பஞ்சு அடைக்கப் படவிலை. ஆழியூரில் அவரை ஒரு நாற்காலியில் வைத்திருந்தனர். அவர் தலை சாயவில்லை. உடல் சரியவில்லை அப்படியே உயிருடன் நம்மிடம் பேசுவது போல் தோற்றம் இருந்தது.

அவர் "மனிதப் பிறவிதான் மிகச் சிறந்த ஒன்று! ஆனாலும் அதில் தான் துன்பங்கள் மலிந்து கிடக்கின்றன" என்று சொல்லி மனித மேம்பாடு பற்றி பல ஆரய்ச்சிகளை செய்து, அதில் பல வருடங்கள் கழித்து... மனித குலம் வளமுடன் வாழ சில சாதனை முறைகளைக் கண்டு பிடித்துள்ளார். அவைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதமே!

அவர் சொல்வது...


தனி மனிதன் வாழ்வில் அமைதி,
சமுதாயத்தில் அமைதி,
உலக நாடுகளிடையே அமைதி,
இதனைப்பரப்பிச் செயலாக்க ஒரு குழு வேண்டுமே...
அதுதான் 'உலக சமுதாய சேவா சங்கம்!'
இதில் தேகப்பயிற்சி பிராணாயாமம், அகத்தாய்வு முக்கியமாக் அளிக்கப்படுகின்றன. அவர் உலக நல வாழ்த்தைப் பார்ப்போமானால் ஒவ்வொரு சொல்லும் நல்ல அர்த்த்துடன் மிகவும் யோசித்து செய்யப்பட்டிருக்கிறது.

(உ-ம்) உலக நல வாழ்த்து:


1."உலகெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்"
இதில் அவர் தன்நலமில்லாத உலகம் முழுவதும் என்கிறார். பின் ஒத்தபடி என்றச்சொல் நமக்குத் தேவைப்படி என்று சொல்லலாம்.

2. "உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்"
இங்கு "உவப்பு" என்ற சொல் அதாவது மிகவும் சிரத்தையுடன் ஆர்வத்துடன் செய்ய பயிர் செழிக்கும்.

3."பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்"
"உயரட்டும்"...பாட்டாளி மனம் மகிழ்ச்சி பெற்றால் தான் உயர முடியும். அதற்கு முதலாளிகளின் அன்பும், ஆதரவும் தேவை. அப்போதுதான் infrastructure பெருகும்.

4."பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்"

மூட நம்பிக்கையில்லாமல் பகுத்துணர்வை உபயோகிக்க பண்பாடும் உயரும்.


5."கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்"
ஆட்சியில் கலகம் போட்டி பகை இவைகளினால் மீண்டும் மீண்டும் தேர்வு அதனால் சிலவுகள் பகையினால் கொலை, கொள்ளை என்று ஆட்சி கெட்டுப்போகிறது. அதனால் இவைகள் எல்லாம் இல்லாத
ஆட்சி தேவை


6."கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்"
படிப்பு மிகவும் தேவை! நல்ல படிப்பு இருந்தாலே சம்பாதிக்கும் திறனும் வந்துவிடும். இதனால் வறுமை போகும் தவிர நல்லொழுக்கம்

இருந்தால் களங்கங்கள் அருகே நெருங்க முடியாது.


7." நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே நிற்கட்டும்"
அறம் வழுவாமல் கடமை செய்து வர நல்ல வாழ்வு கிடைக்கும்.
இந்தப் பாட்டில் எத்தனைக் கருத்துக்கள் இருக்கின்றன. இவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்... இன்றைய நாளில் பிரும்ம ஞானக்கவி ஸ்ரீ வேதாத்ரி மஹரிஷிக்கு என் கோடி வணக்கங்கள்!


வேதாத்ரியம் வாழ்க!


அன்புடன் விசாலம்

No comments: