Friday, April 6, 2007

அந்த நாள் ஞாபகம் வந்ததே...

அந்த நாள் ஞாபகம் வந்ததே ஆம் என் பாட்டிக் காலத்து தீபாவளி ஞாபகம் வருகிறது. அது ஒரு இன்பமானக் கூட்டுக் குடும்பம் என் பாட்டியுடன் கழித்த அந்த நாட்கள் இன்று சல்லடைப் போட்டு அலசித் தேடினாலும் கிடைக்காதநாட்கள்.
தீபாவளி அன்று காலை 4 மணி ஒரு சீனு வெடி வெடிக்கும்
படுக்கையிலிருந்து எழுந்திருக்க திருப்பள்ளியெழுச்சி அது. பின் மடமடவென்று பாயைச்சுருட்டி வைத்துவிட்டு நேராக பல்தேய்த்து{ரோஸ் கலரில் ஒரு பொடி நஞ்சக்கூடு பல்பொடி} பின் நேராக ஸ்வாமி ரூமிற்கு செல்ல வேண்டும்.
அங்கு பாட்டி ஒரு பலகையில் அரிசிமாக்கோலம் போட்டுக்

காத்திருப்பாள்.
அதில் உட்காருவேன் ஒரு சின்ன இலுப்பச் சட்டியில் நல்லெண்ணை, அது காய்ந்த மிளகாய் சில குறு மிள்கு சின்ன விரளி மஞ்சள் துண்டு போட்டு சூடு செய்யப் பட்டிருக்கும் சளி பிடிக்காமல் இருப்பதற்கு,
கௌரிகல்யாணம் வைபோகமே! பாட்டியின் நாலு விரல்கள் பக்குவமாய்
என் உச்சந்தலையில் தேய்க்க ஆஹா அதன் சுகமே தனிதான்.

4 லிருந்து 5 வரை ப்ரும்ம முகூர்த்தம் நேரம். தீபாவளி அன்று குழாயில் தண்ணீர் கங்கையாக மாறி வருகிறது என்பது ஐதீகம்!
குளிக்கும் இடத்தில் நல்ல கஸ்தூரி மஞ்சள் சீயக்காயுடன் ரெடியாக இருக்கும். பக்குவமான வென்னீரும் தயார். .குளித்தபின் பாட்டி புது உடுப்பை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுசீர் கொடுப்பது போல் நிற்பாள். அதை உடுத்திய பின் எல்லா பெரியவர்களுக்கும் குனிந்து வணங்க வேண்டும்.
அவர்கள் மனதார வாழ்த்துவார்கள் பின் காலில் கொலுசு, கழுத்தில் தங்க செயின் மின்ன கம்பி மத்தாப்பு குதூகலமாக விடப் போவேன்.
பின் கடவுள் படம் முன் பல படசண்ங்கள் வைக்கப் பட்டிருக்கும்.
எல்லாமே வீட்டில், என் அம்மாவால் தயாரிக்கப் பட்டதுதான்.
அப்போது 16 அணா ஒரு ரூபாய், நெய் நாலணா, படசணம் ருசி கண்ட பின் ஒரு சுண்டக்காய்

அளவு தீபாவளி மருந்து தருவாள் பாட்டி அசீரணத்திற்கு
ஒரு நல்ல மருந்து.
தீபாவளி எனக்கு மறக்க முடியாத ஒன்று ஏனென்றால் இவ்வளவும் விடாமல் தீபவளியன்று செய்து வந்தப் பாட்டி தீபாவளி அன்றே காலையில் இறைவனடி போய்ச் சேர்ந்தாள்.


அன்புடன் விசாலம்

No comments: